Thyaga Bhoomi Kalki Part1 Kodai
அத்தியாயம் 9
தீக்ஷிதர் விஜயம்
சங்கர தீக்ஷிதரைப் பார்த்ததும், உட்கார்ந்திருந்த தங்கம்மாள் எழுந்திருக்க முயற்சித்தாள். “உட்காருங்கோ, அம்மா! எனக்கோசரம் எழுந்திருக்க வேண்டாம். ஏதோ பூஜை வேளையிலே கரடியை விட்டடிச்சது மாதிரி நான் வந்தேன்னு நினைச்சுக்கப் படாது. எனக்கு நெடுங்கரை. பக்கத்துக் கிராமத்துக் காரியமாக வந்திருந்தேன். நம் ஊருக்குச் சம்பந்தியா வரப்போறவாளாச்சேன்னு உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்னு…”
“ஓகோ! அப்படிச் சொல்லுங்கணும்? உட்காரும். நெடுங்கரையா உமக்கு? சம்பு சாஸ்திரிக்கு ஏதாவது உறவு, கிறவு உண்டோ ?” என்றாள் தங்கம்மாள்.
“உறவு இல்லை; ஆனால், உறவுக்கு மேலே, பால்யம் முதல் நாங்கள் பிராண சிநேகிதாள். அவன் காரியமெல்லாம் என்னுது, என் காரியமெல்லாம் அவனுது. முந்தா நாள் ஊரிலேயிருந்து கிளம்பி வந்தபோது, ரயிலடியிலே அவனைப் பார்த்தேன். ‘கல்யாணம் நிச்சயமாயிடுத்து; இப்படியே ஊருக்குத் திரும்பு. எல்லாக் காரியமும் நீதான் பார்த்துக்கணும்’ என்றான். ‘அப்பா! இரண்டே நாளைக்குப் பொறுத்துக்கோ! கிளம்பின காரியத்தை முடிச்சிண்டு வந்துடறேன்’ என்று சமாதானம் சொல்லிட்டு வந்தேன். ‘அப்படின்னா, போறதுதான் போறயே! சம்பந்தியாத்துக்கும் போய் எட்டிப் பார்த்துட்டு வா!’ என்றான். அவன் பேச்சைத் தட்டப்படாதுன்னுதான் இங்கே வந்தேன்.”
“சந்தோஷம், நல்ல வெயிலிலே வந்திருக்கீர். ரொம்பக் களைச்சுப் போயிருக்காப்பலே இருக்கே. தாகத்துக்கு ஏதாவது குளிர்ந்த…”
“அதெல்லாம் எனக்காக நீங்க ஸ்பெஷலாக் காப்பி, கீப்பின்னு ஒண்ணும் போட வேண்டாம்! தயாராயிருந்தா…”
“நன்னாயிருக்கு! காப்பிக்கு என்னங்கணும் குறைச்சல்? தயாரா யில்லாட்டா, ஒரு நிமிஷத்திலே ஆயிடறது… அடே குப்புசாமி! சீக்கிரம் காப்பி போட்டுக் கொண்டா!”
“அடாடா! இவ்விடத்திலே காப்பிக்கு என்ன குறைச்சல்? வேறு எதுக்குத்தான் என்ன குறைச்சல்? அதெல்லாம் சம்பு சாஸ்திரியிடம் கேட்டுண்டுட்டேன். ‘அடே! நீ ஜன்மாந்தரத்திலே பண்ணின புண்யத்தினால் தாண்டா உனக்கு இப்படிப்பட்ட வரன் கிடச்சுது’ன்னும் சொல்லியாச்சு. ‘வரதட்சிணை எவ்வளவுடா’ன்னு கேட்டேன். “நாலாயிரம்”னான். அப்படியே அசந்து போய்ட்டேன். வெறும் வறளியெல்லாம் இந்தக் காலத்திலே ஆறாயிரம், எட்டாயிரம்னு கேக்கறான்கள். இவ்விடத்திலே ரொம்ப தாராள மனசுள்ளவாளாயிருக்கணும்னு அப்பவே தீர்மானிச்சுட்டேன்!”
“ஆமாங்கணும், ஆமாம். போனாப்போறதுன்னு நாலாயிரத்துக்குச் சம்மதிச்சுது! ஆனால், அவ்வளவுக்கும் பின்னாலே பிராமணன் சீர் செனத்தியெல்லாம் சரியாச் செய்வான்னு நினைச்சுண்டிருக்கேன். செய்வாரோல்யோங்கணும்?”
“பேஷாச் செய்வன்னா! யாருக்காகச் செய்றான்னு கேக்கறேன்! இருக்கிறது ஒரு பொண்ணு…”
“அதை உத்தேசிச்சுத்தான் நாங்களும் சம்மதிச்சுது. ஏதோ, குலம், கோத்ரம் நன்னாயிருக்கு. பிராமணரும் சாதுவாயிருக்கார்…”
“அதை ஏன் கேக்கறேள்? சாதுன்னா, பரம சாது! அடிச்சா அழத் தெரியாதுன்னாக்கே! குலம், கோத்திரத்துக்குத்தான் என்ன குறைச்சல்? பரம்பரையா வைதிகம். ஆனால், ஊரில் இறக்கிறவனுக அசூயை பிடிச்சவன்க. ஏதாவது அப்படி இப்படின்னு நொசுக்குச் சொல்வானுக. உங்களுக்குக் கூட ஏதாவது கடுதாசு, கிடுதாசு வந்தாலும் வரும். அவன் தங்கைக்கு ஏதோ கெட்ட பெயர்னா, அதுக்காக இவன் என்ன பண்ணுவன்? நான் தான் கேக்கறேன்?”
தங்கம்மாள் திடுக்கிட்டவளாய், “என்னங்கணும் பெரிய கல்லாய்த் தூக்கிப் போடறீர்? அது என்ன சமாசாரம்?” என்று கேட்டாள்.
இத்தனை நேரமும் சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல் புன்னகையுடன் பிரம்பு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த ராஜாராமய்யர், இப்பொழுது நிமிர்ந்து உட்கார்ந்து, “ஏன் தங்கம், அவசரப்படுகிறாய்? அந்தச் சமாசாரத்தைச் சொல்வதற்காகத்தானே, தீக்ஷிதர் மூட்டை கட்டிக் கொண்டு வந்திருக்கார்? தானே சொல்கிறார்!” என்றார். தீக்ஷிதர் திடீரென்று தேள் கொட்டினது போல எழுந்திருந்து, ஒரு நிமிஷம் வரையில் வாயைக் கையால் பொத்திக் கொண்டு நின்றார். பிறகு, கையை எடுத்து விட்டு, “அடாடாடா! என்ன காரியம் பண்ணினேன்? என் புத்தியை ஜோட்டாலே அடிக்கணும்! உங்களுக்குச் சமாசாரம் தெரிஞ்சிருக்கும்னே நினைச்சுட்டேன். இல்லாட்டா, என் வாயிலே அந்த வார்த்தை வந்திருக்குமா? ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணி வைன்னு பெரியவா சொல்லியிருக்கா. அப்படியிருக்கிறபோது…” என்றார்.
“அந்தக் கதையெல்லாம் இருக்கட்டுங்கணும். விஷயம் இன்னதென்று சொல்லும்.”
“சொல்றேன்; பேஷாய்ச் சொல்றேன்! ஒருவிதத்துக்கு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கிறதே நல்லது. ஆனால், அந்த அசடு இதை என்னத்துக்காக மறைச்சு வச்சான்னு தான் தெரியலை. எல்லாத்தையும் உடைச்சு முன்னாலேயே சொல்லி விடறதுதான் நல்லதே தவிர…”
“அது தான் நல்லது; சமாசாரத்தைச் சொல்லும்!”
“பிரமாதம் ஒன்றுமில்லை. சம்பு சாஸ்திரிக்குத் தங்கை ஒருத்தி இருந்தாள். மீனாக்ஷின்னு பேரு. அவளுக்குக் கல்யாணம் ஆகி ரொம்ப நாள் வரைக்கும் புருஷனைப் பத்தித் தகவலே கிடையாது. செத்துப் போய்ட்டான்னு சில பேர் சொன்னா; இல்லை, கிறிஸ்தவனாய்ப் போய்ட்டான்னு சிலபேர் சொன்னா. ஊரிலே, இவள் இரண்டுங்கெட்டானாத் தலையிலே மயிரை வச்சிண்டு இருக்காளேன்னு புகாராயிருந்தது. இப்படியிருக்கிறபோது, பாருங்கோ! மாமாங்கத்துக்குப் போறேன்னு சம்பு குடும்பத்தோடே போனான் – பதினைஞ்சு வருஷத்துக் கதை நான் சொல்றது – மாமாங்கத்திலேயிருந்து திரும்பி வந்தபோது தங்கையை அழைச்சுண்டு வர்றலை. செத்துப் போய்ட்டாள்னு ஒரே அடியா அடிச்சுட்டான். ஊரிலே அதை ஒருத்தரும் நம்பலை. பல தினுசா வதந்தி. கிறிஸ்தவனாப் போன ஆம்படையானை அங்கே வரச் சொல்லி, அவனோடே கூட்டி அனுப்பிச்சுட்டான்னு சில பேர் சொன்னா. இல்லை, அவள்தான் இவன் பேச்சை மீறிப் போய்ட்டாள்னும் இரண்டொத்தர் சொன்னா. அப்புறம், இல்லையா? ஊரிலே அசூயை புடிச்சவன்க இன்னும் பல தினுசாகவும் சொல்லிண்டிருந்தானுக…”
“இதென்ன கூத்தான்னா இருக்கு? ஏன்னா, இப்படி ஒண்ணு இருக்குன்னு அந்தப் பிராமணன் ஒரு வார்த்தை கூடச் சொல்லலையே!” என்றாள் தங்கம்மாள்.
பிறகு அந்த மூன்று பேருக்குள்ளும் பின்வரும் சம்பாஷணை நடந்தது:
தீஷிதர்: சொல்லலேன்னா தப்புத்தான். இதை என்னத்துக்காகச் சொல்லாதே இருக்கணும்? இது மறைச்சு வைக்கிற காரியமா? அப்புறம் தெரியாதே போயிடுமா?
ராஜாராமய்யர்: ஆமாங்கணும், தீக்ஷிதரே! கல்யாணம் நிச்சயம் பண்றதுக்காக வந்த மனுஷ்யர், ‘என் தங்கை ஓடிப் போய்ட்டாள்’னு முதலிலேயே சுக்லாம்பரதரம் குட்டிக்குவாரா?
தங்கம்மாள்: நீங்க சித்த பேசாம இருங்கோ…ஏங்கணும்! ஊரிலே இந்தப் பிராமணனை அதுக்காக ஜாதியை விட்டுத் தள்ளிக் கிள்ளி வச்சிருந்ததோ?
தீக்ஷிதர்: அந்த மாதிரி பேச்சு வந்தது. நான் தான் குறுக்கே நின்னு, அதெல்லாம் கூடவே கூடாதுன்னு தடுத்தேன்.
தங்க: அப்படின்னா, போனவள் இவ்விடத்துக்குப் போக்குவரத்து ஒண்ணும் வச்சுக்கலையாக்கும்?
தீக்ஷிதர்: அதெல்லாம் பேசப்படாது. அப்படியிருந்தால், நானே உங்ககிட்டே ‘இந்த சம்பந்தம் உங்களுக்கு வேண்டாம்’னு சொல்லிவிட மாட்டேனா?
ராஜா: போறது, தங்கம்! இந்த மட்டும் தீக்ஷிதர் தயவு பண்ணிச் சம்மதிச்சுட்டார். ஆனா, பிள்ளையாண்டான் மக்கர் பண்றானே, அதுக்கென்ன செய்யறதுன்னுதான் தெரியலை…ஏங்கணும், பொண்ணு எப்படிங்கணும்? தீக்ஷிதர்: பொண்ணுக்கென்ன? ஒண்ணும் ஊனம் கிடையாது, ஊமை இல்லை; செவிடு இல்லை.
ராஜா: பேஷாப் போச்சு. ஊமை செவிடு இல்லையா? இவள் என்னமோ பிரமாதமா வர்ணிச்சாளே?
தங்க: ஏங்கணும், தீக்ஷிதரே? அந்தப் பொண்ணுக்கு என்னங்கணும் குறைச்சல்? பாக்கறதுக்கு, மூக்கும் முழியுமா நன்னாத்தானே இருக்கு?
தீக்ஷிதர்: சந்தேகம் என்ன? பட்டிக்காட்டிலே அதை விட என்ன புரட்டிவிடும்னுதான் நானும் கேக்கறேன். பின்னே ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமையாயிருக்குமா?
தங்க: குடித்தனத்துப் பெண்ணுக்கு அதைவிட அழகு என்னத்துக்குங்கணும்?
தீக்ஷிதர்: அம்மா! நீங்க சொல்றது ரொம்ப சரி. அதை விடத்தான் அழகு என்னத்துக்கு? அய்யர்வாள்! நீங்களே சொல்லுங்கோ. நாமெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிறபோது பெண் அழகைப் பார்த்தா பண்ணிண்டோம்?
ராஜா: இல்லை, நாம் பண்ணிக்கலை. அதுதான் தெரிஞ்சிருக்கே! ஆனால் அந்த மாதிரி நம்ம பிள்ளையாண்டான் பண்ணிக்குவானா?
தங்க: எல்லாம் பண்ணிக்குவன் – நீங்க கொஞ்சம் வாயை மூடிண்டு இருந்தாக்கே!
ராஜா: இதோ வாயை மூடிண்டுட்டேன்.
[கையினால் வாயைப் பொத்திக்கொண்டார்.]
தங்க: அவர் கிடக்கார், தீக்ஷிதரே! இப்படித்தான் அவர் விளையாடுவர். நீர் சொல்லும்; சம்பந்திக்கு நிலம் நீச்சு இருக்கிறதெல்லாம் நிஜந்தானே?
திக்ஷிதர்: ஆஹா! அதிலே ஒரு வார்த்தை பிசகில்லை. ஆறரை வேலி நன்செய்யும், மூணு வேலி புன்செய்யும் இருக்கு. பேஷான நிலம். தலை வாய்க்கால் பாய்ச்சல். இளையாளுக்கு மட்டும் பிள்ளை கிள்ளைன்னு பிறந்து வைக்கா திருந்தால், எல்லாம் உங்களைச் சேர வேண்டியதுதான்!
தங்க: இந்தக் காலத்திலே அதை நம்பி இருக்க முடியுமாங்கணும்?
தீக்ஷிதர்: அதெப்படி இருக்க முடியும்? பின்னாலே நடக்கப்போறதை யார் கண்டா? இப்பவே முடிஞ்ச வரையிலே நம்ம குழந்தைக்கு நாம வரப் பத்திக்க வேண்டியதுதான்; மனுஷன் என்னமோ மொத்தத்திலே நல்லவன்…
தங்க: இருந்தாலும், அவர் தங்கை சமாசாரத்தைச் சொல்லாமே மறைச்சுது எனக்குப் புடிக்கவேயில்லை.
தீக்ஷிதர்: அது பிசகுதாம்மா, பிசகுதான்! ஆனால், அதுக்காக, கல்யாணத்தை மாத்திரம் நிறுத்திவிடாதேங்கோ. என்ன அபராதம் வேணுமோ சொல்லுங்கோ, நான் வாங்கித் தர்றேன்.
தங்க: நாங்க கல்யாணத்துக்கு வர்றபோது, நீங்கதான் எங்களையெல்லாம் கவனிச்சுக்கணும்.
தீக்ஷிதர்: நன்னாயிருக்கு; காத்திண்டிருக்கேன். என்னை உங்க மனுஷன்னு நினைச்சுக்குங்கோ, அவ்வளவுதானே? கிட்டி முட்டி விசாரிக்கப் போனால், ஏதாவது உறவு கிறவுன்னு கூட ஏற்பட்டுடும்; திருவிடை மருதூரிலே உங்க தங்கையைப் போஸ்ட் மாஸ்டர் பஞ்சாபகேசய்யருக்குக் கொடுத்திருக்கு இல்லையோ?
தங்க: ஆமாம்; அவருக்கு நீங்க சொந்தமா, என்ன?
தீக்ஷிதர்: அவருடைய தங்கை மாப்பிள்ளைக்கு நான் சாக்ஷாத் சித்தப்பா! கிட்ட வந்தாச்சு, பாத்தயளோல்யோ?
இந்தச் சந்தர்ப்பத்தில் குப்புசாமி காப்பி கொண்டுவந்துவிட்டபடியாலும், தங்கம்மாளும் ராஜாராமய்யரும் பட்டணம் போகக் கிளம்ப வேண்டியிருந்தபடியாலும், சம்பாஷணை இத்துடன் முடிந்தது. தீக்ஷிதர் சூடான காப்பியைச் சாப்பிட்டுவிட்டு, குளிர்ந்த மனத்துடன் கிளம்பிச் சென்றார்.