Thyaga Bhoomi Kalki Part4-2 Ilavenil
அத்தியாயம் 19
ஸ்ரீதரன் சபதம்
வக்கீல் ஆபத்சகாயமய்யருக்கு உண்மையாகவே உமாவின் மீது சகோதர விசுவாசம் ஏற்பட்டிருந்தது. அவளுடைய வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று அவர் ஊகித்திருந்தார். ரொம்பவும் கஷ்டப்பட்டவளாயிருக்க வேண்டும்; பிறகு திடீரென்று நல்ல காலம் பிறந்து பணக்காரியாகியிருக்க வேண்டும் என்றும் நினைத்தார். இந்தச் செல்வம் அவளுக்கு எப்படிக் கிடைத்தது என்பதைப் பற்றி அவருக்குச் சந்தேகங்கள் தோன்றியதுண்டு. ஏதாவது ‘அவ்யாகிருதமான’ வழியில் எண்ணமிட்டார். ஆனாலும் அவளுடைய உத்தமமான குணத்தை உத்தேசித்து அவளிடம் எந்த விதமான குற்றம் குறையிருந்தாலும் மன்னித்து விடத்தயாராயிருந்தார்.
இந்த மாதிரி ஒரு ஸ்திரீ, உற்றார் உறவினர் யாருமில்லாதவள், பணக்காரி என்பதைத் தவிர மற்றபடி நிராதரவான நிலைமையில் இருப்பவள் – அவளுக்கு ஒத்தாசை செய்யும் படியான சந்தர்ப்பம் தமக்கு ஏற்பட்டது பற்றி ஆபத்சகாயமய்யருக்கு ரொம்பவும் பெருமையாயிருந்தது. கோர்ட்டிலும் அட்வகேட் சங்கத்திலும் அவருடைய நண்பர்கள் சாதாரணமாக அவர ‘மிஸ்டர் ஆபத்!’ என்று கூப்பிட்டுப் பரிகாசம் செய்வது வழக்கம். அவரிடம் அகப்பட்டுக் கொள்ளும் ‘கட்சிக்காரர்களுக்கெல்லாம் ஆபத்துத்தான்’ என்றும் அவர்கள் சொல்வார்கள். ஆனால் ஸ்ரீமதி உமாராணியின் விஷயத்தில் தம்முடைய பெயரின் பின்பகுதியை உண்மையாக்கிக் கொள்ள வேண்டுமென்று ஆபத்சகாயமய்யர் தீர்மானித்திருந்தார்.
ஆகவே, இப்போது உமாராணி தம்மிடம் பெரிதும் நம்பிக்கை வைத்து ஒரு முக்கியமான வேலையைக் கொடுக்கவே அதில் தீவிரமாக ஈடுபட்டார். அவருடைய முயற்சி கடைசியில் பயன் அளித்தது. ஸ்ரீதரன் கையாண்டதாகச் சந்தேகிக்கப்பட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு கே அண்டு ஓ பாங்கிக்காரர்கள் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார்கள். சமீபத்தில் நடந்த ஒரு பாங்கி மோசடி வழக்கில் ஏராளமான பணச் செலவுக்குப் பின்னர் குற்றம் ருசுவாகாமல் கைதி விடுதலையடைந்திருந்தபடியால், பாங்கிக்காரர்கள் இதற்கு எளிதில் இணங்கினர். போலீஸ் இலாகாவினர் முதலில் இதை ஆட்சேபித்த போதிலும், கடைசியில் குற்றம் ருசுவாவது கஷ்டம் என்று கண்டு அவர்களும் சம்மதித்து விட்டார்கள். எனவே, ஸ்ரீதரனுடைய குற்றம் மோசடி இல்லையென்றும், கவனக் குறைவுதான் என்றும் தீர்மானிக்கப்பட்டு, ஸ்ரீதரன் சில தினங்களில் விடுதலையடைந்தான்.
சிறையில் ரிமாண்டு கைதியாக இருந்த ஸ்ரீதரனை வக்கீல் ஆபத்சகாயமய்யர் பார்த்துப் பேசியபோது, உமா கூறிய நிபந்தனைகளை அவனிடம் தெரிவித்தார். ஸ்ரீதரனும் அவற்றுக்கு உடனே இணங்கினான். ஆனால் நிபந்தனைகளை நிறைவேற்றும் உத்தேசம் அவனுக்குக் கிடையவே கிடையாது. பணங்கொடுப்பது யார் என்று கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாகவே அவன் நினைக்கவில்லை. சாவித்திரிதான் தன்னை விடுதலை செய்ய முயற்சி எடுக்கிறாள் என்பதைப் பற்றி அவனுக்குச் சந்தேகமே இல்லை. வேறு யார் தன்னிடம் இவ்வளவு அக்கறை காட்டிக் கேஸிலிருந்து தப்புவிக்க முயற்சி எடுக்கப் போகிறார்கள்?
ஆனால் விடுதலையானதும் சென்னையை விட்டுப் போக வேண்டும் என்ற நிபந்தனை அவன் மனத்தைப் புண்படுத்திக் கோபமூட்டியது. இதற்கு முக்கிய காரணம், சாவித்திரியை அன்று பார்த்ததிலிருந்து அவள் பேரில் அவனுக்கு ஏற்பட்டிருந்த பாசமேயாகும். ஏற்கெனவே, சாவித்திரியின் விஷயத்தில் தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்து அவன் பல தடவைகளில் பச்சாத்தாபப் பட்டிருக்கிறான். அவளைப் பூரண கர்ப்பவதியாயிருக்கையில் வழிப்போக்கர்களுடன் கூட்டி அனுப்பி, அப்புறம் தகவல் ஒன்றுமே தெரியாமல் போன பிறகு, தாயார் தகப்பனார்களுடன் அவன் அதைக் குறித்துச் சில சமயம் சண்டை பிடித்ததும் உண்டு. கொஞ்ச நாளைக்குப் பிறகு, ராஜாராமய்யர் மனநோயும் உடல் நோயும் அதிகமாகிக் காலஞ் சென்றார். பிறகு, தாயாருக்கும் பிள்ளைக்கும் ஒத்துக் கொள்ளவேயில்லை. தங்கம்மாள் பிள்ளையைச் சீர்திருத்த எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லாமல் கடைசியில் மனம் வெறுத்து ஹைதராபாத்தில் இருந்த தன் பெண்ணுடன் வசிக்கப் போய்விட்டாள். அம்மாவுடன் ஸ்ரீதரன் சண்டை போட்ட போதெல்லாம், “படுபாவி! ஒன்றுந் தெரியாத சாதுப் பெண்ணை அநியாயமாய்க் கொன்றுவிட்டாயே?” என்று திட்டுவது வழக்கம். இம்மாதிரி, சாவித்திரியைப் பிரிந்த பிறகு அவள் விஷயத்தில் அவனுடைய மனம் மாறியதோடு கூட, “ஐயோ! இந்த மாதிரி செய்துவிட்டோ மே!” என்று அடிக்கடி வருத்தப்பட்டதும் உண்டு. மறுபடியும் ஒரு தடவை சாவித்திரி தன்னைத் தேடி வந்தாளானால் முன்னால் செய்ததற்கெல்லாம் பிராயச்சித்தமாக அவளை ரொம்ப நன்றாக நடத்தவேண்டுமென்று அவன் தீர்மானித்திருந்தான். ஆனால் இதெல்லாம் மிகப் பழைய கதை. அவளை மறுபடியும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை அவன் இழந்து வெகு நாளாயிற்று. அப்புறம் அவனுடைய வாழ்க்கை எப்படி எப்படியோ சீர்குலைந்து கடைசியில் பாங்கி மோசடி வழக்கில் சிறைப்படும் நிலைமையும் ஏற்பட்டது.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அன்று டிபுடி கமிஷ்னர் ஆபீஸில் உமாராணியை அவன் தற்செயலாகச் சந்தித்து, அவள் தான் சாவித்திரி என்பது தெரிய வந்ததும் அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய புரட்சி உண்டாயிற்று. இந்த கேஸிலிருந்து மட்டும் எப்படியாவது தப்பித்துக் கொண்டால் அப்புறம் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கிறதென்று தீர்மானித்தான். சாவித்திரியின் புதிய நாகரிகத் தோற்றத்தை நினைக்க நினைக்க அவனுக்குத் தலை கிறுகிறுவென்று சுழன்றது. ஆகா! இவளையா நாம் அவலட்சணமென்றும், பட்டிக்காடு என்றும் அலட்சியம் செய்தோம்! என்ன பிசகு! என்ன பிசகு! நம்முடைய புத்தி ஏன் அப்படிப் போயிருந்தது?… போனதெல்லாம் போகட்டும். நல்ல வேளையாக அதற்கெல்லாம் பரிகாரம் செய்ய இப்போது சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தக் கேஸில் மட்டும் விடுதலை பெறவேண்டும்.
சாவித்திரி இந்த நிலைமையை எப்படி அடைந்தாள், எவ்வாறு உமாராணி ஆனாள், இத்தனை காலமும் எங்கே என்ன செய்துகொண்டிருந்தாள் என்பதைப் பற்றியெல்லாம் அவன் சிந்திக்காமலில்லை. ஆனால், வக்கீல் ஆபத்சகாயமய்யரைப் போலவே அவனும் எது எப்படியிருந்தாலும் மன்னித்துவிடத் தயாராயிருந்தான். இவ்வளவெல்லாம் அவளைத் தான் கஷ்டத்துக்குள்ளாக்கியிருக்கும்போது, அவளுடைய காரியங்களைப் பற்றிக் கேள்வி கேட்கத் தனக்கு என்ன உரிமை இருக்கிறது? போனதெல்லாம் மறந்துவிட்டுப் புதிய வாழ்க்கை தொடங்குவதுதான் சரி.
சிறைக்குள்ளே தன்னந் தனியாக உட்கார்ந்து இப்படியெல்லாம் புனருத்தாரண சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனிடம், வக்கீல் ஆபத்சகாயமய்யர் வந்து, “உன்னிடம் ஒருவர் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்; பணம் செலவழித்து உன்னை விடுதலை செய்ய முயற்சி எடுக்கப் போகிறார்; ஆனால் யார் என்று நீ விசாரிக்கக் கூடாது. விடுதலையானதும் சென்னையை விட்டுக் கல்கத்தாவுக்குப் போய்விட வேண்டும்” என்று சொன்னால் அவனுக்கு ஆத்திரம் உண்டாகாதா? ஆனாலும், காரியம் ஆக வேண்டியதை முன்னிட்டு, ஸ்ரீதரன் நிபந்தனைகளுக்குச் சம்மதித்தான். அதை நிறைவேற்றும் உத்தேசம் அவனுக்கு லவலேசமும் இல்லையாகையால், விடுதலையான மறுநாளே உமாராணியின் பங்களாவைத் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தான்.
உமா இதை எதிர்பார்க்கவேயில்லை. விடுதலையானதும் ஸ்ரீதரன் என்ன செய்வான் என்பதைப் பற்றி அவள் நினைத்திருந்ததற்கு இது முற்றும் மாறாயிருந்தது. ஒரு வேளை, அவர் விடுதலையடைந்ததும், தனக்கு ஒரு கடிதம் எழுதலாமென்றும், அதில் அவர் தான் செய்த உதவிக்காக ரொம்பவும் நன்றி செலுத்துவாரென்றும், கல்கத்தாவுக்குப் போவதற்கு முன்னர் ஒரு தடவையாவது தன்னை வந்து பார்ப்பதற்கு ஆசைப்பட்டு, அதற்கு அநுமதி கேட்கக் கூடுமென்றும் எண்ணினாள். அப்படி அவர் எழுதினால், அவரைத் தன்னை வந்து பார்த்துப் போகச் சொல்லலாமா, வேண்டாமா என்று உமா சிந்தனை செய்தாள். போனால் போகட்டும் என்று வரச் சொல்வோமே; அவர் வந்து தம்முடைய பழைய காரியங்களுக்காக ரொம்பவும் வருத்தப்பட்டாரானால், “இப்போதைக்கு நீங்கள் வேறு, நான் வேறுதான். கொஞ்ச காலம் நீங்கள் கல்கத்தாவிலேயே இருங்கள் அதற்குப் பிறகு, உங்களுடைய சுபாவம் மாறியிருக்கிறதென்று எனக்கு நிச்சயமானால், பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று பதில் சொல்லலாமா என ஒரு சமயம் நினைப்பாள். அடுத்த நிமிஷம், ‘சீ! என்ன சபலம்! அந்த மனுஷரிடம் இனிமேல் இந்த ஜன்மத்தில் சேர்ந்து வாழமுடியுமா?’ என்று தோன்றும். அல்லது, அவர் நிபந்தனையின்படி நேரே கல்கத்தாவுக்கே போய் அங்கிருந்து தனக்குக் கடிதம் எழுதக்கூடும்; அந்தக் கடிதத்தில் அவர் நிஜமாகவே பச்சாதாபப்படுவதாகத் தெரிந்தால், பிறகு குழந்தை சாருவைப்பற்றி அவருக்கு எழுதித் தெரியப்படுத்தலாம் என்று நினைப்பாள். உடனே, வேண்டாம், வேண்டாம்! அவருக்குக் குழந்தை வேறு வேண்டிக் கிடக்கா? சிவ சிவா! அந்தப் புண்ணியவதி – அவர் அம்மா – என் குழந்தையைக் கொன்றாலும் கொன்றுவிடுவாள்’ என்று எண்ணுவாள். உமாவின் மனோநிலை இம்மாதிரி இருந்தபோது, ஒரு நாள், “ஸ்ரீதரன் பி.ஏ.” என்று அச்சடித்த சீட்டை வேலைக்காரன் கொண்டுவந்து கொடுக்கவே, அவளுக்குக் கோபம் அபரிமிதமாய் வந்தது. தான் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை. அந்த மனுஷர் நிபந்தனையை நிறைவேற்றவில்லை. கடிதம் எழுதித் தன்னை வந்து பார்க்க அநுமதி கேட்கவும் இல்லை. துணிச்சலாக நேரிலேயே வந்திருக்கிறார். புருஷன் பாத்தியதை கொண்டாடிக் கொண்டு வந்திருக்கிறார் போல் இருக்கிறது! – பேஷ்! அப்படியா சமாசாரம்?
“பார்க்க முடியாது” என்று சொல்லி அனுப்பிவிடலாமா என முதலில் நினைத்தாள் உமா. உடனே அதை மாற்றிக் கொண்டாள். அவரிடம் நமக்கு என்ன பயம்? வரட்டும்; நன்றாகப் புத்தி கற்பித்து அனுப்பலாம்.
“வரச் சொல்” என்று சொல்லிவிட்டு, உமா ஒரு நிமிஷம் அலட்சியமாய் உட்கார்ந்திருந்தாள். உடனே ஏதோ ஞாபகம் வந்தவளைப்போல், முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொஞ்சம் அழகுபடுத்திக் கொண்டாள். பிறகு ஜன்னலோரமாய்ச் சென்று வாசலில் பார்த்தாள்.
ஸ்ரீதரன் மோட்டாரிலிரிந்து இறங்கினான். அவன் இப்போது, முன்னே டிபுடி கமிஷ்னர் ஆபீஸில் பார்த்தது போல் கையில் விலங்குடன் சோர்ந்த முகத்துடனும் பரிதாபத் தோற்றம் கொண்டிருக்கவில்லை. நாகரிகமாக உடுப்பு அணிந்து கொண்டு தலையில் தொப்பியுடன் நவயௌவன விடபுருஷனாக விளங்கினான். அன்று விலங்கு போட்டிருந்த கையில், இன்று பாதி பிடித்த ஸிகரெட் காணப்பட்டது.
‘லவலேசமும் மாறுதல் இல்லை. ஏழு வருஷத்துக்கு முன் எப்படியோ அப்படியேதான் இன்றும் இருக்கிறார்’ என்று உமா எண்ணினாள். இதனால் அவளுடைய கோபம் பன்மடங்கு பெருகிற்று.
ஸ்ரீதரன் டக், டக்கென்று மிடுக்குடன் நடந்து உள்ளே வந்தபோது, உமா, ஒரு புத்தகத்தைப் படிக்கும் பாவனையில் இருந்தாள். ஸ்ரீதரனுடைய முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கவில்லை.
ஸ்ரீதரன் உமாவுக்கு எதிரில் கிடந்த ஸோபாவில் ஜம்மென்று உட்கார்ந்தான்.
ஒரு நிமிஷம் கழித்து, “உமா! என் முகத்தைப் பார்க்க உனக்குப் பிடிக்கவில்லை போல் இருக்கிறது!” என்றான்.
உமா கையிலிருந்த புத்தகத்தைக் கீழே எறிந்தாள். ஸ்ரீதரனை நேருக்கு நேர் பார்த்தாள். “ஆமாம்; உமது முகத்தைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லைதான். நீர் எதற்காக இங்கே வரவேணும்? விடுதலையானவுடன் மெட்ராஸை விட்டுப் போய் விடுகிறேன் என்று சொன்னீரா இல்லையா? அந்த நிபந்தனைமேல் தானே, பணத்தைக் கொடுத்து உம்மை விடுதலை செய்தேன்? பின், ஏன் இங்கே வந்தீர்?” என்று விடுவிடுவென்று பேசினாள்.
“ஏன் வந்தேனா?” என்று ஸ்ரீதரன் நிதானமாய்க் கேட்டுவிட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பு உமாவுக்கு நெருப்பாயிருந்தது.
“உன்னை விட்டுப் போக முடியாமல் தான் வந்தேன். கோவிச்சுக்காதே, சாவித்திரி! அந்த பழைய கதையையெல்லாம் மறந்துவிடு…” என்று ஸ்ரீதரன் சொல்வதற்குள், உமா அளவிலாத எரிச்சலுடன், “கோபமாவது சாவித்திரியாவது, இங்கே சாவித்திரி என்று ஒருவருமில்லை. சாவித்திரி செத்துப் போய் எத்தனையோ காலமாச்சு!” என்கிறாள். “நிஜந்தான்; நீ இப்போது பழைய பட்டிக்காட்டுச் சாவித்திரி இல்லை. நானும் பழைய ஸ்ரீதரன் இல்லை. இரண்டு பேரும் புனர் ஜன்மம் எடுத்துவிட்டோ ம். அந்தக் கர்நாடக நாட்டுப் புறத்துச் சாவித்திரியை எனக்குப் பிடிக்கவில்லை; வாஸ்தவந்தான்; ஆனால்…”
ஸ்ரீதரன் இப்போது ஸோபாவிலிருந்து எழுந்திருந்து உமாவை நோக்கி நாலடி நடந்து வந்து, “…ஆனால் உமாராணி மிதித்த பூமியைக்கூட இன்று நான் பூஜை செய்யத் தயார்!” என்று முடித்தான்.
இந்த நாடகப் பேச்சு உமாவுக்கு நாராசமாயிருந்தது. அவளும் எழுந்து நின்று, “ஆனால் நீர் மிதித்த பூமியை மிதிப்பதற்குக் கூட உமாராணி இப்போது தயாராயில்லை. அந்தக் காலம் மலையேறிவிட்டது. போ வெளியே!” என்றாள்.
“வெளியே போக வேணுமா? உன்னை விட்டுவிட்டா! முடியாது, உமா! முடியாது! நீ என்னுடைய மனைவி நான் உனக்குத் தாலி கட்டிய புருஷன். ஞாபகமிருக்கட்டும்” என்றாள்.
உமாவின் கோபம் இதனால் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.
“மரியாதையாகப் போகிறீரா? தர்வானைக் கூப்பிட வேணுமா?” என்று கேட்டாள்.
ஸ்ரீதரனும் கோபத்துடன், “எங்கே கூப்பிடு பார்க்கலாம்” என்றான்.
உமா மேஜை மீதிருந்த மணியை அடித்தாள். அடுத்த நிமிஷம் தர்வான் உள்ளே வந்தான்.
“தர்வான்! இந்த ஐயாவை ‘கேட்’டுக்கு வெளியிலே கொண்டு போய் விட்டுட்டு வா!” என்றாள் உமா.
“சலோ, பாபு! சலோ!” என்றான் தர்வான்.
ஸ்ரீதரன், உமாவைக் கண்ணில் பொறி பறக்கப் பார்த்து, “ஓஹோ! இவ்வளவுக்கு ஆயிடுத்தா?… சாவித்திரி! பொறு! Restitution of Conjugal Rightsக்கு (தாம்பத்திய உரிமை), ஸுட் போட்டு உன்னைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்தறேன். தர்வானைக் கூப்பிடறதையெல்லாம் அப்போது பார்க்கிறேன்” என்றான்.
“சலோ பாபு! உன்கி போல் ரொம்ப ஆத்மி பார்த்திருக்கான்!” என்று சொல்லி, தர்வான் ஸ்ரீதரனைப் பிடித்துத் தள்ளப் போனான். “ஹும்!” என்று அவனை அதட்டிவிட்டு ஸ்ரீதரன் தானே விரைவாக நடந்து வெளியே சென்றான்.
ஸ்ரீதரன் போனதும் உமாராணி ஸோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மி அழுதாள். அந்த மாதிரி அவள் அழுது எத்தனையோ வருஷம் ஆயிற்று.