Thyaga Bhoomi Kalki Part3 Pani
அத்தியாயம் 10
சாவித்திரியின் கனவு
சாவித்திரியை அழைத்துக்கொண்டு போகிறோமென்று சொன்ன திருநெல்வேலி ஜில்லாக்காரர்கள் உண்மையிலேயே ரொம்பவும் நல்ல மனுஷர்கள். புருஷன், மனைவி, குழந்தை, புருஷனுடைய தாயார் இவர்கள்தான். தாயார் விதவை. புருஷனுக்கு முப்பது வயதும், மனைவிக்கு இருபது வயதும் இருக்கும். குழந்தை மூன்று வயதுப் பையன். அவர்களில் யாரும் பார்ப்பதற்கு அவ்வளவு லட்சணமாயில்லை. கணபதி அவனுடைய பெயருக்கு ஏற்றது போலவே கட்டைக் குட்டையாயும், கொஞ்சம் இளந் தொந்தி விழுந்தும் காணப்பட்டான். கறுப்பு நிறந்தான். முகம், கன்னமும் கதுப்புமாய்ச் சப்பட்டையாயிருந்தது. ஜயம் அவனைவிடச் சிவப்பு; ஆனால் முகத்தில் அம்மை வடு. போதாதற்கு, மேல் வாய்ப்பல் இரண்டு முன்னால் நீண்டு வந்திருந்தது. இதை மறைப்பதற்காக ஜயம் அடிக்கடி உதட்டை இழுத்து மூடிக்கொண்டாள். அவள் நாலைந்து மாதமாக ‘ஸ்நானம் செய்ய’வில்லையென்றும் தோன்றிற்று. இந்தக் குடும்பத்தார் ஒருவரோடொருவர் கொண்டிருந்த அந்யோந்யம் சாவித்திரிக்கு அளவிலாத ஆச்சரியத்தை அளித்தது. என்ன அன்பு! என்ன அக்கறை!
ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை, “ஜயம்! ஏதாவது வேணுமா?” என்று கணபதி கேட்டுக் கொண்டிருந்தான். “ஏண்டாப்பா! பிள்ளைத்தாச்சிப் பொண் பட்டினியாயிருக்காளே! ஏதாவது வாங்கிண்டு வந்து கொடேண்டா!” என்று தாயார் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். “நான் தான் வெறுமனே சாப்பிட்டுண்டே இருக்கேனே! அம்மாதான் பச்சை ஜலம் வாயிலே விடாமே இருக்கார். அவருக்கு ஏதாவது பழம், கிழம் வாங்கிக் கொடுங்கோ!” என்பாள் ஜயம்.
ஜயம் எதற்காவது எழுந்து நின்றால், சொல்லி வைத்தாற்போல், கணபதி, அவனுடைய தாயார் இரண்டு பேரும் எழுந்திருந்து, “என்ன வேணும், ஜயம்?” என்று கேட்பார்கள். கொஞ்ச நேரம் அவள் உட்கார்ந்திருந்தபடியே வந்தால், “இந்தாடி அம்மா! ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாக் காலைக் கொரக்களி வாங்கும். சித்தே காலை நீட்டிண்டு படுத்துக்கோ!” என்பாள் மாமியார். அஸ்தமித்தால் போதும்; ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்திவிடச் சொல்வாள். வண்டியிலுள்ள மற்றவர்கள் ஆட்சேபித்தால், “கொஞ்சம் கோவிச்சுக்காதீங்கோ. பிள்ளைத்தாச்சிப் பொண்ணு. பனி உடம்புக்காகாது” என்பாள்.
அவர்கள் ஒருவரோடொருவர் அந்யோந்யமாயிருந்ததல்லாமல், சாவித்திரியையும் மிகப் பரிவுடன் கவனித்துக் கொண்டார்கள். சில சமயம் அந்த அம்மாள், சாவித்திரியின் கஷ்டங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விடுவாள். “ராஜாத்தி மாதிரி இருக்கா. இவளை ஆத்திலே வச்சுட்டு அந்த மூடம் எங்கெல்லாமோ சுத்தி அலையறானே?” என்றும், “நல்ல மாமியார் வாச்சாடி அம்மா, உனக்கு! இப்படி எட்டு மாதத்துக் கர்ப்பிணியைத் தனியா அனுப்பறதுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?” என்றும் சொல்வாள். கணபதி, “பேசாமலிரு, அம்மா!” என்று அடக்குவான். “நீ சும்மா இருடா! என்னமோ, அந்த துஷ்டைகளுக்குப் பரிஞ்சு பேசறதுக்கு வந்துட்டே? உனக்கென்ன தெரியும், ஊர் சமாசாரம்? இந்தச் சாதுப் பெண்ணை அந்த ராட்சஸி படுத்தி வச்சது. ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிச்சுது! பாவம்! இவளுக்குப் பொறந்தகமும் வகையில்லைபோல் இருக்கு. அவாதான் வந்து தலைச்சம் பிள்ளைத்தாசியைப் பாத்துட்டு அழைச்சுண்டு போகவேண்டாமோ?” என்பாள்.
மாமியார் இப்படி ஏதாவது பேசும்போதெல்லாம், மாட்டுப் பெண்ணின் முகத்தில் பெருமை கூத்தாடும். அவளுக்குப் புக்ககத்தைப் போலவே பிறந்த வீடும் நன்றாய் வாய்த்திருந்தது என்று சம்பாஷணையில் சாவித்திரி தெரிந்து கொண்டாள். ஜயத்தின் தகப்பனாருக்கு இரண்டு மாதமாய் உடம்பு சரியில்லை என்று தகவல் வந்ததாம். “ஒரு வேளை நான் பிழைக்கிறேனோ, இல்லையோ, என் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு தடவை பார்த்துவிட்டால் தேவலை” என்று அவர் சொன்னாராம். அதன் பேரில்தான் இப்போது இவர்கள் திருநெல்வேலிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். இந்தக் குடும்பத்தையும், இவர்கள் ஒருவரிடம் ஒருவர் காட்டும் அன்பையும் பார்க்கப் பார்க்கச் சாவித்திரிக்கு ஆச்சரியம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ‘உலகத்தில் இப்படியும் மனுஷ்யாள் இருக்கிறார்களா? இந்த மாதிரி இடமாகப் பார்த்து நம்மையும் அப்பா கொடுத்திருக்கக் கூடாதா? இவ்வளவு மோசமான இடத்தில் கொண்டு போய்த் தள்ளினாரே?’ என்று ஒரு நிமிஷம் நினைப்பாள். ‘அப்பா பேரில் என்ன தப்பு? அவர் எவ்வளவோ பணத்தைக் காசைச் செலவழித்து, நாம் ஒசத்தியாயிருக்க வேண்டுமென்று ஒசந்த இடமாய்ப் பார்த்துத்தான் கொடுத்தார். நம் தலையெழுத்து இப்படியிருந்தால், அதற்கு அப்பா என்ன பண்ணுவா?’ என்று எண்ணுவாள் அப்புறம், கணபதியின் சப்பட்டை மூஞ்சியையும் அசட்டுச் சிரிப்பையும் அவன் பெண்டாட்டிக்குச் செய்யும் உபசாரங்களையும் பார்க்கும்போது, ‘நல்ல வேளை! அப்பா நம்மை இந்த மாதிரி ஆம்படையானைப் பார்த்துக் கொடுக்காமலிருந்தாரே?’ என்று தோன்றும். ஸ்ரீதரனின் களையான முகத்தையும், நாகரிகமான தோற்றத்தையும் அவள் நினைத்துப் பார்த்துப் பெருமை கொள்வாள். ஆனால், அடுத்த நிமிஷமே, அவனும் ஸுஸியுமாய் எடுத்துக் கொண்ட போட்டோ படம் மனக்கண் முன்னால் வந்து நிற்கும். அவளுடைய பெருமை சிதறிப் போகும். ‘அசடாயிருந்தாலென்ன? அவலட்சணமாயிருந்தாலென்ன? ஜயம் அதிர்ஷ்டசாலி, அவளுக்கு அகமுடையானின் அன்பு இருக்கிறது. நாம் தான் கொடுத்து வைக்காத பாவி’ என்று நினைத்துக் கண்ணில் துளித்த கண்ணீரை மற்றவர்கள் பார்க்காதபடி துடைத்துக் கொள்வாள்.
ஜயத்தின் தகப்பனாருக்கு உடம்பு சரியில்லையென்ற விஷயத்தைக் கேட்டதும் சாவித்திரிக்கு, ‘ஒரு வேளை நம் அப்பாவுக்கும் உடம்பு ஏதாவது அசௌகரியமாயிருக்குமோ? அதனால்தான் கடிதம் போடவில்லையோ?’ என்று தோன்றியது, ‘ஐயோ! அவர் சுரம் கிரமென்று படுத்துக் கொண்டால் சித்தியும் பாட்டியும் அவரைச் சரியாய்க் கவனித்துக் கொள்வார்களா? அந்த மாதிரி சமயங்களில் நாம் பக்கத்தில் இருந்தால் அவருக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும்? ஐயோ! நாம் பெண் பிறந்து அப்பாவுக்குக் கஷ்டத்தைத் தவிர வேறென்ன? இந்த வயதில் ஒரு பிள்ளையிருந்தால் அவருக்கு எவ்வளவு ஒத்தாசையாயிருக்கும்? பாழும் பெண் ஜன்மம் ஏன் எடுத்தோம்? பிள்ளையாகப் பிறந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம் எண்ணிப் பெருமூச்சு விடுவாள்.
இப்படியெல்லாம் நினைக்க நினைக்க தகப்பனாரையும், நெடுங்கரையையும் பார்க்க வேண்டுமென்ற அவளுடைய ஆவல் பத்து மடங்கு, நூறு மடங்காகப் பெருகிக் கொண்டிருந்தது. மணிக்கு முப்பது மைல் வேகத்தில் ரயில் போய்க் கொண்டிருந்தபோதிலும், அதிலிருந்த ஒவ்வொரு நிமிஷமும் சாவித்திரிக்கு ஒரு யுகமாகத் தோன்றிற்று.
கணபதியின் குடும்பத்தார் சென்னைப்பட்டணத்தில் இறங்கி இரண்டு நாள் சிரம பரிகாரம் செய்து கொண்டு பிறகு திருநெல்வேலிக்குக் கிளம்ப உத்தேசித்திருந்தார்கள். ஒரே பிரயாணமாகப் போனால் பிள்ளைத்தாச்சிப் பெண்ணுக்கு உடம்புக்கு ஆகாதென்று கணபதியின் தாயார் சொல்லிவிட்டாள். ஆகவே, சென்னையில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கிவிட்டுப் போகத் தீர்மானித்தார்கள். சாவித்திரியையும் தங்களுடன் இருந்துவிட்டுப் போகும்படி சொன்னார்கள். அவள் அதற்கு இணங்கவில்லை.
இந்த நல்ல மனுஷர்கள் காட்டிய அபிமானத்தினாலும் அநுதாபத்தினாலுமே அவர்களைச் சாவித்திரிக்குப் பிடிக்காமல் போயிருந்தது. அவளுடைய துரதிர்ஷ்டத்தைப் பற்றிக் கணபதியின் தாயார் அடிக்கடி பேசியதும், அதைக் கணபதியும் ஜயமும் தடுக்க முயற்சித்ததும் சாவித்திரிக்குப் பரம சங்கடத்தை அளித்தன. இவர்களே தனக்கு முன்பின் தெரியாதவர்கள். இனிமேல் இவர்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக்கும் போய் அவர்களுடைய பரிதாபத்துக்கும் ஆளாக வேண்டுமா? – மேலும் நெடுங்கரைக்குப் போய்ச் சேரும் ஆவலும் சாவித்திரிக்கு அளவில்லாமல் இருந்தது. ஆகையால் தன்னைப் பெண்பிள்ளைகள் வண்டியில் ஏற்றிவிட்டு விட்டால், போய்விடுவதாக அவர்களிடம் சொன்னாள். தங்களுடன் தங்கிப் போகலாமென்று அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமற் போகவே, அப்படியே அவளை ரயில் ஏற்றி விட்டார்கள். ஸ்திரீகள் வண்டியில் அன்று அதிகம் பேரில்லை. மொத்தம் ஐந்தாறு பேர் தான் இருந்தார்கள். ஆகையால் இடம் தாராளமாயிருந்தது. சாவித்திரி தனியாக ஒரு மூலையில் போய்ப் பெட்டியை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அவளுக்கு எதிர்ப் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ சற்று நேரத்துக்கெல்லாம் சாவித்திரியிடம் பேச்சுக் கொடுத்தாள். அவள் யார், எந்த ஊர், எங்கிருந்து எங்கே போகிறாள், ஏன் தனியாகப் போகிறாள் என்றெல்லாம் விசாரித்தாள். சாவித்திரி சுருக்கமாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்தாள். “ஐயோ பாவம்! பிள்ளைத்தாச்சிப் பெண்ணைத் தனியா அனுப்பிச்சுட்டாங்களே!” என்று அந்த ஸ்திரீ ரொம்பவும் பரிதாபப்பட்டாள். பிறகு, “கல்கத்தாவிலிருந்து கண்ணை முழிச்சுண்டு வந்திருக்கே! பொட்டியை எடுத்துக் கீழே வச்சுட்டுப் படுத்துக்கோ, அம்மா!” என்றாள்.
சாவித்திரிக்கும் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. பெட்டியைத் திறந்து ஒரு புடவையை எடுத்துத் தலைமாட்டில் வைத்துக்கொண்டு படுத்தாள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் தூங்கிவிட்டாள்.
சாவித்திரி கனவு கண்டாள். அவளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை, மனுஷ்யக் குழந்தை மாதிரியே இல்லை. தெய்வலோகத்துக் குழந்தை மாதிரி இருக்கிறது. அதன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் பசி, தாகம் ஒன்றும் தெரியாது. அது சிரிக்கிற அழகைத் தான் என்னவென்று சொல்வது! – சாவித்திரி குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். அவளைச் சுற்றிலும் எல்லாரும் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். அப்பா, சித்தி, பாட்டி, மாமனார், மாமியார் எல்லாருந்தான். மாமியாருக்குப் பின்னால் இவரும் சங்கோசப்பட்டுக் கொண்டு நிற்கிறார். எல்லாரும் குழந்தையை எடுத்துக் கொள்ள ஆவலாயிருக்கிறார்கள். “சித்தெக் கொடுடி குழந்தையை! பாத்துட்டுக் கொடுத்துடறேன்” என்று தங்கம்மாள் கெஞ்சுகிறாள். “நான் உன் குழந்தையை ஒண்ணும் பண்ணிட மாட்டேண்டீ; தேஞ்சு போயிடாதேடி, கொடுடி” என்கிறாள் மங்களம்.
அவர்களைப் பார்த்துச் சாவித்திரி, “நீங்கள்ளாம் என் குழந்தையைப் பார்க்க வேண்டாம். என்னை என்ன பாடு படுத்தி வச்சயள்? இப்ப மாத்திரம் குழந்தையை எடுத்துக்கிறதற்கு வந்துட்டேளாக்கும்? எங்க அப்பாகிட்ட மாத்திரந்தான் கொடுப்பேன், வேறொத்தரும் என் குழந்தையைப் பார்க்க வேண்டாம். போங்கோ!” என்கிறாள்.
சட்டென்று சாவித்திரி கண்ணை விழித்துக் கொண்டாள். “மாயவரம்! மாயவரம்!” என்று போர்ட்டர் கூவுவது கேட்டது. “மாயவரம் வந்துட்டதா? இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புதுச்சத்திரம் வந்துடுமே?” என்று எண்ணிச் சாவித்திரி எழுந்து உட்கார்ந்து, தலைமாட்டில் வைத்திருந்த புடவையை எடுத்துப் பெட்டிக்குள் வைக்கப் போனாள். பெட்டியைக் காணவில்லை!
எதிரிலிருந்த ஸ்திரீயையும் காணவில்லை. அந்தண்டைப் பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்து, “ஏனம்மா! இங்கேயிருந்த என் பெட்டியைக் காணோமே? யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டாள். அவர்களில் ஒருத்தி, “ஐயையோ! உன் பெட்டியா அது? உன் எதிரிலே உட்கார்ந்திருந்தாளே அந்த அம்மா அதை எடுத்துண்டு சிதம்பரத்திலேயே இறங்கி விட்டாளே!” என்றாள்.