Thyaga Bhoomi Kalki Part4-2 Ilavenil
அத்தியாயம் 18
உமாராணியின் பழி
உமாராணி அன்றெல்லாம் ஒரே மனக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள். குழந்தையையும் தந்தையையும் பிரிந்த துன்பம் இப்போது அவ்வளவு பெரியதாயில்லை. அவர்களுடைய நினைவையே மறக்கச் செய்யக்கூடியதான சம்பவம் வேறொன்று நேர்ந்துவிட்டது.
விதியின் விசித்திரத்தை நினைக்க நினைக்க அவளுக்கு வியப்பாயிருந்தது. குழந்தையைக் கண்டுபிடிக்கச் சொல்வதற்காக டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குப் போன இடத்தில், இந்தச் சந்திப்பு ஏற்பட்டது. குழந்தையும் தாத்தாவும் இராத்திரி இப்படித் தன்னை ஏமாற்றிவிட்டுப் போகாதிருந்தால், தான் டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குப் போக நேர்ந்திராது. அவரைச் சந்திக்கவும் நேர்ந்திராது.
ஒரு வேளை பகவானுடைய செயல் இதில் ஏதேனும் இருக்குமோ?
பைத்தியந்தான்! பகவானாவது மண்ணாங்கட்டியாவது? உலகில் தற்செயலாக இந்த மாதிரி சம்பவங்கள் எத்தனையோ நிகழ்கின்றன. தன்னுடைய வாழ்க்கையிலேயே நடந்திருக்கிறது. அதற்கெல்லாம் சுவாமி பேரில் பாரத்தைப் போடுவதில் என்ன பிரயோஜனம்? அப்பாவாயிருந்தால், ‘எல்லாம் பராசக்தி செயல்’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். மனுஷ்யர்களுடைய காரியங்களையெல்லாம் பராசக்தி நடத்துவதாயிருந்தால், உலகம் இவ்வளவு கேவலமாயிருக்குமா? இவ்வளவு அநியாயங்களும் கொடுமைகளும் நடக்குமா? தானும் குழந்தையுமாகச் சாகப் போகும் சமயத்தில் அப்பாவின் குரல் கேட்டது தன்னுடைய வாழ்க்கையில் ஓர் ஆச்சரியமான விஷயம்! அப்பாவிடம் சொன்னால், அது பகவானுடைய செயல் என்றுதான் சொல்வார். அது பகவானுடைய செயலாயிருந்தால், கல்கத்தாவில் தான் பட்ட கஷ்டங்களும் பகவானுடைய செயல் தானே? சென்னையின் வீதிகளில் தான் அலைந்து திரிந்ததும் பராசக்தியின் செயல்தானே?
அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்பாவினுடைய வீண் பிரமை. வாழ்க்கையில் மனுஷ்யர்களுடைய முயற்சியினால் சில காரியங்கள் நடக்கின்றன; தற்செயலாகச் சில காரியங்கள் நடக்கின்றன. அந்த மாதிரி தற்செயலாக நடந்திருக்கும் சம்பவம் இது. தன்னுடைய வாழ்க்கையிலேயே இதற்கு முன் நடந்திருப்பதையெல்லாம் நினைக்கும் போது இது ஒரு பிரமாத அதிசயங்கூட இல்லை.
சரி; ஆனால் தான் இப்போது செய்ய வேண்டியது என்ன? எக்கேடாவது கெட்டுப் போகட்டுமென்று சும்மா இருந்துவிடலாமா?
விலங்கு பூட்டிய கையுடன் கூடிய ஸ்ரீதரனுடைய தோற்றம் அடிக்கடி உமாவின் மனக் கண்ணின் முன்னால் வந்து நின்றது. அதை நினைக்கும் போதெல்லாம் ஒரு பக்கம் அவள் மனத்தில் அளவிலாத வேதனை உண்டாயிற்று; மற்றொரு பக்கத்தில் திருப்தியும் ஏற்பட்டது. தன்னை எவ்வளவோ கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாக்கிய மனுஷர் இப்போது சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். வேண்டும், நன்றாய் வேண்டும்!
அதே சமயத்தில் தான் அவருக்கு உதவி செய்யக் கூடிய நிலைமையில் இருப்பதை நினைத்து உமா கர்வமும் குதூகலமும் கொண்டாள். அது தான் சரி! இந்த ஆபத்துச் சமயத்தில் அவருக்கு உதவி செய்து பழிவாங்க வேண்டும்; அப்படித்தான் புத்தி கற்பிக்க வேண்டும். தன் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்குக் கூட தைரியம் வராதபடி அடிக்க வேண்டும். ஆம்; எப்படியாவது அவரைக் கேஸிலிருந்து தப்பித்து விடுதலை பண்ண வேண்டும். விடுதலையான பிறகு நன்றி செலுத்த வருவாரல்லவா? “உமது நன்றி எனக்கு வேண்டாம்! போய்வாரும்! உமது முகத்தில் விழிக்கக்கூட எனக்கு இஷ்டமில்லை” என்று சொல்ல வேண்டும். எப்படியிருந்தாலும், எவ்வளவு கேவலமான மனுஷராயிருந்தாலும், சாருவின் தகப்பனாரல்லவா? அதற்காகவாவது அவரை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டாமா? – நல்ல வேளை! குழந்தை இந்தச் சமயம் இங்கே இல்லாமற் போனாளே? அப்பாவும் போய்விட்டது எவ்வளவு நல்ல காரியம்? இதை நினைத்தபோதுதான், உமாவுக்கு ஒரு வேளை இது தெய்வத்தின் செயல்தானோ என்று சிறிது சந்தேகம் உண்டாயிற்று. தான் சாவித்திரி என்பதையும், சாரு தன் குழந்தையென்பதையும் அப்பாவிடம் சொல்லாமலிருந்தது இப்போது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று! குழந்தை இங்கே இருந்து அவளுக்கு உண்மையும் தெரிந்திருந்தால் – ஐயோ! – தகப்பனார் கையில் விலங்குடன் நிற்கும் காட்சியையல்லவா குழந்தை பார்க்கவேண்டியிருந்திருக்கும்?
இப்படி நினைத்ததும் உமாவுக்கு இன்னொரு பெரிய பயம் உண்டாயிற்று. இவருக்குச் சாரு தன் குழந்தை என்பது தெரிந்தால் – அதனால் என்ன விபரீதம் வருமோ என்னவோ? தனக்கு இப்போது இந்த உலகத்திலுள்ள செல்வமெல்லாம் குழந்தைதானே? குழந்தையை அபகரித்துக் கொண்டு போக முயற்சிப்பாரோ, என்னவோ?-வேண்டாம், வேண்டாம். அவருக்குச் சாருவைப்பற்றித் தெரியவே கூடாது; தான் ஒத்தாசை செய்கிற விஷயமும் தெரிய வேண்டாம். ஏதோ சாருவின் தகப்பனார் என்ற தோஷத்துக்காக அவரை விடுதலை செய்து அனுப்பிவிட வேண்டும்; அவ்வளவு தான்.
மறு நாளைக்கு வக்கீல் ஆபத்சகாயமய்யர் உமாராணியின் வீட்டுக்கு வந்ததும், “போலீஸிலிருந்து ஏதாவது தகவல் கிடைத்ததா, அம்மா?” என்று கேட்டார்.
“இல்லை” என்றாள் உமா.
“போலீஸை மட்டும் நம்பியிருப்பதில் பிரயோஜனமில்லை. குழந்தையைத் தேடுகிறதற்கு நாமும் ஏதாவது ஏற்பாடு செய்தால் தான் நல்லது” என்றார் வக்கீல்.
உமா ஏதோ சொல்வதற்கு ஆரம்பித்தாள். அதற்குள் வக்கீல், “ஆனால், ஒரு சமாசாரம்; அந்தக் குழந்தையேதான் வேணுமென்றால், பேஷாய்த் தேடுகிறதற்கு ஏற்பாடு பண்ணுவோம். இல்லை, வீட்டுக்கு மங்களகரமாய் ஒரு குழந்தை இருந்தால் போதுமென்றால், எத்தனையோ பேர் நான் தர்றேன் நீ தர்றேன்னு காத்திண்டிருக்கா. என்னுடைய ‘ஒய்ப்’ கூட அடிக்கடி சொல்லிண்டிருக்காள்…”
உமாராணியின் எவ்வளவோ மனச் சங்கடங்களுக்கிடையில் வக்கீலின் இந்தப் பேச்சு அவள் முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்தது.
“குழந்தை விஷயம் இருக்கட்டும், வக்கீல் ஸார்! அதை விட முக்கியமான காரியம் இப்போது வேறொன்று வந்திருக்கு” என்றாள்.
அப்போது அவள் முகத்தில் உண்டான கவலைக் குறியையும், மேலே பேசுவதற்குத் தயங்குவதையும் பார்த்த வக்கீல், “என்ன விஷயமாயிருந்தாலும் என்னிடம் தைரியமாய்ச் சொல்லுங்கள், அம்மா! உங்கள் மனஸிலே ஏதோ வச்சிண்டிருக்கயள்; என்னை உங்கள் தமையன்னு நினைச்சுண்டு எல்லாத்தையும் சொல்லணும்னு முன்னயே கேட்டுண்டேன். என்னை நீங்கள் வேற்று மனுஷனாகவே நினைக்கக் கூடாது” என்றார்.
உமா, “உங்களை என் தமையன் மாதிரிதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்றைக்காவது ஒரு நாள் எல்லா விஷயங்களையும் சொல்லத்தான் போகிறேன்; சொல்ல வேண்டியும் வரும். அதுவரையில் நீங்கள் அவசரப்படக் கூடாது. இப்போது ஒரு முக்கியமான ஒத்தாசை உங்களைக் கேட்கப் போகிறேன். ஏன் என்னத்திற்கு, எதற்காக என்றெல்லாம் கேட்காமல் அந்த ஒத்தாசையை எனக்கு நீங்கள் செய்யவேணும்” என்றாள்.
“கட்டாயம் செய்றேன் அம்மா! உங்களுக்கு ஒத்தாசை செய்யணுங்கறதுதான் என் ஆசையே தவிர, உபத்திரவம் செய்யறது இல்லை” என்றார் வக்கீல். உமா சற்று யோசித்து விட்டு, “நேற்று டிபுடி கமிஷ்னர் ஆபீஸிலிருந்து நாம் வெளியே வந்தபோது ஒரு மனுஷரைக் கையிலே விலங்கு போட்டுக் கொண்டு வந்தார்களே; உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.
“ஆமாம்; ஞாபகம் இருக்கு. நான் கூட, ‘பையன் முகத்தைப் பார்த்தாக் களையாயிருக்கு. இந்த மாதிரி அகப்பட்டுண்டிருக்கானே?’ என்று நினைச்சுண்டேன். அவனைப் பற்றி என்ன?”
“அவரை எப்படியாவது கேஸிலிருந்து தப்ப வைக்கணும். அதற்காக எவ்வளவு பணம் செலவழிந்தாலும் பாதகமில்லை. நான் கொடுக்கிறேன்.”
வக்கீலுடைய ஆச்சரியம் தீரக் கொஞ்ச நேரம் ஆயிற்று.
“என்ன யோசிக்கிறீர்கள், வக்கீல் ஸார்? அவர் எனக்கு உறவு மனுஷர்…”
வக்கீல் திடீரென்று ஏதோ யோசனை தோன்றியவர் போல், “ஏனம்மா? அவர்தான் ஒரு வேளை உங்களுடைய…?” என்று ஆரம்பித்தார். “ஹஸ்பெண்டா, என்ன?” என்று அவர் கேட்க வந்தார். அந்தச் சமயம் உமாவின் முகத் தோற்றத்தைப் பார்த்து விட்டுச் சட்டென்று நிறுத்திக் கொண்டார்.
“இல்லை; அதெல்லாம் நான் கேட்கவில்லை. அவர் யாராக வேணாலும் இருக்கட்டும். ஆனால் என்ன கேஸோ, என்னமோ, ஒன்றும் தெரியவில்லையே? விலங்கு போட்டுக் கொண்டு வந்த்தைப் பார்த்தால், ‘ஸீரியஸ் கேஸா’யிருக்கும் போலேயிருக்கே?…”
“டிபுடி கமிஷ்னர் டெலிபோனில் பேசியதை நான் கேட்டுண்டிருந்தேன். நீங்கள் பெடிஷன் எழுதிண்டிருந்தயள்; அதனாலே கவனிக்கவில்லை. பாங்கி மோசடி கேஸாம்!…”
“பாங்கி மோசடி கேஸா? சரியாப் போச்சு! இப்போ எங்கே பார்த்தாலும் பாங்கி மோசடித்தான் ஜாஸ்தியாயிருக்கு. கொஞ்சம் கஷ்டமான விஷயந்தான். இருந்தாலும் என்னால் ஆன மட்டும் பார்க்கிறேன். ருசுவாகிறது கஷ்டம்னு பாங்கிக்காராளுக்குத் தோணினால், கேஸைக் கம்பவுண்டு பண்ணிக்கத் தயாராயிருந்தாலும் இருப்பா, பையனைப் பார்த்தா புத்திசாலியாத் தோணறது. ஏதாவது செய்திருந்தாலும் கெட்டிக்காரத்தனமாத்தான் செய்திருப்பான். என்னால் ஆனமட்டும் பார்க்கிறேன், அம்மா!” என்றார்.
“அவரைத் தப்ப வைக்கறது பெரிதில்லை. அதைவிட முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. இந்தக் காரியத்துக்கு யார் பணங் கொடுக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியக் கூடாது. விடுதலையானதும் அவர் இந்த ஊரை விட்டுப் போய்விட வேண்டும். முன்னாலேயே அவரை நீங்கள் கண்டு பேசி இதற்குச் சம்மதிக்கப் பண்ண வேணும்” என்றாள் உமா.
அப்படியே செய்வதாக வாக்களித்து விட்டு வக்கீல் விடை பெற்றுச் சென்றார்.