BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part3 Pani

அத்தியாயம் 6
கிரகப் பிரவேசம்

ராஜாராமய்யர் மிகவும் கோபமாயிருந்தார். இது என்ன உலகம், இது என்ன வாழ்க்கையென்று அவருக்கு ரொம்பவும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அவருடைய மனோவசிய சக்தியானது ஸ்ரீதரன் விஷயத்தில் சிறிதும் பயன்படாமற் போனதுதான் அவருடைய கோபத்திற்குக் காரணம்.

மாட்டுப் பொண்ணை அழைத்து வருகிறேன் என்று தங்கம்மாள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதிலிருந்து ராஜாராமய்யருக்கு ஸ்ரீதரனைப் பற்றிய கவலை அதிகமாயிற்று. ‘அவள் பாட்டுக்கு அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து நிற்கப் போகிறாள்! இவனானால் இந்தச் சட்டைக்காரியை இழுத்துக்கொண்டு அலைகிறானே!’ என்பதாக அவருடைய மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்தது. மாட்டுப் பெண் வருவதற்குள் இவனைச் சீர்திருத்தி விடவேண்டும் என்று தீர்மானித்தார்.

ஆகவே, ஒரு நாள் ஸ்ரீதரனை அழைத்துத் தம் எதிரில் நிறுத்திக் கொண்டு, தம்முடைய காந்தக் கண்களின் சக்தியை அவன் பேரில் பிரயோகிக்கத் தொடங்கினார். அவனை விழித்துப் பார்த்த வண்ணம், “ஸ்ரீதரா! உனக்கு இப்போது நல்ல புத்தி வந்து கொண்டிருக்கிறது!…” என்று அவர் ஆரம்பித்ததும், ஸ்ரீதரன் குறுக்கே பேச ஆரம்பித்தான்.

“ஆமாம் அப்பா! எனக்கு புத்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், உங்களுக்குத்தான் புத்தி கெட்டுப் போய் கொண்டிருக்கிறது. நீங்கள் முழிக்கிறதைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. நான் சொல்றதைக் கேளுங்கள். ஸ்பிரிட் மீடியம், மெஸ்மெரிஸம், ஹிப்னாடிஸம் இந்த கண்றாவியையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த மாதிரி மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் எங்கே போய்ச் சேர்கிறார்கள் தெரியுமா? லூனடிக் அஸைலத்தில்தான். இந்த ஊர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் முக்கால்வாசிப்பேர் ஹிப்னாடிஸம், அப்பியாசம் செய்தவர்கள் தானாம். ஜாக்ரதை!” என்று ஒரு பிரசங்கம் செய்துவிட்டு, ராஜாராமய்யர் பிரமித்து போய் நின்று கொண்டிருக்கையிலேயே வெளியேறினான்.

அதற்குப் பிறகு ராஜாராமய்யர் இரண்டு, மூன்று தடவை ஸ்ரீதரனுக்குத் தர்மோபதேசம் செய்யலாமென்று முயன்றார். ஒன்றும் பயன்படவில்லை. அவன் நின்று காது கொடுத்துக் கேட்டால்தானே?

இதனாலெல்லாம் ராஜாராமய்யரின் மனது ரொம்பவும் குழம்பிப் போய் இருந்தது. அவருக்குக் கோபம் கோபமாய் வந்தது. அந்தக் கோபத்தை யார் மேல் காட்டுவது என்றும் தெரியவில்லை. கடைசியில் ஹிந்து சமூகத்தின் மேல் காட்டத் தீர்மானித்தார். ஹிந்து சமூகத்திலுள்ள பால்ய விவாகம், வரதக்ஷணை முதலிய வழக்கங்களைப் பலமாகக் கண்டித்துப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுத வேண்டுமென்று முடிவு செய்தார்.

ராஜாராமய்யர் இத்தகைய மனோ நிலையில் இருந்த போதுதான் ஒரு நாள் திடீரென்று தங்கம்மாள் சாவித்திரியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். அவர்களைப் பார்த்ததும் ராஜாராமய்யர், “என்ன தங்கம் வருகிறதைப் பத்தித் தகவலே கொடுக்கலையே! ஒரு கடுதாசி போடக் கூடாதா?” என்றார்.

இதற்குள் சாவித்திரி மாமனாரின் அருகில் வந்து நமஸ்காரம் செய்தாள்.

அதைப் பார்த்த ராஜாராமய்யர், “வாடி அம்மா, வா! இந்த வீட்டுக்கு நீ ஒருத்தி தான் பாக்கியாயிருந்தது. வந்துட்டயோல்யோ? எங்களையெல்லாம் பைத்தியமா அடிச்சுட்டான்; உன்னை என்ன பண்ணப் போறானோ!” என்றார்.

தங்கம்மாள், “சரிதான்; வரத்துக்கு முன்னாலேயே அவளை காபரா பண்ணாதேங்கோ! அவர் கிடக்கார்; நீ மேலே மாடிக்குப் போடி, அம்மா!” என்றார்.

தன்னுடைய மாமனார் பெரிய தமாஷ்காரர் என்றும் எப்போதும் வேடிக்கையும் பரிகாசமுமாய்ப் பேசுவார் என்றும் சாவித்திரி கேள்விப்பட்டிருந்தாள். ராஜாராமய்யர் சொன்னதை அந்த மாதிரி பரிகாசம் என்று அவள் நினைத்தாள். வாய்க்குள் சிரித்துக் கொண்டே அவள் மாடிப்படி ஏறிச் சென்றாள். ரயில் பிரயாணத்தின் போது கல்கத்தா நெருங்க நெருங்க சாவித்திரியின் உற்சாகம் அதிகமாகிக் கொண்டிருந்தது. தகப்பனாரைப் பிரிந்த வருத்தத்தைக்கூட மறந்து விட்டாள். “ஆச்சு! நாளைக்கு இத்தனை நேரம் அவாளைப் பார்த்து விடுவோம்,” “இன்னும் ஒரு ராத்திரிதான் பாக்கி; பொழுது விடிந்தால் அவாளைப் பார்க்கலாம்” என்று இப்படி எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். மாமியாரிடம் “கல்கத்தா ஸ்டேஷனுக்கு எத்தனை மணிக்கு வண்டி போகும்?” “அங்கிருந்து வீடு எவ்வளவு தூரம்?” “எவ்வளவு நேரத்தில் போகலாம்?” “ஸ்டேஷனுக்கு யாராவது வந்திருப்பாளா?” என்று இம்மாதிரி அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீதரனை முதலில் பார்க்கும் போது என்ன செய்வது எவ்விதம் நடந்து கொள்வது என்று அவள் மனம் சதா யோசனை செய்து கொண்டிருந்தது. முதலில் நாமாகப் பேசக் கூடாது. அவர் தான் பேசுவார். ஏதாவது கேட்பதற்கு நாம் பதில் சொன்னால் போதும் என்று நினைத்தாள். அவர் ஏதாவது கேட்டால்தான் நாம் ஏன் பேச வேண்டும். இரண்டரை வருஷமாய்த் திரும்பிப் பாராமல், போட்ட கடிதங்களுக்குப் பதில் கூடப் போடாமல் இருந்தவரிடம் பேச்சு என்ன வேண்டியிருக்கிறது என்று எண்ணினாள். ஆனால் இந்தக் கோபத்தினால் தான் நாம் பேசாமலிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரிய வேண்டுமே, வேறு ஏதாவது நினைத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்தாள். “நீங்கள் தான் இத்தனை நாளாய் என்னைக் கவனிக்காமல் இருந்து விட்டீர்களே! உங்களோடு நான் பேசவில்லை!” என்று பளிச்சென்று சொல்லிவிட்டு, கை விரல்களினால் ‘டூ’ இட்டுக் காட்டவேண்டுமென்று தீர்மானித்தாள்.

அருகில் வந்து அவர் தன்னைத் தொட்டு விளையாட முயற்சித்தால் என்ன செய்வது? பேசாமல் நிற்கலாமா, அல்லது திமிறிக் கொண்டு ஓடலாமா என்று சிந்தனை செய்தாள். “இருக்கட்டும், இருக்கட்டும்; ஒரு நாளைக்கு அந்த மாதிரி அவர் விளையாட வரும்போது, அவருடைய கன்னத்தைப் பிடித்து நன்றாய்க் கிள்ளி விட்டுவிடுகிறேன்” என்று கர்வங் கட்டிக் கொண்டாள்.

இப்படியெல்லாம் சாவித்திரி மனோ ராஜ்யத்தில் ஆழ்ந்திருந்தவளாதலால், “நீ மேலே மாடிக்குப் போ, அம்மா!” என்று மாமியார் சொன்னதும், “ஒரு வேளை அவாள் மாடியில் இருக்காளோ?” என்ற எண்ணம் தோன்றிற்று. கால்கள் உற்சாகமாகக் குதித்துக் கொண்டு மாடியின் மீது ஏறின. ஆனால், அவளுடைய நெஞ்சு ‘திக் திக்’ கென்று அடித்துக் கொண்டது. மாடியில் உள்ள அறைகளை ஒவ்வொன்றாய்த் திறந்து பார்த்துக் கொண்டு வந்தாள். அவள் எதிர்பார்த்த மனுஷர் இல்லை. கடைசியாக அவள் திறந்த அறையில் ஸ்ரீதரனுடைய படம் ஒன்று எதிரில் மாட்டியிருக்கவே, அந்த அறைக்குள் நுழைந்தாள்.

சுவரில் ஸ்ரீதரனுடைய படங்கள் இன்னும் சில காணப்பட்டன. கோட் ஸ்டாண்டுகளில் அவனுடைய உடுப்புகளும் தொப்பிகளும் தொங்கின. ஒரு சீட்டுக் கட்டு, ஸிகரெட் டப்பா, நெருப்புப் பெட்டி, இவையும் இருந்தன. சாவித்திரி இவற்றையெல்லாம் பார்த்ததும், இதுதான் ஸ்ரீதரனுடைய அறையாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டாள். மேஜையின் மீது சிதறிக் கிடந்த புஸ்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். இதுவரையில் அப்பாவுக்கு சிசுரூஷை செய்தது போல், இனி மேல் நாம் தானே இவாளுக்கு எல்லா சிசுரூஷையும் செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டாள்.

ஸிகரெட் டப்பாவும், நெருப்புப் பெட்டியும் சாவித்திரிக்கு அதிக வியப்பையளிக்கவில்லை. ஏனெனில், கல்யாணத்தின் போதே “மாப்பிள்ளை சுருட்டுக் குடிக்கிறாராம்” என்ற பேச்சு அவள் காதில் விழுந்திருந்தது. “இதெல்லாம் டவுன் நாகரிகத்தில் சேர்ந்தது” என்று எண்ணி அவள் மனதை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். இப்போது ஸிகரெட் டப்பாவைப் பார்த்ததும், ஊரிலே கல்யாணத்தின் போது சொன்னது வாஸ்தவந்தான். அதனால் என்ன மோசம்? நாம் நாளடைவில் சொல்லி சரிப்படுத்திவிடலாம்!” என்று நினைத்தாள்.

பிறகு அறையைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு வந்தவள், தற்செயலாக அலமாரி ஒன்றைத் திறந்து பார்த்தாள். அதற்குள் இன்னும் சில புஸ்தகங்கள் இருந்தன. அப்புறம் ஒரு கைப்பெட்டி இருந்தது. கைப்பெட்டியைத் திறந்தாள். திறந்தவுடன், மேலே கிடந்த புகைப்படம் கண்ணுக்குத் தெரிந்தது. ஐயோ! இது என்ன?

சாவித்திரியின் உற்சாகம், குதூகலம் எல்லாம் எங்கே போயிற்று? ஒரு நொடிப்போதில், இவ்வளவு மனோ வேதனை அவளுக்கு எப்படி ஏற்பட்டது? கண்ணைக்கூடக் கொட்டாமல் சாவித்திரி அந்தப் படத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஒரு வெள்ளைக்காரியின் படம். (வெள்ளைக்காரிக்கும் சட்டைக்காரிக்குமுள்ள வித்தியாசமெல்லாம் அவளுக்கு அப்போது தெரியாது). இந்தப் படம் எதற்காக இவாளுடைய பெட்டிக்குள் இருக்கிறது?

ஏதோ அசுசியான பண்டத்தைத் தொடுவதுபோல், சாவித்திரி அந்தப் படத்தை இடது கை விரலினால் எடுத்து நகர்த்தினாள். அதன் அடியில் இன்னொரு படம் இருந்தது. முகம் அதே வெள்ளைக்காரியின் முகந்தான். ஆனால், இடுப்பில் ஒரு விதமாய் வேஷ்டி கட்டிக்கொண்டு தலையில் குல்லா வைத்துக் கொண்டிருந்தாள். ஐயோ! பயங்கரமே! பார்க்க சகிக்கலையே! – இந்தச் சனி எதற்காக இங்கே இருக்கிறது?

அந்தப் படத்தையும் இடது கையினால் நகர்த்தினால் சாவித்திரி. ஆகா! என்ன தவறு செய்தாள்! முதல் படத்தைப் பார்த்ததுமே பேசாமல் பெட்டியை மூடி விட்டுப் போயிருக்கக் கூடாதா? இரண்டாவது படத்தை நகர்த்தியதும், அடியில் இன்னொரு படம் இருந்தது. அதில், ஸ்ரீதரனும் அந்தச் சட்டைக்காரியும், ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டு நின்றார்கள்!

சாவித்திரி பெட்டியைத் தடாலென்று மூடினாள். அவள் நெஞ்சை என்னமோ அடைப்பது போலிருந்தது. தொண்டையை யாரோ பிடித்து அமுக்குவது போலிருந்தது. கண்ணில் ஜலம் எங்கிருந்தோ துளித்தது.

அந்த சமயத்தில் கீழே மாடிப்படி ஓரத்தில் பேச்சுக் குரல் கேட்டது. தாயாரும் பிள்ளையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இதென்ன, அம்மா! திடீர்னு வந்துட்டே! தந்தி, கிந்தி ஒன்றும் அடிக்கலையே?”

“தந்தி அடிச்சாத்தான் என்ன? நீ ஸ்டேஷனுக்கு வந்து அம்மாவை அழைச்சுண்டு வரப் போறயாக்கும்?”

“ஏனம்மா அப்படிச் சொல்றே? பேஷா அழைச்சுண்டு வருவேன். இருக்கட்டும்; ஊரிலேயிருந்து எனக்கு என்ன கொண்டு வந்திருக்கே, சொல்லு!” என்றான் ஸ்ரீதரன்.

“மேலே போய்ப் பாரு! என்ன கொண்டு வந்திருக்கேன்னு தெரியும்” என்றாள் தங்கம்மாள்.

“நிஜம்மா ஏதாவது கொண்டு வந்திருக்காயா என்ன?” என்று சொல்லிக் கொண்டு ஸ்ரீதரன் மாடிப் படியில் ஏறினான். தங்கம்மாளும் அவனைத் தொடர்ந்தாள்.

ஸ்ரீதரன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தபோது, சாவித்திரி ஒரு ஜன்னல் ஓரத்தில் நின்று கண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் இன்னாளென்று தெரிந்து கொள்ள ஸ்ரீதரனுக்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. தெரிந்ததும் அவனுக்குக் கோபம் அசாத்தியமாய் வந்தது. அம்மா தன்னை ஏமாற்றி விட்டாளென்னும் எண்ணந்தான் முன்னால் நின்றது.

சட்டென்று திரும்பி, பின்னால் வந்த தங்கம்மாளைப் பார்த்து, “இது என்ன நான்சென்ஸ்! இந்தச் சனியனை யார் அழைச்சுண்டு வரச் சொன்னா?…” என்றான்.

“ஆமாண்டாப்பா! இப்ப நான்ஸென்ஸ், கீன்ஸென்ஸ் என்று தான் சொல்லுவே. கொஞ்ச நாள் போனா, நீங்க ரெண்டுபேரும் ஒண்ணாப் போயிடுவயள்; நான் தான் நான்ஸென்ஸா ஆயிடுவேன். என்னமோப்பா! உன் ஆம்படையாளைக் கொண்டு வந்து ஒப்பிச்சுட்டேன். நீயாச்சு, அவளாச்சு!” என்றாள்.

தங்கம்மாள் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது, சாவித்திரி தயக்கத்துடன் நாலு அடி நடந்து வந்து, சற்றுத் தூரத்தில் இருந்தபடியே நமஸ்காரம் செய்தாள்.

ஸ்ரீதரன் அதைக் கவனியாமல், “என்ன அம்மா பேத்தறே? ஆம்படையாளாவது ஒப்பிக்கவாவது? யாரைக் கேட்டுண்டு அழைச்சுண்டு வந்தே? ஓகோ! இதுக்காகத்தான் இவ்வளவு மூடு மந்திரம் பண்ணினே போலிருக்கு! அந்த வேலைத்தனமெல்லாம் எங்கிட்டப் பலிக்காது. ராத்திரியே திருப்பிக்கொண்டு போய் ரயிலேத்திவிட்டு வந்து மறு காரியம் பார்! தெரியுமா?” என்றான்.

“வேண்டாண்டா, ஸ்ரீதரா! அப்படியெல்லாம் சொல்லாதேடா” என்றாள் தங்கம்மாள்.

சாவித்திரி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.

ஸ்ரீதரன், “ரொம்ப சரி! வர போதே, அழுதுண்டு, வந்துட்டயோன்னோ? மூதேவி! பீடை!” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *