BooksKalki TimesStory

Thyaga Bhoomi Kalki Part4 Ilavenil

அத்தியாயம் 15
சாரு எங்கே?

தொட்டிலில் படுத்துத் தூங்குவதுபோல், கட்டை வண்டியில் ஆனந்தமாகத் தூங்கிய சாரு அதிகாலை நேரத்தில் பட்சிகள் பாடிய திருப்பாவையைக் கேட்டுத் துயிலெழுந்தாள். பக்கத்தில் கையால் தடவிப் பார்த்தாள். தாத்தா இல்லாமற் போகவே, “தாத்தா!” என்று அலறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். ஏற்கெனவே எழுந்திருந்து வண்டியின் பின்னால் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த சம்பு சாஸ்திரி, “ஏன், சாரு! இன்னும் சற்றுத் தூங்கேன்” என்றார். சாரு அவரைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, “நான் பயந்து போய் விட்டேன், தாத்தா! முன்னே மாதிரி எங்கே என்னை விட்டுட்டுப் போய்விட்டயோன்னு பார்த்தேன்” என்றாள்.

சம்பு சாஸ்திரி சிரித்துக் கொண்டார்.

“தாத்தா! உன்னை விட்டுட்டு நான் அந்த மாமி வீட்டுக்குப் போனதிலிருந்து, அடிக்கடி உன்னைப் பத்தி சொப்பனம் கண்டுண்டிருந்தேன். நீ என்னைச் சொப்பனத்திலே பார்த்தாயோ?” என்றாள் சாரு.

“இல்லை, சாரு! நான் உன்னைச் சொப்பனத்திலே பார்க்கலை. ஆனால், ஏன் தெரியுமா?” என்று சாஸ்திரி கேட்டார்.

“ஏன்னா, உனக்கு என் மேலே ஆசை இல்லை.”

“அதுதான் தப்பு. சொப்பனம் எப்ப காணுவா எல்லாரும்? தூங்குகிற போது தானே? உன்னைப் பிரிஞ்ச அப்புறம் நான் தூங்கவே இல்லை, சாரு!” என்று சாஸ்திரி சொன்னார்.

அதைச் சரியாய்க் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல், “தாத்தா, தாத்தா! அதோ ‘ரிகிங் ரிகிங்’ என்று ஒரு பட்சி கத்தறதே, அது என்ன பட்சி, தாத்தா?” என்று சாரு கேட்டாள்.

இந்த மாதிரி ஒவ்வொரு பட்சியின் குரலையும் தனித்தனியே கண்டுபிடித்துத் தாத்தாவை அது என்ன பட்சி என்று கேட்டு வந்தாள். அவரும் தெரிந்த வரையில் சொல்லிக் கொண்டு வந்தார்.

கிழக்கே சூரியன் தகதகவென்று புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம், சாலை ஓரத்தில் ஓர் அழகான குளம் தென்பட்டது. வண்டியை நிறுத்தச் சொல்லி, சாஸ்திரியும் சாருவும் இறங்கி அந்தக் குளக்கரைக்குச் சென்றார்கள்.

சாரு, இந்த மாதிரி நாட்டுப் புறத்தையும், குளத்தையும் இதற்கு முன் பார்த்ததே கிடையாது. ஆகையால், அவளுக்கு அளவிலாத சந்தோஷம் உண்டாயிற்று. குளத்தில் பூத்திருந்த தாமரையையும், அதைச் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் செய்த வண்டையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள். குளக் கரையிலிருந்த மரங்களின் மீது அணிற்பிள்ளைகள் துள்ளி ஓடுவதைப் பார்த்தபோது, அவளுக்குத் தானும் ஓர் அணிற் பிள்ளையாக மாறி மரத்தின் மீது துள்ளி ஓட வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. குளத்தில் வாத்துக்களைப்போல் நீந்த வேண்டுமென்றும், வானத்தில் பட்சிகளைப் போல் பறக்க வேண்டுமென்றும் ஆசை கொண்டாள். வண்டாக மாறித் தாமரைப் பூவைச் சுற்றிச் சுற்றி வரவேண்டுமென்று விரும்பினாள். குளத்து ஜலத்தில் காலை வைத்ததும் மீன்கள் சுற்றிக் கொண்டு கொத்தின. அப்போது உண்டான குறுகுறுப்பு அவளுக்கு மிகுந்த குதூகலத்தை அளித்தது. ஜலத்தில் காலை வைப்பதும், மீன்கள் கொத்த ஆரம்பித்தவுடன் எடுப்பதும் அவளுக்குப் பெரிய விளையாட்டாயிருந்தது.

சாஸ்திரியார் இதற்குள் காலைக் கடன்களையெல்லாம் முடித்துவிட்டு, சாருவை அருகில் அழைத்து உட்கார வைத்தார். “குழந்தை! பாரதத் தாயைப் பற்றி உனக்கு ஒரு பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன், கற்றுக் கொள்ளுகிறாயா?” என்று கேட்டார்.

“பேஷாய்க் கத்துக்கறேன்” என்றாள் சாரு.

“இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு கனியுங் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரு நாடு”

என்று சம்பு சாஸ்திரி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

காலையில் குளக்கரைக்கு வந்த கிராமவாசிகள் சிலர் சம்பு சாஸ்திரி சாருவுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டுவிட்டுப் போய், “யாரோ ஒரு பெரியவரும் குழந்தையும் வந்திருக்கிறார்கள்” என்ற செய்தியை ஊரில் பரப்பினார்கள். அதே சமயத்தில், சென்னையில் ‘வஸந்த விஹாரம்’ அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்தது. வழக்கம் போல் அன்று காலை உமாராணி கண் விழித்தெழுந்ததும், “சாரு!” என்று கூப்பிட்டாள். கட்டிலைப் பார்த்தாள்; குழந்தையைக் காணவில்லை. ‘இன்றைக்கு என்ன குழந்தை அதற்குள் இறங்கிக் கீழே போய்விட்டாள்?’ என்று எண்ணிக் கொண்டு கீழே வந்தாள். வேலைக்காரர்களை விசாரித்தாள். அவர்கள் தங்களுக்குத் தெரியாதென்றார்கள். “தோட்டத்திலே இருக்கிறாளா பாருங்கள்! எங்கேயாவது பூச்செடி கிட்ட நின்று கொண்டிருப்பாள்” என்றாள்.

வேலைக்காரர்கள் சற்று நேரத்துக்கெல்லாம் வந்து தோட்டத்தில் எங்கும் காணவில்லை என்றார்கள்.

காப்பி சாப்பிடும் நேரம் ஆயிற்று. இன்னும் குழந்தையைக் காணோம். உமாவுக்கு இப்போது கவலை உண்டாயிற்று. வேலைக்காரர்களை விட்டு மறுபடியும் மாடியிலும் தோட்டத்திலும் நன்றாய்த் தேடச் சொன்னாள். ஒன்றும் பிரயோஜனமில்லை. அதற்குள் ஒரு வேலைக்காரி, அதிகாலையில் தான் வந்தபோது கதவெல்லாம் திறந்து கிடந்தது என்று சொன்னாள்.

நேரம் ஆக ஆக, உமாவின் பதைபதைப்பு அதிகமாயிற்று. ‘ஒருவேளை தாத்தாவைப் பார்ப்பதற்கு ஒண்டியாகப் போய்விட்டாளோ குழந்தை!’ என்று நினைத்தாள். உடனே, மோட்டாரைக் கொண்டு வரச் சொல்லி ஏறிக்கொண்டு விரைவாகச் சாவடிக் குப்பத்துக்கு விடச் சொன்னாள்.

வண்டி சாவடிக் குப்பத்தை அடைந்த போது, அங்கே சம்பு சாஸ்திரியின் குடிசை வாசலில் ஏழெட்டுப் பேர் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் நல்லானும் அவனுடைய மனைவியும் மைத்துனனும் இருந்தார்கள்.

உமா வண்டியிலிருந்து இறங்கி மிகுந்த மனக்கலக்கத்துடன் அவர்களிடம் வந்து, “சாஸ்திரி ஐயா வீட்டிலே இருக்காங்களா?” என்று கேட்டாள்.

அவங்களைத்தான் அம்மா, காணோம்! போகப் போறேன் போகப் போறேன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. கடைசியிலே, போய்விட்டாங்க போலிருக்கு” என்றான் நல்லான்.

“நான் தான் அப்பவே சொன்னேனே, ஐயாவுக்கு எப்போது போகவேணுமென்று தோணிப் போச்சோ, இனிமே இங்கே இருக்கமாட்டாங்கன்னு?” என்றான் சின்னசாமி.

“அவங்க இவ்வளவு பிடிவாதமாயிருப்பாங்கன்னு தெரிஞ்சா, நானும் அவங்களோட கிளம்பியிருப்பேனே?” என்றான் நல்லான்.

நல்லானுடைய மனைவி உமாராணியைச் சுட்டெரித்திடுபவள் போலப் பார்த்து, “நீ வந்தாலும் வந்தே, அம்மா, எங்களுக்கெல்லாம் சனியன் பிடிச்சுடுத்து. குழந்தையை உன் வூட்டிலே விட்டுட்டு வந்ததிலேயிருந்து, ஐயாவுக்கு மனசே சரியாயில்லை. அதுதான் ஊரை விட்டே போய்ட்டாங்க” என்றாள்.

உமாவுக்கு இந்த வார்த்தை புண்ணிலே கோலை விட்டுக் குத்துவது போல் இருந்தது. ஆனாலும், தனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்ற எண்ணமும் கூட இருந்தது. இதனால் ஒரு நிமிஷம் பேச நாவெழாமல் தத்தளித்தாள். பிறகு சமாளித்துக் கொண்டு, “என் பேரிலே பிசகுதான். ஆனால், நீங்கள்ளாம் கவலைப்பட வேண்டாம். ஐயாவை எப்படியாவது கண்டு பிடிச்சு உங்களண்டை கொண்டு வந்து சேர்க்கிறேன்” என்றாள்.

“அப்படியே கொழந்தையையும் சேர்த்துக் கொண்டாந்து விட்டுடுங்கோ! அம்மா! சாரு போனதிலிருந்து எங்க குப்பம் களையேயில்லாமே போச்சு!” என்றான் அங்கு நின்றவர்களில் ஒருவன்.

உமா விரைந்து சென்று வண்டியில் ஏறிக் கொண்டாள். அவள் மனம் சொல்ல முடியாத வேதனையை அநுபவித்துக் கொண்டிருந்தது. எப்படியோ அப்பாவும் சாருவும் சந்தித்து இரண்டு பேருமாய்ப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள்; தன்னிடமுள்ள வெறுப்பினால்தான், அப்படிச் சொல்லாமலே கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். ‘ஐயோ! பாவி, என்ன காரியம் செய்தேன்! அப்போதே அவர் காலிலே விழுந்து ‘அப்பா’ன்னு கதறி மன்னிப்புக் கேட்காமல் போனேனே! என்னென்னமோ யோசனை பண்ணிண்டு இருந்துட்டேனே? இப்போது மோசம் போயிடுத்தே! தள்ளாத கிழவரையும், சின்னக் குழந்தையையும் ஊரை விட்டுத் துரத்தினேனே, பாவி! எங்கே போனார்களோ, என்னமோ தெரியவில்லையே? அகப்பட்டாலும் என்னை முகமெடுத்துப் பார்ப்பார்களா? இனிமேல், நிஜத்தைச் சொன்னால்கூட அப்பா நம்புவாரோ என்னமோ தெரியவில்லையே!’

‘நல்லான்! நீயல்லவா உத்தமன்? ஊரை விட்டுக் கிளம்புகிற போது, “எஜமானைக் கவனிச்சுக்கோ!” என்று சொல்லிவிட்டு வந்தேன். அப்படியே இந்தப் பட்டணக் கரையிலே வந்து கூட நீ அவரை வைத்துப் பராமரித்திருக்கிறாய்! அவருடைய சொந்தப் பெண் நான், இந்த மாதிரி அவரை ஊரைவிட்டே துரத்திவிட்டேன்!’ – இம்மாதிரி உமா துயரச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போதே, வண்டி மறுபடியும் ‘வஸந்த விஹார’த்தை அடைந்தது.


Thyaga Bhoomi Tags

Thyaga Bhoomi Kalki Part4 Ilavenil
Thyaga Bhoomi Kalki,Thyaga bhoomi part 2 kalki,Thyaga bhoomi part 4 kalkiThyaga bhoomi part3 pani,thyaga bhoomi,kodai,pani,malai,thyaga bhoomi kalki novel,thyaga bhoomi story,thyaga bhoomi book,Thyaga bhoomi part 4,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *