Solaimalai Ilavarasi Ch19 சோலைமலை இளவரசி Audiobook
Solaimalai Ilavarasi Ch19 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan
Solaimalai Ilavarasi Ch19 அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி Audiobook Mr and Mrs Tamilan
Credits -:
Book : சோலைமலை இளவரசி Solaimalai Ilavarasi
Author of book -: கல்கி கிருஷ்ணமூர்த்தி
Copyright © கல்கி கிருஷ்ணமூர்த்தி, All rights reserved.
அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி
அத்தியாயம் 19. விடுதலை வந்தது!
சென்ற அத்தியாயத்தில் கூறியபடி சோலைமலை மணியக்காரர் சிறைச்சாலைக்கு வந்து குமாரலிங்கத்தைப் பார்த்து ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு மேலாகிவிட்டது.
இதற்கிடையில் கீழேயுள்ள மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டு, அதற்குமேல் ஸெஷன்ஸ் கோர்ட்டு, அதற்கு மேலே ஹைக்கோர்ட்டு வரையில் வழக்கு நடந்து முடிந்தது.
கடைசியாக, தளவாய்ப்பட்டணம் கலக வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் நாலு பேருக்குத் தூக்குத் தண்டனை என்றும், பதினாறு பேருக்கு ஆயுள் தண்டனை என்றும் தீர்ப்பாயிற்று.
தூக்குத் தண்டனை அடைந்தவர்களில் குமாரலிங்கமும் ஒருவன் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? அதைப் பற்றி அவன் வியப்படையவும் இல்லை; வருத்தப்படவும் இல்லை. மரணத் தண்டனை அவன் எதிர்பார்த்த காரியந்தான். மேலும், ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது என்பதை நினைத்தபோது அதைவிடத் தூக்குத்தண்டனை எவ்வளவோ மேல் என்று அவனுக்குத் தோன்றியது.
ஆனால் தூக்குத் தண்டனை அடைந்த மற்றவர்கள் யாரும் அவ்விதம் அபிப்பிராயப்படவில்லை. அவர்களுடைய உற்றார் உறவினரும் சிநேகிதர்களும் பொது மக்களுங்கூட அவ்வாறு கருதவில்லை. உயிர் இருந்தால் எப்படியும் ஒரு நாள் விடுதலை பெறலாம். ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டி வரும் என்பதுதான் என்ன நிச்சயம்? இந்தியா அத்தனை காலமும் விடுதலை பெறாமலா இருக்கும்? இரண்டு மூன்று வருஷத்துக்குள்ளேயே ஏதாவது ஒரு சமரசம் ஏற்படலாமல்லவா, இந்தியா சுயராஜ்யம் அடையலாமல்லவா?
எனவே, தூக்குத் தண்டனை அடைந்தவர்களின் சார்பாகப் பிரிவு கவுன்ஸிலுக்கு அப்பீல் செய்யப்பட்டது. குமாரலிங்கத்துக்கு இது கட்டோ டு பிடிக்கவில்லை. அதனால் ஒரு பயனும் விளையப் போவதில்லை என்று அவன் நம்பினான். மற்றவர்களுடைய கதி எப்படியானாலும் தன்னுடைய தூக்குத் தண்டனை உறுதியாகத் தான் போகிறது என்று அவன் நிச்சயம் கொண்டிருந்தான். ஆயினும் மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகப் பிரிவு கவுன்ஸில் அப்பீலுக்கு அவன் சம்மதம் கொடுத்தான்.
சம்மதம் கொடுத்துவிட்டு, சிறையிலிருந்து தப்பி ஓடுவதற்கு என்ன வழி என்பதைப் பற்றிச் சிந்திக்கலானான். அதுவும், உண்மையில் உயிர் தப்பிப் பிழைப்பதற்காக அல்ல; தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித் துப்பாக்கிக் குண்டினால் மரணமடையும் உத்தேசத்துடனே தான். அதுவே தன்னுடைய தலைவிதி என்றும், அந்த விதியை மாற்ற ஒருநாளும் ஒருவராலும் முடியாது என்றும் அவன் நம்பினான். எனவே தப்பி ஓடும் முயற்சிக்குத் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். பகலிலும் இரவிலும் கனவிலும் நனவிலும் அந்த எண்ணமே அவனை முழுக்க முழுக்க ஆட்கொண்டிருந்தது. சிறையிலிருந்து தான் தப்பி ஓடுவது போலும் தன் முதுகில் குண்டு பாய்ந்து மார்பின் வழியாக இரத்தம் 'குபுகுபு'வென்று பாய்வது போலும் பல தடவை அவன் கனவு கண்டு வீறிட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.
ஆன போதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. எத்தனையோ நாவல்களில் கதாநாயகர்கள் சிறையிலிருந்து தப்பி ஓடியதாகத் தான் படித்திருந்த சம்பவங்களையெல்லாம் அவன் ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிப் பார்த்தான். ஆனால் அவை ஒன்றும் அவன் இருந்த நிலைமைக்குப் பொருத்தமாயில்லை.
நாளாக ஆ க, விடுதலை வெறி அவனுக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது. என்னவெல்லாமோ சாத்தியமில்லாத யோசனைகளும் யுக்திகளும் மனத்தில் தோன்ற ஆரம்பித்தன.
இதற்கிடையில், சிறைச்சாலையின் பெரிய வெளிச் சுவர்களைத் தாண்டிக் கொண்டு இடை இடையேயுள்ள சின்னச் சுவர்களைத் தாண்டிக்கொண்டு மரண தண்டனை அடைந்த கைதிகளின் தனிக் காம்பவுண்டு சுவரையும் தாண்டிக்கொண்டு சில செய்திகள் வர ஆரம்பித்தன.
காங்கிரஸ் மாபெருந் தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் சர்க்காருக்கும் சமரசப் பேச்சு நடந்து வருவது பற்றிய செய்திகள் தான். கூடிய சீக்கிரத்தில் அரசியல் கைதிகள் எல்லாரும் விடுதலை அடையக்கூடும் என்ற வதந்திகளும் வந்தன.
இவற்றையெல்லாம் மற்ற அரசியல் கைதிகள் நம்பினார்கள். நம்பியதோடுகூடச் சிறையிலிருந்து வெளியேறியதும் எந்தத் தொகுதிக்குத் தேர்தலுக்கு நிற்கலாம் என்பது போன்ற யோசனைகளிலும் பலர் ஈடுபட ஆரம்பித்தார்கள்!
ஆனால் குமாரலிங்கத்துக்கோ விடுதலைப் பேச்சுக்களில் எல்லாம் அணுவளவும் நம்பிக்கை ஏற்படவில்லை. சிறையிலிருந்து எப்படித் தப்பிச் செல்வது என்னும் ஓர் எண்ணத்தைத் தவிர வேறு எந்தவிதமான எண்ணத்துக்கும் அவன் மனத்தில் இடம் கிடைக்கவில்லை.
கடைசியாக, அவன் அடங்கா ஆவலுடன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிட்டியது. தானே அவனைத் தேடி வந்தது என்று சொல்ல வேண்டும்.
ஹைகோர்ட்டில் கேஸ் முடியும் வரையில் அவனையும் அவனுடைய சகாக்களையும் வைத்திருந்த சிறையிலிருந்து அவர்களை வேறு சிறைக்கு மாற்றிக் கொண்டு போனார்கள். பலமான பந்தோபஸ்துடனே பிரயாணம் ஆரம்பமாயிற்று. எந்த ஊர்ச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஆயினும் ரயிலில் போகும்போது தனக்கு ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும் என்று குமாரலிங்கம் எண்ணினான். கட்டாயம் கிடைத்தே தீரும் என்று நம்பினான். இத்தனை காலமும் மாறனேந்தல் உலகநாதத் தேவருக்கு நேர்ந்தது போலவே எல்லாச் சம்பவங்களும் தன் விஷயத்திலும் நேர்ந்திருக்கின்றன அல்லவா? எனவே, இறுதிச் சம்பவமும் அவ்விதம் நேர்ந்தேயாகவேண்டுமல்லவா?
அவன் எண்ணியதற்குத் தகுந்தாற்போல் வழியில், ரயில் பிரயாணத்தின் போது சிற்சில சம்பவங்கள் ஏற்பட்டு வந்தன. அவனுடன் சேர்த்துக் கொண்டு வரப்பட்ட மற்றக் கைதிகளை அங்கங்கே இருந்த ஜங்ஷன்களில் பிரிந்து வேறு வண்டிகளுக்குக் கொண்டு போனார்கள்.
கடைசியாகக் குமாரலிங்கமும் அவனுக்குக் காவலாக இரண்டே இரண்டு போலீஸ் சேவகர்களுந்தான் அந்த வண்டியில் மிஞ்சினார்கள்.
இரவு பத்து மணிக்குக் குமாரலிங்கம் சாப்பிடுவதற்காக அவனுடைய கை விலங்கைப் போலீஸார் எடுத்து விட்டார்கள். சாப்பிட்ட பிறகு விலங்கை மறுபடியும் பூட்டவில்லை.
ஏதேதோ கதை பேசிக் கொண்டு வந்த போலீஸ்காரர்கள் சிறிது நேரத்துக்கெல்லாம் கண் அசந்தார்கள். உட்கார்ந்தபடியே தூங்கத் தொடங்கினார்கள். ஒருவன் நன்றாய்க் குறட்டை விட்டுத் தூங்கினான்.
குமாரலிங்கம் தன்னுடைய விதியின் விசித்திர கதிதான் இது என்பதை உணர்ந்தான். விதி அத்துடன் நிற்கவில்லை; அடுத்து வந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சற்றுத் தூரத்தில் கை காட்டிக்குப் பக்கத்தில் ரயில் நிற்கும்படி செய்தது. குமாரலிங்கம் வண்டியின் கதவைத் தொட்டான். தொட்டவுடனே அக்கதவு திறந்து கொள்ளும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது. அது திறந்தபோது ஆச்சரியமாய்த்தானிருந்தது. போலீஸார் இருவரையும் மறுபடி ஒரு தடவை கவனமாகப் பார்த்தான். அவர்கள் தூங்கிக் கொண்டுதானிருந்தார்கள். ஒருவன் அரைக் கண்ணைத் திறந்து, "இது என்ன டேஷன், அண்ணே?" என்று கேட்டுவிட்டு மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டான்.
அவ்வளவு தான்; திறந்த ரயில் கதவு வழியாகக் குமாரலிங்கம் வெளியில் இறங்கினான். ரயில் பாதையின் கிராதியைத் தாண்டிக் குதித்தான். இதெல்லாம் இவ்வளவு சுலபமாக நடந்துவிட்டது என்பதை நம்ப முடியாமல் சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றான்.
ரயில் என்ஜின் 'வீல்' என்று கத்திற்று. உடனே ரயில் நகர்ந்தது. நகர்ந்தபோது, சற்று முன்னால் திறந்த வண்டிக் கதவு மறுபடியும் தானே சாத்திக் கொண்டது.
அடுத்த கணத்தில் ஒரு பெரிய தடபுடலைக் குமாரலிங்கம் எதிர்பார்த்தான். போலீஸ் சேவகர் இருவரும் விழித்தெழுந்து கூச்சல் போடுவார்கள் என்றும், பளிச்சென்று அடித்த நிலா வெளிச்சத்தில் தன்னைப் பார்பார்கள் என்றும், உடனே அவர்களும் ரயிலிலிருந்து கீழே குதிப்பார்கள் என்றும் எதிர்பார்த்தான். தான் ஒரே ஓட்டமாய் ஓட, அவர்கள் தம் முதுகை நோக்கிச் சுடுவார்கள் என்றும் நினைத்தான். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த உடனே கொஞ்சமும் வலிக்காது என்றும், குண்டு பாய்ந்ததே தெரியாது என்றும் அவன் கேள்விப்பட்டிருந்தான். எனவே கொஞ்ச தூரம் ஓடிய பிறகு, தான் ஸ்மரணை இழந்து கீழே விழுவது வரையில் கற்பனை செய்து கொண்டான்.
ஆனால் அவ்வளவும் கற்பனையோடு நின்றது. நகர்ந்த ரயில் நகர்ந்ததுதான். மூடிய கதவு மூடியதுதான். ஆர்ப்பாட்டம், சத்தம், துப்பாக்கிப் பிரயோகம் ஒன்றுமேயில்லை.
அந்தக் காலத்தில் சோலைமலையில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பொன்னாம்மாவின் நினைவு குமாரலிங்கத்துக்கு வந்தது.
இது ஏதோ கடவுளின் செயல்! சோலைமலை முருகனின் அருள்! பொன்னம்மாளைக் கடைசி முறை பார்ப்பதற்குக் கடவுள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்திருக்கிறார். அதை உபயோகப்படுத்திக் கொள்ளாவிட்டால் தன்னை விட நிர்மூடன் உலகில் யாருமே இருக்க முடியாது.
அவ்வளவுதான்; குமாரலிங்கம் நடக்கத் தொடங்கினான். வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்துத் திசையைத் தெரிந்து கொண்டு விரைவாக நடக்கத் தொடங்கினான். தன் உள்ளங் கவர்ந்த பொன்னம்மாளைக் கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், அவனுடைய கால்களுக்கு ஒன்றுக்கு மூன்று மடங்கு சக்தியையும் விரைவையும் அளித்தது.
Popular Tags
solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi book,solaimalai ilavarasi audiobook,solaimalai ilavarasi,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story in tamil,
mohini theevu,solaimalai ilavarasi read online,solaimalai ilavarasi wiki,solaimalai ilavarasi review,marutha nattu ilavarasi novel,solaimalai ilavarasi audiobook,audiobook,
kalki books,kalki novels in tamil,kalki novels audio,kalki novels,kalki novelist,kalki audiobooks,kalki tamil audio books,kalki story books,kalki books,Kalki Krishnamurthy,
solaimalai ilavarasi story in tamil,kalki tamil audio books,solaimalai ilavarasi wiki,marutha nattu ilavarasi novel,audiobook,kalki audiobooks,solaimalai ilavarasi review,kalki books,kalki novels audio,
kalki novels,Kalki Krishnamurthy,solaimalai ilavarasi,solaimalai ilavarasi read online,kalki story books,solaimalai ilavarasi pdf,solaimalai ilavarasi story,solaimalai ilavarasi novel in tamil,solaimalai ilavarasi audiobook