BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part1 Kodai

அத்தியாயம் 2
சாலை

ஸ்டேஷனுக்கு வெளியே மாட்டு வண்டிகள் கிடந்த இடத்துக்குச் சம்பு சாஸ்திரி போனதும், வண்டிக்காரர்களில் ஒருவன், “சாமி! வண்டி பூட்டட்டுமா?” என்றான். இன்னொருவன், “அட ஏண்டா சும்மா? எஜமானுக்குத்தான் சொந்த வண்டி பூட்டி நிக்குதேடா?” என்றான்.

“ஏஞ்சாமி, நம் வீட்டிலேங்களா கல்யாணம்?” என்று முதலில் பேசியவன் கேட்டான்.

“ஆமாண்டாப்பா! கல்யாணம் ஐந்தாறு நாளும், நெடுங்கரைக்கு வர்றவாள் யாராயிருந்தாலும் நீங்க கொண்டுவந்து விட்டுடணும். வண்டிச் சத்தம் எங்கிட்டயே வாங்கிக்கணும்!” என்றார் சம்பு சாஸ்திரி.

“அதுக்கென்னங்க? எஜமான் வீட்டுக்கு வர்றதுக்குச் சொல்லணுங்களா? ஜோராக் கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டுட்டு, ஜாம் ஜாம்னு சந்தனம் பூசிக்கிட்டு, மடிநிறைய வெத்திலைப் பாக்குக் கட்டிக்கிட்டு வர்றதில்லே!”

தயாராக வண்டியைப் பூட்டி நிறுத்தியிருந்த வில் வண்டிக்காரனைப் பார்த்து, சம்பு சாஸ்திரி, “என்ன நல்லான்? நீயே வந்துட்டயா? நான் இன்றைக்கு நிச்சயமாய் வர்றதாகக்கூடச் சொல்லியிருக்கவில்லையே?” என்று கேட்டார்.

“எப்படியும் இன்னிக்கு வந்துடுவீங்க என்று ஓர் உத்தேசங்க. அப்படி ஒரு வேளை நீங்க வராபோனால், மாட்டுக்குப் பருத்திக்கொட்டை மூட்டை போட்டுண்டு திரும்பலாம்னு இருந்தேனுங்க.”

சாஸ்திரி வண்டியில் ஏறி உட்கார்ந்தார். நல்லான் ‘ஹய்’ ‘ஹய்’ என்று மாட்டை முடுக்கினான். வண்டி ‘கட கட’ சப்தத்துடன் போகத் தொடங்கியது.

“குழந்தைக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்து; தெரியுமோ இல்லையோ, நல்லான்!”

“அந்தத் தீட்சிதர்கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தது காதிலே விழுந்ததுங்க. ரொம்ப சந்தோஷங்க. நீங்க வரன் தேடக் கிளம்பி மூணு மாதத்துக்கு மேலே ஆயிட்டுதுங்க.”

“ஆமாம்! சங்கராந்தி ஆனதும் கிளம்பினேன். போகாத ஊரில்லை; தேடாத இடமில்லை. அதை ஏன் கேட்கிறே, நல்லான்! ஒன்று சரியாயிருந்தால், இன்னொன்று சரியா யிராது. படிப்பிருந்தால் சொத்து இராது; சொத்திருந்தால் படிப்பிராது; இரண்டும் இருந்தால், பையன் பிடிச்சிராது. இவ்வளவும் சரியாயிருந்தால், ஜாதகம் சரியாயிராது. ஏதோ, கடைசியில் பெரியவாள் புண்ணியத்திலே…”

இப்படிச் சொல்லிக் கொண்டே சாஸ்திரிகள் மடிசஞ்சியை அவிழ்த்து, அதனுள்ளிருந்து மூலையில் மஞ்சள் தடவிய இரண்டு ஜாதகங்களைக் கையில் எடுத்தார்.

“பாக்கி எது எப்படி யிருந்தாலும் சாதகப் பொருத்தந்தாங்க சரியா யிருக்கணும்!” என்றான் நல்லான்.

“அப்படியில்லை, நல்லான்! ‘நாளென் செயும் கோளென் செயும்?’ என்று அப்பர் சொல்லி யிருக்காப்பலே, பகவான் கிருபை யிருந்தால் மற்றதெல்லாம் என்னத்திற்கு? ஏதோ நம்ம திருப்திக்குப் பார்க்க வேண்டியது.”

“இப்ப நிச்சயம் பண்ணியிருக்கிற இடம் சாதகப் பொருத்தம் சரியா யிருக்குதுங்களல்ல?” “கூடியவரையில் பொருத்தந்தான். செவ்வாய் தோஷ ஜாதகம்; ஆனாலும் இரண்டு மூன்று பிரபல ஜோசியாளைக் கேட்டாச்சு-பாதகமில்லை, பண்ணலாம்னு சொல்லிவிட்டார்கள். செலவுதான், நல்லான், ஏகப்பட்டது ஆயிடும் போலிருக்கு!”

“வரதச்சணை எவ்வளவுங்க?”

“ரொக்கமா நாலாயிரம் ரூபாய்! அப்புறம்……”

“அப்பா! நாலாயிரம் ரூபாயா? கல்யாணச் செலவெல்லாம் சேர்த்தால் பத்தாயிரம் ரூபாய்க்கு ஓடிப் போயிடுங்களே?”

“போனாப் போகட்டும், நல்லான்! நமக்கு இருக்கிறது ஒரு குழந்தை! நாலு வருஷம் நன்னா விளைஞ்சால் கடனை அடைச்சுட்டுப் போறோம்.”

“அது கிடக்கட்டுங்க, தள்ளுங்க! நம்ம குழந்தைக்குச் செலவழிக்காதே, வேறு யாருக்குச் செலவழிக்கப் போறோம்? ஆனால், கல்யாணத்தைப் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்று சொல்லுவாங்க……”

“அதெல்லாம் ஜமாய்ச்சுடுவோம், நல்லான்! நீ இருக்கிறபோது எனக்கு என்ன கவலை?”

“நான் இருந்து என்னங்க பிரயோஜனம்? அக்கிரகாரத்து ஐயமார் ஒத்தாசையல்ல வேணும்? இந்தத் தீட்சிதர் மாதிரியே எல்லாரும் இருந்தாங்கன்னா…”

“அப்படி இருக்கமாட்டார்கள், நல்லான்! இந்த மாதிரி சமயத்தில் விட்டுக் கொடுப்பார்களா?……வண்டி ஏன் இவ்வளவு மெள்ளப் போறது? மாட்டைக் கொஞ்சம் தட்டி ஓட்டேன்!” என்றார் சாஸ்திரியார்.

நல்லானுக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போயிற்று. சாஸ்திரியார், “மாட்டை விரட்டாதே! மெள்ளப் போகட்டும்” என்று தான் சொல்வது வழக்கமே தவிர, “தட்டி ஓட்டு!” என்று சொல்லி வழக்கமே கிடையாது. இப்போது அவர் அப்படிச் சொன்னதும், நல்லான் தார்க்குச்சியை வைத்து இரண்டு அழுத்து அழுத்தினான். அந்த உயர்ந்த ஜாதி மாடுகள், வழக்கமில்லாத வழக்கமாகத் தாரினால் குத்தப் படவே ரோசத்துடன் பிய்த்துக் கொண்டு கிளம்பின.

“நிறுத்து, நிறுத்து, நிறுத்து!” என்று கத்தினார் சாஸ்திரிகள். ஏனெனில், அவர் கையிலிருந்த ஜாதகங்கள் இரண்டும் சாலையில் விழுந்து பறந்து போய்க்கொண்டிருந்தன. வண்டி கிளம்பின வேகத்தில் அவற்றைச் சாஸ்திரி தவற விட்டு விட்டார்.

நாலு கால் பாய்ச்சலில் கிளம்பிவிட்ட மாடுகளை இழுத்து நிறுத்துவதற்கு வெகு பிரயாசையாய்ப் போயிற்று. கடைசியாக வண்டி நின்றதும், சம்பு சாஸ்திரி குதித்து ஓடினார். சாலையின் இருபுறத்திலும் தேடிக்கொண்டே சென்றார். கடைசியாக, மூலைக்கொன்றாகக் கிடந்த இரண்டு ஜாதகங்களையும் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்து மறுபடியும் வண்டியில் ஏறிக் கொண்டார்.

இந்தச் சம்பவத்தினால் நல்லானுடைய உற்சாகம் கொஞ்சம் குறைந்து போயிற்று. அவன் பிறகு சாஸ்திரியாருடன் பேச்சுக் கொடுக்காமல் வண்டியை விரைந்து ஓட்டத் தொடங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *