Thyaga Bhoomi Kalki Part4 Ilavenil
Thyaga Bhoomi Kalki
Mr and Mrs Tamilan Presents Kalki Times
தியாக பூமி
கல்கி
Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/
Thyaga Bhoomi Kalki
நான்காம் பாகம்
இளவேனில்
அத்தியாயம் 1
சாருவின் பிரார்த்தனை
கீழ் வானம் வெளுத்தது. காலைப் பிறை, ஒளி இழந்து மங்கிற்று. அதனருகில் தோன்றிய சுக்கிரன் ‘இதோ மறையப் போகிறேன்’ என்று கண் சிமிட்டிச் சமிக்ஞை செய்தது.
கோழி கூவிற்று; குருவி சிலும்பிற்று; காகம் கரைந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் நானாவிதமான பட்சி ஜாலங்கள் பற்பல ஸ்வரங்களில் பாடத் தொடங்கின.
விருட்சங்களிலும் செடிகளிலும் இருந்த பூ மொக்குகள், பட்சிகளின் இனிய கானத்தைக் கேட்டு ஆனந்தத்தினால் சிலிர்த்தன.
அந்தக் குளிர்ந்த அதிகாலை நேரத்தில் வீசிய இனிய இளந்தென்றல் சற்று விரிந்த பூ இதழ்களின் மீது தவழ்ந்து சென்று நாலு பக்கமும் நறுமணத்தைப் பரப்பிற்று.
பட்சிகளின் கீதத்துக்குச் சுருதி போடுவதுபோல் தூரத்தில் கடலின் ‘ஹோ’ என்ற ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
சம்பு சாஸ்திரி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து மனோகரமான பூபாள ராகத்தில், “கௌஸ்ல்யா ஸுப்ரஜா ராமா” என்ற ராமாயண சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“தாத்தா! தாத்தா!” என்றாள் சாரு.
“முழிச்சுண்டயா, அம்மா! எங்கே, எழுந்து உட்காரு” என்றார் சம்பு சாஸ்திரி.
“நான் முழிச்சுக்கலை; இன்னும் தூங்கிண்டு தான் இருக்கேன்” என்றாள் சாரு.
“அப்படின்னா, தூங்கினபடியே, நேத்திக்கு ஸரஸ்வதி ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுத்தேனே, அதைச் சொல்லு, பார்க்கலாம்” என்றார் சாஸ்திரி.
சாரு, உடனே எழுந்து உட்கார்ந்தாள். “எங்கே, சொல்லிக் கொடு தாத்தா, சொல்றேன்” என்றாள்.
சாஸ்திரிகள், “ஜய ஜய தேவி தயாலஹரி” என்ற கீதத்தை ஆரம்பித்துச் சொல்லிக் கொடுத்தார். சாருவும் சொல்லிக் கொண்டு வந்தாள். ஆனால், பாதிப் பாட்டில் திடீரென்று அவள் நிறுத்திவிட்டு, “தாத்தா! தாத்தா! கொஞ்சம் இரு, தாத்தா வர்றேன்!” என்று கூறிவிட்டு, வாசலில் ஓடினாள்.
ஒரு நிமிஷத்துக்கெல்லாம், “தாத்தா! இங்கே வாயேன், சீக்கிரம் வாயேன்” என்று சாரு வாசலிலிருந்து கூவுவதைக் கேட்டு, சாஸ்திரிகள் குடிசைக்கு வெளியே வந்தார்.
“பார்த்தாயா, தாத்தா! நம்மாத்துச் செடியிலே ரோஜாப்பூ பூத்திருக்கு. நேத்தி சாயங்காலம் மொட்டாயிருந்தது. இப்பப் பூவாய்ப் போயிடுத்து, தாத்தா!” என்று கூச்சலிட்டாள்.
சம்பு சாஸ்திரி, வைகறையின் மங்கிய வெளிச்சத்தில், அந்த மலர்ந்த ரோஜாவையும், சாருவின் மலர்ந்த முகத்தையும் மாறி மாறிப் பார்த்துச் சந்தோஷப்பட்டார்.
சாரு, பூவைத் தொடுவதற்குப் போனாள். கையை சுருக்கென்று முள் குத்தவே, “அப்பப்பா!” என்று கையை உதறினாள்.
“தாத்தா! நேத்திக்கு எங்க டீச்சர் கூடச் சொன்னா, ரோஜாப் பூவிலே முள் இருக்காப்பலே, சுகத்திலேயும் கஷ்டம் இருக்கும்னு. ஸ்வாமி என்னத்துக்காக, தாத்தா, இவ்வளவு அழகான பூச்செடியிலே கொண்டு போய் முள்ளை வைச்சிருக்கார்?” என்று கேட்டாள். “சாரு, உலகத்திலே எல்லாரும் அப்படித்தான் சொல்ற வழக்கம். ரோஜாவிலே முள் இருக்கேன்னு வருத்தப்படுவார்கள். ஆனால், ஒரு பெரியவர் இதை வேறு தினுஸாகச் சொல்லியிருக்கார்; ‘ரோஜாவிலே முள் இருக்கேன்னு வருத்தப்படக் கூடாது; முள்ளிலே ரோஜா இருக்கேன்னு சந்தோஷப்படணும்’ என்று அவர் சொன்னார். அந்த மாதிரிதான். உலகத்திலும் சுகத்துக்கு நடுவிலே கஷ்டம் இருக்கேன்னு வருத்தப்படக்கூடாது; இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலே சுகமும் இருக்கேன்னு சந்தோஷப்படணும்” என்றார் சாஸ்திரி.
இந்தத் தத்துவமெல்லாம் சாருவுக்குச் சரியாகப் பிடிபடவில்லை. ஆகவே, அவள், “சரி, தாத்தா! நான் பல் தேய்க்கப் போறேன், தாத்தா!” என்று போய் விட்டாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் நல்லான் மனைவி வந்து சாருவுக்குத் தலையை வாரிப் பின்னிவிட்டாள். கையில் சங்கு வளையல்களும், கழுத்தில் மணி மாலைகளும் போட்டு அலங்காரம் செய்தாள். இதற்குள் தாத்தா காய்ச்சி வைத்திருந்த பாலைச் சாப்பிட்டுவிட்டு, சாரு அவரிடம் சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடம் கிளம்பினாள். அவளுடன் சாவடிக் குப்பம் குழந்தைகள் இன்னும் சிலரும் புறப்பட்டார்கள்.
பள்ளிக்கூடத்துக்குக் கொஞ்ச தூரம் அவர்கள் நடந்து போயாக வேண்டும். வழியில் அவர்களுடைய கண்ணில் பட்ட மரங்கள் எல்லாம் பழைய காய்ந்த இலைகள் உதிர்ந்து போய், புதிய இளந்தளிர்கள் விட்டுத் தளதளவென்று காணப்பட்டன. மாமரங்களில் புதுத்தளிர்களுடன் பூக்களும் நிறைந்திருந்தன. இதனால் உலகமே புதுமை பெற்று விளங்கியது போல் இருந்தது. வஸந்த காலத்தின் உற்சாகத்தினால், சாலையின் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளும், கன்றுக் குட்டிகளும் துள்ளி விளையாடின. அதைப் பார்த்த சாருவுக்கும் துள்ளி குதித்து ஓட வேண்டுமென்று தோன்றியது.
அப்புறம் பங்களாக்கள் வந்தன. பங்களாக்களின் தோட்டங்களில் புஷ்பச் செடிகள் அபரிமிதமாகப் புஷ்பித்திருந்தன. ஒரு நாகலிங்க மரம் ஏராளமாகப் பூக்கள் பூத்துக் குலுங்கிற்று. அதிலிருந்து வந்த வாசனை நெடுந்தூரம் பரவிற்று.
வழியெங்கும் விதவிதமான வர்ண இறகுகள் உள்ள பட்டுப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அந்தப் பட்டுப் பூச்சிகளைப் பார்க்க பார்க்க, சாருவின் உற்சாகம் பன்மடங்கு பெருகிற்று. கையிலிருந்த புத்தகப் பையைச் சாலை ஓரத்திலிருந்த மதகின் மேல் வைத்துவிட்டு, சாரு அந்தப் பட்டுப் பூச்சிகளைப் போல் தானும் இரண்டு கைகளையும் ஆட்டிக் கொண்டு பறக்க முயன்றாள். கூட வந்த குழந்தைகள், “இதென்னடி சாரு, இங்கேயே ஆரம்பிச்சிட்டே! பள்ளிக்கூடம் போய் ஆடலாம் வா!” என்று சொல்லி, அவளைக் கையைப் பிடித்து இழுத்து அழைத்துக் கொண்டு போனார்கள்.
சாரு பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தாளோ இல்லையோ மற்றச் சிறுவர்களும் சிறுமிகளும் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள், “சாரு! ஒரு டான்ஸு பண்ணு!” என்று தலைக்குத் தலை கேட்டார்கள். “தெருவில் வாரானோ!” “இல்லை இல்லை; கிருஷ்ணா நீ பேகனே” என்று இம்மாதிரி கூச்சலிட்டார்கள்.
இதற்குள் சாருவின் உபாத்தியாயினி ஜனகம்மாள் அங்கு வந்தாள். “இதென்ன கூச்சல்? மணி அடிக்கப் போறது! எல்லாரும் அவாவா கிளாஸுக்குப் போங்க” என்றாள்.
குழந்தைகள், “டீச்சர்! டீச்சர்! சாரு ஒரு டான்ஸு பண்ணட்டும், டீச்சர்! நீங்க பாடுங்கோ, டீச்சர்” என்று கூச்சலிட்டார்கள்.
“சரி, ஒரே ஒரு பாட்டுப் பாடறேன். அப்புறம் அவாவா கிளாஸுக்கு உடனே போயிடணும்” என்று ஜனகம்மாள் சொன்னாள்.
ஜனகம்மாளுக்குச் சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளில் விசேஷ ஆர்வம் உண்டு. சங்கீதத்தில் கொஞ்சம் பயிற்சி இருந்தது. நாட்டியம் நிறையப் பார்த்திருந்தாள். இப்படித் தனக்குத் தெரிந்ததை வைத்துக் கொண்டு குழந்தைகளையும் மேற்சொன்ன கலைகளில் பயில்வித்து வந்தாள். வருஷந்தோறும் பள்ளிக்கூடத்துச் சிறுமிகளைக் கொண்டு கதம்பக் கச்சேரி ஒன்று அந்தப் பள்ளிக்கூடத்தில் நடத்துவது உண்டு. இதற்குக் குழந்தைகளைத் தயாரிப்பவள், ஜனகம்மாள்தான். இந்த வருஷத்தில் அவர்களுடைய பள்ளிக்கூடத்தின் கட்டிட நிதிக்குப் பணம் சேகரிப்பதற்காக ஒரு நாடகம் நடத்தலாமென்று தீர்மானித்திருந்தார்கள். இதற்காகக் குழந்தைகளைப் பொறுக்கி எடுத்தபோது, சாருவுக்கு நாட்டியம் ரொம்ப நன்றாய் வருமென்பதை ஜனகம்மாள் கண்டுபிடித்தாள். ஏற்கெனவே சாருவின் பேரில் அவளுக்கு ரொம்பப் பிரியம். இப்பொழுதோ கேட்க வேண்டியதில்லை. இந்த வருஷத்து நாடகத்தில், சாருதான் பள்ளிக்கூடத்துக்கே பெயர் வாங்கிக் கொடுக்கப் போகிறாள் என்று அவள் நம்பியிருந்தாள். ஆகவே வகுப்பின் மற்றப் பாடங்களையெல்லாங்கூட அலட்சியம் செய்து, சாருவுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுப்பதில் ஊக்கம் கொண்டிருந்தாள்.
ஜனகம்மாள் “கிருஷ்ணா நீ பேகனே பாரோ” என்ற கன்னடப் பாட்டுக்குச் சரியாகத் தமிழில் ஒரு பாட்டு தானே கவனம் செய்திருந்தாள். அதை இப்போது பாடினாள்.
சாரு, அந்தப் பாட்டின் அர்த்தத்துக்குத் தகுந்தபடி அபிநயம் பிடித்துக் கொண்டு ஆடினாள்.
குழந்தைகள் அளவிலாத ஆர்வத்துடன் சாருவின் ஆட்டத்தைப் பார்த்து அநுபவித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே கையைக் கொட்டி, அவர்கள் சாருவை உற்சாகப்படுத்தினார்கள்.
சாருவின் அபிநய ஆட்டம் அவளுடைய வாத்தியாரம்மாளுக்கே வியப்பையளித்தது. ‘நாம் ஏதோ காமா சோமா என்று சொல்லிக் கொடுத்ததற்கே இவ்வளவு நன்றாய் வந்திருக்கிறதே! இன்னும் இந்தக் குழந்தைக்குத் தக்கபடி பயிற்சி அளித்தால் எவ்வளவு நன்றாய் ஆடுவாள்?’ என்று எண்ணினாள்.
பள்ளிக்கூடத்து முதல் மணி அடித்தது; கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இரண்டாவது மணியும் அடித்தது.
ஆனால் சாருவின் ஆட்டம் நடந்து கொண்டேயிருந்தது. வகுப்புகளெல்லாம் காலியாய்க் கிடந்தன.
பள்ளிக்கூடத்தின் ஹெட் மிஸ்ட்ரஸ், காலியாகக் கிடந்த வகுப்புகளைப் பார்த்துக்கொண்டு, கடைசியில் ஆட்டம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் வந்தாள். அவளுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
அந்த ஹெட் மிஸ்ட்ரஸ் இந்தப் பள்ளிக்கூடத்துக்குப் புதிதாக வந்தவள். ஆட்டம் பாட்டுக்களினால் பள்ளிக்கூடத்தின் ‘டிஸிப்ளி’னைக் கெடுத்துவிடுவதாக ஜனகம்மாளின்பேரில் அவளுக்கு ரொம்பக் கோபம். ஆனால், பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் குழந்தைகளுக்குப் பாட்டும் ஆட்டமும் சொல்லித் தரவேண்டுமென்று வற்புறுத்தியபடியினால் அவள் சகித்துக்கொண்டிருந்தாள். இப்போது வகுப்புகளே நடக்காதபடி ஜனகம்மாள் பள்ளிக்கூடத்தையே குட்டிச் சுவராக்குவதைக் கண்டதும் அவளுக்குச் சொல்ல முடியாத கோபம் வந்துவிட்டது.
கோபத்தை ஜனகம்மாளின் பேரில் காட்ட முடியவில்லை; எனவே, அந்தக் கோபம் சாருவின்மேல் பாய்ந்தது.
மேஜையின் பேரில் கையில் இருந்த பிரம்பினால் ஓங்கி அடித்தாள் ஹெட் மிஸ்ட்ரஸ். எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.
“டீச்சர்! கலாட்டா போதுமா?” என்றாள். உடனே ஜனகம்மாள் குழந்தைகளை அவரவர்கள் வகுப்புக்குப் போகும்படி ஜாடை காட்டி விட்டுத் தானும் போனாள். குழந்தைகள் விழுந்தடித்து அவரவர்களுடைய வகுப்புக்கு ஓடினார்கள். பாவம்! சாரு மட்டும் பின் தங்கி விட்டாள்.
“சாரு! கம் ஹியர்!” என்றாள் ஹெட் மிஸ்ட்ரஸ்.
சாரு தயங்கிக் கொண்டே அடிமேல் அடி வைத்து வந்தாள்.
“உன் கார்டியன் யார்?” என்று ஹெட் மிஸ்ட்ரஸ் கேட்டாள்.
“சம்பு சாஸ்திரி” என்றாள் சாரு.
“யாரு?”
“சம்பு சாஸ்திரி!”
“அவர் உங்க அப்பாவா?”
“இல்லை, எங்க தாத்தா!”
“உங்க அப்பா யாரு?”
“எங்க அப்பா இல்லை.”
“அம்மா?”
“அம்மாவும் இல்லை.”
“அவாள்ளாம் எங்கே?”
“அவா பொறக்கவேயில்லை. நான் மட்டுந்தான் பொறந்தேன்” என்றாள் சாரு.
வேறு யாராயிருந்தாலும் இம்மாதிரி குழந்தை சொன்னவுடன் கோபம் தணியப் பெற்றிருப்பார்கள். ஆனால், அந்த அம்மாளுக்குக் கோபம் அதிகமாயிற்று.
“அப்பா அம்மா இல்லையா? ஓஹோ! அதனாலேதான் இப்படித் துஷ்டத்தனம் பண்ணறே? இங்கே வா! கையை நீட்டு!” என்றாள்.
சாரு அன்று சாயங்காலம் வீட்டுக்குப் போனபோது, சாஸ்திரி எங்கேயோ வெளியில் போயிருந்தார். சாரு, சாஸ்திரியாரின் பூஜை மாடத்துக்கு முன்னால் நின்று, “அம்பிகே! பராசக்தி! நீ நினைச்சால் முடியாதது ஒண்ணுமில்லைன்னு தாத்தா சொன்னாளே! எனக்கு ஓர் அம்மா கொடுக்கக் கூடாதா, நல்ல அம்மாவா?” என்று பிரார்த்தனை செய்தாள்.
ஹெட் மிஸ்ட்ரஸ் சாருவின் கையில் சுளீரென்று பிரம்பினாள் அடித்த போது சாருவுக்கு வலித்ததென்றாலும் சற்று நேரத்துக்கெல்லாம் அந்த வலி மறந்து போயிற்று. ஆனால், “அப்பா அம்மா இல்லாததனால் தான் இப்படித் துஷ்டத்தனம் பண்றே!” என்று சொன்னது மட்டும் மறக்கவேயில்லை. அவளுடைய குழந்தை உள்ளத்தில் அதனால் ஏற்பட்ட வலியும் மாறவில்லை. ஆகையினால் தான், அம்பிகையை அவ்வாறு பிரார்த்தனை செய்தாள்.
குழந்தையின் பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டே சாஸ்திரி உள்ளே வந்தார். புன்னகையுடன் அவர் சாருவை அணைத்துக் கொண்டு, “உனக்கு அம்மாவா வேணும். சாரு! பராசக்திதான் உனக்கு அம்மாவாச்சே! வேறு அம்மா என்னத்துக்கு, சாரு?” என்று கேட்டார்.
“பராசக்திதான் எனக்கு அம்மான்னாக்கே பராசக்தியை வந்து என்னை மடியிலே எடுத்து வைச்சுக்கச் சொல்லேன். எல்லா அம்மாவும் அவாவா குழந்தையை மடியிலே வச்சுக்கலையா?” என்றாள் சாரு.