Thyaga Bhoomi Kalki Part1 Kodai
அத்தியாயம் 5
தந்தையும் மகளும்
சம்பு சாஸ்திரி அவ்வாறு உள்ளே பிரவேசித்ததும், சாவித்திரி, மங்களம் இரண்டு பேருமே ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார்கள்.
திகைப்பு நீங்கியதும், சாவித்திரி, “அப்பா!” என்று அலறிக்கொண்டு ஓடிப்போய்ச் சம்பு சாஸ்திரியைக் கட்டிக்கொண்டார்கள்.
சாஸ்திரி, “மங்களம்!” என்று சொல்லி அவளை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தார்.
மங்களம் ஒன்றும் பதில் பேசாமல் திரும்பி விடுவிடென்று சமையலறைக்குள் சென்றாள்.
சாஸ்திரி சாவித்திரியைத் தழுவியபடியே அழைத்துக் கொண்டு உள்ளே வந்து தாழ்வாரத்தில் போட்டிருந்த விசுபலகையில் உட்கார்ந்தார். சாவித்திரியையும் தம் அருகில் உட்கார வைத்தார். குழந்தை அவருடைய மடியில் முகத்தை வைத்துப் படுத்தபடி விசிக்கத் தொடங்கினாள்.
சமையலுள்ளில் சற்று உரத்த குரலில், சம்பு சாஸ்திரியின் காதில் விழும்படியாகப் பின்வரும் சம்பாஷைணை நடந்தது:
“அடி பெண்ணே! நான் அப்பவே சொன்னேனோ, இல்லையோ! நீ விளையாட்டுக்காக ஒரு காரியத்தைச் செய்யப் போக, அவர் நிஜந்தான்னு நினைச்சுண்டாலும் நினைச்சுக்குவர். வேண்டாம்னு சொன்னாக் கேட்டாத்தானே?”
“நினைச்சுண்டா நினைச்சுக்கட்டுமே! கல்யாணம் ஆகப்போற பொண்ணைக் கரண்டியைக் காய்ச்சிக் சூடறதுக்கு இங்கே யாருக்காவது பைத்தியம் பிடிச்சிருக்கா, என்ன?”
“இல்லேடி, கரைக்கறவர் கரைச்சாக் கல்லுங்கரையும் என்கிறாப்பலே- இந்தப் பொண்ணு இல்லாத்தையும் பொல்லாத்தையும் ஏற்கெனவே சொல்லி வைச்சுண்டிருக்காளே!”
“வேணும்னா, இனிமே அவர் வெளியிலே போற போது, பொண்ணையும் கூட அழைச்சுண்டு போகட்டும். அவ ஹிம்சையை இத்தனை நாளும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாச்சு; இனிமேல் என்னால் பொறுக்க முடியாது.”
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சம்பு சாஸ்திரி, சாந்தமான குரலில், “குழந்தை! சித்திக்குக் கோபமூட்டறதுக்கு நீ என்ன பண்ணினே, அம்மா!” என்று கேட்டார்.
சாவித்திரி, விசித்துக் கொண்டே, “நான் ஒண்ணும் பண்ணலை, அப்பா! பூஜைக்குப் பூத்தொடுத்திண்டிருந்தேன். சித்தி, கிணத்துலேயிருந்து ஜலங் கொண்டு வருவதற்குக் கூப்பிட்டாள். காலமேயிருந்து, இருபது குடம் கொண்டு வந்து கொட்டிவிட்டேன், அப்பா! ‘இதோ பூவைத் தொடுத்து வைச்சுட்டு வர்றேன்னு’ சொன்னேன். அதுக்காகக் கரண்டியைப் பழுக்கப் பழுக்கக் காய்ச்சி எடுத்துண்டு சூடறதற்கு வந்தா அப்பா!” என்று சொல்லி, பலமாக அழத் தொடங்கினாள்.
சம்பு சாஸ்திரிக்கு அப்போது பழைய சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. பத்து வருஷத்துக்கு முன்னால் நடந்ததென்றாலும் நேற்றுத்தான் நடந்ததுபோல் அச்சம்பவம் அவர் மனக்கண் முன்னால் தோன்றியது.
சாஸ்திரி மாட்டு கொட்டகையில் இருந்தார். புதுச் சத்திரம் சந்தையிலிருந்து புதிதாக வாங்கிக்கொண்டு வந்திருந்த உயர்ந்த ஜாதி ‘உசுலாயத்து’ மாடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். “ரூபாய் இருநூத்தைம்பது கொடுத்தாலும் பொறும், அப்பா!” என்று நல்லானைப் பார்த்துச் சொன்னார். அப்போது, தண்ணீரில் ஏதோ விழுந்ததுபோல் ஒரு சிறு சப்தம் எங்கிருந்தோ கேட்டது. சின்ன சப்தந்தான்; ஆனாலும் அது ஏன் அவருடைய இருதயத்தை அவ்வாறு பேதித்தது? அதன் காரணம் அடுத்த விநாடியே தெரிய வந்தது. “ஐயோ! குழந்தை கிணத்துலே விழுந்துடுத்தே!” என்றது ஒரு தீனமான குரல். அது அவருடைய அத்தைக் கிழவியின் குரல்.
அத்தையின் குரலுக்கு எதிரொலியே போல், சம்பு சாஸ்திரியும், “ஐயோ!” என்றார். உடனே, விரைந்து ஓடவேண்டுமென்று அவர் மனம் துடித்தது! ஆனால், அந்தச் சமயத்தில் அவருடைய கால்கள் சொன்னபடி கேட்டால்தானே? இரண்டு அடி வைப்பதற்கு முன்னால் தடுமாறிக் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, அச்சமயம் இன்னொரு மனிதனுக்குக் கால்கள் சொன்னபடி கேட்டன. தடுமாறி விழுந்த சம்பு சாஸ்திரியைத் திரும்பிக்கூடப் பாராமல் நல்லான் மின்னலைப்போல் பாய்ந்து சென்றான். மூன்று கொல்லைக் கட்டுகளையும், வேலிகள் செடிகள் உள்படத் தாவிக்கொண்டு சென்று, கண்ணை மூடித் திறக்கும் நேரத்தில் சாஸ்திரியாரின் வீட்டுக் கொல்லைக் கிணற்றை அடைந்தான். கிணற்றைச் சுற்றி எழெட்டுப் பேர் நின்று கொண்டு குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர் தாம்புக் கயிற்றை எடுத்துக் கீழே விட முயற்சித்தார். இன்னொருவர் ஏற்ற மரத்தை இழுத்து அமுக்க முயன்ற கொண்டிருந்தார். நல்லான் அவர்களையெல்லாம் ஒரே தள்ளில் விலக்கித் தள்ளிவிட்டுக் கிணற்றுக்குள் பரபரவென்று இறங்கினான்.
இதெல்லாம் சாஸ்திரிக்கு அப்போது தெரியாது. பிற்பாடு மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்தது. விழுந்தவர் எழுந்திருந்து நெஞ்சு படக் படக் என்று அடித்துக் கொள்ள, கால் கைகள் நடுங்க, தடுமாற்றத்துடன் ஓடிச்சென்று கிணற்றங் கரையை அடைந்த சமயம், நல்லான் கிணற்றுக்குள்ளிருந்து குழந்தை சாவித்திரியைத் தோளில் போட்டுக்கொண்டு கரையேறிக் கொண்டிருந்தான். சாஸ்திரியைப் பார்த்ததும், “சாமி! பயப்படாதீங்க! குழந்தைக்கு அபாயம் இல்லீங்க” என்றான். அவ்வளவுதான்; சாஸ்திரியார் ஸ்மரணை இழந்து கீழே விழுந்தார்.
அன்று சாயங்காலம் சாஸ்திரியின் அத்தை, அவரிடம் சொன்னாள்: “அப்பா! எத்தனையோ நாளாய் நானும் சொல்லிண்டு வந்தேன். நீ கேட்கவில்லை. எனக்கோ தள்ளாமை அதிகமாயிடுத்து; நாளுக்கு நாள் கண் தெரியலை. இந்தக் குழந்தையைக் காப்பாத்தறதற்கு இனிமேல் என்னை நம்பாதே. நான் சொல்றதைக் கேளு. கொஞ்சம் வயசான பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கொள்ளு. உனக்கென்ன அப்படி பிரமாதமாய் வயசாயிடுத்து? ஐம்பது வயசானவாள் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கலையா? உனக்காக இல்லாமற் போனாலும், இந்தத் தாயில்லாப் பெண்ணைக் காப்பாத்தறத்துக்காவது கல்யாணம் பண்ணிக்கொள்.”
இந்த மாதிரி இதற்கு முன்னாலும் அத்தை எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறாள், அப்போதெல்லாம் சாஸ்திரி அதைக் காதில் போட்டுக் கொள்ளாமலே போய்விடுவார். அல்லது “அத்தை! வேறே ஏதாவது பேச்சு இருந்தால் பேசேன்!” என்பார். ஆனால் இன்று எழுந்து போகவும் இல்லை; மறுத்துப் பேசவும் இல்லை. மௌனமாயிருந்தார்.
சாஸ்திரியின் முதல் மனைவி பாக்கியம், சாவித்திரி கைக் குழந்தையாயிருக்கும் போதே வைசூரி போட்டு இறந்து போனாள். சாஸ்திரியின் வாழ்க்கையில் அவருடைய தங்கை சம்பந்தமான ஒரு துக்க சம்பவம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தது. அவருடைய உயிருக்குயிராயிருந்த மனைவியும் இறந்துவிடவே, சாஸ்திரிக்கு வாழ்விலேயே விரக்தி ஏற்பட்டது. அவருடைய மனமெல்லாம் பகவத் பக்தியில் ஈடுபட்டது. இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி அவர் நினைக்கவேயில்லை. உலகில் பந்தம் அதிகமாக ஆக, துக்கமும் அதிகம் என்பதை உணர்ந்த சாஸ்திரி இது விஷயத்தில் ஒரே பிடிவாதமாயிருந்தார். எவ்வளவோ பேர் எத்தனையோ விதமாகச் சொல்லியும் அவர் செவி கொடுக்கவில்லை. ஆனால், இன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு அவருடைய மனம் மாறிவிட்டது. தாயில்லாக் குழந்தையான சாவித்திரியைப் பார்த்துக் கொள்ள ஒரு தாய் அவசியந்தான் என்று அவருக்குப் பட்டது. ‘அத்தையின் வாக்கு ஒரு வேளை அம்பிகையின் வாக்காயிருக்கலாம்’ என்று தோன்றிற்று. அந்த வருஷத்திலேயே அவர் மங்களத்தை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார்.
மேற்சொன்னது அவ்வளவும் சம்பு சாஸ்திரிக்கு இப்போது தெளிவாக ஞாபகத்தில் வந்தது. தாம் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டதன் நோக்கம் என்ன என்பதையும், அந்த நோக்கம் எவ்வளவு அழகாக நிறைவேறியிருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்த்த போது அவரை அறியாமல் சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்பும் அதில் கலந்திருந்த துக்கமும், விசித்துக் கொண்டிருந்த சாவித்திரியைத் திடுக்கிடச் செய்தன. சாவித்திரி விசித்தலை நிறுத்தி, நீர் ததும்பிய கண்களுடன் தகப்பனாரின் முகத்தை நோக்கினாள். அதைப் பார்த்த சாஸ்திரி அவளுடைய முதுகைத் தடவிக் கொண்டே, “குழந்தை! நீ வருத்தப்படாதே, அம்மா! உன் கஷ்டங்களுக்கு முடிவு வந்துவிட்டது. கல்யாணம் நிச்சயம் பண்ணிண்டு வந்திருக்கேன். மாப்பிள்ளைக்கு ஸ்ரீதரன் என்று பெயர். பி.ஏ. பாஸ் பண்ணியிருக்கான். கல்யாணம் ஆனதும் சீக்கிரத்திலேயே உன்னை அழைச்சுண்டு போய் விடுவார்கள், அம்மா!” என்று கூறியபோது அவருடைய கண்களிலும் ஜலம் ததும்பத் தொடங்கியது.
ஆனால், சாவித்திரியின் கண்களிலிருந்த கண்ணீர் என்ன ஆயிற்று? திடீரென்று எப்படி மாயமாய் மறைந்தது? அவளுடைய முகம் ஒரு கண நேரத்தில் இப்படி மலர்ந்து விட்டதே! என்ன அதிசயம்!
“அது இருக்கட்டும், அப்பா! எத்தனை நாழியாச்சு, நீங்க இன்னும் பட்டினியாயிருக்கயளே! சுருக்க ஸ்நானம் பண்ணிவிட்டு வாங்கோ! நான் அதுக்குள்ளே பூஜைக்கு எல்லாம் எடுத்து வைக்கிறேன்” என்றாள்.