BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part2 Malai

அத்தியாயம் 6
ஸ்ரீதரன் சங்கடம்

நெடுங்கரையில் சாவித்திரி, ‘தீபாவளி சமயத்தில் தானா இப்படியெல்லாம் வரவேணும்?’ என்று சங்கடப்பட்டுக் கொண்டிருக்கையில், கல்கத்தாவில் ஸ்ரீதரனும் தீபாவளியை நினைத்துப் பெரிதும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான்.

கல்யாணம் ஆன இரண்டு மாதத்துக்கெல்லாம் ஸ்ரீதரனுக்குக் கல்கத்தாவில் பெரிய உத்தியோகம் ஆனபோது, தன்னுடைய அபாரமான புத்திசாலித்தனத்துக்காகத்தான் மேற்படி வேலை தனக்குக் கிடைத்தது என்று அவன் நினைத்தான்.

சாவித்திரியைக் கல்யாணம் பண்ணின முகூர்த்தந்தான் ஸ்ரீதரனுக்கு வேலை கிடைத்தது என்றும், அவளுடைய அதிர்ஷ்டந்தான் காரணமென்றும் தங்கம்மாள் சொன்னாள்.

ராஜாராமய்யர் ஒன்றும் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. ஏனெனில், உத்தியோகம் எப்படிக் கிடைத்ததென்பது அவருக்கு நன்றாய்த் தெரியும். கல்கத்தாவில் ராஜாராமய்யர் உத்தியோகம் பார்த்தபோது அவருக்கு மேலதிகாரியாயிருந்த ஆங்கில துரை அவரிடம் மிகவும் விசுவாசம் வைத்திருந்தார். ஆனால், அவருடைய மனோதத்துவ சோதனைகள், ஆவி உலக ஆராய்ச்சிகள் இவற்றைப் பரிகாசம் செய்து வந்தார். ராஜாராமய்யர் உத்தியோகத்திலிருந்து விலகி ஊருக்கு வந்த பிறகு, மேற்படி துரையின் அருமை மனைவி இறந்து போனாள். இதன் காரணமாக, துரைக்கும் ஆவி உலக ஆராய்ச்சிகளில் சிரத்தை உண்டாயிற்று. ஒரு வேளை ராஜாராமய்யரின் நம்பிக்கையில் உண்மையிருக்குமோ, சாத்தியமாயிருக்குமோ என்றெல்லாம் அவருக்குச் சபலம் உண்டாயிற்று. ராஜாராமய்யருடன் கடிதப் போக்குவரவு தொடங்கினார். பிறகு, ராஜாராமய்யர் கல்கத்தாவுக்கே வந்துவிட்டால் தான் அந்த ஆராய்ச்சிகளை நன்கு நடத்த முடியுமென்று தோன்றியது. எனவே, ராஜாராமய்யரைக் கல்கத்தாவுக்கு வரப் பண்ணுவதற்காக, துரை அவருடைய பிள்ளை ஸ்ரீதரனுக்கு கே அண்டு ஓ பாங்க் என்னும் பிரசித்திபெற்ற இங்கிலீஷ் பாங்கின் கல்கத்தா கிளை ஆபீஸில் உதவி மானேஜர் வேலை செய்து வைத்தார்.

ஆகவே, ஆனி மாதத்திலேயே ராஜாராமய்யருடைய குடும்பம் கல்கத்தாவுக்குப் போக வேண்டியதாயிற்று. கல்கத்தாவில் தென்னிந்தியர் வசித்த பகுதியில் ஒரு தனி வீடு எடுத்துக் கொண்டு குடித்தனம் தொடங்கினார்கள். ஸ்ரீதரன் அப்படி ஒன்றும் அசடு இல்லையாதலால், உத்தியோகத்தைத் திறமையாகப் பார்த்து, துரைக்குத் திருப்தியளித்து வந்தான்.

தங்கம்மாளுக்கு மட்டும் ஒரு மனக்குறை இருந்து கொண்டுதான் இருந்தது. ஆடி, ஆறாம் மாதம், ஆவணியவிட்டம் இவற்றுக்கெல்லாம் நெடுங்கரைக்குப் போய் அதிகாரம் பண்ணிச் சீர்செனத்தி கொண்டு வரவில்லையே யென்பது தான் அந்தக் குறை. ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து, தலை தீபாவளிக்குப் போய்க் கொண்டு வந்துவிடலாமென்று அவள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாள். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னாலிருந்தே பிள்ளைக்கு அவள் உரையேற்ற ஆரம்பித்து விட்டாள்.

ஸ்ரீதரனுக்கோ இது கொஞ்சங்கூட இஷ்டமில்லை. ஏற்கனவே, அவனுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை; சாவித்திரியை நினைத்தால் அவனுக்கு அருவருப்பாயிருந்தது; நெடுங்கரையையும், சம்பு சாஸ்திரியையும் எண்ணினால் அவனுடைய உடல் குன்றியது. இவ்வளவுடன் இப்போது ஒரு புதிய காரணமும் சேர்ந்திருந்தது.

ஸ்ரீதரன் உத்தியோகம் பார்த்த பாங்கில் டைப் அடிக்கும் வேலைக்கு ஆங்கிலோ-இந்தியப் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஸ்ரீதரன் வேலைக்குப் போன அன்று, அவர்களில் ஒருத்தி அவனுடைய அறைக்குள் வந்தாள். “ஆர் யூ மிஸ்டர் ஸ்ரீதர்?” என்று கேட்டாள். அந்தக் குரல் ஸ்ரீதரனுக்கு தேவகானம் போல் இருந்தது. கண்கொட்டாமல் அவளைப் பார்த்தபடி, ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் ஸ்ரீதரன். “வாட் எ லவ்லி நேம்!” என்றாள் அந்தப் பெண். ஸ்ரீதரனுக்கு அப்போது தன் பெற்றோர்கள் மீது மிகவும் நன்றி உண்டாயிற்று. தனக்கு எத்தனையோ விதத்தில் அவர்கள் கெடுதல் செய்திருந்தாலும், இவ்வளவு அழகான பெயரைக் கொடுத்தார்களே என்று எண்ணினான். பிறகு, அந்தப் பெண், ஸ்ரீதரனுடைய கடிதங்களை டைப் அடிப்பதற்குத் தன்னை நியமித்திருப்பதாகவும், அவன் கூப்பிடும்போது வருவதாகவும் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இதுவரையில் தான் கனவு கண்டு கொண்டிருந்த கந்தர்வப் பெண் இவள் தான் என்று ஸ்ரீதரன் அந்த நிமிஷமே தீர்மானித்துவிட்டேன். நாளுக்கு நாள் அவனுக்குப் பித்தம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. ஒரு நாள் சாயங்காலம் ஸ்ரீதரன் ஆபீஸை விட்டுக் கிளம்பிய நேரமும் மிஸ் ஸுஸி கிளம்பிய நேரமும் சரியாயிருந்தது. அப்போது ஸ்ரீதரன் ஆபீஸுக்குப் போய் வருவதற்கு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தான். அவன் சைக்கிளில் ஏறி உட்கார்ந்துகொண்டு, ஸுஸிக்குப் பின் ஸீட்டில் உட்கார்ந்து வரத் தைரியமிருந்தால், அவளுடைய ஜாகையில் கொண்டு போய் விடுவதாய் விளையாட்டாகச் சொன்னான். அந்தப் பெண் மிகவும் துணிச்சல் உள்ளவள். அவன் சொல்லி வாய் மூடிவதற்கு முன்னால் பின் ஸீட்டில் ஏறி உட்கார்ந்து விட்டாள். அதிகம் வளர்த்துவானேன்! அது முதல், ஸ்ரீதரனும் அந்த ஆங்கிலோ-இந்தியப் பெண்ணும் ‘ஓருயிரும் ஈருடலும்’ என்பார்களே, அந்த மாதிரி ஆகிவிட்டார்கள்.

இந்த நிலைமையில், தங்கம்மாள் தலை தீபாவளிப் பேச்சை எடுத்ததிலிருந்து ஸ்ரீதரனுக்கு அடிக்கடி மனச்சோர்வு உண்டாயிற்று. கோபம் கோபமாய் வந்தது. அந்தப் பாழும் கல்யாணம் மட்டும் ஆகாதிருந்தால் இப்போது எவ்வளவு சௌகரியமாயிருக்கும்! தன்னுடைய சந்தோஷத்துக்கு ஓர் எல்லையே யிராதல்லவா! ஸ்ரீதரனுடைய மனோ சஞ்சலத்தைக் கண்ட மிஸ் ஸுஸி, “என்ன சமாசாரம்?” என்று அவனை அடிக்கடி வற்புறுத்திக் கேட்டாள்.

ஸ்ரீதரன் அப்போது உண்மையைச் சொன்னான். தன்னுடைய கல்யாண விஷயத்தை அவளிடம் சொல்லிவிட வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு முன்பே இருந்தது. அதை மறைத்து வைப்பதால் பின்னால் சங்கடம் ஏற்படும் என்று அவன் எண்ணினான். இந்த மாதிரி விளைந்த சங்கடங்களைப்பற்றி அவன் நாவல்களிலும், கோர்ட் விவரங்களிலும் படித்திருந்தான். ஆகவே இதுதான் தக்க சமயம் என்று தீர்மானித்து, தன் பெற்றோர்களுடைய வற்புறுத்தலினால் தான் கல்யாணம் செய்து கொள்ள நேர்ந்ததையும், ஆனால், அந்தப் பீடையின் முகத்தில் விழிக்கவே தனக்கு விருப்பமில்லையென்பதையும், இப்போது தலை தீபாவளிக்குப் போக வேண்டுமென்று தாயார் தொந்தரவு செய்து கொண்டிருப்பதையும் கூறினான். இடையிடையே, ஹிந்துக்களுக்குள் கல்யாண விஷயத்தில் அநுசரிக்கப்படும் முறை எவ்வளவு அநாகரிகமானது என்பதைப்பற்றித் தன்னுடைய சொந்த அபிப்பிராயத்தையும் காரமான மொழிகளில் தெரிவித்து வந்தான்.

இப்படியெல்லாம் உண்மையைச் சொல்லி அந்தப் பெண்ணின் அநுதாபத்தைப் பெறலாமென்று ஸ்ரீதரன் எதிர்பார்த்தான். ஆனால், அந்த அநுதாபத்தை உடனே அவன் பெறவில்லை. பிறகு இரண்டு மூன்று நாளைக்கு அந்தப் பெண் அவனுடன் பேசவும் இல்லை; அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை. இதனால் ஸ்ரீதரன் வெறி கொண்டவன் போல் இருந்த நிலைமையில், அவளாக அவனைத் தேடிக்கொண்டு வந்து சமாதானப் படுத்தினாள். அவன் தன்னை ஏமாற்றியதை மன்னித்துவிடுவதாகச் சொன்னாள். ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்தான். “உமது மனைவியை நான் பார்க்க வேண்டும்!” என்றாள்.

அவள் சமாதானம் அடைந்ததில் ஸ்ரீதரனுக்கு ஒரே குதூகலம். எனவே, “அதென்ன பிரமாதம்? அவள் இங்கே வரும்போது – எப்போதாவது வந்தால் – நீ கட்டாயம் பார்க்கலாம்” என்றான் ஸ்ரீதரன். “அதெல்லாம் முடியாது; இப்போதே பார்க்க வேண்டும்” என்றாள் ஸுஸி.

“அது எப்படி சாத்தியம்? இப்போது எப்படிப் பார்க்கிறது?”

“தீபாவளிக்கு நீர் கிராமத்துக்குப் போகிறீர் அல்லவா? உம்முடன் நானும் வருகிறேன்” என்றாள்.

ஸ்ரீதரன் திகைத்து நிற்கும்போதே, அவள் அவனுடைய கன்னத்தை ஒரு தட்டுத் தட்டி, “பயந்து போகாதேயும். நான் இப்படியே வரவில்லை. ஆண் வேஷம் போட்டுக் கொண்டு வருகிறேன். உம்முடைய சிநேகிதன் என்று சொல்லி, என்னை அழைத்துக் கொண்டு போம்!” என்றாள்.

“சபாஷ்!” என்றான் ஸ்ரீதரன். ஏற்கெனவே மிஸ் ஸுஸியை ஆண் உடையில் அவன் பார்த்திருக்கிறான். வேஷம் பொருத்தமாயிருக்கும். சந்தேகமில்லை. தீபாவளிக்கு மாப்பிள்ளைத் தோழன் ஒருவனை அழைத்துப் போவது வழக்கமல்லவா? இவளை மாப்பிள்ளைத் தோழனாக அழைத்துப் போகலாமே? பிரயாணமும் வெகு குஷியாயிருக்கும்! – இப்படி எண்ணி “சபாஷ்! சரியான யோசனை! அப்படியே செய்வோம்!” என்றான் ஸ்ரீதரன்.

சில நாள் ஊடல் கொண்டிருந்த பிறகு மறுபடியும் அவள் சிநேகிதமான குதூகலத்தில் ஸ்ரீதரன் அவ்வாறு வாக்குக் கொடுத்துவிட்டான். ஆனால், அப்புறம் அதைப் பற்றி யோசிக்க யோசிக்க அவனுக்கு அதிலுள்ள சங்கடங்களும், அபாயங்களும் தெரிய வந்தன. அம்மாவும் கூட வரப்போகிறாளே! பிரயாணத்தின்போது நடுவில் அம்மாவுக்குத் தெரியாமலிருக்குமா? அல்லது, நெடுங்கரையில்தான் இவள் எப்படி இருக்க முடியும்? அந்தப் பட்டிக்காட்டில் இவளுக்குத் தனியாயிருக்க இடம் எங்கே கிடைக்கும்? தெரிந்துவிட்டால் எவ்வளவு அவமானம்! ஏதாவது விபரீதமாக முடிந்தாலும் முடியலாம் அல்லவா? – இதையெல்லாம் நினைக்க நினைக்க ஸ்ரீதரனுக்குப் பயம் அதிகமாகி வந்தது.

ஒரு வேளை ஸுஸி விளையாட்டுக்காகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. அவளிடம் அம்மாதிரி பிரஸ்தாபிக்கவும், அவள் நிஜமாகவே தான் வரப்போவதாக வற்புறுத்தினாள். பிராயாணத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்வதும் ஸ்ரீதரனுக்குத் தெரிந்தது. அதன் மேல் ஸ்ரீதரன் அந்தப் பைத்தியக்கார யோசனை வேண்டாம் என்றும், அதில் ரொம்ப அபாயம் இருக்கிறதென்றும், தானும் தீபாவளிக்கே போகவில்லையென்றும் சொல்லிப் பார்த்தான். ஸுஸி கேட்கவில்லை. ஸ்ரீதரனை பயந்தாங்கொள்ளி என்று பரிகாசம் செய்ய ஆரம்பித்தாள். “உம் மனைவியை நான் பார்க்கக் கூடாது என்பதுதானே உம் எண்ணம்?” என்று கண்ணீர் விடத் தொடங்கினாள்.

இந்தத் தர்ம சங்கடமான நிலைமையில் என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்ரீதரன் தத்தளித்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தங்கம்மாளும் இன்னொரு பக்கம் ஸுஸியும் பிரயாணத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். எனவே, ஸ்ரீதரனும் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ஆனால் அவனுடைய மனம் மட்டும் என்ன நேரிடுமோ என்னவோ என்று பதைபதைத்துக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *