BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part2 Malai

அத்தியாயம் 10
வண்டி வந்தது!

சமையலறையில் மங்களமும், சொர்ணம்மாளும் குஞ்சாலாடு பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் செவிட்டு வைத்தி, புதுவேஷ்டி – புதுப்புடவைப் பொட்டணங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். புது வேஷ்டி – புதுப்புடவைகளை அவன் கையால் தடவித் தடவிப் பார்த்து அவற்றின் மிருதுத் தன்மையை அநுபவித்துக் கொண்டிருந்தான்.

சொர்ணம்மாள், “நான் சொன்னபடியே ஆச்சா, இல்லையா, பார்த்துக்கோ! பொண்ணுக்கு அறுபது ரூபாய்க்குப் புடவை, உனக்குப் பன்னிரண்டு ரூபாயிலே புடவை, மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து ரூபாயிலே வேஷ்டி; மச்சினனுக்கு ஒண்ணரை ரூபாயிலே வேஷ்டி. இதென்னடி வெட்கக் கேடு! உடம்புக்குப் பால் குடிக்காட்டாலும், ஊருக்காவது குடிக்க வேண்டாமா? நீயும் பேசாம இருக்கயே?” என்றாள்.

அதற்கு மங்களம், எரிச்சலாக, “என்னை என்னடி அம்மா பண்ணச்சொல்றே! அப்பவே கிணத்துலே குளத்திலே என்னைப் பிடிச்சுத் தள்ளி விடறதுதானே? இந்த அழகான மாப்பிள்ளையைப் பார்த்து நீதானே என்னைக் கொண்டு வந்து கொடுத்தே?” என்றாள்.

“நான் எல்லாம் சரியாத்தான் பார்த்துக் கொடுத்தேன். எதிலே குறைவாய்ப் போச்சு? சொத்தில்லையா, பணமில்லையா, வயது தான் அப்படி ரொம்ப ஜாஸ்தியா? உன்னைப் போலே இளையவளா வாழ்க்கைப்பட்டவாளெல்லாம் ராஜாத்தி மாதிரி இருக்கலையா? நீ எல்லாத்துக்கும் வாயை மூடிண்டு இருந்து இருந்துதான் இப்படி இடங்கொடுத்துப் போச்சு. இல்லாட்டா, ஒரு பொண் கல்யாணத்துக்கு யாராவது பத்தாயிரம் ரூபாய் செலவழிப்பாளோ?”

“அதோடே போனாத் தேவலையே? இப்போ, அவா கல்கத்தாவிலேயிருந்து தீபாவளிக்கு வந்துட்டுப் போற செலவெல்லாம் உன் மாப்பிள்ளைதான் கொடுக்கப் போறாராம்!”

“ஐயையோ! நெஜந்தானாடி? இதென்ன அநியாயம்? இந்தக் குடித்தனம் உருப்படறதா, இல்லையா, தெரியலையே? இன்னும், திரட்சி, வளைகாப்பு, சீமந்தம்னு நெடுக வந்துண்டே யிருக்குமே?”

“கல்யாணத்திலே பத்தாயிரம் ரூபாய் கடன். நிலத்திலே இரண்டு வேலி மண்ணடிச்சுப் போயிடுத்து. ஐயாயிரம் ரூபாய் செலவழிச்சாத்தான் மறுபடி நிலமாகுமாம். எப்படிக் கடனடைக்கப் போகிறாரோ, பாக்கி என்ன மிஞ்சப் போறதே, ஸ்வாமிக்குத்தான் தெரியும்”

“நான் சொல்றேன் கேளு, மங்களம்! இத்தனை நாளும் போனதெல்லாம் போகட்டும். இனிமே, பொட்டிச் சாவியை நீ வாங்கி வைச்சுக்கோ. ஒரு காலணாச் செலவழிக்கிறதாயிருந்தாலும், உன்னைக் கேட்டுண்டுதான் செலவழிக்கணும்னு சொல்லிடு. இல்லாட்டா எல்லாருமாச் சந்தியிலே நிக்க வேண்டியதுதான்”

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், செவிட்டு வைத்தி புடவைகளையும், வேஷ்டிகளையும் ஒவ்வொன்றாய்ப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுவில் நடுவில், “அக்கா! இது யாருக்கு? இது உனக்கா? இதுதான் மாப்பிள்ளைக்கா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான். மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த சேலம் மயில்கண் வேஷ்டியைப் பார்க்கப் பார்க்க, அதைத் தான் உடுத்திக்கொண்டால் எப்படியிருக்குமென்று அவனுக்கு யோசனை தோன்றி விட்டது. வேஷ்டியை ஒவ்வொரு மடிப்பாகப் பிரித்து, கடைசியில் இரட்டை மடிப்புக்கு வந்ததும், எழுந்து நின்று அதைக் கட்டிக் கொள்ள முயன்றான்.

இந்தச் சமயத்தில், ஆலாத்திக்கு மஞ்சள் நீர் கரைத்து வைத்திருக்கிறதா என்று விசாரிப்பதற்காகச் சாவித்திரி அங்கே வந்து சேர்ந்தாள். “ஏன், சித்தி! வண்டி வரலாச்சே…” என்று சொல்லிக் கொண்டே வந்தவள் மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த வேஷ்டியைச் செவிட்டு வைத்தி கட்டிக்கொள்வதைப் பார்த்ததும், மற்றதையெல்லாம் மறந்துவிட்டாள்; இரண்டே எட்டில் செவிட்டு வைத்தி அருகில் சென்று, “சீ” என்று ஓர் அதட்டல் போட்டு, அவன் உடுத்திக்கொள்ள முயன்ற வேஷ்டியைப் பிடுங்கினாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சொர்ணம்மாளுக்கு வயிற்றெரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. “ஏண்டி சாவித்திரி! உனக்கு என்னடி வந்துடுத்து இவ்வளவு ராங்கி! அந்த வேஷ்டியை அவன் பார்த்தா ஊசியா போயிடும்? இல்லாட்டா, அவன் தொட்டாத் தீட்டுப்பட்டுப் போயிடுமா? அவனைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்கா?” என்றாள். இந்த வார்த்தைகள் சாவித்திரியின் செவியில் சுருக்கென்று பாய்ந்தன. ஊரார் தங்களைச் சாதிப் பிரஷ்டம் பண்ணியிருப்பதைத்தான் பாட்டி அந்த மாதிரி சுட்டிக் காட்டுகிறாள் என்று அவளுக்குத் தெரிந்தது. ஆனால், அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆத்திரம் தொண்டையை அடைக்க, நாத் தழுதழுக்க, “இந்தாருங்கோ, பாட்டி! என் புடவையை வேணாலும் சித்தி எடுத்துக்கட்டும். எனக்குப் புதுப் புடவை வேணுங்கறது இல்லை. ஆனால், அவாளுக்கு வாங்கியிருக்கிற வேஷ்டியை இன்னொருத்தர் கட்டிக்கிறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கலை” என்று சொல்லிவிட்டு, வைத்தியிடமிருந்து பிடுங்கிய வேஷ்டியை எடுத்துக்கொண்டு விரைவாக அங்கிருந்து சென்றாள்.

மங்களம், போகின்றவளை ஒரு தடவை விழித்துப் பார்த்துவிட்டு, “ஸ்வாமி! பகவானே! இன்னும் என்னவெல்லாந்தான் என்னைச் சோதிக்கப் போகிறாயோ?” என்று சொல்லி, ஒரு குஞ்சலாடுவை முழுசாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

காமரா உள்ளில் சாவித்திரி, மாப்பிள்ளையின் வேஷ்டியை மடித்துக் கொண்டிருந்தாள். பிரித்தது தெரியாதபடி முன்போலவே மடிக்க அவள் பிரயாசைப்பட்டாள். அவள் கடைசி மடிப்பு மடித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. ‘ஓகோ! வண்டி வந்துடுத்து போலிருக்கே! ஆலாத்தி தயாராயிருக்கிறதோ என்னமோ தெரியலையே?’ என்று எண்ணிய வண்ணம் வேஷ்டியை அப்படியே வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

அப்போது வண்டிச் சப்தத்தை மங்களமும் கேட்டு, கையில் மஞ்சள் நீருள்ள தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு சமையலறையிலிருந்து கிளம்பினாள். ஆனால், அதே சமயத்தில் குறுக்கே வந்த செவிட்டு வைத்தியின் காதில் வண்டிச் சத்தமும் கேட்கவில்லை; இவர்கள் எழுந்து வருவதையும் அவன் பார்க்கவில்லை. ‘சாவித்திரியை மட்டும் நமக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் இப்படி அவள் நம்மிடம் துடுக்காக இருப்பாளா?’ என்று எண்ணிய வண்ணம், ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டு நடந்தவன், கையில் ஆலாத்தியுடன் வந்த மங்களத்தின் மீது மோதிக் கொண்டான். ஆலாத்தித் தாம்பாளம் கீழே ‘டணார்’ என்ற சத்தத்துடன் விழுந்தது. “ஐயையோ” என்றாள் மங்களம்.

சாவித்திரி இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, ‘நல்ல சமயத்தில் தான் இவர்கள் இப்படிச் செய்வார்கள்’ என்று மனத்திற்குள் வைத்தியையும் மங்களத்தையும் வைது கொண்டே, ரேழிப் பக்கம் சென்று, கதவோரத்தில் நின்று பார்த்தாள். வாசலில் வண்டி வந்து நின்றது. அதனுள்ளிருந்து, சம்பு சாஸ்திரி இறங்கினார்; அடுத்தாற்போல் மாப்பிள்ளை இறங்குவாரென்று சாவித்திரி பதை பதைப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் இறங்குவதைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளே ஓடிப் போவதற்கு அவள் தயாராயிருந்தாள். ஆனால், சம்பு சாஸ்திரிக்குப் பிறகு யாரும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. வண்டி கடக், கடக் என்ற சப்தத்துடன் ஒரு வட்டம் அடித்துவிட்டுத் திரும்பிச் சென்றது.

வண்டியிலிருந்து இறங்கிய சாஸ்திரி வீட்டுக்குள் பிரவேசித்தார். சாவித்திரி அவருக்கு முன்னாலேயே உள்ளே சென்று கூடத்தில் நின்றாள். சாஸ்திரி வந்ததும் அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். சாஸ்திரி, அவளுடைய பரிதாபமான முகத்தைப் பார்த்துவிட்டு, தழதழத்த குரலில், “மாப்பிள்ளை வரவில்லை, அம்மா!” என்று சொன்னார். அப்போது அவர் கண்களிலிருந்து ஜலம் பெருகிற்று.

சாவித்திரி, “நீங்கள் என்ன செய்வேள், அப்பா! அழாதேங்கோ, அப்பா!” என்றாள். அவ்வளவுதான்; அவளுக்கும் தன்னை அறியாமல் துக்கம் பொங்கிக் கொண்டு வந்து விட்டது. எவ்வளவு அடக்கிப் பார்த்தும் முடியவில்லை. விம்மிக் கொண்டே அங்கிருந்து சென்று தாழ்வாரத்தில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலின் அருகில் போய் மண்டியிட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். கட்டிலில் முழங்கையை ஊன்றிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.

சாஸ்திரி அவளைப் பின் தொடர்ந்து வந்து, அவளுடைய தலையைத் தம் கைகளால் தடவிக் கொடுத்துக் கொண்டு நின்றார்.

வீட்டு முற்றத்தில் கூடல்வாய் முனையிலிருந்து மழை ஜலம் சொட்டுச் சொட்டென்று விழுந்து கொண்டிருந்தது.

வீட்டுக்கு வெளியே, மழைக் காலத்துத் தவளைகள் ஏகமாய்ச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்த சத்தம், சோகக் குரலில் “மாப்பிள்ளை வரலை!” “மாப்பிள்ளை வரலை!” என்று கதறுவதுபோல் இருந்தது.

Thyaga Bhoomi Kalki Tag

Thyaga Bhoomi Kalki Part2 Malai, Thyaga Bhoomi Kalki Part2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *