Thyaga Bhoomi Kalki Part3 Pani
அத்தியாயம் 14
சாவித்திரியின் சங்கல்பம்
ஆஸ்பத்திரியில் சாவித்திரிக்கு நன்றாய்ச் சுயஞாபகம் வந்ததிலிருந்து, அவள் தான் ஏற்கெனவே பட்ட கஷ்டங்களைப்பற்றி எண்ணியதோடு வருங்காலத்தைப் பற்றியும் எண்ணத் தொடங்கினாள். இந்தத் துர்ப்பாக்கியவதியின் தலையில் பகவான் ஒரு குழந்தையை வேறே கட்டி விட்டார். இனிமேல் என்ன செய்வது? எங்கே போவது?
கல்கத்தாவுக்குப் போவது என்ற நினைப்பே அவளுக்கு விஷமாக இருந்தது! குழந்தைப் பிராயத்தில் அவளை ஒரு சமயம் ஒரு தேனீ கொட்டிவிட்டது. அப்போது அது ரொம்பவும் வலித்தது. இன்று சாவித்திரி கல்கத்தாவில் தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நினைத்துக்கொண்டால், ஏக காலத்தில் ஆயிரம் தேனீக்கள் தன் தேக முழுவதும் கொட்டிவிட்டது போல் அவளுக்கு அத்தனை வேதனை உண்டாயிற்று. போதும், ஏழேழு ஜன்மத்துக்கும் போதும். மறுபடியும் கல்கத்தாவுக்குப் போய் அவர்களுடைய முகத்தில் விழிப்பது என்பது இயலாத காரியம். முடியவே முடியாது!
நெடுங்கரையிலோ வீடு பூட்டிக் கிடக்கிறது. திறந்திருந்தால் தான் என்ன? அங்கே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? அப்பா சம்மதித்தாலும் சித்தியும் பாட்டியும் தன்னை வைத்துக்கொண்டிருக்கச் சம்மதிப்பார்களா? ஒவ்வொரு நிமிஷமும் தன்னை ஏசிக் காட்ட மாட்டார்களா? “போ! போ!” என்று பிடுங்கி எடுத்துவிட மாட்டார்களா? அப்பாவையும் அவர்கள் வதைத்து விடுவார்களே? தன்னால் அப்பாவுக்கு இத்தனை நாளும் நேர்ந்த கஷ்டமெல்லாம் போதாதா?
அப்பாவுக்குக் கஷ்டம்! தன்னால்! – இதை நினைத்துச் சாவித்திரி தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள். தன்னால் அப்பாவுக்குக் கஷ்டம் என்ற எண்ணம் இந்த நிமிஷம் வரையில் அவள் மனத்தில் இருந்தது. இப்போது அது மாறிற்று. ‘என்ன? அப்பாவுக்கு என்னால் கஷ்டமா? அவரால் எனக்குக் கஷ்டம் இல்லையா?’ என்று எண்ணினாள். தான் அநுபவித்த இத்தனை துன்பங்களுக்கும் யார் காரணம்? அப்பாதான் இல்லையா? ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடு என்று நான் அழுதேனா? இந்த ஸ்ரீதரனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று இவரிடம் சொன்னேனா? இவரை யார் என்னை இப்படிப்பட்ட புருஷனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கச் சொன்னது? அறியாத பிராயத்தில் என்னை இப்படிப்பட்ட கதிக்கு ஆளாக்கினாரே? கல்யாணம் செய்ததற்குப் பதில் என்னைப் படிக்க வைத்து இதோ இந்த ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸுகளைப்போல் என்னையும் ஒரு நர்ஸாகச் செய்திருக்கப்படாதா?…”
ஆம்; சாவித்திரிக்கு உணர்வு தெளிந்ததிலிருந்து அவள் இந்த நினைவாகவே இருந்தாள். ஆகா! இந்த நர்ஸுகள் எவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள்? எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்? சுயமாகச் சம்பாதித்து ஜீவனம் செய்வதைப் போல் உண்டா? இவர்களுக்குக் கவலை ஏது? பிறருடைய கையை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லையல்லவா? ஒருவரிடம் பேச்சுக் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை யல்லவா? பெண் ஜன்மம் எடுத்தவர்களில் இவர்கள் அல்லவா பாக்கியசாலிகள்?
இப்படிச் சதாகாலமும் சிந்தனை செய்துகொண்டிருந்தாள் சாவித்திரி. சிந்தனை செய்யச் செய்ய அவர்களைப் போல் தானும் சுதந்திர வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஆசை அவள் மனத்தில் அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருந்தது. இனிமேல், தான் பிறந்த வீட்டிலேயோ, புகுந்த வீட்டிலேயோ போய் வயிறு வளர்ப்பதில்லையென்னும் திடசங்கல்பம் அவளுடைய மனத்தில் ஏற்பட்டது. உயிர் வாழ்ந்தால், இந்த நர்ஸுகளைப் போல் சுய ஜீவனம் செய்து சுதந்திரமாக வாழவேண்டும்; இல்லாவிடில் எந்த வகையிலாவது உயிரை விட்டுவிடவேண்டும். பிறர் கையை எதிர்பார்த்து, பிறருக்கு அடிமையாகி வாழும் வாழ்க்கை இனிமேல் வேண்டாம். சாவித்திரி இவ்வாறு சங்கல்பம் செய்து கொள்ளும் சமயத்தில் தொட்டிலில் கிடக்கும் குழந்தை விரலை ருசி பார்த்துச் சப்புக்கொட்டும் சத்தம் கேட்கும். ‘ஐயோ! இந்தச் சனியன் ஒன்றை ஸ்வாமி நம் தலையில் கட்டி விட்டாரே? நாம் செத்துப் போவதாயிருந்தால் இதை என்ன செய்வது?’ என்ற ஏக்கம் உண்டாகும்.
சாவித்திரிக்குக் குழந்தை பிறந்து இருபது நாளாயிற்று. அன்று நர்ஸ் சம்பங்கி சாவித்திரியிடம் வந்து, “சாவித்திரியம்மா! உங்களுக்கு உடம்பு கம்ப்ளீட்டா சொஸ்தமாயிடுத்து. நாளைக்கு உங்களை ஹாஸ்பிடல்லேயிருந்து அனுப்பி விடணுமென்று மேட்ரன் சொல்லிவிட்டாங்க. கிளம்பறத்துக்கு ரெடியாயிருங்க; யாருக்காவது சொல்லியனுப்ப வேணும்னா, சொல்லியனுப்பிச்சுடுங்க” என்றாள்.
சாவித்திரிக்கு இடி விழுந்ததுபோல் இருந்தது. ‘ஐயோ! ஆஸ்பத்திரியை விட்டுப் போக வேண்டுமா?’ தாயின் அன்பு என்பதைத் தன் வாழ்நாளில் அநுபவித்தறியாதவள் சாவித்திரி. ஆனால் மற்றப் பெண்களிடம் அவர்களுடைய தாய்மார்கள் காட்டும் அன்பையும் ஆதரவையும் பார்த்திருக்கிறாள். அத்தகைய அன்பையும் ஆதரவையும் இந்த ஆஸ்பத்திரியில் தான் சாவித்திரி முதன் முதலில் கண்டாள். அப்படிப்பட்ட இடத்தை விட்டா நாளைக்குப் போக வேண்டும்? எங்கே போவது?
மறுபடியும் அந்தப் பக்கம் நர்ஸ் வந்த போது, “நர்ஸு அம்மா! இங்கே கொஞ்சம் உட்காருங்கள். ஒரு விஷயம் கேட்கிறேன். சொல்லுங்கள்” என்றாள்.
நர்ஸ் உட்கார்ந்ததும், “இந்த ஆஸ்பத்திரியிலேயே நானும் உங்களையெல்லாம்போல் நர்ஸா இருக்கேன்னு சொன்னா, மேட்ரன் என்னை எடுத்துக்குவாங்களா?” என்று கேட்டாள்.
வேறு நர்ஸாயிருந்தால் சிரித்திருப்பாள். ஆனால், சம்பங்கிக்குச் சாவித்திரியிடம் அநுதாபம் உண்டாகியிருந்தபடியால், அவள் சிரிக்கவில்லை; பரிதாபப்பட்டாள்.
“அம்மா, நர்ஸ் ஆகிறது அவ்வளவு சுலபமில்லை. முதலில், இங்கிலீஷ் பத்தாவது வகுப்பு வரையில் படித்திருக்க வேண்டும். அப்புறம் மூணு வருஷம் டிரெயினிங் ஆக வேண்டும். மேலும், உனக்குக் கைக்குழந்தை வேறு இருக்கு; சான்ஸே கிடையாது. இந்த ஆசையை விட்டுடு, அம்மா!” என்றாள்.
சாவித்திரி இம்மாதிரி பதிலை ஒருவாறு எதிர்பார்த்தாள். ஆகையால் ரொம்ப ஏமாற்றம் அடையவில்லை.
“அது சரி, ஸிஸ்டர்! நீங்க முன்னயே இரண்டொரு தடவை என்னுடைய பந்துக்கள் அட்ரஸ் கேட்டயள். நான் திக்கற்றவள் என்று சொன்னேன். என்னைப் போன்றவள் வேலை செய்து ஜீவனம் செய்யவேணுமென்றால், அதற்கு ஒரு வழியும் இல்லையா? நீங்கள் ஏதாவது எனக்கு ஒத்தாசை செய்யப்படாதா?” என்றாள்.
“நான் என்ன பண்ணுவேன், சாவித்திரியம்மா! நீ முன்னே சொன்னதிலிருந்து நான் ஐந்தாறு பெரிய மனுஷா வீட்டிலே விசாரிச்சேன், உன்னை ஏதாவது வேலைக்கு வச்சுக்கறாங்களான்னு. கைக் குழந்தைக்காரின்னா வேண்டாங்கறாங்க எல்லாரும். நான் சொல்றதைக் கேளு, அம்மா! இந்த ஆசையெல்லாம் உனக்கு வேண்டாம். கல்யாணம்னு பண்ணிண்டுட்டா, புருஷன் எப்படி இருந்தாலும், அவனைக் கட்டிண்டுதான் மாரடிச்சாகணும். நீ ஒருத்திதான் இப்படிக் கஷ்டப்படுறதாக எண்ணிக்காதே! நம் தேசத்திலே உன் மாதிரி எத்தனையோ பேர். யாருக்காவது கடுதாசி எழுதணும். இல்லாப் போனா தந்தியடிக்கணும்னா சொல்லு, அடிக்கிறேன்” என்றாள்.
சாவித்திரி தன்னைப்பற்றி ஒரு விவரமும் சொல்லாவிட்டாலும், அவள் புருஷனுடன் ஏதோ சண்டை போட்டுக் கொண்டு ஓடி வந்திருக்க வேண்டும் என்று சம்பங்கி ஊகம் செய்திருந்தாள். அதனால்தான் மேற்கண்டவாறு சொன்னாள்.
சாவித்திரி இதற்குப் பதில் சொல்லாமல், முகத்தைக் கைகளினால் மூடிக்கொண்டு விம்மத் தொடங்கவே, நர்ஸ் அங்கிருந்து போய்விட்டாள்.
அன்று சாயங்காலம் நர்ஸ் சம்பங்கி, கையில் ஒரு பிரித்த பத்திரிகையுடன் சாவித்திரியிடம் விரைவாக வந்தாள். “சாவித்திரி அம்மா! உனக்கு வேலை வேணுமென்று சொன்னாயே? இதோ ஒரு விளம்பரம் இருக்கிறது, கேள்” என்று சொல்லி வாசிக்கத் தொடங்கினாள்:
“தேவை : பம்பாயிலுள்ள ஓர் உயர் குடும்பத்து எஜமானிக்குத் தோழியாக இருக்க ஒரு தமிழ் நாட்டுப் பெண் தேவை. தக்க சம்பளம் கொடுக்கப்படும்…”
இவ்வளவு வாசித்த நர்ஸ், இங்கே சட்டென்று நிறுத்தி, “ஐயையோ! இதிலேயும், குழந்தை உள்ளவர்கள் விண்ணப்பம் போட வேண்டாமென்று எழுதியிருக்கே!” என்றாள். பிறகு, சாவித்திரியைப் பார்த்து, “உன் அதிர்ஷ்டம் அவ்வளவுதானம்மா! வேண்டாத புருஷனைக் கட்டிண்டு மாரடிக்கணும்னுதான் உன் தலையிலே எழுதியிருக்கு” என்று சொல்லிவிட்டு, அந்தப் பத்திரிகையை அங்கேயே போட்டுவிட்டுப் போனாள்.
ஆனால், அதே சமயத்தில் சாவித்திரி பல்லைக் கடித்துக் கொண்டு, ‘என்ன கதி நேர்ந்தாலும் வேண்டாத புருஷனுடன் நான் மாரடிக்கப் போவதில்லை’ என்று மறுபடியும் சங்கல்பம் செய்து கொண்டாள். சம்பங்கி எறிந்துவிட்டுப் போன பத்திரிகையை எடுத்து அந்த விளம்பரத்தைப் பார்த்தாள். அதைத் திரும்பித் திருப்பி நூறு தடவை படித்தாள். ‘குழந்தை உள்ளவர்கள் விண்ணப்பம் போட வேண்டியதில்லை’ என்ற வாக்கியம் அவளுடைய நெஞ்சில் பழுக்கக் காய்ந்த இரும்புக் கரண்டியினால் எழுதியது போல் பதிந்து புண்ணாக்கிற்று.
மறுநாள் சாவித்திரியை ஆஸ்பத்திரியை விட்டு அனுப்பி விட்டார்கள். இரண்டாவது தடவையும் சாவித்திரி சென்னையின் வீதிகளில் அநாதையாய் அலையும்படி ஆயிற்று. ஆனால் இந்தத் தடவை அவள் தனியாக அலையவில்லை; கையில் குழந்தையுடன் அலைந்தாள். மேலும் இம்முறை சம்பு சாஸ்திரியைத் தேடி அலையவில்லை; ஜீவனத்துக்கு வேலை தேடி அலைந்தாள். அவளுடைய அலைச்சல் இந்த முறை வெகு சீக்கிரமாகவும் முடிவடைந்து விட்டது.
முதலில் பெரிய மனுஷர்கள் வீடுகளைத் தேடிப் போனாள். ஒரு வீட்டில் எஜமானியம்மாள், “கையிலே குழந்தையை வைச்சுண்டு, வேலைக்கு வர்றயே? வேலையைப் பார்ப்பயா, குழந்தையைப் பார்ப்பயா? போ! போ” என்றாள். இன்னும் சில வீடுகளில், அவளுடைய நடத்தையைப் பற்றிச் சந்தேகித்துக் கேள்வி கேட்டார்கள். “நீ கைம் பெண்ணா, வாழுகிறவளா?” என்று வேறு சிலர் கேட்டார்கள். ஹோட்டல்களில் வேலை செய்து பிழைக்கலாம் என்று சாவித்திரி முன் எப்போதோ கேள்விப்பட்டிருந்தாள். ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து, அந்த ஹோட்டல்காரனை, “வேலை கிடைக்குமா?” என்று கேட்டாள். அவன் சாவித்திரியைத் தனியாக அழைத்துச் சென்று, “இந்தக் குழந்தையை எங்கேயாவது தொலைச்சுட்டு வந்துடு. உன்னை நான் ஜில்லுனு வச்சுக்கறேன்” என்றான். சாவித்திரிக்கு, ‘நாம் இன்னது செய்கிறோம்’ என்றே தெரியவில்லை. அந்த ஹோட்டல்காரனுடைய கன்னத்தில் பளீரென்று ஓர் அறை அறைந்தாள். உடனே அவளைப் பயம் பற்றிக் கொண்டது. ஹோட்டலிலிருந்து வெளிக் கிளம்பி ஓடினாள்.
கையில் குழந்தையுடன் ஒரு ஸ்திரீ நடுரோட்டில் ஓடுவது விசித்திரமல்லவா? சாலையோடு போனவர்கள் அவளை வெறிக்கப் பார்த்தார்கள். அவர்களுடைய முகங்கள் மனிதர்கள் முகங்களாகவே சாவித்திரிக்குத் தோன்றவில்லை. ராட்சதர்கள், பேய்கள், பிசாசுகளின் முகங்களாகத் தோன்றின. ஆகவே இன்னும் விரைவாக ஓடினாள்.
மனத்தில் பொங்கிக் கொண்டிருந்த கோபமும் பயமும் வெறியும் அவளுடைய தேகத்திற்குப் பலத்தைக் கொடுத்து ஓடச் செய்தன. ஆனால், குழந்தை எப்படித் தாங்கும்? அது சிணுங்கி அழத் தொடங்கியது. சாவித்திரி நின்று, குழந்தையின் முகத்தைப் பார்த்து, “என் கண்ணே! வேண்டாம்” என்றாள். ‘இந்தப் பாவி இன்னும் எத்தனை நேரம் உயிரோடிருக்கப் போகிறேனோ, என்னமோ? அதற்குள் உன்னைக் கஷ்டப்படுத்துவானேன்?’ என்று எண்ணினாள்.
அப்போது கொஞ்ச தூரத்தில் யாரோ, “மண்ணாலானா இந்தக் காயம்-” என்று பாடிக்கொண்டு போனது காதில் விழுந்தது.
சாவித்திரி கையிலிருந்த குழந்தையைப் பார்த்து, “கண்ணே! நீயும் மண்; நானும் மண். இரண்டு பேரும் தண்ணீரில் இறங்கிக் கரைந்து போய்விடுவோம்!” என்று சொல்லிச் சிரித்தாள். குழந்தைப் பிராயத்தில் தான் கொல்லைக் கிணற்றில் விழுந்த செய்தி ஞாபகத்தில் வந்தது. ‘ஐயோ! அப்பா! உங்கள் பெண் இந்த மாதிரியெல்லாம் திண்டாட வேண்டுமென்பதற்காகவா கிணற்றில் விழுந்தவளை எடுத்துக் காப்பாற்றினீர்கள்? அப்போதே நான் செத்துப்போய் எங்கம்மா போன இடத்துக்குப் போயிருக்கக் கூடாதா?’
குழந்தை அப்போது தன் பட்டுப்போன்ற மிருதுவான விரல்களால் தாயின் மார்பைத் தொட்டது. சாவித்திரி குனிந்து குழந்தையை முத்தமிட்டாள். “என் கண்ணே! உன்னை நான் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று பயப்படுகிறாயா? என் அம்மாவும் அப்பாவும் என்னைப் பிறந்த பின் கைவிட்டார்கள்; உன் அப்பா உன்னை, பிறப்பதற்கு முன்பே கைவிட்டார். ஆனால் நான் உன்னைக் கைவிடமாட்டேன். இந்த உலகத்தில் நீ வளர்ந்து பெரியவளானால் என்னைப் போலவேதானே கஷ்டப்படுவாய்? அப்போது என்னைத்தானே நோவாய்? வேண்டாம். இந்த உலக வாழ்க்கை உனக்கு வேண்டாம். வா, இரண்டு பேருமாய்ப் போகலாம்” என்றாள். பிறகு, நிர்மானுஷயமான ஜலப் பிரதேசத்தைத் தேடி நிதானமாக நடந்து சென்றாள்.
சாவித்திரி! நீயும் உன் குழந்தையும் நீண்ட காலம் வாழ்ந்து உலகின் சுகதுக்கங்களை அநுபவிக்க வேண்டுமென்று பிரம்மதேவன் உங்கள் தலையில் எழுதியிருக்கிறானே? நீ அதை மீற நினைப்பதில் என்ன பிரயோஜனம்?