Kalki Short StoriesKalki TimesStory

Sarathaiyin Thanthiram Kalki | Kalki Times

Sarathaiyin Thanthiram Kalki Short Story Kalki Times

Mr and Mrs Tamilan Presents Kalki Times

அமரர் கல்கியின் சிறு கதைகள்

சாரதையின் தந்திரம்

கல்கி

All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u

Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/


Sarathaiyin Thanthiram Kalki

“அடி அக்கா, எனக்கு உன்னைத் தவிர வேறு யாரிருக்கிறார்கள்? என் கவலைகளை யாரிடம் சொல்லி ஆறுவேன்? இத்தனை நாளாக எட்டிப் பாராமல் இருந்துவிட்டாயே!” என்று சொல்லி, சாரதையின் மடியில் முகத்தை வைத்துக் கொண்டு கண்ணீருகுத்தாள் லக்ஷ்மி.

“அசடே நீ என்ன இன்னமும் பச்சைக் குழந்தையா? பதினெட்டு வயதாகிறது. ஒரு குழந்தை பெற்றெடுத்து விட்டாய். வெட்கமில்லாமல் அழுகிறாயே. சங்கதி என்ன? சொல்” என்று சொல்லி, சாரதை அருமையுடன் லக்ஷ்மியின் கண்ணீரைத் துடைத்தாள்.

இப்பெண்மணிகள் மயிலாப்பூரில் மாடவீதி ஒன்றிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு தெருவில் ஓர் அழகிய புது வீட்டின் மாடி மீதிருந்த ஹாலில் அமர்ந்திருந்தனர். அவர்களில், சாரதை பத்தரைமாற்று பொன்னொத்த மேனியினாள். விசாலமான நெற்றியும், அறிவு ஊறித்ததும்பும் கண்களும் படைத்தவள். அவள் கண்களினுள்ளே இருந்த கருவிழிகளோ, அங்குமிங்கும் குறுகுறுவென்று அலைந்து கொண்டிருந்தன. தன் கடைக்கண் வீச்சாகிய ஒரே ஆயுதத்தின் துணைகொண்டு ஆடவரையும் பெண்டிரையும் அடக்கியாளும் திறனுடையவள் அவள் என்பது அவ்விழிகளை ஒருமுறை பார்த்த அளவினாலே விளங்கும். அப்போதலர்ந்த ரோஜா மலரின் இதழையொத்த தன் அதரங்களில் புன்னகையிருக்க, வேறு பொன் கல் நகைகள் எதற்கு என்று கருதியே போலும், அவள் அதிக ஆபரணங்கள் அணிந்துகொள்ளவில்லை. தலைப்பில் சரிகைக்கரை போட்ட நீலநிறக் கதர்ப்புடவை அவள் மேனி அழகைப் பதின்மடங்கு மிகுதிப்படுத்திக் காட்டிற்று.

இப்பொன்னொத்த வண்ணமுடையாளினின்றும் பல வகையிலும் மாறுபட்டிருந்தாள் லக்ஷ்மி. அவள் மாநிற மேனியினாள். திருத்தமாக அமைந்திருந்த அவள் திருமுக மண்டலம், இதுகாலை சோகத்தினால் வாட்டமுற்றிருந்ததாயினும், அழகும் அமைதியுமே அதன் இயற்கை அணிகள் என்பது நன்கு விளங்கிற்று. அவள் கண்ணில் அளவிடப்படாத தூய உண்மைக் காதல் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. எல்லோரையும் மகிழ்விக்கும் இனிய குணமும் அளவற்ற அன்பும் அவள் தோற்றத்திலே நிகழ்ந்தன. சோகத்திலும் மலர்ந்திருந்தன அவளது செவ்விதழ்கள். அவள் தரித்திருந்தது. விலையுயர்ந்த சிவப்பு வர்ணப் பட்டுபுடவை. பொன் வைர நகைகளும் அவள் அணிந்திருந்தாள்.

லக்ஷ்மி, முத்து முத்தாகத் துளித்துப் பெருகிய கண்ணீரைத் தன் புடவைத் தலைப்பினால் துடைத்து, சாரதையின் இரு கரங்களையும் தன் கரங்களால் பிடித்துக் கொண்டு சொல்வாள். “அக்கா! எனக்கு வயதாகிவிட்டது. உண்மையே. ஆனால் உன்னைக் கண்டால் நான் குழந்தையேயாகி விடுகிறேன். என்னை விட நீ ஒரு வயதுதான் மூத்தவள். ஆயினும் எனக்கு வினாத் தெரிந்தது முதல் நீ எனக்குத் தாய் போல் இருந்து வரவில்லையா? பெற்ற தாய் இறந்த துயரத்தை நான் உணராமல் செய்தது யார்? என் சித்தி கோபித்துக் கொண்டால் உடனே உன்னிடம் ஓடி வந்து ஆறுதல் பெறுவேன்…”

“இந்தக் கதையெல்லாம் இப்போதெதற்கு? இனிமேல் அம்மாதிரி நாம் குழந்தைகளாகப் போகிறோமா?” என்று சாரதை இடைமறித்துக் கூறினாள்.

“இல்லை அக்கா, கொஞ்சம் பொறு. நமது இளம் பிராய நட்பின் நினைவுகள் எனக்கு எத்தனை மகிழ்ச்சி அளிக்கின்றன? அத்தான், பள்ளிக்கூட விடுமுறைக்கு ஊர் வரும்போதெல்லாம், நாம் அளவு கடந்த மகிழ்ச்சியடைவோம். அவரும் நம்மிடம் பிரியமாயிருந்தார். நமக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பார். கதைகள் சொல்லிக் காலங்கழிப்பார். நம்முடன் சேர்ந்து விளையாடுவார். ஊரில் எல்லோரும் அத்தானுக்கு உன்னைக் கலியாணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டார்கள். நீ மட்டும் ‘இல்லவே இல்லை. அத்தானுக்கு லக்ஷ்மிதான் வாழ்க்கைப்படப் போகிறாள். அத்தானும் சாது, லக்ஷ்மியும் சாது. அவர்கள் இருவருக்கும்தான் பொருத்தம். நான் நல்ல போக்கிரி ஒருவனுக்கு வாழ்க்கைப்படப் போகிறேன். பின்னர், அவனையடக்கிச் சாதுவாக்கி விடுவேன்’ என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டு வருவாய். அப்போதெல்லாம் உன்னிடம் எவ்வளவு நன்றி பாராட்டினேன்? அவ்வளவுக்கு இப்போது உன்னைச் சபிக்கிறேன்” என்று கூறுகையில், லக்ஷ்மி விம்மி விம்மி அழலானாள்.

சாரதைக்குச் சற்று விளங்க ஆரம்பித்தது. “அடியே என்ன சொல்லுகிறாய்? அத்தான் உன்னைத் துன்புறுத்துகிறானா, என்ன சொல்லு?” என்றாள். அவள் கண்களின் ஓரங்கள் சிறிது சிவந்து கோபக்குறி காட்டலாயின.

“ஐயோ, துன்பப்படுத்தினால் பாதகமில்லையே? உன்னிடம் சொல்லியிருக்கவே மாட்டேன்… ஆம், அக்காலத்தில் எல்லாம் நீ சொன்னபடியே ஆயிற்று. தெய்வம் நமக்குச் சகாயமாயிருந்தது. கடைசியாக, அத்தானுக்கு என்னையே கலியாணம் செய்து கொடுத்தார்கள். உனக்கு அகத்துக்காரர் பட்டணத்திலிருந்து வந்தார். நீ சொல்லியபடியே கிராப்பும், உடுப்பும், பூட்ஸும், மூக்குக் கண்ணாடியுமாக அவர் வந்தார். நாங்கள் ‘போக்கிரி மாப்பிள்ளை’ என்று சொல்லிக் காட்டினோம். ‘பேசாமலிரு, இரண்டு வருஷத்தில் எல்லாம் அடக்கிப் போடுகிறேன்’ என்று நீ சொல்லிக் கொண்டு வந்தாய். அந்த மாதிரியே செய்து முடித்தாய். காலரும் கழுத்து சுருக்கும் மாட்டிக் கொண்டு வந்தவர். இப்பொழுது நாலுமுழக் கதர்த் துணியுடன் நின்று வருகிறார். ஆனால், என்னுடைய சாது அத்தானோ?”

“அதைச் சொல்! என்ன செய்தான்?”

“நீ அவர் மீது கோபிப்பதில் பயனில்லை. அக்கா! எனக்குச் சாமர்த்தியமில்லை, அழகில்லை, அதிர்ஷ்டமும் இல்லை. அவ்வளவுதான். இருந்தாலும் உன்னிடம் என் குறையைச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? மேலும் எல்லாம் உன்னாலேயே வந்தது. நீ ஏன் திருவல்லிக்கேணிக்குப் போனாய்? போனதுதான் போனாய்; எங்களை ஏன் உடன் அழைத்துக் கொள்ளவில்லை? நீ போன பிறகே எனக்கு இத்துயர் வந்தது.”

“ஆ, கள்ளி, இந்த ஒரு வருஷமாகவா நீ இப்படிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாய்? ஏன் இத்தனை நாளாக எனக்குச் சொல்லவில்லை?”

“இல்லை, அக்கா! இதுவரை எனக்குத் திட்டமாக விவரம் தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு தான் தெரிந்தது. அதற்குப் பின் நீ இங்கு வரவேயில்லை. நீ இவ்வூரைவிட்டுப் போவதற்கு முன்பு எங்கள் வாழ்க்கையைப் பற்றி உனக்குத் தெரியுமே! அத்தகைய இன்ப வாழ்க்கை இனி இந்த ஜன்மத்தில் உண்டா என்று நான் ஏங்குகிறேன். ஆபீசிலிருந்து அவர் நேரே வீட்டுக்கு வருவார். சில தினங்கள் நாங்கள் எல்லாரும் சேர்ந்து கடற்கரைக்குப் போவோம். என்றாவது ஒரு நாள் சினிமா அல்லது கதை, பாட்டுக் கச்சேரிக்குச் செல்வோம். என்னை அழைத்துக் கொள்ளாமல் அவர் எங்கும் போனதில்லை. வெளியே போகாத நாட்களில் புத்தகம் ஏதேனும் வாசித்துக் காட்டுவார். இல்லாவிடில், பாடச் சொல்வார். ஆபீசுக்குப் போக வேண்டியிருக்கிறதே என்று கஷ்டத்துடன் சொல்வார். வேறெங்கும் நிமிஷமும் தங்கமாட்டார். ஆனால், நீ இவ்வூரை விட்டுப்போன இரண்டொரு மாதங்களில், அதாவது இவ்வருஷ ஆரம்பத்தில், இந் நிலைமை மாறிவிட்டது.

சில தினங்களில், வெகு நேரங்கழித்து வீட்டுக்கு வருவார். சனி ஞாயிறுகளில் கடற்கரை முதலிய இடங்களுக்கு என்னை அழைத்துக் கொண்டு போவதை நிறுத்திவிட்டார். என்னுடன் பேசுவதிலேயே அவருக்கு முன்போல் இன்பமில்லையென்பதைக் கண்டேன். ஜனவரி, பிப்ரவரி இவ்விரண்டு மாதமும் இவ்வாறே நிகழ்ந்து வந்தது. பிறகு அவ்வளவு மோசமில்லை யாயினும் முன்னிருந்த அன்பும் ஆதரவும் பார்க்க முடியவில்லை. முன்னெல்லாம் சீட்டாட்டம் என்றால் எரிந்து விழுந்து கொண்டிருந்தவர், இப்போது சீட்டாட்டத்தில் அளவிறந்த பித்துக் கொண்டார். சில தினங்களில் அவருடைய நண்பர்களைக் கூட்டிக்கொண்டு வந்து சீட்டுக் கடை போட்டு விட்டார். எல்லாருக்கும் காபி வைத்துக் கொடுக்கச் சொல்வார். அப்பா! எத்தகைய நண்பர்கள்! அவர்களைக் கண்டாலே எனக்கு எரிச்சலாயிருந்தது. ஆயினும், நான் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. உன்னுடைய பிடிவாதத்தில் உன் அகத்துக்காரர் சுருட்டுக் குடிப்பதை விட்டுவிட்டார் என்று சொன்னாயே, அக்கா! இந்த அவமானத்தை எவ்வாறு சொல்வேன்? இதுகாறும் சுருட்டுக் குடிப்பவர்களைக் கண்டாலே அருவெறுத்து வந்தார். இப்போது தாமே சுருட்டுக் குடிக்க ஆரம்பித்து விட்டார். இவையெல்லாம் அற்ப விஷயங்களென்று நான் உன்னிடம் கூடச் சொல்லவில்லை. ஆனால், இந்த டிசம்பர் மாதம் பிறந்த பிறகே எனக்கு உண்மை தெரிய வந்தது. ஒரு நாள், அவரும் அவருடைய நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தபோது, கிண்டிக்கு ரயிலில் போகலாமா, மோட்டாரில் போகலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது…”

“ஐயோ, துரதிர்ஷ்டசாலியான பெண்ணே!” என்று சாரதை லக்ஷ்மியைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

“முழுவதும் சொல்லிவிடுகிறேன், அக்கா! உடனே என் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. கிண்டி குதிரைப் பந்தயத்தால் அடியோடு அழிந்த குடும்பங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? அன்று நான் ஒரு தப்புக் காரியம் செய்தேன். அத்தான் வெளியே போயிருந்த போது, அவர் பெட்டியைத் திறந்து, பாங்கிக் கணக்குப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். இந்த நான்கு வருஷமாக, மாதச் சம்பளத்தில் வீட்டுக்குச் செலவாவது போக, குறைந்தது ஐம்பது ரூபாய் நாங்கள் மீத்து வருகிறோம். முதலும் வட்டியும் சேர்ந்து குறைந்தது மூவாயிரம் ரூபாயாவது இருக்க வேண்டுமென்பது என் எண்ணம். ஆனால், பாங்கிக் கணக்கின் கடைசியில் 58 ரூபாய் சொச்சமே பாக்கி இருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததைக் கண்டதும், என் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டியது போலாயிற்று. இவ்வருஷ ஆரம்பத்தில் ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களில் சுமார் இருநூறு ரூபாய் பாங்கியிலிருந்து வாங்கப் பட்டதாக எழுதியிருந்தது. இதிலிருந்து, என்னுடைய சந்தேகங்கள் நிவர்த்தியாயின. ஆனால் என் துக்கம் பதின்மடங்கு அதிகமாயிற்று. அதற்கடுத்த சனிக்கிழமையன்று, அக்கா – வெளியில் சொன்னால் வெட்கம். போன வருஷம் இருநூறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்த வைரமூக்குத்தியை வாங்கிக் கொண்டு போனார். அதற்காக என்னிடம் பொய்யும் சொன்னார். யாரோ நண்பர் ஒருவர் வீட்டில் கலியாணம் என்றும், இரவல் கேட்கிறார்களென்றும் கூறினார்…”

“அயோக்கியன், கோழை, திருடன்…” என்று ஸகங்ரநாம பாராயணம் செய்யத் தொடங்கினாள் சாரதை.

“சை, என்னெதிரில் இப்படியெல்லாம் சொல்லாதே. நகையும் பணமும் நாசமாய்ப் போகட்டும். எங்கள் வாழ்வு குலைந்துவிடும் போலிருக்கிறதே, என்ன செய்வேன்? அவருக்குப் பத்திரிகை வந்ததும் எவ்வளவு ஆவலுடன் வாங்கிப் படிப்பார்? எவ்வளவு உற்சாகத்துடன் பத்திரிகையிலுள்ள விஷயங்களை எடுத்துச் சொல்வார்! இப்பொழுது அந்த உற்சாகமெல்லாம் எங்கேயோ போய்விட்டது. இது மட்டுமா? நான் கதர்ப்புடவைதான் கட்டிக் கொள்ள வேண்டுமென்று முன்னெல்லாம் எவ்வளவு பிடிவாதமாகச் சொல்வார்? பத்து நாளைக்கு முன் வாசலில் பட்டுப் புடவை வந்தது. வாங்கட்டுமா என்று கேட்டேன். எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள் என்றார். அந்தப் பாழாய்ப்போன குதிரைப் பந்தயத்தைத் தவிர வேறொன்றிலும் அவருக்கு இப்போது சிரத்தையில்லை. ஒரு மாதமாக இராட்டினம் சுற்றுவதையும் நிறுத்தி விட்டார். என்னிடம் இச் செய்தியை ஒளித்து வைத்திருப்பதால் என்னோடு பேசுவதற்கே அவருக்கு வெட்கமாகயிருக்கிறது. அக்கா! என்ன செய்யலாம், சொல்லேன். அவரிடம் எல்லாம் எனக்குத் தெரியுமென்று சொல்லிவிடட்டுமா? இவையெல்லாம், போனாலும் இன்னும் ஒரு பெரும் பயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் நண்பர்கள் எல்லாரும் குடிகாரர்கள் எனத் தெரிகிறது. ஒரு நாள் அவர் ‘அதற்குமட்டும் என்னைக் கூப்பிடாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘இன்னும் எத்தனை நாளைக்கு?’ என்று அந்த அழகான நண்பர்களில் ஒருவர் சொன்னதும் காதில் விழுந்தது. அன்றிலிருந்து, ‘இன்னும் எத்தனை நாளைக்கு’ என்றுதான் நானும் என் மனதில் கேட்டுக் கொண்டு வருகிறேன். குழந்தைப் பருவத்திலிருந்து எனக்குக் கஷ்டம் வந்தபோதெல்லாம் உன்னிடமே தஞ்சம் புகுந்தேன். இப்போதும் உன்னிடமே வந்தேன். நீயே என் வாழ்க்கையைக் காப்பாற்றித் தரவேண்டும்” என்று லக்ஷ்மி சொல்லி முடித்தாள்.

சாரதை எழுந்து சென்று ஜன்னலின் பக்கத்தில் தெருவைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து, திரும்பி வந்தாள். “லக்ஷ்மி! இதோ பார், நளாயினி, தமயந்தி, சீதை இவர்களைப்பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டாள்.

லக்ஷ்மி ஒன்றும் புரியாமல், “ஆம்” என்றாள்.

“அவர்களுடைய வரலாறுகள் தெரியுமா?”

“தெரியும்.”

“அப்படியானால் இந்த விவரங்களையெல்லாம் என்னிடம் ஏன் சொன்னாய்?”

லக்ஷ்மி விம்மி அழ ஆரம்பித்தாள். சாரதை அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு, “அடி அசடே, அழாதே. உன்னுடைய சக்தியை நீ தெரிந்து கொள்ளவில்லை. உன் உள்ளத்தில் காதல் இருக்கிறது. உன் முகத்தில் மோகம் இருக்கிறது. உன் கண்களில் இன்பம் இருக்கிறது. (அச்சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண்விழித்து எழுந்தது). இதோ இந்தச் செல்வன் இருக்கிறான். இவ்வளவு ஆயுதங்களையும் கொண்டு உன் கணவனுடன் போராடி வெற்றி பெறாவிட்டால், நீ எதற்குப் பிரயோஜனம்? உன் கணவனுக்கு, குதிரைப் பந்தயத்திலும், சீட்டாட்டத்திலும் உள்ள சிரத்தை உன்னிடம் ஏற்படாவிட்டால் அது யாருடைய தவறு?”

லக்ஷ்மி ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றாள்.

“ஒன்று சொல்கிறேன் கேள். உன் கணவன் தன் குற்றத்தை மறைக்க விரும்பும் வரையில், உனக்கு க்ஷேமம். அதைத் தெரிந்து கொண்டதாக நீ காட்டிக் கொள்ளாதே. அதற்காக உன்னிடம் அவன் ஒருக்காலும் சந்தோஷப்படமாட்டான். ஒன்றும் நேரிடாததுபோல் முன்னைவிட அதிகமாக அன்பு காட்டு. அவன் கவனத்தைக் கவர முடியாவிட்டால், உன் காதல் ஒரு பைசா பெறாது.”

அடுத்த சனிக்கிழமை தான் மறுபடியும் வருவதாக உறுதி கூறிவிட்டு, சாரதை புறப்பட்டுச் சென்றாள். வீடு சென்றதும், அவள் தன் கணவன் மேஜையைத் திறந்து கடிதமும் பேனாவும் எடுத்து ஏதோ எழுதினாள். எழுதி முடிந்ததும், “சாது அத்தான் இப்படியா செய்கிறான்? இருக்கட்டும், அவனை இலேசில் விடுகிறேனா பார்க்கலாம்” என்று தனக்குதானே மொழிந்து கொண்டாள். தான் எழுதியதை இன்னொருமுறை பார்த்துவிட்டுக் கைகொட்டிச் சிரித்தாள்.

அடுத்த சனிக்கிழமை காலை, ஸ்ரீமான்நாராயணன் பி.ஏ. (ஆனர்ஸ்) தன் வீட்டின் முன்புறத்திலிருந்த ஹாலில் சாய்மான நாற்காலியொன்றில் சாய்ந்து கொண்டிருந்தான். நமது கதாநாயகன், பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்று அரசாங்க உத்தியோகத்தில் ரூ.150 சம்பாதிப்பவனாயினும், கதை ஆசிரியனுக்குள்ள உரிமையால் அவனை, ஏக வசனத்திலேயே அழைக்கின்றோம். கையிலிருந்த ஆங்கில மாதாந்திர சஞ்சிகையொன்றில் அவன் கருத்துச் சென்றிருந்தது. பந்தயக் குதிரையோட்டியொருவன், எப்படி ஒரு கோடீசுவரன் புதல்வியால் காதலிக்கப்பட்டுப் பல இடையூறுகளுக்குள்ளாகி, கடைசியில் அவளை மணம் புரிந்தான் என்று கூறும் ஒரு சிறு கதையை அவன் படித்துக் கொண்டிருந்தான். நாற்காலிச் சட்டத்தின் மீது ஆங்கில தினசரிப் பத்திரிகையும், ஒரு சிறு புத்தகமும் கிடந்தன. பத்திரிகையில் பந்தயங்களையும் மற்றும் விளையாட்டுகளையும் பற்றிய விவரங்கள் உள்ள பக்கம் மேலே காணப்பட்டது. புத்தகம் கிண்டி குதிரைப் பந்தயத்தில் போட்டியிடப்போகும் பற்பல குதிரைகளைப் பற்றிய விவரங்கள் அடங்கியது. நாராயணனது முழுக் கவனத்தையும் அக்கதை கவர்ந்ததாகத் தெரியவில்லை. அடிக்கடி சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை ஏறிட்டு பார்த்துக் கொண்டிருந்தான். மணி பத்தரை ஆனதும், சஞ்சிகையை மூடி வைத்துவிட்டு “லக்ஷ்மி, சமையல் ஆகவில்லையா இன்னும்?” என்று உரத்த குரலில் கேட்டான்.

“ஆகிவிட்டது, வாருங்கள்.”

இச்சமயத்தில் “ஸார், தபால்!” என்று கூறிக் கொண்டு தபால்காரன் வந்தான். நாராயணன் எழுந்து சென்று கடிதத்தை வாங்கி உறையை உடைத்து உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தான். அவன் கண்களிலே அப்போது தோன்றிய அசட்டுப் பார்வை கடிதத்தின் பொருள் அவனுக்கு விளங்கவில்லையென்று காட்டிற்று. கைக்குட்டையை எடுத்துக் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு, மற்றொரு முறை படித்தான். அக்கடிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது:-

பிரியமுள்ள ஐயா,

ஆலகால விஷத்தையும் நம்பலாம்

ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்

சேலை கட்டிய மாதரை நம்பினால்

தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே

என்ற பாட்டைத் தங்கள் சிந்தையிற் பதித்தல் நலம்.

தங்கள் நன்மையை விரும்பும் நண்பன்.

“ஏன் சாப்பிட வரவில்லை?” என்று குயிலோசையினும் இனிய குரலில் கேட்டுக் கொண்டு வந்தாள் லக்ஷ்மி.

“ஏதோ கடிதம் வந்திருக்கிறது போலிருக்கிறதே. எங்கிருந்து வந்தது? விசேஷம் ஏதேனும் உண்டோ ?”

“விசேஷம் ஒன்றையுங் காணோம்” என்று சொல்லி நாராயணன் கடிதத்தைச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு சாப்பிட எழுந்து சென்றான்.

அன்று நாராயணன் சாப்பிடும் போது, அதிசயமான ஒரு காரியம் செய்தான். லக்ஷ்மி உணவு பரிமாறுகையில், அவள் தன்னைப் பாராத சமயம் பார்த்து, திரும்பத் திரும்பச் சுமார் இருபது முறை அவளை உற்று உற்றுப் பார்த்தான். இன்னதென்று தெளிவாக விளங்காத பலவகை ஐயங்கள் அவன் உள்ளத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. சட்டென்று அவனுக்கு ஒன்று நினைவு வந்தது. லக்ஷ்மியின் நடத்தையில் சென்ற ஒரு வாரமாக ஒருவகை மாறுதல் இருப்பதாக அவனுக்குத் தோன்றிற்று. வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே இந்தச் சில தினங்களாய் அவள் தன்னிடம் அன்பு காட்டி வருவதாக நினைத்தான். இம்மாறுதலுக்குக் காரணம் என்ன? – இதற்கு விடை கூறிக்கொள்ள அவனுக்கே அச்சமாயிருந்தது.

சாப்பிட்ட பின்னர், நாராயணன் மீண்டும் வந்து நாற்காலியில் சாய்ந்து கொண்டு கடிகாரத்தைப் பார்த்தான். கிண்டிக்குப் போகும் முதல் ஸ்பெஷலைப் பிடிக்க வேண்டுமானால் உடனே கிளம்ப வேண்டும். அடுத்த ஸ்பெஷலுக்குத்தான் போவோமே என்று எண்ணிக் கொண்டு அந்தக் கடிதத்தை இன்னொரு முறை எடுத்துப் படித்தான். அதை யார் எழுதியிருக்கக்கூடும்? அந்த எழுத்து? – எங்கேயோ பார்த்தது போலத் தோன்றிற்று. தலையை இரு கரங்களாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு யோசித்தான். பயனில்லை.

இதற்குள் மணி 12.30 ஆகிவிட்டது. இன்று ஒரு நாள் போகாவிட்டால் என்ன?…சை! “இந்தப் பைத்தியக்காரக் கடிதத்துக்காகவா போகாமலிருந்து விடுவது? நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?…” உடனே எழுந்து உடுப்புகளைத் தரித்துக்கொண்டு விரைந்து சென்றான்.

கடைசி ஸ்பெஷல்தான் கிடைத்தது. வழக்கம் போல் நண்பர்கள் முதல் ஸ்பெஷலில் போயிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் அவர்களைக் கண்டு பிடிப்பதெப்படி? அன்று அவர்களைக் கண்டுபிடிக்க அவன் அவ்வளவு ஆவல் கொள்ளவுமில்லை.

அதிசயங்களிலெல்லாம் அதிசயம், அன்று நாராயணன் ஒரு பைசாகூடப் பந்தயம் வைக்கவில்லை! உண்மையில் அவன் மனம் பந்தயத்தில் செல்லவேயில்லை. லக்ஷ்மியின் அதிகப்படியான அன்பு – அக் கடிதம் – அதிலுள்ள எழுத்து – இவைகளிலேயே அவன் சிந்தை உழன்று கொண்டிருந்தது.

பந்தயம் முடிந்து, எல்லோரும் திரும்பிய போது, நாராயணனும் புறப்பட்டான். வண்டியில் நண்பர்களை சந்தித்தான். “ஓ! மிஸ்டர் நாராயணன்! உம்மைத் தேடித் தேடிப் பார்த்தோமே! எந்த ஸ்பெஷலில் வந்தீர்?” என்று ஒருவர் கேட்டார்.

“கடிகாரத்தின் தவறு. முதல் ஸ்பெஷல் புறப்பட்டு இரண்டு நிமிஷங் கழித்து வந்தேன்.”

“ஓ! ஏதோ நேரிட்டு விட்டதென்று பயந்தோம். ஆனால், முகம் ஏன் வாட்டமுற்றிருக்கிறது? ஏதேனும் பணம் தொலைந்து போயிற்றா?”

அப்பொழுதுதான் நாராயணனுக்குத் தன் சட்டைப் பையிலிருந்த சில்லரையைத் தவிர வேறு பணம் கொண்டு வரவில்லையென்று நினைவு வந்தது. ஆயினும் நமது கதாநாயகன் – எழுத வெட்கமாயிருக்கிறது – மீண்டும் ஒரு பெரும் பொய் சொன்னான். “ஆம், ஸார், இருநூறு ரூபாய்.”

“கவலைப்படாதேயும். அடுத்த வாரம் அதிர்ஷ்டம் அடிக்கலாம்” என்றார் அந்த ‘அழகான’ நண்பர்களில் ஒருவர்.

மறுநாள் முதல், தன் கணவனுடைய நடத்தையில் ஒரு வகை மாறுதலைக் கண்டு லக்ஷ்மி அதிசயித்தாள். ஆபீஸ் விட்டதும் நாராயணன் நேரே வீட்டுக்கு வரத்தொடங்கினான். அவனுடைய நண்பர் குழாத்தை அழைத்துக் கொண்டு வருவதில்லை. என்றுமில்லாத வழக்கமாக ஒரு நாள் ஆபீஸ் வேலையிலேயே வீட்டுக்கு வந்தான். இதற்குக் காரணமான தலைவலி, வீட்டுக்கு வந்து பத்து நிமிஷத்தில் மருந்து மாயமில்லாமல் சொஸ்தமாகி விட்டது. லக்ஷ்மிக்குச் சிறிது ஆச்சரியமளித்தது. அவ் வாரத்தில் லக்ஷ்மி பல முறையும் சாரதாவை நன்றியறிதலுடன் நினைத்துக் கொண்டாள். தான் அவள் சொற்படி அதிக அன்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வதே தன் கணவன் நடத்தையில் மாறுதலேற்படக் காரணமென அவள் நம்பினாள்.

அடுத்த சனிக்கிழமை காலை பத்து மணிக்கு வழக்கம் போல் நாராயணன் சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு, கடிகாரத்தை பார்த்த வண்ணமாயிருந்தான். ‘தபால்’ என்ற சத்தம் கேட்டதும் அவன் நெஞ்சம் திடுக்கிட்டது. கடிதத்தின் உறைமீது விலாசத்தைப் பார்த்ததும். அவன் ஹிருதயம் படபடவென்று அடித்துக் கொள்ளலாயிற்று. அக் கடிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

பிரியமுள்ள ஐயா,

எச்சரிக்கை! இந்தச் சனிக்கிழமை மாலை விழிப்புடனிருந்தால், நீர் அறிய விரும்பும் விஷயத்தை அறிந்து கொள்ளலாம்.

தங்கள் நன்மை விரும்பும் நண்பன்.

நாராயணனுக்குச் சட்டென்று ஒரு யோசனை வந்தது. எதிர் வீட்டில் பி.எல் பரீட்சைக்குப் படிக்கும் மாணாக்கர் ஒருவர் இருந்தார். அவர் நாராயணனின் நண்பரல்லர். ஆயினும், கொஞ்சம் பழக்கமுண்டு. அவசரமாக எழுந்து சென்று எதிர் வீட்டு வாயிற்படியில் நின்று கொண்டு, “ஸார்! ஸார்!” என்று கூப்பிட்டான். பி.எல். மாணாக்கர் வெளியே வந்தார். நாராயணன் அவரை ஏற இறங்கப் பார்த்தான். அவர் முகத்தில் எவ்வித மாறுபாடும் காணப்படவில்லை. “ஒன்றுமில்லை, என் கடிகாரம் நின்று போய் விட்டது. தயவு செய்து மணி பார்த்துச் சொல்லுங்கள்” என்றான். மாணாக்கர் உள்ளே போய் அங்கிருந்து ஏதோ சொன்னார். அது சரியாகக் காதில் விழாத போதிலும், “சரி, வந்தனம்” என்று நாராயணன் கூறிவிட்டுத் திரும்பினான்.

அன்று உணவு அருந்தியதும் நாராயணன் ஆடம்பரமாக உடுப்பு அணிந்து கொண்டான். பின்னர் சமையல் அறைக்குச் சென்றான். லக்ஷ்மி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருந்தது. சென்ற ஒரு வாரமாகத் தன் கணவர் நடந்து கொண்ட மாதிரியிலிருந்து, ஒரு கால் இன்று போகாமலிருந்துவிட மாட்டாராவென்று அவள் ஆசைப்பட்டாள். ஆனால், நாராயணன் உடுப்பணிய ஆரம்பித்ததைப் பார்த்ததும், இந்நம்பிக்கையைக் கைவிட்டாள். அவளையறியாமலே துக்கம் பொங்கிற்று.

“லக்ஷ்மி, நான் போய் வருகிறேன்” என்றான் நாராயணன்.

லக்ஷ்மிக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘ஒரு நாளாவது சொல்லிக் கொண்டு போனதில்லை. கொஞ்சம் மனம் இளகியிருக்கிறது. இதுதான் தருணம்’ என்று அவள் எண்ணினாள்.

“எங்கே போகப் போகிறீர்கள்? இன்று போக வேண்டாமே. சாயங்காலம் என்னையும் எங்கேனும் அழைத்துக் கொண்டு போங்களேன்” என்றாள்.

‘ஆ! பாசாங்குக்காரி! உலகில் பெண்களை ஆண்டவன் எதற்காகப் படைத்தான்?’ என்று நாராயணன் எண்ணிக் கொண்டான். அவனுக்கு வந்த கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, “இல்லை இன்று அவசியம் போகவேண்டும். இன்னொரு நாளைக்குப் பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அன்று பிற்பகலில் மயிலாப்பூர் மாடவீதிகளிலுள்ள வீட்டுமாடி ஒன்றிலிருந்து யாரேனும் பார்த்திருப்பின், ஸ்ரீமான் நாராயணன், பி.ஏ. (ஆனர்ஸ்) அவ்வீதிகளைச் சுற்றிச் சுற்றி வலம் வந்துகொண்டிருப்பதைக் கவனித்து ஆச்சரியமுற்றிருப்பார்கள்.

மணி சுமார் மூன்றரை இருக்கும். நாராயணன் தனது வீடிருக்கும் தெரு முனைக்குப் பன்னிரண்டாவது முறையாக வந்தபோது தன் வீட்டுக்கெதிரில் ஒரு குதிரை வண்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். ஒரு கணநேரம் அவன் மூச்சு நின்று விடும் போலிருந்தது. அவ்வண்டிக்குள் இளைஞன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் எதிர்ப்புறமாய்க் குதிரையை நோக்கி திரும்பி உட்கார்ந்திருந்தபடியால், முகம் தெரியவில்லை. “வண்டி இப்போதுதான் வந்து நிற்கிறதா? வண்டியில் இருப்பவன் இறங்கப் போகிறானா?” என்று எண்ணி, நாராயணன் திக்பிரமை கொண்டவன் போல் தெரு முனையிலேயே நின்றான். என்ன துரதிர்ஷ்டம்! வண்டிக்காரன் குதிரையைச் சவுக்கால் அடித்தான். நாராயணன் அதே கணத்தில் தன் வீட்டு மாடியை நோக்கினான். ஒரு ஜன்னல் திறந்திருந்தது. அதன் வழியே பெண் கரமொன்றும், புடவைத் தலைப்பும் தெரிந்தன. இரண்டு நிமிஷங்களில் வண்டி தெருக்கோடிச் சென்று மறைந்தது. நாராயணன் அந்த இரண்டு நிமிஷமும் நரக வேதனையனுபவித்தான். மறுபடியும் அண்ணாந்து தன் வீட்டு மாடியின் ஜன்னலை நோக்கியிருப்பானாயின், அங்கே சாரதை நின்று கண்களில் விஷமக் குறிதோன்றத் தன்னைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டிருந்ததைக் கண்டிருப்பான். ஆனால் அப்போது அவன் உள்ளம் இருந்த நிலையில், கண்கள் திறந்திருந்தும் எதிரிலுள்ள பொருளைக் கூட அவன் பார்க்கவில்லை.

முதலில், விரைந்து வீட்டுக்குச் செல்லலாமாவென்று அவன் நினைத்தான். ஆனால் அமைதியுடன் யோசனை செய்தல் இப்போது அவசியமென உணர்ந்தான். எனவே கடற்கரையை நோக்கிச் சென்றான். மாலைக் கடற்காற்று அவனுக்கு கொஞ்சம் சாந்தம் அளித்தது. யோசனை செய்யலானான். முதலில், தான் தெருமுனையில் நில்லாமல் வீதிகளைச் சுற்றி வந்து கொண்டிருந்தது தவறு என்று முடிவு செய்தான். பின்னர், நிச்சயமான அத்தாட்சியில்லாமல் அவசரப்பட்டு எதுவும் செய்யக் கூடாதென்று தீர்மானித்தான். பிறகு குதிரை வண்டியைப் பற்றி யாரையும் விசாரித்தால் அவமானத்துக்கும், ஆபத்துக்கும் இடமாகுமென்னும் முடிவுக்கு வந்தான். கடைசியாக உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், தன் மனைவியிடம் சந்தேகங் கொண்டதாகக் காட்டிக் கொள்ளக் கூடாதென்றும் அவளிடம் அன்பு கொண்டிருப்பதாக நடிக்க வேண்டுமென்றும் தீர்மானித்தான். நாராயணன் புத்திசாலி! இல்லாவிட்டால், பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில் தேறியிருக்க முடியுமா?

ஒரு வாரம் சென்றது. அடுத்த சனிக்கிழமையும் வந்தது. நாராயணன் தன் ஐயங்களை அநேகமாக மறந்து விட்டான். “என்ன பைத்தியம்? நமது லக்ஷ்மியைச் சந்தேகிக்கப் போனோமே! குழந்தையைப் போல் கள்ளங்கபடற்ற இவளா அத்தகைய பெருந்துரோகம் எண்ணுவாள்?” என்று அவன் கருதலானான். அத்துடன் வீட்டில் இன்ப விளக்கையொத்த இவளை வைத்து விட்டுத்தான் வெளியில் எங்கேயோ இன்பந்தேடி அலைந்தது எவ்வாறு என்ற வியப்பும் அவன் உள்ளத்தில் சற்றே தோன்றலாயிற்று. எனினும், இன்றைய தினம் கிண்டிக்குப் போய் வருவது என்று அவன் தீர்மானித்தான். மனைவியின் பேரில் தவறான ஐயங்கொண்டு அதற்காக கிண்டிக்குப் போகாமலிருப்பதா? என்ன அவமானம். யாருக்காவது தெரிந்தால் நகையார்களா? இன்னும் இரண்டு வாரந்தான் பந்தயம் நடைபெறும். இழந்த மூவாயிரம் ரூபாயில் ஏதேனும் ஒரு பகுதியையேனும் மீட்க வேண்டாமா?

ஆனால் அந்தக் கடிதங்கள்? அவற்றின் நினைவு இடையிடையே தோன்றி, நாராயணன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது. அந்த எழுத்தை எங்கேயோ, பார்த்த நினைவாயிருந்தது. ஆயினும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் எங்கே என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இன்றைய தினம் கடிதம் ஒன்றும் வராவிடின், பழைய கடிதங்களைத் தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டு, எல்லாவற்றையும் மறந்து விடுவதென்று தீர்மானித்தான். எனவே தபால்காரன் வரவை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தான். எதிர் நோக்கியது வீண் போகவில்லை. கடிதம் வந்தது. நாராயணனின் அப்போதைய மனோநிலையை வருணித்தல் நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. உறையை உடைத்துக் காகிதத்தைப் படித்தான்.

பிரியமுள்ள ஐயா,

இன்று மாலை, உமது மனைவி எங்கேனும் புறப்பட்டுப் போக விரும்பினால், தடுக்க வேண்டாம். அவளுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து செல்லும்.

தங்கள் நன்மையை நாடும் நண்பன்.

பற்பல ஐயங்கள், மனக்குழப்பம் எல்லாம் மீண்டும் முன்னைவிட அதிகமாகவே ஸ்ரீமான் நாராயணனைப் பற்றிக் கொண்டன. பொறாமையும், கோபமும் அவன் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியலாயின. அவன் உடல் நடுங்கிற்று; கண்களில் நீர் ததும்பிற்று. கள்ளங் கபடற்றவள், தன்னைத் தவிர வேறு கதியில்லாதவள் என்று எண்ணி, தான் அளவற்ற நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கும் ஒரு பெண், தன்னைப் பயங்கரமாக ஏமாற்றி, மகத்தான துரோகம் செய்வது மட்டுமன்று; இந்த அவக்கேடான விஷயம் மூன்றாவது ஆசாமி ஒருவனுக்குத் தெரிந்தும் இருக்கிறது. அவமானம்! அவமானம்! இத்தகைய சந்தர்ப்பங்களில் மனைவியைக் கொன்று விட்டுத் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்த பல விவரங்கள் நாராயணன் நினைவுக்கு வந்தன. கைத்துப்பாக்கியின் மீதும், விஷமருந்தின் மீதும் அவன் எண்ணம் சென்றது.

லக்ஷ்மி உள்ளிருந்து வந்தாள். அன்றலர்ந்த தாமரை போன்ற அவள் வதனத்தில் செவ்விதழ்கள் புன்னகை பூத்துத் திகழ்ந்தன. கள்ளமற்ற உள்ளத்தினின்று எழுந்த காதற்சிரிப்போ அது? “சாப்பிடவாருங்கள்” என்ற அவள் மொழிகள், நாராயணன் செவிகளில் இன்பத்தேனெனப் பாய்ந்தன. ‘ஒன்று இவள் இவ்வுலகிலுள்ள நூறு கோடிப் பெண் மக்களில் பொறுக்கி எடுத்த இணையற்ற வஞ்ச நெஞ்சப் பாதகியாகயிருத்தல் வேண்டும்; அல்லது… நமக்குப் பகைவன் யார்? நம்மை இவ்வாறு வருத்துவதில் யாருக்கு என்ன லாபம்? எப்படியும் இன்று உண்மையைக் கண்டுவிடலாம்’ என்று நாராயணன் எண்ணினான்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் லக்ஷ்மி, “நான் இன்று திருவல்லிக்கேணிக்குப் போய் வரட்டுமா?” என்று கேட்டாள். இக்கேள்வியினால் நாராயணன் உள்ளக் கடலில் எழுந்த கொந்தளிப்பை, லக்ஷ்மி மனக்கண் கொண்டு பார்த்திருப்பாளாயின், அந்தோ அவள் பயந்தே போயிருப்பாள்.

“எதற்காக?” என்று நாராயணன் கேட்டபோது அவன் குரலிலிருந்த நடுக்கத்தை லக்ஷ்மி கவனித்தாளில்லை.

“சாரதை அக்கா, அடிக்கடி வரச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். நீண்டகாலமாய் வரவில்லையென்று கோபித்துக் கொண்டாள். இன்று கட்டாயம் வரச் சொன்னாள்.”

“சரி!” என்று ஒரே வார்த்தையில் நாராயணன் பதில் கூறினான்.

“நீங்களும் வாருங்களேன். வேறு அவசியமான வேலையிருக்கிறதா?” என்று லக்ஷ்மி பயத்துடன் கேட்டாள்.

“என்ன மோசம்! என்ன வேஷம்! அப்பா!” என்று முணுமுணுத்தான்.

“என்ன சொல்லுகிறீர்கள்?”

“ஒன்றுமில்லை, நான் வேறிடத்துக்கு போக வேண்டும் நீ போய் வா.”

சாப்பாடு ஆனதும் நாராயணன், “வண்டி வேண்டுமா? பார்த்துக் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான்.

“காலையில் தெருவில் ஒரு வண்டி போயிற்று. வண்டிக்காரனிடம் சொல்லியிருக்கிறேன்.”

ஏற்பாடு ஒன்றும் பாக்கியில்லை என்று நாராயணன் எண்ணிக் கொண்டு, “சரி நான் போய் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போனான். ஒரு குதிரை வண்டிக்காக மயிலாப்பூர் எங்கும் அலைந்தான் என்ன துரதிர்ஷ்டம்? அன்றைக்கென்று ஒரு வண்டி கூடக் காணோம். “இந்தப் பாழும் மோட்டார் பஸ்கள் வந்து குதிரை வண்டியே இல்லாமற் செய்துவிட்டன. நாசமாய்ப் போக!” என்று சபித்தான். எங்கும் சுற்றிவிட்டுத் திரும்புகையில், எதிரில் லக்ஷ்மி ஒரு வண்டியில் வருவதைக் கண்டான். அவள் தன்னைப் பாராவண்ணம் குளப்படியில் இறங்கி மறைந்து நின்றான்.

அவன் உள்ளம் தீவிரமாக வேலை செய்தது. வண்டியைத் தொடர்ந்து நடந்து செல்வது இயலாத காரியம். ரிக்ஷாவும் அவ்வளவு வேகமாகச் செல்லாது. குதிரை வண்டியோ கிடைக்கவில்லை. மோட்டார் பஸ்ஸில் ஏறிக் குதிரை வண்டிக்கு முன்னால் திருவல்லிக்கேணிக்குப் போய்விடுவதென்றும், மணிக் கணக்குப் பார்த்து, சாரதையின் வீட்டுக்கு நேரே போய்ச் சேர்கிறாளாவென்று கண்டுபிடித்து விடலாமென்றும் தீர்மானித்தான். அவ்வாறே அவசரமாகச் சென்று, புறப்படவிருந்த மோட்டார் ஒன்றில் ஏறினான். ஆனால் இவ்வுலகில் இடையூறுகள் தனித்து வருவதில்லையே? ராயப்பேட்டை போனதும், மோட்டார் ‘பட்பட்’ என்று அடித்துக்கொண்டு நின்றுவிட்டது. வண்டி ஓட்டி ஆன மட்டும் வண்டியை முடுக்கிப் பார்த்தும் பயனில்லை. பெட்ரோல் இல்லையென்னும் விவரம் அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. உதவி வேலைக்காரனை டிராம் வண்டியில் ஏறிப்போய் மௌண்ட் ரோட்டிலிருந்து பெட்ரோல் வாங்கிவர ஏவினான். வண்டியில் இருந்தவர்கள் சபிக்கலானார்கள். இன்னும் பணங்கொடாதவர் வண்டியை விட்டிறங்கினர். நாராயணன் எல்லாரையும் விட அதிகமாகச் சபித்தான். மோட்டார் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவனுடைய ஏழு தலை முறையும் நாசமாய்ப் போகவேண்டுமென்று அவன் எண்ணினான். பணங்கொடுத்திருந்தானாயினும், போனால் போகட்டும் என்று இறங்கிவிட்டான்.

பின்னால் வந்த மோட்டார் பஸ்கள் எல்லாவற்றிலும் ஜனங்கள் நிரம்பியிருந்தபடியால், அவனுக்கு இடங்கிடைக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து வந்த டிராம் வண்டியொன்றில் ஏறிக் கொண்டான். வழி நெடுகஜனங்கள் காத்துக் கொண்டிருந்தபடியால், டிராம் அடிக்கடி நின்று சென்றது. உலகமெல்லாம் தனக்கு விரோதமாகச் சதியாலோசனை செய்திருப்பதாய் அவனுக்குத் தோன்றிற்று. மௌண்ட் ரோட்டிலும் சற்று நேரம் காத்திருக்க நேர்ந்தது. திருவல்லிக்கேணி போகும் வண்டிகள் எல்லாம் நிறைந்திருந்தன. கடைசியாக நாராயணன் திருவல்லிக்கேணி சேர்ந்து சாரதை வீடு இருந்த வீதிக்குச் சென்றபோது, மாலை நான்கு மணியாகி விட்டது. வீட்டு வாயிலில் லக்ஷ்மி ஏறி வந்த வண்டி நின்று கொண்டிருந்தது. அவ்வண்டி நேராக மயிலாப்பூரிலிருந்து சாரதை வீட்டுக்கே வந்ததாவென்று கண்டுபிடிப்பது எங்ஙனம்? வண்டிக்காரனையோ வீட்டிலுள்ளவர்களையோ விசாரிப்பது அறிவீனம்; அவமானத்துக்கிடம். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் சாரதையின் வீட்டுக்குள்ளிருந்து, சாரதையும், லக்ஷ்மியும், சாரதையின் கணவனும் வெளிவந்து வண்டியில் ஏறிக்கொண்டார்கள். எங்கேயோ வேடிக்கை பார்க்கப் புறப்பட்டுச் சென்றார்கள் போலும். நாராயணனின் வயிற்றெரிச்சல் அதிகமாயிற்று. சாரதையும் அவள் கணவனும் எத்தகைய இன்ப வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான். கடற்கரைக்குப் போய் வெகு நேரம் உட்கார்ந்துவிட்டு இரவு வீடு போய்ச் சேர்ந்தான். லக்ஷ்மியை அவள் போயிருந்த விஷயமாக ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை.

அன்பார்ந்த ஐயா!

ஜாக்கிரதைக் குறைவினால் இரண்டு முறை உமது முயற்சியில் தவறி விட்டீர். நாளை சனிக்கிழமை மத்தியானம் வெளியே சென்று விட்டுச் சரியாக நான்கு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிச் செல்லும். உண்மையறிவீர்.

தங்கள் நன்மை விரும்பும் நண்பன்.

இக்கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான் நாராயணன். சென்ற ஒரு மாத காலமாகத்தான் அனுபவித்து வரும் துன்பங்கள் அத்தனையும் ஒரு பெருங்கனவோ என்று எண்ணினான். கனவன்று, நிஜமே என்பதைக் கையிலிருந்த கடிதம் வலியுறுத்திக் காட்டிற்று. எப்படியும் இன்று உண்மை வெளியாகி விடுமென்று நினைத்துப் பெருமூச்சு விட்டான். ஆனால், அவ்வுண்மை எவ்வளவு பயங்கரமானது? முதல் நாள், தான் ஒரு நண்பரிடம் மிகவும் சிரமப்பட்டு இரவல் வாங்கிக்கொண்டு வந்திருந்த கைத் துப்பாக்கியை மேஜைக்குள்ளிருந்து எடுத்து மீண்டுமொருமுறை பார்த்தான். அதை எவ்வாறு உபயோகிப்பதென்பதை இருபத்தைந்தாம் முறையாக மனத்தில் உறுப்போட்டுக் கொண்டான். அவன் கண்களில் கொலைக் குறித் தோன்றிற்று. பகல் ஒரு மணிக்கு வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான். அப்போது அவன் உள்ளக் கடலில் எழுந்த பேரலைகளின் இயல்பை யாரோ வருணிக்க வல்லவர்.

சரியாக மாலை நான்கு மணிக்கு நாராயணன் வீடு திரும்பினான். வாயிற்கதவு சாத்தித் தாளிடப் பட்டிருந்தது. மாடி அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. ஆயினும், நிதானந்தவறிவிடக் கூடாதென்று எண்ணிப் பற்களை கடித்துக் கொண்டான். கதவை ஓங்கி இடித்தான். இரண்டு நிமிஷங்கழித்துக் காலடிச் சத்தம் கேட்டது, “யார் அங்கே?” அது லக்ஷ்மியின் குரல். “நான் தான்; கதவைத் திற.” கதவு திறக்கப்பட்டது. லக்ஷ்மி முகத்தில் வியப்புக் குறிதோன்றிற்று. சந்தேகம் என்னும் திரைவழியே பார்த்த நாராயணனுக்கு அவள் பயத்தினால் திடுக்கிட்டு நடுநடுங்குவதாகத் தோன்றிற்று. வாயிற்படி தாண்டி உள்ளே நுழைந்ததும், உயர்தரக் கம்பெனி ஜோடுகள் நாராயணன் கண்ணில்பட்டன. அவனுக்கு எல்லாச் சந்தேகமும் நிவர்த்தியாயிற்று. தன் கைத்துப்பாக்கிக்கு அன்று இரையாகப் போகிறவன் மாடிமீதிருப்பதாக அவன் உணர்ந்தான். விரைந்து சென்று மாடிப்படிகளில் ஏறலானான். ஆனால், லக்ஷ்மி அவனுக்கு முன்னால் ஓடிப் பாதிப்படிகள் ஏறிய நாராயணனை வழிமறித்துக் கொண்டும், “உயரப் போகாதேயுங்கள்” என்று கொஞ்சும் குரலில் கூவினாள். நாராயணின் கோபவெறி அளவு கடந்தாயிற்று. லக்ஷ்மியை ஒரு கையினால் பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இடித்துக் கீழே தள்ளினான். பாவம்! லக்ஷ்மி பத்துப் பன்னிரண்டு படிகளிலும் உருண்டு சென்று கீழே தரையில் விழுந்தாள்.

அவளைத் திரும்பியும் பாராமல், நாராயணன் மேலே ஓடினான். மாடி ஹாலில் கதவை ஓங்கி ஓர் உதை உதைத்தான். கதவு தாளிடப்படாமையால், தடால் என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது. அப்போது அவன் அவ்வறையினுள்ளே கண்ட காட்சி அவனைத் திகைக்கச் செய்துவிட்டது. எத்தனையோ விதப் பயங்கர காட்சிகளை அவன் மனத்திலே கற்பனை செய்து பார்த்துத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவன் முன் தோன்றிய காட்சியை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை. தலையில் இடியே விழுந்துவிட்டது போல் திடுக்கிட்டு நின்று விட்டான்.

அக்காட்சி வேறொன்றுமில்லை. நாராயணன் நீண்ட நாளாய் மூலையில் போட்டிருந்த இராட்டினத்தை எடுத்துச் செப்பனிட்டுச் சாரதையின் கணவன் ஸ்ரீனிவாசன் நூல் நூற்றுக் கொண்டிருந்தார். நூல் அடிக்கடி அறுந்து போய்க்கொண்டிருந்தது. சாரதை அருகில் உட்கார்ந்து “நிறுத்துங்கள், இழுங்கள்” என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டும், நூல் அறும்போது இணைத்துக் கொண்டுமிருந்தாள். நாராயணன் தடபுடலாக உள்ளே நுழைந்த சத்தங்கேட்டு அவள் தூக்கிவாரி போடப்பட்டவள் போல் எழுந்தாள். “என்ன அத்தான், கொஞ்சமும் உனக்கு ‘நாஸுக்’ தெரியாமல் போய்விட்டது. என்ன தடபுடல்? சொல்லிவிட்டு உள்ளே வரக்கூடாதா?” என்றாள்.

நாராயணன் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். “இல்லை; நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியாது, மன்னியுங்கள்” என்று தடுமாறிக் கொண்டே கூறினான். “தெரியாதா? லக்ஷ்மி அடுப்புள்ளேயே இருக்கிறாளா என்ன?” லக்ஷ்மி தன்னைத் தடுத்ததின் காரணம் இப்பொழுது நாராயணனுக்குப் புலனாயிற்று. இதற்குள் சாரதையின் கணவன், “அது கிடக்கட்டும், நீங்கள் சற்று இங்கே வாருங்கள். உங்களுக்கு நன்றாக நூல் நூற்கத் தெரியுமே? கொஞ்சம் கற்றுக் கொடுங்கள். என் உயிரை வாங்குகிறாள்” என்றார்.

“இதோ வருகிறேன்” என்று நாராயணன் சொல்லி விட்டுத் தன் சட்டைப் பையில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்த கைத் துப்பாக்கியை அலமாரிக்குள் வைத்துப் பூட்டப் போனான். அதற்குள், “அதென்ன அத்தான்” என்று சாரதை கேட்டுக்கொண்டு அருகில் வந்து, “ஓ! கைத்துப்பாக்கியெல்லாம் எப்போதிருந்து? யாரைக் கொல்லப் போகிறாய்?” என்றாள். பின்னர் சற்று தணிந்த குரலில், “குதிரைப் பந்தயத்துக்குப் போகிறவர் எல்லாருக்கும் கையில் துப்பாக்கிகூட வேண்டுமா என்ன?” என்று கேட்டாள்.

நாராயணனின் மூளை இயந்திரம் இப்போது தான் சுழல ஆரம்பித்தது; பளிச்சென்று அவனுக்கு உண்மை விளங்கிற்று. அவனுக்கு வந்த கடிதங்களில் கண்ட எழுத்து எங்கோ பார்த்த நினைவாயிருந்ததே! சாரதையின் கையெழுத்தல்லவா அது? லக்ஷ்மிக்குச் சாரதை எப்பொழுதோ எழுதிய இரண்டொரு கடிதங்களிலல்லவா அந்தக் கையெழுத்தைப் பார்த்தது? கொஞ்சம் சிரமப்பட்டு மாற்றி ஏமாற்றி விட்டாள்? லக்ஷ்மியின் மீது தான் கொண்ட சந்தேகங்கள் அவ்வளவும் ஆதாரமற்றவை என அறிந்து நாராயணன் ஆனந்தக் கடலில் மூழ்கினான். அவன் ஹிருதயத்தை அமுக்கியிருந்த ஒரு பெருஞ்சுமை நீங்கியது போலிருந்தது.

சட்டென்று அவனுக்கு இன்னொரு சந்தேகம் உண்டாயிற்று. சாரதையின் கணவனுக்கு இந்த விவரங்கள் தெரியுமோ? தெரிந்திருந்தால் எத்தகைய அவமானம்! அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதெப்படி? அவன் எண்ணத்தைக் குறிப்பாக உணர்ந்த சாரதை தன் கணவரைப் பார்த்து, “நூல் நூற்பது இருக்கட்டும். அத்தானிடம் நாம் வந்த காரியத்தைச் சொல்லுங்கள். நேரமாகிவிட்டதே, போக வேண்டாமா?” என்றாள். அவர், “நாராயணன்! தங்களுக்குச் சங்கதி தெரியுமா? எங்கள் வீட்டில் இப்போது ‘ஹோம் ரூல்’ தான். இவள் வைத்ததே சட்டம். ‘இன்று மாலை சினிமாவுக்கு போக வேண்டும்’ என்றாள். உடனே புறப்பட்டு வந்தேன். உங்கள் பாடு பாதகமில்லை. அன்றொரு நாள் இவளை இங்கே கொண்டு விட வந்த போதும், உங்களைக் காணோம். (ஓ! அன்று வீட்டு வாசலில் வண்டியில் இருந்தவர் நீங்கள்தானோ? என்ன அசட்டுத்தனம்? என்று எண்ணிக் கொண்டான் நாராயணன்.) லக்ஷ்மியைத் தனியே விட்டு விட்டு நீங்கள் பாட்டுக்குப் போய்விடுகிறீர்கள். போகட்டும். இன்றாவது வந்தீர்களே. வாருங்கள் போவோம்” என்றார்.

அவருடைய வார்த்தைகள் நாராயணனுக்குச் சுருக்கென்று தைத்தன. ஆனால், அவருக்குத் தன் அசட்டுத் தனத்தைப் பற்றி எதுவும் தெரியாதென்று அறிந்து ஆறுதல் அடைந்தான். நன்றியறிதலுடன் சாரதையைப் பார்த்து விட்டு, “ஓ போகலாம், இதோ கீழே போய்விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். சாரதை, அவனுடன் போய் மாடிபடியில் வழியை மறித்துக் கொண்டு, “அசட்டு அத்தான்! லக்ஷ்மியிடம் ஒரு வார்த்தையும் சொல்லாதே, அவளிடம் சந்தேகப்பட்டாய் என்று தெரிந்தால் உயிரை விட்டுவிடுவாள். மேலும் என்னை மன்னிக்கவே மாட்டாள்?” என்றாள். “சாரதை உனக்குக் கைம்மாறு என்ன செய்யப் போகிறேன்?” என்றான் நாராயணன். “கைமாறா? நீ என் மீது கோபித்துக் கொள்ளப் போகிறாயோவென்று பயந்தேன். நல்லது, எனக்குக் கைம்மாறு செய்ய விரும்பினால், குதிரைப் பந்தயத்தை மறந்துவிடு. உன் மனைவியைத் தனியே விட்டு விட்டு ஊர் சுற்றவும், சீட்டு விளையாடவும் போகாதே” என்றாள். “இல்லை, இல்லை. ஆண்டவன் ஆணை! இந்த ஒரு மாதமாய் நான் அனுபவித்தது போதும்” என்று கூறிக் கொண்டு நாராயணன் விரைந்து கீழே ஓடினான்.

லக்ஷ்மி ஒரு தூணில் சாய்ந்து கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். தன் கணவனின் கடுங்கோபத்துக்கு உரியவளாவதற்குத் தான் செய்த தவறு இன்னதென்பது அவளுக்குப் புலனாகவில்லை. நாராயணன் கீழிறங்கி வந்து அவளருகில் உட்கார்ந்தான். தாமரை இதழ் போன்ற மிருதுவான அவள் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, “லக்ஷ்மி! என்னை மன்னித்து விடு” என்றான். “ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதேயுங்கள்” என்று லக்ஷ்மி அவன் வாயைத் தன் கரத்தினாள் மூடினாள். “ஒரு வருஷமாக உனக்குத் துரோகம் செய்து விட்டேன். பாழுங் குதிரைப் பந்தயமோகத்தில் மூழ்கிக் கிடந்தேன். பணத்தைத் தொலைத்தேன். இன்றுடன் குதிரைப் பந்தயத்துக்குத் தர்ப்பணம் செய்து விடுகிறேன்” என்றான்.

மாடியின் மீது ஸ்ரீநிவாசனும், சாரதையும் காத்துக் காத்துப் பார்த்தனர். லக்ஷ்மியாவது நாராயணனாவது வரும் வழியைக் காணோம். எனவே சினிமாக் காட்சிக்குச் செல்லும் யோசனையை அவர்கள் கைவிட வேண்டியதாயிற்று. ஆனால் இதன் பொருட்டு அவர்கள் சிறிதும் வருந்தினார்களில்லை. ஸ்ரீநிவாசன் அன்று நன்றாக நூல் நூற்கப் பழகிக் கொண்டார்.

இத்துடன்

அமரர் கல்கியின் சாரதையின் தந்திரம்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.



Sarathaiyin Thanthiram Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,sarathaiyin thanthiramAudiboook,sarathaiyin thanthiram,sarathaiyin thanthiram Kalki,Kalki sarathaiyin thanthiram,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *