Rangadurgam Raja Kalki | Kalki Times
நான்காம் பாகம்
“கொண்டு வா கத்தி! இதோ இந்தக் கண்களைத் தோண்டி எறிந்து விடுகிறேன். இப்படி ஏமாற்றுகிற கண்கள் இருந்தாலென்ன? இல்லாமல் நாசமாய்ப் போனாலென்ன?” என்று அலறினார் டாக்டர் சிங்காரம். அவர் கையில் ரங்கராஜனிடமிருந்து வாங்கிய தந்தி இருந்தது.
“என்ன? என்ன?” என்று தவித்தாள் ஜமீன்தாரிணி.
இதோ பாருங்கள் என்று தந்தியை அவளிடம் கொடுத்தார். பிறகு ரங்கராஜனை ஒரு நொடிப் பார்வை பார்த்துவிட்டு, “பேர்வழி முழிப்பதைப் பார்!” என்றார்.
ஜமீன்தாரிணியும், பிரேமலதாவும் ஏக காலத்தில் தந்தியைப் படித்தார்கள். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.
“மால்டா: உங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கதுர்க்கம் ஜமீன்தாரைக் கடலிலிருந்து மீட்டோ ம். அவர் தம்மைப் பற்றிச் சரியான தகவல் கொடுக்க இரண்டு மூன்று நாளாகி விட்டது. அவருடைய சாமான்களையெல்லாம் லண்டனுக்குத் திருப்பியனுப்பி விடவும். எங்கள் கப்பலில் பிரயாணம் செய்த ரங்கராஜன் என்னும் வாலிபனைப் பற்றித் தகவல் தெரியவில்லை. ஒரு வேளை அவன் தங்களால் மீட்கப்பட்டிருந்தால் தெரிவிக்கவும். அவனுடைய பெட்டியிலிருந்த ரூ. 1000 சொச்சத்தைக் குறிப்பிடும் விலாசத்துக்கு அனுப்பி விடுகிறோம். – காப்டன் கட்லெட்.”
ஜமீன்தாரிணி அதைப் படித்ததும் முன்னால் வந்து “காப்டன்! இது நிஜந்தானா?” என்று கேட்டாள்.
“எது நிஜந்தானா?”
“இந்தத் தந்தி நிஜந்தானா?”
“இதோ உங்கள் அருமையான டாக்டர் இருக்கிறாரே. அவருடைய கழுத்தின் மேல் தலை இருப்பது நிஜந்தானா?”
“அதுதான் நானும் கேட்கிறேன். நீர் நிஜந்தானா? நான் நிஜந்தானா? இந்த உலகம் நிஜந்தானா?” என்று டாக்டர் சிங்காரம் அடுக்கினார். “வாழ்வாவது மாயம்; இது மண்ணாவது திண்ணம்” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்.
“பிரேமா! வா, போகலாம்” என்று சொல்லி ஜமீன்தாரிணி பிரேமாவைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். டாக்டர் சிங்காரமும் பின்னால் போனார். அவர்கள் மூலை திரும்பும்போது, “அந்த மெஸ்மெரிஸ்டும் கப்பல் டாக்டரும் எங்கே காணோம்?” என்று பிரேமா கூறியது ரங்கராஜன் காதில் விழுந்தது. உடனே, அந்தப் பக்கம் பார்த்தான். அதற்குள் அவர்கள் மறைந்து விட்டார்கள். இன்னும் சற்று முன்பாகவே அவன் அந்தப் பக்கம் பார்த்திருந்தால் பிரேமாவின் கண்கள் அறிவித்த செய்தியை அவன் பெற்றிருக்கக் கூடும். அதற்குப் பதிலாக அவன் இப்போது காப்டனுடைய கடுகடுத்த முகத்தைப் பார்க்க நேர்ந்தது.
“என்ன சொல்கிறீர இப்போது?” என்றார் காப்டன்.
“நீர் அல்லவா சொல்ல வேண்டும்?”
“சொல்வது என்ன? இனிமேல் ஒரு நிமிஷங்கூட உம்மைப் பார்க்க எனக்கு வேண்டியிருக்கவில்லை. இந்தப் படகிலேயே இறங்கிப் போய் விடும்.”
“பரஸ்பரம் அப்படித்தான், காப்டன்! இதோ நான் போகத்தான் போகிறேன். ஆனால் ஒரு விஷயம்; அன்றைய தினம் நான் உம்மிடம் வந்து, ‘நான் ரங்கதுர்க்கம் ராஜா இல்லை’யென்று படித்துப் படித்துச் சொல்லவில்லையா? என் பேரில் இப்போது எரிந்து விழுகிறீரே, ஏன்?”
“அதற்கென்ன செய்வது? ரங்கதுர்க்கம் ராஜாவைப் போன்ற இரண்டு முட்டாள்களை உலகம் ஏககாலத்தில் தாங்காது என்று நினைத்தேன்.”
“இரண்டு பேர் அல்ல, நாலு பேரைக் கூட தாங்க முடியுமென்று இப்போது தெரிந்து விட்டதல்லவா?”
“அது என்ன?”
“ஆமாம், ரங்கதுர்க்கம் ராஜா ஒன்று, டாக்டர் சிங்காரம் ஒன்று, உங்கள் கப்பல் டாக்டர் ஒன்று, அப்புறம் தாங்கள்.”
காப்டன் பயங்கரமான ஒரு பார்வை பார்த்து விட்டு அவசரமாய்த் திரும்பிச் சென்றார்.
ரங்கராஜன் எடுத்துச் செல்லவேண்டிய சாமான்கள் ஒன்றுமில்லை. எனவே, உடனே கப்பலிலிருந்து படகில் இறங்கினான். படகு கரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. புயலடித்து ஓய்ந்திருந்த கடல் இப்போது வெகு அமைதியாயிருந்தது. ஆனால் அவனுடைய உள்ளக் கடலிலோ அதற்கு நேர்மாறான நிலைமை குடி கொண்டிருந்தது. அங்கே வெகு வேகமுள்ள புயல்காற்று, சுழற்காற்று, சூறைக்காற்று எல்லாம் சேர்ந்து அடித்தன. பிரமாண்டமான அலைகள் எழுந்து விழுந்தன.
‘பிரிட்டானியா’ கப்பலிலிருந்து கடலில் குதித்த வரையில் அவனுடைய ஜீவிய சம்பவங்கள் எல்லாம் அவன் மனக்கண் முன் அதிவிரைவாய்த் தோன்றி மறைந்தன. பின்னர், ‘ரோஸலிண்ட்’ கப்பலில் அவனுடைய ஐந்து நாள் வாழ்க்கையைப் பற்றி எண்ணிய போது மயிர்க்கூச்சல் உண்டாயிற்று. “இவ்வளவு பெரிய சந்தோஷம் நீடித்திருக்க முடியாது. கண் விழித்ததும் பொய்யாகும் கனவைப் போல் விரைவிலே மறைந்து மாயமாய்விடும்” என்று இடையிடையே தன் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்த பயம் உண்மையாகிவிட்டதே!
“இந்தியர்களுடைய வாழ்க்கையில் இந்நாளில் புதுமை ரஸிகத்துவம் எதுவும் இருக்க முடியாது. சாரமற்ற வாழ்வு. இத்தகைய வாழ்க்கை நடத்துவதை விட இறப்பதே மேல்” என்று நான் எண்ணியது தவறு என்பதை நிரூபிப்பதற்காகவே பகவான் இந்த ஆச்சரியமான அநுபவத்தை அளித்தார் போலும்!
நிகழ்ந்தது எல்லாவற்றையும் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கினான். முதல் நாள் அந்த அசட்டுக் காதல் கடிதத்தை வியாஜமாகக் கொண்டு அவர்களுக்குள் சம்பாஷணை ஏற்பட்டதும், நெடு நேரம் பேசிக் கொண்டிருந்ததும், அன்றிரவெல்லாம் லவகேசமும் தூக்கமின்றித் தனது வாழ்க்கையில் நேர்ந்த இந்த அதிசயத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தன. இரவு சென்று பொழுது விடிந்ததும் ஒரே நினைவுதான். பிரேமலதாவை எப்படிச் சந்திப்பது? என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடிப் போவது?
ஆனால் கப்பலாகையால் இந்தக் கஷ்டம் அவ்வளவாகத் தோன்றவில்லை. அறையைவிட்டு வெளியே வந்தால் ஒருவரையொருவர் சந்திக்கச் சந்தர்ப்பங்களுக்குக் குறைவு கிடையாது. எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே சந்திப்பு ஏற்பட்டது. பேச்சிலே அவர்கள் ஆழ்ந்துவிட்டபோது உலகத்தையே மறந்து விட்டார்கள். ஜமீன்தாரிணி உணவு நேரத்தை ஞாபகமூட்டுவதற்கு வந்தாள். ரங்கராஜனையும் தங்களுடன் வந்து சாப்பிடுமாறு அழைத்தாள். அது முதல் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் பெரும்பாலும் அவர்கள் சேர்ந்திருக்கத் தொடங்கினார்கள்.
கரையோரமாகப் பலத்த புயல் அடிக்கும் காரணத்தினால் கப்பல் நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறதென்றும் பிரயாணம் நீடிக்கலாமென்றும் தெரிய வந்த போது ரங்கராஜனுடைய இருதயம் சந்தோஷமிகுதியினால் வெடித்து விடும் போல் இருந்தது.
அந்த ஐந்து தினங்களில் முதல் இரண்டு நாளைக்கும் பிந்தைய மூன்று நாட்களுக்கும் இருந்த வித்தியாசத்தைப் பற்றி ரங்கராஜன் நினைத்தான். முதலில் நேரமெல்லாம் பேச்சிலேயே போயிற்று. பின்னால் பெரும்பாலும் மௌனம் சாதிப்பதில் சென்றது. முதலில் எவ்வளவு நாள் பேசினாலும் போதாது போலவும், அவ்வளவு விஷயங்கள் பேசுவதற்கு இருப்பது போலவும் தோன்றியது. ஆனால் போகப் போகப் பேசுவதற்கு விஷயமே இல்லை போல் ஆகிவிட்டது. ஹிருதயம் நிறைந்துள்ள போது பேச்சு வருவதில்லை. பேசினால் தன் இருதயத்தில் பொங்கிக் கொண்டிருந்த ஒரே விஷயத்தைப் பற்றித்தான் பேசவேண்டும். ஆனால் அதுவோ பேச்சு வரம்பைக் கடந்து நின்றது. அதிலும் அந்த அசட்டுக் காதல் கடிதத்தைப் படித்த பின்னர், அணுவளவேணும் அறிவுள்ளவர்கள் காதல் பேச்சுப் பேச முடியுமா? ஒன்றுந்தான் பேசுவதற்கில்லையே; விடைபெற்றுக் கொண்டு பிரிந்து போகலாமென்றால், அதற்கும் மனம் வருவதில்லை. வாய் பேசாவிட்டால், பேச்சு இல்லையென்று அர்த்தமா? கண்களோடு கண்கள், ஹிருதயத்தோடு ஹிருதயம் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தன.
இடையிடையே வாய்க்கும் பேசுவதற்குக் கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தபோது, விஷயம் ஹிருதய சம்பாஷணையுடன் ஒத்ததாகவே இருந்தது.
“இளம்பிராயத்தில் நான் ஓர் இலட்சிய கன்னிகையை என் உள்ளத்தில் உருவகப்படுத்துவதுண்டு. அவளிடம் இன்னின்ன அம்சங்கள் பொருந்தியிருக்க வேண்டும் என்றெல்லாம் நேரம் போவது தெரியாமல் சிந்தனை செய்து கொண்டிருப்பேன். ஆனால், நாளாக ஆக, ‘இது சுத்தப் பைத்தியம்; இந்த மாதிரி நமது நாட்டில் இருக்கவே முடியாது’ என்று எண்ணி விட்டு விட்டேன். வெகு நாளைக்குப் பின்னர் இன்று என் மனோராஜ்யக் கன்னிகையை நேருக்கு நேர் காண்கிறேன். ஆகையாலேயே, ஒவ்வொரு சமயம் இதெல்லாம் வெறும் பொய்யோ என்று தோன்றுகிறது,” என்றான் ரங்கராஜன்.
“நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். என்னுடைய இலட்சியத்தைப்பற்றி நான் அப்படிச் சொல்லிக் கொள்வதற்கில்லை,” என்றாள் பிரேமா.
ரங்கராஜனுடைய முகம் வாடிற்று. பிரேமாவின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று தூரத்திலே பறந்த கடற்பறவையை வெகு கவனமாக பார்க்கத் தொடங்கினான்.
“ஆமாம், நானும் சிறிது காலமாக ஓர் இலட்சிய புருஷரை மனத்தில் உருவகப்படுத்தி வந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்புவரை என் லட்சியத்துக்கு கிட்டத்தட்ட வரக்கூடியவரைக்கூட நான் சந்திக்கவில்லை. கடைசியாக ஒருவரைச் சந்தித்த போது, ‘இவர்தான்’ என்று தோன்றிற்று. ஆனால் அருகில் நெருங்கிப் பார்த்தால் என்னுடைய இலட்சியத்தைவிட மிக உயர்ந்து விளங்குகிறார். இன்னும் கொஞ்சம் கீழே இருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது” என்றாள்.
இது என்ன உண்மையா, பரிகாசமா? அவளுடைய புன்னகை இரண்டுக்கும் இடம் தருவதாயிருந்தது.
மற்றொரு நாள் தமிழில் நவீன இலக்கியங்கள் அதிகம் இல்லாமலிருப்பது குறித்துப் பேச்சு வந்தது.
“இவ்வளவெல்லாம் படித்திருக்கிறீர்களே, நீங்கள் ஏன் தமிழில் நல்ல நாடகம் ஒன்று எழுதக் கூடாது?” என்று பிரேமா கேட்டாள்.
“அந்த எண்ணம் எனக்கு வெகு நாளாக உண்டு. ஆனால் ஆனால்… இதுவரையில் அதற்குத் தூண்டுதல் ஏற்படவில்லை.”
“நான் வேண்டுமானால் சொல்கிறேன்; உங்களால் நாடகம் ஒரு நாளும் எழுத முடியாது.”
“ஏன் இத்தகைய சாபம்?”
“நாடகம் என்றாள் அதில் எல்லாப் பாத்திரங்களும் மேதாவிகளாகவும் புத்திசாலிகளாகவுமே இருக்க முடியாது. நடுத்தரமானவர்களும் அசடுகளும் கூட வேண்டும். நீங்களோ முதல் தர மேதாவிகளைத் தவிர வேறு யாரோடும் பேச மாட்டீர்கள்; பழக மாட்டீர்கள். ஆகையால், இயற்கையாய்த் தோன்றக்கூடிய நாடக பாத்திரங்களை உங்களால் சிருஷ்டிக்க முடியாது.”
“உங்களிடம் அந்தக் குறை கிடையாதல்லவா? நீங்கள் தான் டாக்டர் சிங்காரம் உள்பட எல்லாருடனும் பழகுகிறீர்களே! நீங்களே எழுதலாமே?”
“என்னால் முடியாது. ஆனால் உங்களுக்கு நான் உதவி செய்யக்கூடும்.”
“அப்படியானால் நாம் நாடகம் எழுதி முடிக்கும் வரையில் புயல் நீடித்திருக்க வேண்டுமே? கரை சேர்ந்தால் நான் எங்கேயோ, நீங்கள் எங்கேயோ?”
“உண்மையாகவா? கரை சேர்ந்ததும் நாம் பிரிந்து போவது நிஜமாயிருந்தால், இப்போதே பிரிந்துவிடலாமே?” என்று பிரேமலதா எழுந்து செல்லத் தொடங்கினாள். அவளைச் சமாதானப்படுத்தி உட்காரச் செய்ய வேண்டியிருந்தது.
அப்படியெல்லாம் நடித்தவள் அந்தத் தந்தியைக் கண்டதும் எப்படி மாறிவிட்டாள்! சீ! இதென்ன உலகம்! இவ்வளவு கல்வி, அறிவு, சாதுர்யம், சாமர்த்தியம் எல்லாம் கேவலம் பட்டம், பணம் என்னும் பைசாசங்களுக்குப் பலியாவதற்குத்தானா? – கடலில் விழுந்த தன்னைத் தப்புவித்த முட்டாளை ரங்கராஜன் அப்போது மனமாரச் சபித்தான்.
ஆனால் உடனே வேறோர் எண்ணமும் தோன்றிற்று. ஏன் இவ்வாறு தான் மனக்கசப்பு அடைய வேண்டும்? தன் வாழ்நாளில் இத்தகைய இனிய கனவு ஒன்று ஏற்பட்டது பற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கலாமே? அதைப் பற்றிய சிந்தனையில் சந்தோஷம் அடைந்திருக்கலாமே? – இப்படி எண்ணியபோது அந்தக் கனவு நிகழ்ந்த இடமாகிய ‘ரோஸலிண்ட்’ கப்பலை ரங்கராஜன் நிமிர்ந்து பார்த்தான். தானும் அவளும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசிய அதே இடத்தில் பிரேமலதா துயர முகத்துடன் நின்று தன்னை நோக்குவது போல் ஒரு க்ஷணம் தோன்றிற்று. அடுத்த க்ஷணம் ஒன்றுமில்லை. சீ! இதென்ன வீண் பிரமை! இதற்குள் படகு கரையை அடைந்தது. பம்பாய் நகரில் பிரவேசித்ததும், ஸ்வப்ன உலகத்திலிருந்து பூவுலகத்துக்கு வந்தது போல் ரங்கராஜன் உணர்ந்தான்.
‘இனி என்ன செய்வது?’ என்னும் பிரச்சனை அரசியல் வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படுவது போல் ரங்கராஜனுடைய சொந்த வாழ்க்கையில் இப்போது அதி தீவிரமாக ஏற்பட்டது. சீமைக்கு மறுபடியும் போகும் யோசனையைக் கைவிட வேண்டியதுதான். அது கடவுளுக்கே இஷ்டமில்லையென்று தோன்றுகிறது. போதும் சீமைப் பயணம்.
‘பம்பாயில் தங்கி ஏதேனும் ஒரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து விட்டால்?’ என்று எண்ணிய போது, தானே வயிறு குலுங்கச் சிரித்தான். நாடோ டி வாழ்க்கையை வெறுத்துப் புதிய அநுபவங்களைத் தேடி அவன் புறப்பட்டதற்கு அது தக்க முடிவாயிருக்குமல்லவா?
இவ்வாறு பல யோசனைகள் செய்து கொண்டேயிருந்த போது திடீரென்று அவனுடைய ஜீவிய இலட்சியம் என்னவென்பது மனத்தில் உதயமாயிற்று. அவனுடைய கை விரல்கள் துடித்தன. “கொண்டா பேனாவும் காகிதமும்” என்று அவை கதறின. நூலாசிரியத் தொழிலுக்கு வேண்டிய அஸ்திவாரம் ஏற்கனவே அவனிடம் அமைந்திருந்தது. தூண்டுகோல் ஒன்று தான் பாக்கி; அதுவும் இப்போது ஏற்பட்டு விட்டது.
ஊருக்குப் போக வேண்டியதுதான்; நாவல்களும் நாடகங்களுமாக எழுதிக் குவித்துத் தமிழ் மொழியை ஆகாயத்தில் உயர்த்தியே விடுவது என்று தீர்மானித்தான்.
‘பிரிட்டானியா’ கப்பலில் விட்டிருந்த பணம் வந்து சேரும் வரையில் பம்பாயில் இருந்ததாக வேண்டும். அந்த நாட்களில் அவன் அந்த நகரை முழுதும் சுற்றிப் பார்த்து விட விரும்பினான். பம்பாயில் முக்கியமாக ‘விக்டோ ரியா டெர்மினஸ்’ ஸ்டேஷன் அவனுடைய மனத்தைப் பெரிதும் கவர்ந்ததாகத் தோன்றியது. தினந்தோறும் சாயங்காலம் ‘மெட்ராஸ் மெயில்’ புறப்படும் சமயத்துக்கு ரங்கராஜன் பிளாட்பாரத்தில் உலாவி வருவதைக் காணலாம். அப்படிச் செய்ததில் அந்தரங்க நோக்கம் ஒன்றும் அவனுக்கு லவலேசமும் கிடையாது. (அவ்வாறு அவன் நம்பினான்). முன்னைப் போல் ஜனங்களைக் கண்டு வெறுப்படைவதற்குப் பதிலாக, ஜனங்களைப் பார்ப்பதிலும் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனிப்பதிலும் அவனுக்கு ஏற்பட்டிருந்த புதிய உற்சாகமே அதன் காரணம். (இதுவும் அவனுடைய அபிப்பிராயமே.) ஆகையினால், ஒரு நாள் மாலை அவன் அவ்வாறு பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, பிரேமலதா தீடீரென்று எதிர்ப்பட்டு, புன்னகையுடன், “ஓ! உங்களை நான் எதிர்பார்த்தேன்,” என்று சொன்னபோது அவனுக்குக் கோபம் வந்தது.
“அப்படியா? ஆனால், தங்களை நான் எதிர்பார்க்கவில்லை” என்றான்.
“பொய்! பொய்! நீங்கள் சொல்வது பொய்,” என்றாள் பிரேமா.
“ரொம்ப சந்தோஷம். ரங்கதுர்க்கம் ராஜா அப்புறம் கோபித்துக் கொள்ளப் போகிறார். நான் போய்…”
இந்தச் சமயம் பிரேமாவின் கண்களில் ஒரு துளி கண்ணீர் ததும்பி நிற்பதை ரங்கராஜன் பார்த்தான். உடனே, “… போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு வருகிறேன்” என்று முடித்தான்.
“நானும் கூட வருவதில் ஆட்சேபம் இல்லையே!”
“எனக்கு ஆட்சேபம் இல்லை; ஆனால், ஒரு வேளை ராஜா சாகிப்பிற்கு”
“ரங்கதுர்க்கம் ராஜாவின் பாக்கியமே பாக்கியம்! உங்களைப் போன்ற ஒருவர் தம் பேரில் இவ்வளவு அசூயை கொள்வதற்கு அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா?
ரங்கராஜன் பிரேமலதாவைத் திரும்பி பார்த்தான். “அப்படியானால், நீ என்னை ரங்கதுர்க்கம் ராஜாவென்று எண்ணவில்லையா?” என்றான்.
“என்னைப்பற்றி இவ்வளவு தாழ்வாக நீங்கள் நினைத்த குற்றத்தை என்னால் மன்னிக்கவே முடியாது. அப்படிப்பட்ட அபஸ்மாரக் காதல் கடிதத்தை எழுதக் கூடியவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியாதென்றா நினைத்தீர்கள்?”
ரங்கராஜன் மிக்க ஆச்சரியத்துடன் பிரேமலதாவின் முகத்தை நோக்கினான். “அப்படியானால், அந்தத் தந்தியைப் படித்ததும் நெருப்பை மிதித்தவர்கள் போல் எல்லாரும் சென்று விட்டீர்களே, அது ஏன்?” என்றான்.
“கடவுளே! அதுதானா கோபம்? கொஞ்சம் உங்களை வேடிக்கை செய்யலாமென்று நினைத்தோம். கப்பல் கரையோரமாய் போய் நிற்பதற்குள், நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் படகிலிறங்கிப் போய் விடுவீர்களென்று கண்டோமா?”
டிக்கட் வாங்கிக் கொண்டதும், “இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறதே, வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாமா?” என்று ரங்கராஜன் கேட்டான்.
“அதையேதான் இப்போது சொல்ல நான் வாயெடுத்தேன்,” என்றாள் பிரேமலதா. இவ்வாறு பிரேரணை ஏகமனதாக நிறைவேறவே, இருவரும் வெயிட்டிங் ரூமுக்குச் சென்றார்கள்.
“இந்தச் சிறு விஷயம் முதற்கொண்டு நம்முடைய மனம் இவ்வளவு ஒத்திருப்பது பெரிய ஆச்சரியமல்லவா?”
“அந்தத் தைரியத்தினால்தான் உங்களைக் கட்டாயம் இன்று ரயில்வே ஸ்டேஷனில் சந்திப்போம் என்று நிச்சயமாய் நம்பியிருந்தேன். இல்லாவிட்டால், இந்த ஒரு வாரமும் என்னால் உயிர் வாழ்ந்திருக்க முடியாது.”
“நாம் ஒரு தவறு செய்தோம். அதனால் தான் இவ்வளவு நேர்ந்தது. கப்பலில் நம்முடைய ஹிருதயத்தின் நிலைமையை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
‘நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை நைந்த பழங் கதைகள் நானுடைப்பதோ’
என்று இருந்து விட்டேன். வாய்ப்பேச்சும் சில சமயம் அவசியம் என்று இப்போது தெரிகிறது.”
“நடுக்கடலில் நாம் சந்தித்தது ஒரு பெரிய ஆச்சரியமல்லவா?”
“அதை ஆச்சரியமென்றா சொல்வது? நம்ப முடியாத அற்புதம் என்றே சொல்ல வேண்டும். இந்த உலகத்தில் உள்ள பதினெட்டுக் கோடி சொச்சம் ஸ்திரீகளில் பிரேமலதா ஒருத்தியைத் தவிர, வேறு யாரும் என்னைப் பைத்தியமாய் அடித்திருக்க முடியாது. நான் அன்று கடலில் குதித்திராவிட்டால் அவளைச் சந்தித்திருக்கவே முடியாது. இதைக் கடவுள் சித்தமென்பதா, விதி என்பதா, பூர்வஜன்ம சொந்தம் என்பதா என்று தெரியவில்லை.”
இந்த முறையில் சம்பாஷணை போய்க் கொண்டிருந்தது. பைத்தியம்! எவ்வளவு சரியான வார்த்தை! இந்தத் தினுசு பைத்தியம் பிடிக்கும் போது, மகா மண்டூகங்களான ரங்கதுர்க்கம் ராஜாக்களுக்கும், மகா மேதாவிகளான ரங்கராஜாக்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லாமல் போகிறது!
“பிரேமா! உன்னிடம் எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது. நீ ஜமீன்தார் பெண்ணாயிருப்பது ஒன்று தான் பிடிக்கவில்லை” என்று பேச்சினிடையில் ரங்கராஜன் கூறினான்.
“அப்படியானால், நீங்கள் கவலையின்றி இருக்கலாம். உங்கள் காதலி மாசு மறுவற்றவள் என்று திருப்தி கொள்ளுங்கள். ஏனென்றால், நான் ஜமீன்தார் பெண் அல்ல!” என்றாள்.
“என்ன? என்ன? இது நிஜமா? அப்படியானால் நீ யாருடைய பெண்?” என்று கேட்டான்.
“டாக்டர் சிங்காரத்தினுடைய பெண் நான்” என்று பதில் வந்தது.
பிரேமலதா விஸ்தாரமாகக் கூறியதிலிருந்து பின்வரும் விவரங்கள் வெளியாயின
டாக்டர் சிங்காரம் ஒரு தமாஷ் மனிதர். அவர் வைத்தியப் பரீட்சையில் தேறிய தம் பெண்ணை இங்கிலாந்தில் உயர்தரப் பயிற்சி அளிப்பதற்காக அழைத்துச் சென்றார். அங்கே ஒரு சமயம் பிரேமலதாவைப் பார்த்துப் பிரேமை கொண்ட ரங்கதுர்க்கம் ராஜா டாக்டர் சிங்காரத்திடம் அவளைப் பற்றி விசாரிக்க, அவள் குமாரபுரம் ஜமீன்தார் பெண் என்றும் தாம் அவர்களுடைய குடும்ப வைத்தியர் என்றும் இவர் குறும்புக்குச் சொல்லி வைத்தார். இவர்கள், ஏறிய கப்பலிலேயே ராஜாவும் ஏறவே, அந்தத் தமாஷைத் தொடர்ந்து நடத்தி வந்தார். ரங்கராஜன் முதன் முதலில் ஸ்மரணை தெளிந்து பார்த்தவுடனேயே, அவருக்கு இவன் வேறு ஆசாமி என்று தெரிந்து போயிற்று. ஆனால், கப்பல் காப்டனும் டாக்டரும் தம்மை அலட்சியமாய் நடத்தினார்களென்று அவருக்கு அவர்கள் மீது கோபம் இருந்தது. அவர்களுக்கு அசட்டுப் பட்டம் கட்டுவதற்காகவும், பொதுவாகத் தமாஷில் உள்ள பற்றினாலும், அவன் தான் ராஜாசாகிப் என்று வறுபுறுத்திக் கொண்டு வந்தார். ரங்கராஜன் இதையெல்லாம் கேட்டு அளவிலாத ஆச்சரியம் அடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. டாக்டர் சிங்காரத்தைப் பற்றித் தான் கொண்டிருந்த அபிப்பிராயம் எவ்வளவு தவறானது என்பதை நினைக்க அவனுக்குச் சிறிது வெட்கமாயிருந்தது.
பிரேமலதா கடைசியில், “என் தந்தை கப்பலிலிருந்து இறங்கிய அன்றே சென்னைக்குப் போய் விட்டார். என்னையும் அம்மாவையும் ஒரு வாரம் பம்பாயில் இருந்து விட்டு வரச் சொன்னார். அதற்குள் உங்களுக்குப் ‘பிரிட்டானியா’ கப்பலிலிருந்து பணம் வந்து விடுமென்றும், எங்களை ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் சந்திப்பது நிச்சயம் என்று கூடச் சொன்னார். உங்களை நான் மணம் புரிந்து கொள்வதற்கு என் தாய் தந்தை இருவரும் கப்பலிலேயே சம்மதம் கொடுத்து விட்டார்கள்” என்று கூறியபோது, ரங்கராஜன் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தான். வறண்ட பாலைவனம் போல் இருந்த தனது வாழ்க்கை இரண்டு வார காலத்தில் எவ்வளவு அதிசய அநுபவங்கள் நிறையப் பெற்றதாகிவிட்டதென்று எண்ணியபோது அவன் உள்ளம் பூரித்தது.
டிங், டிங், டிங் என்று மணி அடித்தது. ரங்கராஜனும் பிரேமலதாவும் கைகோர்த்துக் கொண்டு நடந்து வந்து வண்டியில் ஏறினார்கள். பிரேமலதாவின் தாயார் அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள். வண்டி புறப்பட்டது. ரங்கராஜன் பிரேமலதா இவர்களுடைய புதிய வாழ்க்கைப் பிரயாணம் ஆரம்பமாயிற்று.
‘இவ்வாறு நமது கதை ஆரம்பத்திலேயே முடிவடைகிறது. ஆதலின், “ஆரம்பத்திலே முடிவின் வித்து இருக்கிறது; முடிவிலே ஆரம்பத்தின் வித்து இருக்கிறது” என்னும் சிருஷ்டித் தத்துவம் இக்கதையினால் விளக்கப்படுகிறது. நான் சற்றும் எதிர்பாராதபடி இந்தக் கதை தத்துவப் பொருளை உள்ளடக்கியதாய் அமைந்து விட்டது குறித்து, தானே ஆரம்பமாயும், தானே முடிவாயும் விளங்கும் பரம்பொருளை வாழ்த்துகிறேன்.’
இத்துடன்
அமரர் கல்கியின் ரங்கதுர்க்கம் ராஜா
இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.
Rangadurgam Raja Kalki Tag
kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,rangadurgam raja Audiboook,rangadurgam raja,rangadurgam raja Kalki,Kalki rangadurgam raja,