BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part2 Malai

அத்தியாயம் 3
உடைப்பு

இரவு சுமார் எட்டு மணிக்கு, நல்லான் தன்னுடைய வீட்டில் கோரைப் பாயை விரித்து அதில் படுத்துக் கொண்டான். தூக்கம் என்னவோ வரவில்லை. பஜனை மடத்துக்குப் போய்ப் பஜனை கேட்கலாமாவென்று ஒரு கணம் நினைத்தான். அப்புறம், ‘இந்த மழையிலே யார் போறது?’ என்று எண்ணினான். இரவு பூராவும் இப்படியே மழை பெய்தால், வயல்களில் எல்லாம் ரொம்ப ஜலம் கட்டி நிற்கும், அதிகாலையில் எழுந்து போய் வடிய விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆனால், வாய்க்கால்களில் ஜலம் ததும்பப் போய்க் கொண்டிருந்தால், எப்படி வடிய விடுகிறது என்று யோசனை உண்டாயிற்று. விராட பர்வம் படித்தால் மழை வரும் என்பது போல், மழையை நிறுத்துவதற்கும் ஏதாவது வழி இருக்கிறதா என்று சாஸ்திரியாரைக் கேட்க வேண்டுமென எண்ணினான்.

அப்போது நல்லானுடைய பாம்புச் செவியில் மழையின் ‘சோ’ என்ற சத்தத்தையும், காற்றின் ‘விர்’ என்ற சப்தத்தையும் தவிர, வேறு ஏதோ ஒரு சப்தம் கேட்டது.

அது, ஜலம் கரையை உடைத்துக் கொண்டு பாயும் சப்தம் என்று அவனுக்குத் தெரிந்து போயிற்று. உடனே குடமுருட்டியின் குத்தல் ஞாபகம் வந்தது. அவ்வளவுதான்; போர்த்திக் கொண்டிருந்த துப்பட்டியை எடுத்து விசிறி விட்டு, அவசரமாக எழுந்தான். ஓலைக் குடலையை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு அந்தக் கொட்டுகிற மழையில் மின்னல் வெளிச்சத்தின் உதவியினால் சேரியை நோக்கி விரைந்து சென்றான்.

நல்லான் தட்டுத் தடுமாறி, இரண்டு மூன்று இடத்தில் தடுக்கி விழுந்து எழுந்திருந்து கடைசியாக சேரியை அடைந்தபோது, சேரி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. காலையில் மண்ணை வெட்டி வரப்புப் போட்டுக் கொண்டிருந்தார்களல்லவா? அந்த வரப்பெல்லாம் போய்விட்டது. ஒரே வெள்ளமாக ஜலம் சேரியில் புகுந்து கொண்டிருந்தது. மழை, காற்று, பாய்கின்ற ஜலம் இவற்றின் ‘ஹோ’ என்ற இரைச்சலுக்கு இடையிடையே, “ஐயோ! கொழந்தையைக் காணமே!” “ஏ குட்டி! எங்கடி போய்ட்டே!” “ஆயா! ஆயா! ஐயோ! ஆயா போய்ட்டாளே!” “அடே கருப்பா! மாட்டை அவிழ்த்துவிடுறா!” “ஐயோ! என் ஆடு போயிடுச்சே!” என்று இந்த மாதிரி பரிதாபமான அலறும் குரல்கள் தீன ஸ்வரத்தில் கேட்டன.

மின்னல் வெளிச்சத்தில் நல்லானைப் பார்த்ததும், சேரி ஜனங்கள் வந்து, அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். “ஐயோ! சாமி! குடிமுழுகிப் போச்சுங்களே! குடமுருட்டி உடைப்பு எடுத்துக்கிட்டதே! நாங்க என்ன செய்வோம்? எப்படிப் பிழைப்போம்?” என்று கத்தினார்கள்.

நல்லான் உரத்த குரலில், “அடே! நீங்கள் எல்லாரும் ஆம்புளைகள் தானாடா! உடைப்பு எடுத்தா, ஓடிப்போய் மண்ணைக் கிண்ணைக் கொட்டி அடைக்கிறதுக்குப் பார்க்காமே, பொம்புளை மாதிரி அழுதுகிட்டு நிக்கறீங்களேடா?” என்றான்.

“உடைப்பையாவது, அடைக்கவாவதுங்க! கிட்ட ஆள் அண்ட முடியாதுங்க. அவ்வளவு பெரிய உடைப்பு சாமி!” என்றான் தலையாரி வீரன்.

“குடிசையெல்லாம் விழுந்து எல்லாம் பாழாய்ப் போச்சுங்க. இனிமே உடைப்பை அடைச்சுத்தான் என்ன பிரயோஜனம்? புள்ளை குட்டிங்களைக் காப்பாத்தறதுக்கு ஒரு வழி சொல்லுங்க!” என்றான் இன்னொருவன்.

“புள்ளை குட்டி போனாலும் பரவாயில்லை. ஆடு மாடெல்லாம் இருந்த இடந்தெரியலைங்களே!” என்றான் மூன்றாவது ஆள்.

அப்போது இடி முழக்கத்துடன் பளீரென்று மின்னிய மின்னலின் வெளிச்சத்தில் நல்லானுக்கு முன்னால் ஒரு கணப் பொழுது தோன்றிய காட்சி அவனுடைய நெஞ்சைப் பிளப்பதாயிருந்தது. கொஞ்ச தூரத்தில் குடமுருட்டியின் கரை உடைத்துக்கொண்டு, ஜலம் ஒரே நுரை மயமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும், சேரியெல்லாம் ஜலம் புகுந்திருப்பதையும், குடிசைகள் இடிந்து விழுந்து கொண்டிருப்பதையும், பெண் பிள்ளைகளும், பிள்ளை குட்டிகளும் அலறுவதையும் அவன் அந்த ஒரு க்ஷண நேரக் காட்சியில் கண்டான்.

உடனே, அவன் ஆவேசம் வந்தவனைப் போல், “அட பாவிகளா! தடிப்பசங்கள் மாதிரி சும்மா நிக்கறீங்களேடா? இன்னும் கொஞ்சம் நாழி போனா அத்தனை பேரும் வெள்ளத்திலே போயிடுவாங்களே! ஓடுங்க! ஓடுங்க! பொம்புளைகளை யெல்லாம் சேர்த்து, பிள்ளை குட்டிகளோடு அக்கிரகாரத்துக்கு ஓடச் சொல்லுங்க!” என்றான். “என்ன, சாமி குருட்டு யோசனை சொல்றீங்க? அக்கிராகாரத்துக்கு நாம் போனா அய்யமாரு விடுவாங்களா?” என்றான் தலையாரி வீரன்.

“குருட்டு யோசனை ஒண்ணும் இல்லேடா! ஓடிப் போய் சாஸ்திரி ஐயா காலிலே விழுந்தா ஏதாவது வழி சொல்லிக் காப்பாத்துவாரு. அநேகமா, பஜனை மடத்திலே தான் இப்ப இருப்பாரு. பஜனை மடத்துக்கு ஓடச் சொல்லுங்க பொம்புளைகளை. ஆம்புளைகளெல்லாம் ஆடு மாடைக் காப்பாத்தறதுக்கு வழி பாருங்க!” என்றான் நல்லான்.

“பட்டிக்கார ஐயாவே சொல்லச்சே நமக்கு என்ன வந்தது? ஓடுங்க எல்லாரும் பஜனை மடத்துக்கு!” என்றான் தலையாரி வீரன்.

பிறகு, நல்லானும் சாம்பானும் குடமுருட்டியில் உடைப்பு எடுத்துக்கொண்ட இடத்தைப் பார்க்கப் போனார்கள்.

பஜனை முடிந்தது. சாஸ்திரியார் ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து கற்பூர ஹாரத்தி காட்டினார். எல்லோரும் சேர்ந்து மங்களம் பாடினார்கள்.

பிறகு, தீக்ஷிதர் எழுந்திருந்து பிரஸாத விநியோகம் செய்ய ஆரம்பித்தார். பஜனையில் இந்தப் பணியை அவர் தான் ஏற்றுக் கொள்வது வழக்கம். விநியோகம் செய்து வரும்போது, தம்முடைய பிள்ளைகளுக்கு மட்டும் தெரிந்தும் தெரியாமலும் இரண்டு மூன்று தடவை சுண்டல் கொடுப்பார். அந்தப் பிள்ளைகளும் தகப்பனாரின் நோக்கத்தை அறிந்தவர்களாய் மூலைக்கு மூலை வந்து சுண்டல் வாங்கி மடி நிறையக் கட்டிக் கொண்டு போவார்கள்.

இன்று வழக்கம்போல் தீக்ஷிதர் சுண்டல் கொடுத்துக் கொண்டிருக்கையில் திடீரென்று மடத்தின் வாசலில் ஏதோ கூக்குரல் கேட்டது. மழை, காற்று சப்தத்துக்கிடையே பலர் ஓடிவரும் சத்தம் போல் இருந்தது. ‘இது என்னவாயிருக்கலாம்?’ என்று யாரும் யோசிப்பதற்கு முன்னால், படீரென்று மடத்தின் வாசல் கதவு திறந்தது. திறந்த கதவு வழியாக திமுதிமுவென்று சொட்ட நனைந்திருந்த பெண்பிள்ளைகளும் குழந்தைகளும் உள்ளே பிரவேசித்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து மழைச் சாரலும் உள்ளே புகுந்து அடித்தது.

பஜனை மடத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் அவ்வளவு பேருடைய கண்களும் ஏககாலத்தில் வாசற்படி பக்கம் திரும்பி இந்தக் காட்சியைக் கண்டன. அவர்களில் பலருக்குக் கண் விழி பிதுங்கிவிடும் போல் இருந்தது.

அதே சமயத்தில், உள்ளே புகுந்த பெண் பிள்ளைகளும் இவர்களைப் பார்த்துவிட்டுப் பயப் பிராந்தி கொண்டவர்களைப் போல் திகைத்து நின்றார்கள். பின்னால் வருகிறவர்களுக்குக் கூட இடங்கொடாமல் அவர்கள் வாசற்படியண்டை நின்றுவிட்டார்கள்.

ஒரு கண நேரம், இந்தக் காட்சி. அடுத்த கனத்தில், “ஐயையோ! இது என்னடா இது! சேரிப் பொம்பிளைகள் போலிருக்கே!” என்று முத்துசாமி அய்யர் ஒரு கூச்சல் போட்டார்.

“அட கிரகசாரமே! இது என்ன கூத்து?” என்று சாமா அய்யர் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருந்தார்.

“ஓகோகோ! கலி முத்திப் போச்சு!” என்றார் ராமய்யா வாத்தியார்.

நாணு கனபாடிகள் வாயிலிருந்த சுண்டலை விழுங்கிக் கொண்டே, “விழட்டு! விழட்டு! எல்லாழுமா உக்காந்திழுக்கயளே!” என்று கூவினார்.

ஐந்தாறுபேர் எழுந்திருந்து, கையை ஓங்கியவண்ணம் வாசற்படியை நோக்கிச் சென்றார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னால், கையில் விசிறிக் கட்டையுடன் தீக்ஷிதர் சென்றார்.

“அபஸ்மாரங்களா!”

“மூதேவிகளா!”

“இங்கே எங்கே வந்தயள்?”

“அவ்வளவு தைரியங் கொடுத்துப் போச்சா?”

“போ! போ! போ!”

“பீடை! தரித்திரம்!”

இப்படி இவர்கள் விரட்டி அடிக்க, அந்தப் பெண் பிள்ளைகள் தங்களுடைய குழந்தை குட்டிகளைக் கையினால் வளைத்துப் பின்னால் தள்ளிய வண்ணம் தாங்களும் பின்னால் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முகத்தில் ஏக்கமும் பீதியும் குடிகொண்டிருந்தன. அவர்களில் ஒரு ஸ்திரீ சற்றுத் துணிச்சலாக நின்று, “சாமி! கோவிச்சுக்காதிங்க. தெரியாம வந்துட்டோ ங்க!” என்றாள்.

“தெரியாத வந்துட்டீங்களா? திமிரைப் பார்த்தயோல்லியோ திமிரை! அக்கிரகாரத்துக்குள் வரக்கூடாதுன்னு தெரியாதா?

“இல்லேங்க! பட்டிக்கார ஐயா, பஜனை மடத்துக்குப் போன்னு சொன்னாங்க. அதைக் கேட்டு வந்துட்டோங்க.”

“என்ன! பட்டிக்காரன் சொன்னானா? அவன் தான் இந்த சாஸ்திரி இடங் கொடுத்துக் கொடுத்துத் திமிர் பிடிச்சுக் கிடக்கானே? அவன் சொன்னா, நீங்க வந்துடறதோ?”

“அவ்வளவு துணிச்சலா உங்களுக்கு வந்துடுத்து?”

“நாளைக்கே சேரியிலே நெருப்பை வச்சுக் கொளுத்தச் சொல்றேன் பாரு!”

“சாமி, சேரியிலே நெருப்பு வைக்கிறதுக்கு ஒண்ணுமில்லிங்க; எல்லாம் வெள்ளம் அடிச்சுட்டுப் போயிட்டுதுங்க!”

“போயிடுத்தா? போயிடுதோல்லியோ? நீங்கள்ளாம் இப்படித் திமிர்புடிச்சு அலைஞ்சாக்கே, ஸ்வாமியே பார்த்துத் தண்டிச்சுடறார்.”

இதற்குள்ளாக, அந்த ஸ்திரீகள், குழந்தைகள் எல்லாரும் மறுபடியும் வாசற்படியைத் தாண்டி மடத்துக்கு வெளியே கொட்டுகிற மழையில் சென்றார்கள்.

மேற்சொன்னதவ்வளவும் இரண்டு நிமிஷ நேரத்திற்குள் நடந்தது. சேரி ஜனங்கள் உள்ளே வந்தபோது, சம்பு சாஸ்திரி தம்புராவை எடுத்து அதனுடைய உறையில் போட்டுக் கொண்டிருந்தார். சாவித்திரி, பூஜை சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். இரண்டு பேரும் அப்படியே பிரமித்து நின்று, நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் நடந்த சம்பாஷணை அரை குறையாக அவர்கள் காதில் விழுந்தது.

சேரி ஜனங்கள் மறுபடி வெளியில் போனதும், சாஸ்திரி, சாவித்திரியைப் பார்த்து, “குழந்தை! சேரியிலே ஏதோ ஆபத்துபோல் இருக்கிறது. இல்லாவிட்டால் இவர்கள் இப்படி வந்திருக்க மாட்டார்கள். நாம் போய் விசாரிக்கலாம், வா!” என்றார்.

அவர்களை வெளியிலே விரட்டிவிட்டுத் திரும்பி வந்தவர்கள் சாஸ்திரியைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“ஓய் சாம்பு சாஸ்திரி! பார்த்தீரோல்லியோ; எல்லாம் உம்மால் வர்றதுதான் காணும்” என்றார் தீக்ஷிதர்.

“அதிலே என்ன சந்தேகம்? இந்த மனுஷன் இடங்கொடுத்துக் கொடுத்துத்தான் ஊரே இப்படி கெட்டுப் போச்சு!” என்றார் முத்துசாமி அய்யர்.

“ஓய்! உம்ம பட்டிக்காரன் தான் இங்கே வரச் சொன்னானாங்காணும் அந்தப் பயலை ஒழிச்சுட்டு மறுகாரியம் பாரும்னா, நீர் கேக்கறீரா? அவனைத்தான் தலைமேலே தூக்கி வச்சுக்கிறீரே?” என்றார் சாமா அய்யர்.

“உம்ம பஜனையிலே இடி விழ!” என்று தீக்ஷிதர் முத்தாய்ப்பு வைத்தார்.

சாஸ்திரிகள் சாவதானமாக, “என்மேலே என்னத்துக்குக் கோவிச்சுக்கறயள்? நல்லானும் அப்படியெல்லாம் தப்புத்தண்டாவா ஒரு காரியம் செய்றவனில்லை. என்ன ஆபத்தோ, என்னமோ; நான் போய் விசாரிக்கிறேன். நீங்கள்ளாம் அவாவா ஆத்துக்குப் போய்ப் பேசாம தூங்குங்கோ! போது விடிஞ்சாப் பாத்துக்கலாம்!” என்றார். பிறகு சாஸ்திரியும், சாவித்திரியும் பஜனை மடத்தை விட்டு வெளியில் சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *