BooksTamil AudiobooksYoutube

Solaimalai Ilavarasi Ch13 சோலைமலை இளவரசி Audiobook

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi Ch13 Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch13 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan

Solaimalai Ilavarasi Ch13 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan

Credits -:
Book : சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi
Author of book -: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Copyright © கல்கி கிருஷ்ணமூர்த்தி, All rights reserved.


அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி

அத்தியாயம் 13. உல்லாச வாழ்க்கை!

அன்று மத்தியானம் மறுபடியும் பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்தாள். இலையைப் போட்டுப் பரிமாறினாள். குமாரலிங்கம் மௌனமாகச் சாப்பிட்டான்.

 "காலையில் கலகலப்பாக இருந்தாயே? இப்போது ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று பொன்னம்மாள் கேட்டாள்.

 "ஒன்றுமில்லை, பொன்னம்மா! காலையில் நீ சொன்ன விஷயங்களைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்" என்றான் குமாரலிங்கம்.

 "என்ன யோசித்துக் கொண்டிருந்தாய்?" என்று பொன்னம்மாள் திரும்பவும் கேட்டாள்.

 "உன் தகப்பனார் என்னிடம் இவ்வளவு கோபமாயிருக்கும் போது நான் இங்கே இருக்கலாமா என்று யோசனையாயிருக்கிறது. காலையிலே உன்னை ஒன்று கேட்கவேண்டுமென்றிருந்தேன், மறந்துவிட்டேன்.."

 "உனக்கு மறதி ரொம்ப அதிகம் போலிருக்கிறது!" என்றாள் பொன்னம்மாள்.

 "அப்படி ஒன்றும் நான் மறதிக்காரன் அல்ல. உன் முகத்தைப் பார்த்தால் தான் பல விஷயங்கள் மறந்து போகின்றன!.."

 "வயிற்றுப் பசியைத் தவிர.." என்று குறுக்கிட்டுச் சொன்னாள் பொன்னம்மாள்.

 "ஆமாம்! வயிற்றுப் பசியைத் தவிரத்தான். 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்' என்று பெரியோர் வாக்கு இருக்கிறதே!"

 "போகட்டும்! காலையில் என்னை என்ன கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தாய்?"

 "சூரியன் உதித்து ஒரு நாழிகைப் பொழுதுக்கு இந்தப் பக்கமாக ஒரு பெரிய மனுஷர் போனார். அவர் முகத்தைப் பார்த்தால் ரொம்பக் கோபக்காரர் என்று தோன்றியது. ஒரு வேளை அவர்தான் மணியக்காரரோ என்று கேட்க எண்ணினேன்"

 "இருந்தாலும் இருக்கும். அவர் பின்னோடு ஒரு நாய் வந்ததா?"

 "ஆமாம்; பெரிய வேட்டை நாய் ஒன்று வந்தது. இங்கே வந்ததும் அது குரைத்தது; அந்தப் பெரிய மனுஷர் கையிலிருந்த தடியினால் அதன் மண்டையில் ஒரு அடி போட்டார்!"

 "அப்படியானால் நிச்சயமாக அப்பாதான்! உன்னை அவர் பார்த்துவிட்டாரோ?" என்று பொன்னம்மாள் திகிலுடன் கேட்டாள்.

 "இல்லை, பார்க்கவில்லை! அந்த மொட்டைச் சுவருக்குப் பின்னால் நான் மறைந்து கொண்டிருந்தேன். நாய்க்கு மோப்பம் தெரிந்து குரைத்திருக்கிறது. அதற்குப் பலன் தலையில் ஓங்கி அடி விழுந்தது!"

 "நல்ல வேளை! கரும்புத் தோட்டத்துக்கு இந்த வழியாகத்தான் அப்பா நிதம் போவார். தப்பித் தவறி அவர் கண்ணிலே மட்டும் நீ பட்டுவிடாதே!"

 "அவர் கண்ணிலே படாமல் இருப்பதென்ன? இந்த இடத்திலிருந்தே கிளம்பிப் போய்விட உத்தேசித்திருக்கிறேன், பொன்னம்மா!"

 "அதுதான் சரி! உடனே போய்விடு! முன்பின் தெரியாத ஒரு ஆண்பிள்ளையை நான் நம்பினேனே! என்னுடைய புத்தியை விறகுக் கட்டையால் அடித்துக் கொள்ள வேண்டும்!"

 இவ்விதம் பொன்னம்மாள் சொன்னபோது அவளுடைய கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிக்கும் நிலையில் இருப்பதைக் குமாரலிங்கம் கவனித்தான். சற்று முன்னால் அவன் யோசித்து முடிவு செய்திருந்த தீர்மானங்களெல்லாம் காற்றிலே பறந்து போயின. இந்தக் கள்ளங்கபடமற்ற பெண்ணை முதன் முதலில் தான் சந்தித்து இன்னும் இருபத்து நாலு மணி நேரங்கூட ஆ கவில்லையென்பதை அவனால் நம்ப முடியவில்லை.

 "உன்னைப் பிரிந்து போவதற்கு எனக்கும் கஷ்டமாய்த்தானிருக்கிறது. ஆனாலும் வேறு என்ன செய்யட்டும்? நீதான் சொல்லேன்?" என்று குமாரலிங்கம் உருக்கமான குரலில் கூறினான்.

 "நீ இப்போது சொன்னது நெசமாயிருந்தால் என்னையும் உன்னோடு இட்டுக்கொண்டு போ!" என்று மணியக்காரர் மகள் கூறிய பதில், குமாரலிங்கத்தை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. சற்று நிதானித்துவிட்டு அவன் சொன்னான்:

 "பொன்னம்மா! உன்னையும் என்னோடு அழைத்துப் போகவல்லவா சொல்லுகிறாய்? அதற்கு எனக்குப் பூரண சம்மதம். உன்னைப் பார்த்த பிறகு, 'கலியாணம் செய்து கொள்ளவில்லை' என்ற தீர்மானத்தைக் கூடக் கைவிட்டு விட்டேன். ஆனால் சமய சந்தர்ப்பம் தற்போது சரியாயில்லையே? நானோ போலீஸ் புலிகளிடம் அகப்படக்கூடாதென்று தப்பி ஓடி வந்தவன் என்னை நான் காப்பாற்றிக் கொள்வதே பெருங் கஷ்டம். உன்னையும் கூட அழைத்துக் கொண்டு எங்கே போக? என்னத்தைச் செய்ய?"

 "என்னை உன்னோடு அழைத்துக் கொண்டு போவது கல்லைக் கட்டிக்கொண்டு கேணியிலே விழுகிற மாதிரி தான். அது எனக்குத் தெரியாமலில்லை. அதனாலே தான் உன்னை இங்கேயே இருக்கச் சொல்கிறேன்!" என்றாள் பொன்னம்மாள்.

 "அது எப்படி முடியும்? நீதானே சொன்னாய், உன் அப்பா என்னைப் பார்த்துவிட்டால் கடித்து விழுங்கி விடுவார் என்று?"

 "அது மெய்தான். ஆனால் இந்தப் பாழுங் கோட்டையிலும் இதைச் சேர்ந்த காடுகளிலும் நீ யார் கண்ணிலும் படாமல் எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாமே! சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பதற்கு நான் இருக்கிறேன். உனக்கு என்ன பயம்?"

 "எனக்கு ஒரு பயமும் இல்லை, பொன்னம்மா! ஆனால் எத்தனை நாள் உனக்கு இம்மாதிரி சிரமம் கொடுத்துக் கொண்டிருப்பது? என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு தினந்தினம் நீ சாப்பாடு கொண்டு வருவாய்? வேண்டாம், பொன்னம்மா! நான் எங்கேயாவது போய்த் தொலைகிறேன். உனக்குக் கஷ்டம் கொடுக்க நான் விரும்பவில்லை"

 பொன்னம்மாள் பரிகாசத்துக்கு அறிகுறியாகக் கழுத்தை வளைத்துத் தலையைத் தோளில் இடித்துக் கொண்டு கூறினாள்:

 "பேச்சைப் பார் பேச்சை! எனக்குக் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லையாம்! நான் தான் சொன்னேனே, நீ இவ்விடத்தை விட்டுப் போனால்தான் எனக்கு மனக்கஷ்டம் உண்டாகும் என்று. நானோ பெண் ஜன்மம் எடுத்தவள். உயிர் இருக்கும் வரையில் யாருக்காவது சோறு படைத்துத் தானே ஆ க வேண்டும்? உனக்கு சில நாள் சோறு கொண்டு வந்து கொடுப்பதில் எனக்கு என்ன கஷ்டம்? ஒன்றுமில்லை. தோட்டத்தில் கரும்பு வெட்டி வெல்லம் காய்ச்சி முடிவதற்குப் பதினைந்து நாள் ஆ கும். அதுவரையில் நான் இந்த வழியாக நிதநிதம் போக வேண்டியிருக்கும். அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு போவேன். அப்போது உனக்கும் கொண்டு வருகிறேன்.."

 குமாரலிங்கம் குறுக்கிட்டு, "பொன்னம்மா! உன் தகப்பனாரை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது. அவரை பார்க்கும்போதே முன் கோபக்காரர் என்று தோன்றுகிறது. என் பேரில் வேறே அவருக்கு விசேஷமான கோபம். அதற்குக் காரணம் இல்லாமலும் போகவில்லை. தப்பித்தவறி என்றைக்காவது ஒருநாள் நாம் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அவர் பார்த்துவிட்டால் என்ன கதி? என்னைப்பற்றியே நான் சொல்லவில்லை; உனக்காகத்தான் நான் பயப்படுகிறேன்" என்றான்.

 "ஐயா எங்க அப்பா பொல்லாத மனிதர்தான். ஆனால் ஊருக்குத்தான் அவர் பொல்லாதவர். எனக்கு நல்லவர். சின்னாயி ஒருநாள் என்னைப் பாடாய்ப் படுத்தியதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டார். அதற்காக அவளை மொத்து மொத்து என்று மொத்திவிட்டார்!.."

 "அதாவது உங்க அப்பாவினால் உனக்கு ஒன்றும் அபாயம் இல்லை; வந்தால் எனக்குத்தான் வரும் என்று சொல்லுகிறாயா?"

 அந்தக் கேலியை விரும்பாத பொன்னம்மாள் முகத்தைச் சிணுக்கிக்கொண்டு சொன்னாள்:

 "அப்படி ஒன்றும் சொல்லவில்லை. எங்க அப்பாவுக்கு நான் செல்லப் பெண். சமயம் பார்த்துப் பேசி உன் விஷயத்தில் அவருடைய மனத்தை மாற்றிவிடலாம் என்றிருக்கிறேன்"

 முதல் நாளிரவு சோலைமலை மகாராஜாவும் இளவரசியும் பேசிக்கொண்டிருந்த காட்சியையும், தான் பலகணியின் அருகில் மறைந்திருந்து ஒட்டுக் கேட்ட வார்த்தைகளையும் குமாரலிங்கம் நினைவு கூர்ந்தான்.

 "பொன்னம்மா நீ என்னதான் பிரயத்தனம் செய்தாலுங்கூட உன் தகப்பனாரின் மனத்தை மாற்ற முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை!" என்றான்.

 "ஏன் நீ இவ்வளவு அவநம்பிக்கைப்படுகிறாய்? கொஞ்சம் பொறுத்திருந்து என்னுடைய சாமர்த்தியத்தைப் பாரேன்!" என்றாள் பொன்னம்மாள்.

 "நீ சாமர்த்தியக்காரிதான்; அதைப்பற்றிச் சந்தேகமில்லை. ஆனால் என் விஷயத்தில் எதற்காக நீ இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறாய்? இன்றைக்கோ நாளைக்கோ என்னைப் போலீஸார் வேட்டையாடிப் பிடித்து விடலாம். அப்புறம் இந்த ஜன்மத்தில் நாம் ஒருவரையொருவர் பார்க்கவே முடியாது. என் உடம்பில் இருக்கும் உயிர் ஒரு மெல்லிய கயிற்றின் முனையிலே தொங்கிக் கொண்டிருக்கிறது! எந்த நிமிஷத்திலே இந்தக் கழுத்திலே சுருக்கு விழுமோ தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள என்னை நீ நம்ப வேண்டாம்; நம்பி ஏமாற்றமடைய வேண்டாம்!" என்று குமாரலிங்கம் இரங்கிய குரலில் சொன்னான்.

 பொன்னம்மாள் உணர்ச்சி மிகுதியினால் ஒன்றும் பேசாமல் சற்று நேரம் சும்மா இருந்தாள். பின்னர் கூறினாள்:

 "ஐயா! விதி அப்படி இருக்குமானால் அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் சோலைமலை முருகன் அருளால் அப்படி ஒரு நாளும் நடக்காது என்று எனக்குத் தைரியம் இருக்கிறது. என் தகப்பனாருடைய மனத்தை மாற்றுவதற்கு என்னுடைய சாமர்த்தியத்தை மட்டும் நான் நம்பியிருக்கவில்லை. சோலைமலை முருகனுடைய திருவருளையுந்தான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நேற்றிரவு அப்பா இன்னொரு விஷயமும் சொன்னார். 'இந்த இங்கிலீஸ்காரப் பய மவனுங்களையும் பூராவும் நம்பிவிடக் கூடாது. குனிந்தால் முதுகில் உட்காருவார்கள்; நிமிர்ந்தால் காலில் விழுவார்கள். இவர்களை இந்தப் பாடுபடுத்தி வைக்கிற காங்கிரஸ்காரன்களின் கையிலேயே மறுபடியும் கவர்ன்மெண்டைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள். இன்றைக்குத் தலைமறைவாய் ஒளிந்து திரிகிற குமாரலிங்கம் நாளைக்கு ஒருவேளை ஜில்லாக் கலெக்டராகவோ, மாகாண மந்திரியாகவோ வந்தாலும் வருவான். அப்படி வந்தால் சோலைமலை முருகன் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். காங்கிரஸ்காரனுங்க மறுபடியும் அதிகாரத்துக்கு வந்தால், என்னென்ன அக்கிரமம் செய்வான்களோ தெரியாது!' என்று அப்பா ரொம்ப ஆத்திரமாய்ப் பேசினார். அதோடு காங்கிரஸுக்கும் சர்க்காருக்கும் ஏதோ ராஜிப் பேச்சு நடக்கிறதாகக் கேள்வி என்றும் சொன்னார். ஐயா! நீ ஒருவேளை மந்திரியாகவோ ஜில்லாக் கலெக்டராகவோ வந்தால், அக்கிரமம் ஒன்றும் செய்ய மாட்டாயல்லவா? அப்பாவைக் கஷ்டத்துக்கு உள்ளாக்க மாட்டாயல்ல்வா?" என்று பொன்னம்மாள் கண்ணில் நீர் ததும்பக் கேட்டாள்.

 "மாட்டேன், பொன்னம்மா! மாட்டேன்! பிராணன் போய்க் கொண்டிருந்த சமயத்தில் சோறு கொண்டு வந்து போட்டு உயிர்ப் பிச்சை கொடுத்த பொன்னம்மாளின் தகப்பனாரை ஒரு நாளும் கஷ்டப்படுத்த மாட்டேன். அவர் மேல் ஒரு சின்ன ஈ எறும்பு உட்கார்ந்து கடிப்பதற்குக் கூட இடங்கொடுக்க மாட்டேன்" என்றான் குமாரலிங்கம்.

 மேலே கண்ட சம்பாஷணை நடந்த பிறகு ஏழெட்டுத் தினங்கள் வரை அந்தப் பாழடைந்த சோலைமலைக் கோட்டையிலேயே குமாரலிங்கத்தின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனந்தமாகவும், குதூகலமாகவும் சென்று கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

 மணியக்காரர் மகளிடம் அவனுடைய நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்த போது குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் கூடக் கொண்டு வந்தாள். பிரதி தினமும் அவளுடைய கால்மெட்டியின் சத்தத்தோடு 'கலகல'வென்ற சிரிப்பின் ஒலியும் சேர்ந்து வந்தது. எனவே அந்தப் பாழுங் கோட்டையில் ஒளிந்திருந்து கழித்த ஒவ்வொரு நாளும் ஓர் உற்சவ தினமாகவே குமாரலிங்கத்துக்குச் சென்று வந்தது.

 சோலைமலைக் கோட்டைக்கு அவன் வந்து சேர்ந்த அன்று பகலிலும் இரவிலும் கண்ட அதிசயக் காட்சிகளைப் பிற்பாடு அவன் காணவில்லை. அவையெல்லாம் பல இரவுகள் சேர்ந்தாற்போல் தூக்கமில்லாதிருந்த காரணத்தினால் ஏற்பட்ட உள்ளக் கோளாறுகள் என்று குமாரலிங்கம் தேறித் தெளிந்தான்.

 ஆனால் இந்த விஷயத்தில் அவனுக்கு எவ்வளவுக் கெவ்வளவு தெளிவு ஏற்பட்டதோ, அவ்வளவுக்குப் பொன்னம்மாளுக்குப் பிரமை அதிகமாகி வருவதை அவன் கண்டான்.

 சோலைமலை இளவரசியைப் பற்றியும் மாறனேந்தல் மகாராஜாவைப் பற்றியும் குமாரலிங்கம் கனவிலே கண்ட காட்சிகளைத் திரும்பத் திரும்ப அவனைச் சொல்ல வைத்துப் பொன்னம்மாள் அடங்காத ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அதோடு, அவன் கண்டதெல்லாம் வெறும் கனவல்லவென்றும், சுமார் நூறு வருஷத்துக்கு முன்னால் உண்மையாக நடந்தவையென்றும் பொன்னம்மாள் சாதித்து வந்தாள். அவள் கொண்டிருந்த இந்தக் குருட்டு நம்பிக்கைகூடக் குமாரலிங்கத்தின் உல்லாசம் அதிகமாவதற்கே காரணமாயிருந்தது. சில சமயம் அவன், "மாறனேந்தல் மகாராஜாதான் குமாரலிங்கமாகப் பிறந்திருக்கிறேன்! சோலைமலை இளவரசிதான் பொன்னம்மாளாகப் பிறந்திருக்கிறாய்!" என்று தமாஷாகச் சொல்லுவான். வேறு சில சமயம், பொன்னம்மாளைப் பார்த்ததும், "இளவரசி! வருக!" என்பான். "மாணிக்கவல்லி! அரண்மனையில் எல்லாரும் சௌக்கியமா?" என்று கேட்பான்.

 குமாரலிங்கம் இப்படியெல்லாம் பரிகாசமாகப் பேசிய போதிலும், பொன்னம்மாளின் கபடமற்ற உள்ளத்தில் அவ்வளவும் ஆழ்ந்து பதிந்து கொண்டு வந்தன.

Popular Tags
solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi book,solaimalai ilavarasi audiobook,solaimalai ilavarasi,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story in tamil,

mohini theevu,solaimalai ilavarasi read online,solaimalai ilavarasi wiki,solaimalai ilavarasi review,marutha nattu ilavarasi novel,solaimalai ilavarasi audiobook,audiobook,

kalki books,kalki novels in tamil,kalki novels audio,kalki novels,kalki novelist,kalki audiobooks,kalki tamil audio books,kalki story books,kalki books,Kalki Krishnamurthy,

solaimalai ilavarasi story in tamil,kalki tamil audio books,solaimalai ilavarasi wiki,marutha nattu ilavarasi novel,audiobook,kalki audiobooks,solaimalai ilavarasi review,kalki books,kalki novels audio,

kalki novels,Kalki Krishnamurthy,solaimalai ilavarasi,solaimalai ilavarasi read online,kalki story books,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi audiobook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *