Thyaga Bhoomi Kalki Part4 Ilavenil
அத்தியாயம் 8
கதம்பக் கச்சேரி
“குழந்தைகள் டிராமா தானேன்னு அவாளுக்கெல்லாம் அலட்சியம் போல் இருக்கு” என்று சாரு கண்ணில் நீர் ததும்ப உமாராணியிடம் சொன்னாளல்லவா? அவள் சொன்னது உண்மையாகவே இருக்கலாம். ஆனால், மியூஸியம் தியேட்டரில் அன்று சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்தவர்களுக்கு குழந்தை சொன்னதில் நம்பிக்கை ஏற்படாது. அவ்வளவு கனதனவான்களும் சீமாட்டிகளும் தியேட்டரில் வந்து நிறைந்திருந்தார்கள்.
இவ்வாறு கூட்டம் சேர்ந்ததற்குக் காரணம் குழந்தைகளின் கதம்பக் கச்சேரியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மட்டுமல்ல என்பதைச் சொல்ல வேண்டும். அத்துடன் உமாராணியைப் பார்க்கலாமென்ற ஆசையும் சேர்ந்திருந்தது. உமாராணி இருபது டிக்கெட் வாங்கிக் கொண்ட செய்தியைக் குழந்தைகள் போய் வாத்தியாரம்மாளிடம் சொல்ல, அவள் பள்ளிக்கூட நிர்வாகிகளிடம் சொல்ல, அவர்கள் நேரில் போய் உமாராணியை அழைத்துவிட்டு வந்ததோடல்லாமல் நகரில் பிரஸ்தாபமும் செய்து விட்டார்கள். இந்தச் செய்தி பரவிவிடவே, அன்று மாலை மியூஸியம் தியேட்டரில் சென்னை நகரின் பிரசித்தி வாய்ந்த ஸ்திரீ புருஷர்கள் பெரும்பாலோரைக் காணும்படியிருந்தது.
ஐந்து மணிக்குக் கச்சேரி ஆரம்பமாக வேண்டும். ஆனால், ஐந்து அடித்துப் பத்து நிமிஷம் ஆகியும் ஆரம்பமாகவில்லை. சாதாரணமாய், இந்த மாதிரி தாமதமானால், சபையோர் கைதட்டி ஆரவாரிப்பது வழக்கம். இன்று அப்படி ஒன்றும் நடக்கவில்லை. “இன்னும் உமாராணி வரவில்லை; அவள் வந்தவுடன் ஆரம்பிப்பார்கள்” என்று சபையோர் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவராவது மேடைப் பக்கம் திரை தூக்குகிறார்களா என்று கவனிக்கவில்லை. எல்லாரும் வாசற் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியாக, வாசலில் ஏதோ கலகலப்புச் சப்தம் கேட்டது. அடுத்த நிமிஷம், பள்ளிக்கூடத்தின் முக்கிய நிர்வாகியாகிய ராவ்சாகிப் கஜகுல ஆஜாநுபாகு அவர்கள் வழி காட்டிக் கொண்டு வர, பின்னால் வக்கீல் ஆபத்சகாமய்யர் தொடர, உமாராணி உள்ளே பிரவேசித்தாள். சொல்லி வைத்தாற்போல் சபையில் எல்லாரும் கரகோஷம் செய்தார்கள். உமாராணி கும்பிட்டுக் கொண்டே போய், முன்னால் தனக்காகப் போடப்பட்டிருந்த தனி ஸோபாவில் உட்கார்ந்திருந்தார்கள்.
உடனே திரை தூக்கப்பட்டது. “ஜன கண மன” என்ற தேசிய கீதத்துடன் கதம்பக் கச்சேரி ஆரம்பமாயிற்று.
புரோகிராமில் மொத்தம் ஒன்பது அங்கங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அவற்றுள் மூன்றில் சாருமதியின் பெயர் காணப்பட்டது. முதலில், சாருமதியின் பரத நாட்டியம். பிறகு, கிருஷ்ண லீலா நாடகத்தில் சாருமதி கிருஷ்ண வேஷம். கடைசியில், சாருமதியும் யமுனாவும் ராதா கிருஷ்ண நடனம்.
ஒவ்வொரு தடவையும் சாரு மேடைக்கு வரும் போதெல்லாம் சபையில் நிசப்தம் குடிகொண்டிருக்கும். சபையோரின் கவனத்தை அவள் அவ்வாறு கவர்ந்து விடுவாள். சாரு உள்ளே சென்றதும் சபையில் கலகலப்பு ஏற்படும். பெரும்பாலோர் உமாராணி என்ன செய்கிறாள் என்பதைக் கவனிக்கத் தொடங்குவார்கள். இதற்காகச் சிலர் தலையைத் தூக்கிப் பார்ப்பதும், எழுந்து நிற்பதும், பின்னாலிருபப்வர்கள் அவர்களை அதட்டி உட்காரச் செய்வதும் சர்வ சாதாரணமாயிருந்தது.
ஆனால், உமாவோ இவை ஒன்றையும் கவனிக்கவில்லை. குழந்தை சாருவின் பரத நாட்டியத்தைப் பார்த்ததுமே அவளுக்கு மெய்ம்மறந்து போய்விட்டது. நாட்டியம் முடிந்ததும் உமா, பக்கத்திலிருந்த வக்கீல் ஆபத்சகாயமய்யரைப் பார்த்து, “இந்தக் குழந்தை எவ்வளவு நன்றாய் நாட்டியம் ஆடுகிறது, பார்த்தீர்களா? முகத்தில் என்ன களை! இந்தக் குழந்தை யார் என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டாள்.
“எனக்குத் தெரியாதே?” என்றார் வக்கீல். பிறகு “நீங்கள் மெட்ராஸுக்குப் புதிசல்லவா? அதனாலே அப்படித் தோணுகிறது. இந்த மாதிரி குழந்தைகள் நாட்டியம் செய்யறது ரொம்ப சாதாரண விஷயம். பாருங்கோ, என்னுடைய குழந்தைக்குக் கூட நாட்டியத்திலே ரொம்ப ‘டேஸ்ட்’. சொல்லிக் கொடுத்தா நன்னா வரும் என்று எல்லாரும் சொல்றா. ஆத்திலே கூட அடிக்கடி டான்ஸ் டீச்சர் வைச்சுச் சொல்லிக் கொடுக்கணுமின்னு சொல்றா. ஆனால், எனக்கென்னமோ இந்தப் பைத்தியக்காரத்தன மெல்லாம் ஒண்ணும் பிடிக்கிறதில்லை” என்றார்.
உமாராணி பிற்பாடு வக்கீலிடம் ஒன்றும் பேச்சுக் கொடுக்கவில்லை. மேடை மீதே கவனம் செலுத்தத் தொடங்கினாள். சாரு மேடை மீது இல்லாத சமயங்களில் அவள் எப்போது வருவாள் என்றே அவளுடைய மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அவள் வந்துவிட்டாலோ உமாவுக்குப் பரவசமாயிருந்தது. அவளுடைய ஒவ்வொரு சைகையும் பேச்சும் உமாவுக்கு மயிர்க் கூச்சம் உண்டாக்கிற்று. கச்சேரியில் எட்டாவது அங்கமென்று குறிப்பிட்டிருந்தது ராதா-கிருஷ்ண நடனம். சாரு கிருஷ்ணன் வேஷத்திலும், யமுனா என்னும் பெண் ராதை வேஷத்திலும் வந்து நடனம் செய்தார்கள். அன்றைய கச்சேரியில் சிகரமாக விளங்கிய அம்சம் இதுதான். ராதையாக வந்த குழந்தையும் வெகு அழகாகத்தான் ஆடினாள். ஆனால் உமாவின் கண்களுக்கு மேடையில் குழந்தை சாரு மட்டுந்தான் தெரிந்தாள். மற்றக் குழந்தையை அவளால் கவனிக்கவே முடியவில்லை.
இந்த ராதா – கிருஷ்ண நடனம் ஆனதும் சபையில் பிரமாதமான கரகோஷமும் ஆரவாரமும் உண்டாயின. இவற்றுக்கிடையே சபையிலிருந்த பிரமுகர்களில் ஒருவரான திவான் பகதூர் பஞ்சாபகேச சாஸ்திரிகள் மேடை மீதேறினார். நாடகம், நாட்டியம் என்னும் கலைகளைப் பற்றி அவர் விஸ்தாரமாகப் பேசினார். நடராஜாவின் ஆனந்தக் கூத்தில் ஆரம்பித்து, அன்று சாரு ஆடிய ஆட்டத்தில் கொண்டு வந்து முடித்தார். அவருடைய பேச்சு நீண்டு கொண்டே இருந்ததைப் பொறுக்காமல், சபையில் சிலர் அவ்வப்போது கைதட்டினார்கள். கடைசியில் அவர், “இன்று சாரு என்கிற குழந்தை நாட்டியம் ஆடினதைப் பார்த்த போது எனக்குக் கூட நாட்டியம் கற்றுக்கொள்ளலாமென்று ஆசை உண்டாகி விட்டது” என்றதும், சபையில் கொல்லென்ற சிரிப்பு எழுந்தது. இப்படிச் சொல்லிவிட்டு, திவான் பகதூர் பஞ்சாபகேச சாஸ்திரிகள் மேடையிலிருந்து கீழே இறங்கினார். இறங்கும்போது, கால் நொடித்துத் தடுமாறி விழுந்தார். அப்போது சபையில் உண்டான கோலாகலத்தின் சப்தம் வானத்தை அளாவிற்று.
பிறகு, கஜகுல ஆஜாநுபாகு அவர்கள் கையில் ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையுடன் மேடையின் மீது ஏறினார். சபையில் அதிருப்தியின் சின்னங்கள் அதிகமாயின. ஆனால் ஆஜானுபாகு வாயைத் திறந்து பேச ஆரம்பித்ததும், அதிருப்தி மாறி மௌனம் குடிகொண்டது.
“சபையோர்களே, என் சிநேகிதர் மகா-௱-௱-ஸ்ரீபஞ்சாமிர்த – இல்லை, மன்னிக்கணும் – பஞ்சாபகேச சாஸ்திரிகளைப்போல் நான் பெரிய பிரசங்கம் செய்ய வரவில்லை. (சிரிப்பு) ரொம்பவும் சந்தோஷமான ஒரு கடமையைச் செய்வதற்காக உங்கள் முன்னால் வந்து நிற்கிறேன். இன்று ஒரு சுபதினம். ஸ்ரீமதி உமாராணி தேவி அவர்கள் இவ்விடம் இன்று விஜயம் செய்திருப்பது நமது பள்ளிக்கூடத்தின் பாக்கியம் (கரகோஷம்). நமது பள்ளிக்கூடத்தின் கட்டிட நிதியைப் பற்றி இனிமேல் நமக்குக் கவலையில்லை. (கரகோஷம்). ஸ்ரீமதி உமாராணி தேவி மனசு வைத்தால் நமது பள்ளிக்கூடம் அடுத்த வருஷமே ஹைஸ்கூலாகவும் காலேஜாகவுங்கூட மாறிவிடும். உங்கள் சார்பாகவும் எங்கள் பள்ளிக்கூடத்தின் சார்பாகவும் இந்த ஹாரத்தை ஸ்ரீமதி உமாராணி தேவிக்குப் போடுகிறேன்.” (பலமான கரகோஷம்)
இம்மாதிரி சொல்லிவிட்டு, ஆஜானுபாகு பக்கப்படுதாவின் பக்கம் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தார். குழந்தை சாரு அங்கிருந்து வந்தாள். அவளிடம் ஆஜானுபாகு பூமாலையைக் கொடுத்தார். சாரு அந்த மாலையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்கயத்தனித்தாள்.
அப்போது, உமாராணி சட்டென்று தன்னுடைய ஆஸனத்திலிருந்து எழுந்து விரைந்து சென்று மேடை மீது ஏறினாள். சபையில் மறுபடியும் கரகோஷம் உண்டாயிற்று. குழந்தை சாருவினிடமிருந்த பூமாலையை வாங்கிக் கொண்டாள். அதைச் சபையோர் எதிர்பார்த்தார்கள். ஆனால் அடுத்தபடி அவள் செய்த காரியத்தை யாரும் எதிர் பார்க்கவில்லை. அந்த மாலையை உமா, சாருவின் கழுத்தில் போட்டு, அவளுடைய கன்னத்தில் ஒரு முத்தமிட்டு விட்டுக் கீழே இறங்கினாள். அப்போது சபையில் எழுந்த சந்தோஷ ஆரவாரம் மண்டபத்தின் கூரையைப் பிளந்துகொண்டு மேலே சென்று வானை அளாவிற்று என்று சொன்னால் அது மிகையாகாது.
கடைசி அம்சமும் முடிந்ததும், உமாராணி வெளியே சென்று வண்டியில் ஏறிக்கொண்டாள். காரின் அருகில் விடை பெற்றுக்கொள்ள நின்ற வக்கீலிடம், “வக்கீல் ஸார்! அந்தக் குழந்தை யார் வீட்டுக் குழந்தை என்று கொஞ்சம் விசாரிச்சுண்டு வந்து சொல்கிறீர்களா?” என்று கேட்டாள்.
“ஆகட்டும், அம்மா!” என்றார் வக்கீல்.
“மறந்துவிடக் கூடாது. கட்டாயம் விசாரிச்சுண்டு வாங்கோ!” என்றாள்.
‘இது என்ன பைத்தியம்’ என்று வக்கீல் மனத்துக்குள் சிரித்துக் கொண்டார்.