BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part2 Malai

அத்தியாயம் 8
பிரயாணம் நின்றது

ராஜாராமய்யரின் ஆவி உலகச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவரும், மிஸ்டர் பீடர்ஸன் துரையும், “ஸ்பிரிட் ஒர்ல்ட்” பத்திரிகாசிரியர் சியாம் பாபுவும், இன்னும் நாலைந்து பேரும் வாரத்தில் ஒரு நாள் இரவில் சந்தித்து, இறந்தவர்களுடைய ஆவிகளை வரவழைத்துப் பேச முயன்று கொண்டிருந்தார்கள். ஒரு நீளமான மேஜையை சுற்றி இவர்கள் உட்காருவார்கள். விளக்கை அணைத்து விடுவார்கள். பிறகு, ஒவ்வொருவரும் தமது இறந்து போன உறவினர் யாரையேனும் மனத்தில் நினைத்து, ‘அவருடைய ஆவி வரவேண்டும்’ என்று தியானிப்பார்கள்.

ஆவி உலகம் சம்பந்தமாக அப்போது வெளியாகியிருந்த புத்தகங்களில் மேற்கண்ட முறைதான் கூறப்பட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து செய்து வந்தால், சில நாளைக்கெல்லாம் குறிப்பிட்ட ஆவி, அல்லது ஆவிகள் அருவமாக அந்த அறைக்குள் வரும். வந்து, தியானம் செய்பவர்கள் தொட்டுக் கொண்டிருக்கும் மேஜையை மெள்ள மெள்ள உயரத் தூக்கும். அப்புறம் சில விசேஷ சப்தங்கள் எல்லாம் உண்டாகும். நாளடைவில், ஆவி, புகை போன்ற உருவம் எடுத்துக் கண்ணுக்குப் புலனாகத் தொடங்கும். கடைசியாக, அது பேசத் தொடங்கி, கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லும் – இம்மாதிரி மேற்படி புஸ்தகங்களில் சொல்லப்பட்டிருந்தது.

இப்போது ராஜாராமய்யரும், அவருடைய சகாக்களும் செய்த சோதனையில், மேஜையானது உயரக் கிளம்ப ஆரம்பித்திருந்தது. முதலில் ஓர் அங்குலம், அப்புறம் இரண்டு அங்குலம் – இப்படியாக அபிவிருத்தியடைந்து இப்போது ஒரு முழ உயரம் வரை கிளம்பிக் கொண்டிருந்தது. உண்மையில், அங்கே தியானத்தில் அமர்ந்தவர்கள் ஒவ்வொருவரும், ஆவிகளுக்கு ஒத்தாசை செய்யும் நோக்கத்துடன் கொஞ்சம் கொஞ்சம் இலேசாக மேஜையைத் தூக்கிவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவருக்காவது மற்றவர்களும் அப்படிச் செய்கிறார்கள் என்பது தெரியாதாகையால், அருவமான ஆவிகள் தான் வந்து மேஜையைத் தூக்குகின்றன என்று மனப்பூர்வமாக நம்பினார்கள்.

அம்மாதிரி பரிபூரண நம்பிக்கை கொண்டிருந்தவர்களில் ராஜாராமய்யரும் ஒருவர். தமது வாழ்நாளெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்த காரியம் இப்போது உண்மையிலேயே நிறைவேறப் போகிறதென்று எண்ணி அவர் அளவிலாத உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தார். உலக விஷயங்கள் ஒன்றுமே அவருக்கு இலட்சியமாயில்லை. தீபாவளிக்குத் தம் மனைவியும் பிள்ளையும் நெடுங்கரைக்குப் போகும் விஷயம் அவருக்கு மிகவும் திருப்தியளித்தது. ‘அப்பா! ஒரு பத்து நாளைக்காவது இவர்களுடைய தொல்லையில்லாமல் இருக்கலாம்’ என்று அவர் எண்ணினார். அத்துடன், இப்போது அவர்கள் சோதனை நடத்திக்கொண்டிருந்த இடம் அவ்வளவு வசதியில்லாமலிருந்தபடியால், தங்கம்மாளும் ஸ்ரீதரனும் ஊருக்குப் போனால் தமது வீட்டிலேயே ஒரு நாள் நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. சோதனை நடக்கும் போது நம்பிக்கையற்றவர்கள் யாரும் அருகில் இருக்கக் கூடாதாதலால், தங்கம்மாளும் ஸ்ரீதரனும் இருக்கும்போது வீட்டில் அந்தச் சோதனை நடத்த அவர் விரும்பவில்லை.

இப்படியாக ராஜாராமய்யர் தம் மனைவியும் புதல்வனும் தீபாவளிக்கு ஊருக்குப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், நெடுங்கரையிலிருந்து அவர் பேருக்கு ஒரு தபால் வந்தது. அதைப் பிரித்துப் படித்துப் பார்த்ததும் அவர் ஒரே கலவரமடைந்து போனார். அப்போது அவர் ‘ஸ்பிரிட் ஒர்ல்ட்’ பத்திரிகைக்குத் தமது ஆவி உலக அநுபவங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தாராயினும், அதை அப்படியே விட்டு விட்டுத் தங்கம்மாளைத் தேடிக் கொண்டு போனார். அன்று இரவுதான் நெடுங்கரைக்குப் பயணப்படுவதாக உத்தேசித்திருந்தபடியால், தங்கம்மாள் பெட்டியில் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டும், வேலைக்காரனைப் படுக்கை கட்டச் சொல்லிக் கொண்டும் இருந்தாள். அப்போது, ராஜாராமய்யர், கையில் பிரித்த கடிதத்துடன், “தங்கம்! தங்கம்! கேட்டாயா சமாசாரம்?” என்று கேட்டுக் கொண்டு வந்தார்.

“என்ன பிரமாதமான சமாசாரம்? எள்ளுக்குள் எண்ணெய் இருக்குன்னு எனக்குத் தெரியுமே?” என்றாள் தங்கம்.

“இல்லேடி! உன் பிள்ளையாண்டான், தீபாவளிக்கு மாமனார் ஆத்துக்குப் போக மாட்டேன்னு மூக்கால் அழுதுண்டிருந்தானோல்லியோ? அங்கேயும் அதுக்குத் தகுந்தாப்பலே ஒரே ரகளையா இருக்கு. சம்பு சாஸ்திரிக்குத் திடீர்னு பைத்தியம் புடிச்சுடுத்தாம்…”

“இது என்ன கூத்து?”

“பைத்தியம்னா, நிஜப் பைத்தியமில்லை! ஒரு நாளைக்குத் தீண்டாதவன்களையெல்லாம் அக்கிரகாரத்துக்குள்ளே அழைச்சுண்டு வந்துட்டாராம். அதுக்காக, ஊரார் அவரை ‘பாய்காட்’ பண்ணி வச்சிருக்காளாம்…”

“அடபாவிப் பிரமாணா! இப்படிப் பெரிய கல்லாத் தூக்கிப் போட்டுட்டாரே! ஆடி, ஆறாம் மாதம் ஒண்ணுக்குந்தான் போகலை – தீபாவளிக்காவது போய்த் துணிமணி, பாத்திரம் பண்டம் வாங்கி நகத்திண்டு வரலாம்னு ஆசைப்பட்டுண்டு இருந்தேனே? – ஏன்னா? நெஜமாத்தான் அப்படி எழுதியிருக்கா? நீங்களா வெறுமனைக்கோசரம் சொல்றயளா?”

“சரியாப் போச்சு! எனக்கு வேறே வேலை கிடையாதாக்கும்! தீக்ஷிதரும், இன்னும் நாலைஞ்சு பேரும் கையெழுத்துப் போட்டுக் கடுதாசி எழுதியிருக்கா. ஒரு நாளைக்குப் பலமா மழை பேஞ்சபோது, சேரியிலே வெள்ளம் புகுந்துடுத்துன்னு, சேரி ஜனங்கள் எல்லாரையும் அக்கிரகாரத்துக்கு அழைச்சுண்டு வந்து இரண்டு நாள் வச்சிருந்தாராம். ஊரார், வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலையாம். ரொம்ப ரஸாபாஸமாய்ப் போச்சாம். அதுக்கு மேலேதான் அவாத்துக்கு யாரும் போகக்கூடாது; நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு பண்ணியிருக்காளாம். இந்தச் சமயத்தில் நாம் அங்கே தீபாவளிக்கு வரக்கூடாதுன்னு ஊரார் கேட்டுக்கறாளாம். ‘அப்புறம் உங்க இஷ்டம்; நாங்க இதுக்கு மேலே சொல்றதுக்கில்லை’ன்னு லெட்டர் முடியறது. நீ என்ன சொல்றே!”

“நான் என்னத்தைச் சொல்றது? பார்த்தா, வைதிகமா, விபூதியும் துளசி மாலையுமா இருக்காரேன்னு நினைச்சேன். உங்களைப் போலேயெல்லாம் கிராப்புத் தலையும், பாழும் நெத்தியுமா இல்லையேன்னு சந்தோஷப்பட்டுண்டு இருந்தேன். இப்படிப் பைத்தியம் பிடிச்சுப் பாயைப் புரண்டப் போறார்னு நான் கண்டேனா?”

“அதைக் கேக்கலை, நான் இப்போ! தீபாவளிக்கு போறயா, இல்லையான்னுதான் கேக்கறேன்.”

“அது எப்படிப் போறது? நன்னாயிருக்கே! இன்னிக்கு நாம்ப புடவைக்கும் வேஷ்டிக்கும் ஆசைப்பட்டுண்டு போய்ட்டா, நாளைக்கு நம்ப பொண்களைக் கொடுத்திருக்கிற இடத்திலே சும்மா இருப்பாளா? – அதெல்லாம் யோசனை பண்ணித்தான் செய்யணும்.”

ராஜாராமய்யரும் தங்கம்மாளும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, வாசலில் வண்டி நின்ற சத்தமும், ஸ்ரீதரனும் அவனுடைய ‘தோழ’னும், இறங்கி உள்ளே வந்த சத்தமும் அவர்கள் காதில் விழவில்லை. அடுத்த அறையில் வாசற்படிக்கு அருகில் நின்றபடி ஸ்ரீதரன் அவர்களுடைய சம்பாஷணையைச் சற்று நேரம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டோ மே? எப்படியாவது இந்தப் பிரயாணம் தடைப்பட்டு விடக்கூடாதா?’ என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு, “அது எப்படிப் போறது?” என்று தங்கம்மாள் சொன்னதைக் கேட்டதும் அளவிலாத குதூகலம் உண்டாயிற்று. ஆனால், அதைச் சிறிதும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டே அப்பாவும் அம்மாவும் இருந்த அறைக்குள் வந்தான். ஒரு வார்த்தையும் பேசாமல், அப்பாவையும் அம்மாவையும் வெறிக்கப் பார்த்துவிட்டு, “ஒரு பிள்ளைக்கு அவன் தாயார் தகப்பனாரே சத்துருக்களாயிருந்தால், என்னதான் செய்கிறது?” என்றான். ராஜாராமய்யர், “என்னடா உளர்றே? நான் என்னடா பண்ணினேன் உனக்கு?” என்றார்.

“ஆமாம், அப்பா! நீங்க ஒண்ணும் பண்ணலை! இந்தக் கல்யாணமே வேண்டாம்னு நான் அப்பவே அடிச்சுண்டேனா, இல்லையா? கல்யாணத்தன்னிக்குக் காலம்பரக்கூட, இந்தப் பட்டிக்காட்டுச் சம்பந்தம் வேண்டாம், புறப்பட்டுப் போயிடுவோம்னு முட்டிண்டேன். இரண்டு பேருமாச் சேர்ந்து பணத்துக்கு ஆசை பட்டுண்டு பலவந்தமாப் பண்ணி வச்சயள்.”

“அடே, என்னைப் பார்த்துச் சொல்லு! கல்யாண விஷயமாய் ஒரு வார்த்தையாவது உங்கிட்ட நான் சொன்னேனாடா? அம்மாவாச்சு பிள்ளையாச்சு, எப்படியாவது செய்துக்குங்கோன்னு நான் தான் பேசாமலிருந்துட்டேனே?”

“அம்மாதான் இருக்காளே, அம்மா! என்னைக் கெடுக்கறதுக்குன்னு பிறந்திருக்காளே!” என்றான் ஸ்ரீதரன்.

ஏற்கனவே, தங்கம்மாளுக்குத் தீபாவளிக்குப் போக முடியவில்லையேயென்று துக்கம் அடைத்துக் கொண்டு வந்தது. இப்போது, பிள்ளையாண்டான் மனம் வெறுத்துப் பேசினதைக் கேட்டதும், அவள் விசித்துக் கொண்டே, “அப்படி ஏண்டா சொல்றே, குழந்தை! உனக்கு என்னடா இப்போ வந்துடுத்து? நாளைக்கே நினைச்சா இன்னொரு கல்யாணம் என் குழந்தைக்கு நான் பண்ணிவைக்க மாட்டேனா? எத்தனையோ பேர் ‘நான் நீ’ என்று பெண் கொடுக்கக் காத்துண்டிருப்பாளே?” என்றாள்.

அதற்கு, ஸ்ரீதரன், “என்ன? இன்னொரு கல்யாணமா? சபாஷ்! ஒரு தடவை மரப்பாச்சியைக் கல்யாணம் பண்ணி வச்சாச்சு! இன்னொரு புதுச்சேரிப் பொம்மையையும் கல்யாணம் பண்ணி வச்சுட்டா, ரொம்ப பேஷாய்ப் போய்விடும். அது வேறே நினைச்சுண்டிருக்கயா, நீ” என்றான்.

ராஜாராமய்யர், “சரிதாண்டா, சரிதான். வேறே வேலை இருந்தாப் பாரு! ஊருக்குப் போகலை, லீவு வேண்டாம்னு துரைக்கு உடனே எழுதிப் போட்டுடு” என்று சொல்லிவிட்டு, தமது அறைக்குச் சென்றார்.

“அப்பாவுக்கு என்ன, சுலபமாய்ச் சொல்லிவிட்டுப் போயிடறார். என் சிநேகிதனை அழைச்சுண்டு வந்திருக்கேனே, அதுக்கு என்ன பண்ணறது? அவா வீட்டிலே போய் ஏன் போகலேன்னு ‘எக்ஸ்ப்ளெயின்’ பண்ணியாகணும்” என்றான் ஸ்ரீதரன்.

அதே சமயத்தில், அவனுடைய ‘சிநேகிதன்’ உள்ளே வரவே, தங்கம்மாள் அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு, “ஏண்டாப்பா? இவன் என்ன சாதிப் பையன்? முகத்தைப் பார்த்தால் களையாயிருக்கு. தமிழ் பேசத் தெரியுமா?” என்றாள்.

“அவனுக்குத் தமிழ் பேசத் தெரியாது. இங்கிலீஷும் பெங்காலியுந்தான் தெரியும். இந்த ஊர்க்காரன் தான். ஆத்திலேயெல்லாம் சொல்லிண்டு வந்துட்டான். இப்போ எப்படிம்மா அவனைத் திரும்பிப் போகச் சொல்றது?”

“போகச் சொல்வானேன்? தீபாவளிக்கு நம்ம ஆத்திலேயே வேணா இருந்திட்டுப் போகட்டுமே? உனக்கும் துணை வேணுமோல்லியோ?” என்றாள் தங்கம்மாள்.

“ரைட்டோ , அம்மா! ரொம்ப தாங்க்ஸ்!” என்று சொல்லிவிட்டு, அவனுடைய சிநேகிதனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேல் மாடிக்குப் போனான். அங்கே, ஸுஸிக்கு நல்ல வார்த்தைச் சொல்லிச் சமாதானப்படுத்துவதற்குள் அவன் ரொம்பவும் சிரமப்பட்டுப் போனான் என்று சொல்ல வேண்டுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *