Thyaga Bhoomi Kalki Part4-2 Ilavenil
Thyaga Bhoomi Kalki Part4
Mr and Mrs Tamilan Presents Kalki Times
தியாக பூமி
கல்கி
Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/
Thyaga Bhoomi Kalki
நான்காம் பாகம்
இளவேனில்
Part 2
அத்தியாயம் 16
ஸுலோச்சு விஷயம்
வக்கீல் ஆபத்சகாயமய்யர் தமது ஆபீஸ் அறையில் உட்கார்ந்து சட்டப் புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார். அவருடைய குழந்தை ஸுலோசனா அருகில் நின்று மேஜை மீதிருந்த இங்கிப் புட்டியின் மூடியைத் திறப்பதற்கு முயன்று கொண்டிருந்தாள்.
“ஏன்னா, ஸுலோச்சு அங்கே இருக்காளா?” என்று கேட்டுக் கொண்டே அவருடைய தர்மபத்தினி உள்ளே வந்தாள்.
“இதோ இருக்காளே, கண்ணு! ஏண்டி அம்மா, ஆபீஸ் ரூமிலே வந்து அப்பாவைத் தொந்தரவு படுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்றது?” என்று சொல்லிக் கொண்டே தானும் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.
“குழந்தை தொந்தரவு படுத்தினால் படுத்தட்டும். நீ தொந்தரவு படுத்தாதிருந்தால் போதும். இப்போ என்னத்துக்கு இங்கே வந்தே?” என்றார் வக்கீல்.
“இதென்ன ஆபத்தான்னா இருக்கு? வர வர என்னைப் பார்க்கறதுக்கே உங்களுக்கு பிடிக்கலையா என்ன?”
“ஆபத்துத்தான்; என் பேரே ஆபத்துத்தானே? இப்ப தானா உனக்கு அது தெரிஞ்சுது?”
“போரும், போரும். இந்த அரட்டைக் கல்லியெல்லாம் அந்தப் பம்பாய்க்காரியண்டே கத்துண்டிருக்கேளாக்கும். பேச்சு மட்டும் கிழியறதேயொழியக் காரியத்திலே உப்புக்குப் பிரயோஜனம் இல்லை. நான் சொன்னேனே, அந்த விஷயத்தைப்பத்தி ஏதாவது பேசினேளோ, இல்லையோ?”
“என்ன விஷயம் சொன்னே? ஞாபகம் இல்லையே?”
“அட ஏன் ஞாபகம் இருக்கப் போகிறது? ஊரிலே இருக்கிறவாளெல்லாம் சொன்னா நினைவிருக்கும். நான் சொன்னா நினைவிருக்குமா?”
“கோவிச்சுக்கறயே? என்ன விஷயம்னு இன்னொரு தடவைதான் சொல்லேன்.”
“நம்ம ஸுலோச்சு விஷயந்தான்.”
“என்ன ஸுலோச்சு விஷயம்?”
“உங்களுக்கு எல்லாம் பிரிச்சுப் பிரிச்சுச் சொல்லியாகணும். எங்கேயோ குப்பத்திலே கிடந்த பெண்ணைக் கொண்டு வந்து அந்தப் பம்பாய்க்காரி வச்சிண்டிருக்காளே, நம்ம ஸுலோச்சுவை வேணும்னா வச்சுக்கட்டும்னு சொன்னேனே?”
“வேணும்னாத்தானே வச்சுக்கணும்? அவவேணும்னு சொல்லலையே?” என்றார் வக்கீல்.
“அவளா வந்து வேணும்னு சொல்லுவாளா என்ன? நம்ம காரியத்துக்கு நாம் தான் சொல்லணும். சம்பு சாஸ்திரியா, சொம்பு சாஸ்திரியா, அந்தப் பிராமணனுக்கு இருக்கிற துப்புக்கூட உங்களுக்கு இல்லை. நீங்களுந்தான் வைக்கல் பண்ணறயள், வைக்கல்! மாட்டுக்குப் போடற வைக்கல்தான்!” என்றாள் ஸுலோச்சுவின் தாயார். “அப்பா! அப்பா! இந்த இங்கிப் புட்டியை நான் எடுத்துக்கட்டுமா, அப்பா!” என்றாள் குழந்தை ஸுலோச்சு.
“அட சனியனே! இங்கியெல்லாம் எங்கேடி?” என்றார் வக்கீல்.
“உன் பாக்கெட்டிலே கொட்டிட்டேன், அப்பா!” என்றாள் குழந்தை.
வக்கீல் திடுக்கிட்டுப் பார்த்தார். அவருடைய கோட்டுப் பாக்கெட்டிலிருந்து மை சொட்டிக்கொண்டிருந்தது.
“அசடு! பீடை! சனி!” என்று வக்கீல் கையை ஓங்கினார்.
“இந்தாங்கோன்னா. அவ அசடாயிருந்தா இருக்கட்டும். ஊரிலேயிருக்கிற குழந்தையெல்லாம் உங்களுக்குச் சமத்து; ஸுலோச்சுதான் அசடு. இந்தாடி அம்மா! நீ இங்கே வா” என்று அவர் சம்சாரம் குழந்தையைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டாள்.
வக்கீலுக்குக் கோபம் அசாத்தியமாய் வந்தது. மனைவியைப் பார்த்துச் சுடச்சுட ஏதாவது சொல்லியிருப்பார். குழந்தையை அடிக்க ஓங்கின கையினால் மேஜையைக் குத்தியிருந்தாலும் குத்தியிருப்பார். அந்தச் சமயத்தில் டெலிபோன் மணி அடித்து, காரியத்தைக் கெடுத்துவிட்டது!
இப்போது டெலிபோன் ரிஸீவரைக் கையில் எடுத்தபோது கூட, கோபமாய்த்தான் எடுத்தார். “யார் அது?” என்று அவர் கேட்ட போது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஆனால் அடுத்த கணத்தில் முகபாவம் முழுவதும் மாறிவிட்டது.
“ஓஹோ! உமாராணியா – மன்னிக்கணும் – என்ன? ஆச்சரியமாயிருக்கே! – நம்பவே முடியலையே? – இதோ வந்துட்டேன் – ரெண்டு நிமிஷத்திலே அங்கே வர்றேன்.”
இந்த மாதிரி பேசிவிட்டு வக்கீல் பரபரவென்று இங்கியாய்ப் போன சட்டையைக் கழற்றி எறிந்துவிடு வேறு சட்டை போட்டுக் கொண்டார். உடனே அவசரமாக வெளியே போகத் தொடங்கினார்.
அவருடைய மனைவி, “என்ன சங்கதி, இப்படித் தலைகால் தெரியாமல் பறக்கிறேள்?” என்று கேட்டாள்.
“உமாராணியாத்துக் குழந்தையைக் காணுமாம். அவசரமாய் வரச்சொல்றா. போய்விட்டு வர்றேன்” என்றார்.
“குழந்தையைக் காணுமா? போச்சுன்னா பீடை விட்டுதுன்னு சொல்லுங்கோ. நம்ம ஸுலோச்சுவைப் பத்திப் பேச்சு எடுக்க இதுதான் சமயம். நான் சொல்றது காதிலே விழறதோ இல்லையோ?”
அம்மாள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறபோதே ஆபத்சகாயமய்யர் வெளியிலே போய்விட்டார். அவருடைய பத்தினி, “இந்த மாதிரி துப்புக் கெட்டவாள் இந்த உலகத்திலே இருப்பாளோ!” என்று சொல்லித் தலையில் போட்டுக் கொண்டாள்.