Veedu Thedum Padalam Kalki | Kalki Times
Veedu Thedum Padalam Kalki Short Story Kalki Times
Mr and Mrs Tamilan Presents Kalki Times
அமரர் கல்கியின் சிறு கதைகள்
வீடு தேடும் படலம்
கல்கி
All Kalki Short Stories https://www.youtube.com/watch?v=dI34TwER528&list=PLIkzpcm-6oCFN6yOm0zAVwk9lrlsLwe0u
Kalki Times Presented By Mr and Mrs Tamilan.
http://mrandmrstamilan.com/
https://mrandmrstamilan.com/kalki-books-kalki-krishnamurthy/
Veedu Thedum Padalam Kalki
துவாபர யுகத்து பெர்னார்ட்ஷா என்று பெயர் பெற்ற புரொபஸர் வேதவியாசர் மொத்தம் மூன்றரைக் கோடி வார்த்தைகளைக் கொண்ட பதினெட்டுப் புராணங்களை இயற்றினார் அல்லவா! அந்தப் பதினெட்டுப் புராணங்களையும் நைமிசாரண்ய வனத்தின் சூத புராணிகர் சௌனகாதி முனிவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் கேட்டுவிட்டு அம்முனிவர்கள் “அடடா! பதினெட்டுப் புராணத்திற்குப் பிறகு பத்தொன்பாவது புராணம் இல்லாமற் போய் விட்டதே! இனிமேல் நாங்கள் எதைக் கேட்டுக் கொண்டு தூங்குவோம்?” என்று புலம்பினார்கள். அதற்குச் சூதர், முனிவர்களே கவலை வேண்டாம். பத்தொன்பதாவது புராணமாகிய கலி புராணம் ஒன்று இருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டே நிம்மதியாக தூங்குங்கள்!” என்று சொல்லி கமண்டலத்திலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஆசமனம் செய்துவிட்டு, பத்தொன்பதாவது கலி புராணத்தைக் கூறத் தொடங்கினார்.
அவ்வளவு பெருமை வாய்ந்த கலி புராணத்தில் நாட்டுப் படலத்துக்கும் நகரப் படலத்துக்கும் அடுத்தபடியான வீட்டுப் படலம் வருகிறது. வீட்டுப் படலம் என்றும் சொல்லலாம்! வீடு தேடும் படலம் என்றும் சொல்லலாம்! அல்லது ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டும் இருக்கலாம். எனினும் “கடமையைச் செய்யுங்கள்!” “கடமையைத் தானே செய்யுங்கள்!” “கடமையைக் கட்டாயம் செய்யுங்கள்!” என்று பகவத் கீதையில் பேராசிரியர் கிருஷ்ணபகவான் முக்காலே மூன்று வாட்டியும் கதறியிருப்பதை முன்னிட்டு, இங்கே நாம் எம் கடமையைச் செய்யத் தொடங்குகிறோம்.
திருவல்லிக்கேணியில் திக்கற்ற விக்ன விநாயகர் கோயில் வீதியில் ஸ்ரீ கடோ த்கஜராயர் என்பவர் பன்னெடுங்காலமாகக் குடியிருந்து வந்தார்.
அந்தத் தெருவில் அவர் குடியிருந்த காலத்தில் அவருடைய குடும்பம் வளர்ந்து கொண்டே வந்தது. ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பனாராகி ஹிந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்து வந்தார். இந்தத் தொண்டின் பெருமையைச் சிறிதும் அறியாதவனான அந்த வீட்டின் சொந்தக்காரன் ஒருநாள் திடீரென்றுத் தோன்றி, “என் சொந்த வீட்டுக்கு நான் குடிவர எண்ணியிருக்கிறேன். ஆகையால் வீட்டைக் காலி செய்து அருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
ஸ்ரீ கடோ த்கஜராயருக்கு இது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே அளித்தது. எத்தனை காலந்தான் மாறுதல் என்பதே இல்லாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை நடத்துவது? ஒரே பாழும் வீட்டில் எத்தனை காலம் குடியிருப்பது? அதைக் காட்டிலும் இன்னொரு பாழும் வீட்டுக்கு குடிபோவது ஒரு மாறுதலாயிருக்கலாமல்லவா? பழைய வீட்டுக்காரனுக்கு வாடகை கொடுக்காமல் பல வருஷம் நாமம் போட்டு வந்ததுபோல் புதிய வீட்டுக்காரனுக்கும் நாமம் போடலாம் அல்லவா?
எனவே, புதிய வீடு ஒன்றை வாடகைக்குத் தேடிப் பிடிப்பது என்று கடோ த்கஜராயர் தீர்மானித்தார். அப்போதுதான் மறைந்துபோன அந்தப் பழையக் காலத்தை நினைத்து அவர் பெருமூச்சு விட நேர்ந்தது. அந்த மனிதர் சென்னைப் பட்டணத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை தொடங்கிய போது சென்னை நகரில் எங்கே பார்த்தாலும் ‘டு லெட்’ பலகை தொங்கிக் கொண்டிருக்கும். மலையாளத்து நம்பூதிரி ஒரு தடவை சென்னைப் பட்டணத்தை வந்து பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றதும் என்ன சொன்னான் என்று ஞாபகமிருகிறதல்லவா? “மதராஸிலே உள்ள பணக்காரர்களிலே டு லெட் துரைதான் பெரிய பணக்காரன். எந்தத் தெருவிலே பார்த்தாலும் பத்து எட்டு வீட்டுக்குக் குறையாமல் டு லெட் துரையின் போர்டு தொங்குகிறது” என்று நம்பூதிரி மலையாளத்தில் சொன்னதை நான் மேலே தமிழில் எழுதியிருக்கிறேன்.
அப்படிப்பட்ட வளமையான காலம் இனி எப்போது வரப்போகிறதோ? இன்றைக்குச் சென்னை நகரம் முழுதும் தேடி அலைந்தாலும் ‘டு லெட்’ பலகை ஒன்றைக்கூடப் பார்க்க முடியவில்லையே!
யாரோ சொன்ன யோசனையைக் கேட்டுக் கொண்டு கடோ த்கஜராயர் வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியின் காரியாலயத்தைத் தேடிச் சென்றார். காலி வீடுகளுக்கெல்லாம் அந்த அதிகாரியிடம் ஜாபிதா இருக்கும் என்றும், அவரைக் கேட்டால் ஒருவேளை ஏதேனும் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொடுக்கலாம் என்றும் அவர் கேள்விப்பட்டார்.
எனவே, வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியின் ஆபீஸ் எங்கே என்று துப்பு வைத்து விசாரித்துக் கொண்டு, அந்தக் காரியாலயத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
மேற்படி காரியாலயத்தில் ஒரு மனிதர் மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு எதிரில் பெரிய தஸ்தாவேஜிக் கட்டுக்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அவருடைய படாடோப தோரணையைப் பார்த்த கடோ த்கஜராயர் மிக்க பயபக்தியுடன் நின்று, “ஸார்! தாங்கள்தான் வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியோ?” என்று கேட்டார்.
“ஆம், நாம் தான்! சொல்லுங்கள்!” என்றார் அந்த அதிகார தோரணைக்காரர்.
அவர் ‘நாம் தான்’ என்று சொன்னது கடோ த்கஜராயருக்குச் சிறிது சந்தேகத்தை அளித்தது.
தஞ்சாவூர் ஜில்லா மிராசுதாரர் ஒருவரின் மனைவிக்கு உடம்பு அசௌகரியம் என்று அறிந்த சலுகையுள்ள பண்ணைக்காரன், “எஜமான்! நம்ப சம்சாரத்துக்கு உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டானாம்! அந்த மாதிரியல்லவா இருக்கிறது கதை? இந்த அதிகாரி ‘நாம் தான்!’ என்று சொன்னதன் மர்மம் என்ன?
அந்தச் சந்தேகத்தை மனதிலேயே வைத்துக் கொண்டு “வாடகைக்கு ஒரு வீடு தேவையாயிருக்கிறது. உங்களைக் கேட்டால் கிடைக்கும் என்று சொன்னீர்கள்” என்றார் கடோ த்கஜராவ்.
“நீங்கள் கெஜடட் ஆபீஸரா! அல்லது நான் – கெஜடட் ஆபீஸரா?” என்று மேற்படி ‘நாம் தான் பேர்வழி’ கேட்டார்.
“நான் கெஜடட் ஆபீஸருமில்லை; நான் கெஜடட் ஆபீஸருமில்லை. அதாவது இந்தச் சமயம் நான் ஒரு வித ஆபீஸருமில்லை. நீங்கள் பார்த்து கெஜடட் உத்தியோகமோ, நான் – கெஜடட் உத்தியோகமோ, எது போட்டுக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்கிறேன். நான் பெரிய குடும்பி; ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பன். ஒன்பதுதான் இதற்கு மேலே இல்லை என்று சொல்லவும் முடியாது” என்றார் கடோ த்கஜராயர்.
“விளையாட வேண்டாம்!” என்றார், ‘நாம் தான் பேர்வழி’.
“நான் விளையாடவில்லை. விளையாட்டுக்கு நான் பூரண விரோதி! ‘விளையாட்டு ஒழிக!’ என்று ஓர் இயக்கம் யாராவது ஆரம்பித்தால் அதில் முதலில் நான் தான் சேர்வேன்!” என்றார் ராயர்.
“நீர் கெஜடட் ஆபீஸர் இல்லை; ஆகையால் உமக்கு வீடு கிடைக்காது! போகலாம்!”
“அப்படிச் சொல்லாதீர்கள்! நான் கெஜடட் ஆபீஸருக்கும் மேலே!”
இதைக் கேட்ட அந்த ‘நாம் தான்’ கொஞ்சம் பயமடைந்து மேசைமேல் கிடந்த தமது பாத தாமரைகளைக் கீழே எடுத்து வைத்துவிட்டு, “அப்படியானால் உட்கார்ந்து கொண்டு பேசுங்கள்!” என்று ஒரு நாற்காலியைக் காட்டினார்.
“கெஜடட் ஆபீஸருக்கும் மேலே என்றால், ஒரு வேளை ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தரோ? அல்லது ரெவினியூ போர்டு மெம்பரோ?” என்று கேட்டார்.
“இல்லை; அதற்கும் மேலே!”
“ஹைகோர்ட் ஜட்ஜோ?”
“இன்னும் மேலே!”
“ஆண்டவனே! அப்படியானால் தாங்கள் சட்டசபை அங்கத்தினரோ?”
“இன்னும் கொஞ்சம் மேலே போங்கள், பார்க்கலாம்.”
“எம்.எல்.சி.யோ?”
“இல்லை; இன்னும் மேலே!”
“எம்.எல்.சி.யின் மாமனாரோ? அல்லது மைத்துனரோ? அல்லது ஷட்டகரோ?”
“கிடையாது; இன்னும் கொஞ்சம் மேலே போய்ப் பாருங்கள்!”
“மன்னிக்க வேணும்! ஒரு வேளை தாங்கள் சர்வ வல்லமையுள்ள மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரோ?”
“அதுவும் இல்லை!”
“பின்னே நீ யார்?”
“உம்முடைய சட்டசபை அங்கத்தினர்களையும் மந்திரிகளையும் உண்டாக்கியவன். உம்முடைய ஐ.சி.எஸ். காரர்களுக்கெல்லாம் மாதந்தோறும் சம்பளம் – படி அளக்கிறவன். உமக்கும் கூடத்தான்!”
“அது யார் ஐயா, நீர்?”
“இந்த தேசத்துக்கு ராஜா நான். சர்தார் படேல் அவர்களால் கூட அசைக்க முடியாத ராஜா. ‘நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று பாரதியார் சொன்னாரே. அந்த மன்னர்களில் நான் ஒரு மன்னன். அதாவது இந்தியா தேசத்துச் சுதந்திரப் பிரஜை!”
இதைக் கேட்ட அந்த மனிதர் கடகடவென்று சிரித்தார். என்ன ஹாஸ்யத்தைக் கண்டு சிரித்தாரோ தெரியவில்லை.
“ஓஹோ! பாரதியாரின் பாட்டை நம்பிக் கொண்டா வந்தீர்? அழகுதான்! உமக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காது. சும்மா வேண்டுமானால் தங்க இடம் கிடைக்கும். கீழ்ப்பாக்கத்துக்கும் பெரம்பூருக்கும் நடுவில் அந்த ஜாகை இருக்கிறது. லுனாடிக் அஸைலம் என்று பெயர்.”
“அப்படியானால் அந்த ஜாகைக்குத் தான் சீட்டுக் கொடுங்களேன்!”
“நான் இந்த ஆபீஸின் தலைமை அதிகாரி அல்ல. அதிகாரியின் சொந்த அந்தரங்க குமாஸ்தாதான். ஆகையால் உத்தரவு அவர் கையெழுத்தில்லாமல் நான் போட்டுக் கொடுக்க முடியாது. ஆபிஸர் ஒரு வாரம் லீவில் இருக்கிறார். அடுத்த வாரம் வந்து அவரிடம் நேரில் விண்ணப்பம் போடும்.”
மிக்க ஏமாற்றத்துடனே கடோ த்கஜராவ் அங்கிருந்து கிளம்பினார். பிறகு இன்னும் சில சிநேகிதர்களை விசாரித்ததில் “ஏதேனும் ஒரு வீடு காலியாயிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளும். அதன் சொந்தக்காரனிடம் ‘வீட்டை இன்னாருக்குக் கொடுக்கச் சம்மதம்’ என்று எழுதி வாங்கிக் கொண்டு வீட்டுக் கண்ட்ரோல் ஆபீஸரிடம் போனால், சல்லிஸாக வீடு கிடைக்கலாம்” என்று சொன்னார்கள்.
இதன் பேரில் சென்னைப் பட்டணத்தில் காலி வீடு எங்கேனும் இருக்கிறதா என்று கடோ த்கஜராவ் பலரிடமும் விசாரிக்க ஆரம்பித்தார். தேனாம்பேட்டையில் சில நாளாக ஒரு வீடு காலியாக இருக்கிறதென்று கேள்விப்பட்டார். அந்த வீட்டைப் பார்த்துவிட்டு, வீட்டுக்காரனையும் கேட்டு வருவதாகக் கிளம்பினார்.
அன்று சகுனம் அவ்வளவு சரியாக இருந்ததென்று சொல்ல முடியாது. பூனை ஒன்று வீட்டு வாசலில் சிறிது நேரம் நின்று குறுக்கே போகலாமா, வேண்டாமா என்று யோசித்துவிட்டு, பிறகு எதிரே ஓடி வந்து கடோ த்கஜராயரின் கால்களின் வழியாகப் புகுந்து சென்றது.
ஆனால் ராயருக்குச் சகுனத்தில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. எத்தனையோ தடவை நல்ல சகுனத்துடன் புறப்பட்டுச் சென்று, காரியம் கைகூடாமல், கைக்குடையையும் தொலைத்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார். ஆகையால் “பூனையும் ஆச்சு, ஆனையும் ஆச்சு!” என்று துணிச்சலுடன் இன்றைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒரு டிராம் வண்டியில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டார்.
அந்த டிராம் வண்டியில் கொஞ்சம் எக்கச்சக்கமான சம்பாஷணை அப்போது நடந்து கொண்டிருந்தது.
ஒருவர் கையில் பத்திரிகையை வைத்துக் கொண்டு அதில் போட்டிருந்த வார பலனை இரைந்து படித்தார்.
இன்னொருவர் குறுக்கிட்டு, “ஜோசியமாவது கீசியமாவது; எல்லாம் சுத்த ஹம்பக்!” என்றார்.
“அப்படி ஒரே அடியாய்ச் சொல்லக் கூடாது! ஜோசியமும் ஒரு ஸயன்ஸ்தானே?” என்றார் இன்னொருவர்.
“எல்லாம் அவரவர்களுடைய நம்பிக்கையைப் பொறுத்தது. வீண் சண்டை எதற்கு?” என்றார் மற்றொரு சமாதானப் பிரியர்.
“பாரதியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? புதிய ஆத்திச் சூடியில் “சோதிடம் தனை இகழ்” என்று ஸ்பஷ்டமாக எழுதியிருக்கிறார்!”
“பாரதியார் சொல்லிவிட்டால் வேதவாக்கோ இப்படியெல்லாம் கண்டதைச் சொன்னதனாலேதான் அவர் திண்டாடிப் புதுச்சேரித் தெருவிலே நின்றார்!”
இப்படியாக விவாதம் தடித்துக் கொண்டிருந்த போது நமது கடோ த்கஜராயர் சும்மா இருக்கக் கூடாதா?
“இவ்வளவு என்னத்திற்கு? பரணி நட்சத்திரத்துக்கு இந்த வாரம் என்ன பலன் போட்டிருக்கிறது என்று படித்துக் காட்டுங்கள். அதன்படி நடக்கிறதா இல்லையா என்று பரிசோதித்துப் பார்த்து விடுவோம்!” என்று சொல்லி வைத்தார்.
பரணி நட்சத்திரத்துக்கு அந்த வாரத்திய பலன் முதல் மூன்று நாளும் அவ்வளவு சுகமில்லை என்று இருந்தது. “எடுத்த காரியத்தில் தோல்வி, மனக் கிலேசம் வியாபாரத்தில் நஷ்டம்’ என்று இப்படிப் படுமோசமாகச் சொல்லியிருந்தது.
கடோ த்கஜராயருக்கு ஒரே கோபமாக வந்தது. போகிற காரியத்தில் வெற்றியடையாமல் திரும்புவதில்லை என்று மனதில் தீர்மானித்துக் கொண்டு வெளிப்படையாகவும் சபதம் கூறினார்.
தேனாம்பேட்டையில் செல்லாக்காசுச் செட்டியார் சந்தில் எழுபத்தேழாம் நம்பர் வீடு பூட்டிக் கிடந்தது. வெகு காலமாக அதில் யாரும் குடியில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரர் எங்கே இருக்கிறார் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைக் கடோ த்கஜராயர் விசாரித்தார். அவர்கள் வீட்டுச் சொந்தக்காரரின் விலாசத்தை சொல்லிவிட்டு, “இந்த வீட்டுக்குக் குடி வந்தவர் யாரும் இரண்டு நாளைக்கு மேல் இருப்பதில்லை” என்ற செய்தியையும் தெரிவித்தார்கள். ராயர் காரணம் என்ன என்று கேட்டதற்கு முதலில் தயங்குவதுபோல் தயங்கிவிட்டு, பிறகு “இராத்திரியில் அந்த வீட்டில் பேய்கள் நடமாடுவதாகக் கேள்வி!” என்று சொன்னார்கள்.
“இவ்வளவுதானே! என்னைக் கண்டால் பேய்கள் எல்லாம் பறந்துவிடும்!” என்று கடோ த்கஜராயர் சொல்லிவிட்டு வீட்டின் சொந்தக்காரரிடம் போய், வாடகைக்கு வீடு வேண்டும் என்றும், வீட்டின் சாவி தரும்படியும் கேட்டார்.
“எத்தனையோ பேர் இம்மாதிரி வந்து வீட்டுச் சாவி கேட்டு வாங்கிக் கொண்டு போனார்கள். மறுநாளே சாவி திரும்பி வந்துவிடும்! நீரும் அப்படித்தான் செய்யப் போகிறீர். என்னத்திற்கு வீண் சிரமம்?” என்றான் வீட்டுக்காரன்.
“எத்தனை நாளாக இப்படி அந்த வீடு காலியாக இருக்கிறது?” என்று கடோ த்கஜராயர் கேட்டார்.
“நாள் கணக்குச் சொல்ல முடியாது. மூன்று வருஷத்திற்கு மேலாகிறது.”
“என்ன வாடகை கேட்கிறீர்கள்?”
“இந்த மாதிரி வீட்டுக்கு, இப்போது இருக்கும் வீடு கிராக்கியில், முந்நூறு ரூபாய் வாடகை வரும். எனக்கு இந்தப் பட்டணத்தில் ஆறு வீடு இருக்கிறது. இருநூறு, இருநூற்றைம்பது, முந்நூறு வரையில் வாடகை வாங்குகிறேன். இந்த வீட்டை நீர் நிஜமாக எடுத்துக் கொள்வதாயிருந்தால் எண்பது ரூபாய்க்குக் கொடுக்கிறேன்.”
“சரி! இப்போதே ஒரு மாத வாடகை அட்வான்ஸு தருகிறேன். வாங்கிக் கொள்கிறீரா?” என்றார் ராயர்.
“அது எப்படி முடியும்? வீட்டுக் கண்ட்ரோல் அதிகாரி உத்தரவு போட்டால் அல்லவா நான் வாடகை அட்வான்ஸு வாங்கிக் கொள்ளலாம்!”
“சரி; வீட்டை எனக்கு வாடகைக்குக் கொடுக்க உமக்குச் சம்மதம் என்று எழுதிக் கொடும். மற்றதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்.”
“அப்புறம் பேச்சு மாறக்கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு நாள், இரண்டு நாள் அந்த வீட்டில் இருந்து பார்த்து விடுங்கள். அப்புறம் என் பேரில் புகார் சொல்ல வேண்டாம்.”
“வீட்டில் பேய் நடமாடுகிறது என்ற விஷயத்தைப் பற்றித்தானே சொல்கிறீர்?”
“ஆமாம்; ஊரில் இருக்கிறவர்களுக்கு வேறு என்ன வேலை? இப்படி ஏதாவது கதை கட்டி விடுகிறார்கள். அதனால் பல வருஷமாய் எனக்கு வாடகை நஷ்டம். நீங்கள் வீட்டை எடுத்துக் கொள்வதாயிருந்தால்…”
“இருந்தால் என்கிற பேச்சே கிடையாது. சாவியை இப்படிக் கொடும். பேய்களுக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு! ஒரு கை பார்த்து விடுகிறேன்.”
சாவியை வாங்கிக் கொண்டு அஞ்சா நெஞ்சரான கடோ த்கஜராவ் புறப்பட்டார். அன்று இரவே விஷயத்தைக் கீறிப் பார்த்து முடிவு கட்டிவிடுவது என்று தீர்மானித்தார். திருவல்லிக்கேணியில் அவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் டெலிபோன் இருந்தது. அந்த வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டு, “தயவு செய்து என் வீட்டில் சொல்லி விடுங்கள். நான் இராத்திரி முக்கிய காரியமாக ஒரு சினேகிதர் வீட்டில் தங்க வேண்டியிருக்கிறது” என்று தெரியப்படுத்தினார்.
வெகு நாளாகத் திறக்கப்படாத பூட்டைத் திறந்து கொண்டு கடோ த்கஜராவ் அந்தப் பேய் வாழும் வீட்டுக்குள் புகுந்தார். மின்சார விளக்குப் போடப்பட்ட வீடு. சில அறைகளில் பல்புகள் கழற்றப்படிருந்தன. எனினும் சில அறைகளில் பல்புகள் இருந்தன. ஸ்விச்சைப் போட்டுப் பார்த்ததில் விளக்குகள் எரிந்தன. இது முன்னைக் காட்டிலும் அதிக தைரியத்தைக் கடோ த்கஜராவுக்கு அளித்தது.
வாசற் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு விட்டுக் கொல்லைக் கதவு தாழ்ப்பாள் போட்டிருப்பதையும் பார்த்துக் கொண்டு வந்தார். பிறகு மச்சுமீது ஏறிப் பார்த்தார். அங்கே அவர் பார்த்த ஒரு விஷயம் சிறிது விசித்திரமாகத்தானிருந்தது. ஏனெனில் கீழே இருந்தது போல் மேல் மாடியில் அவ்வளவு குப்பையாக இல்லை. சமீபத்தில் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டதாகத் தோன்றியது. அது மட்டுமல்ல; மனிதர் நடமாடியதற்கு அறிகுறிகளும் காணப்பட்டன. மனிதருடைய நடமாட்டந்தான் என்பதில் சந்தேகமில்லை. பேய்களுக்குக் கால் கிடையாது. இருந்தாலும் அவற்றின் காலடிதான் தரையில் படாதே!
மேலும் கடோ த்கஜராயர் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது மச்சுப் படிகளுக்கு அடிப்புறத்தில் வெளிப்புறமாகத் திறக்கும் கதவு ஒன்று இருப்பதைக் கண்டார். அதற்கு உட்புறத்தில் தாள் இல்லை; அதாவது இருந்த தாளை யாரோ கழற்றிவிட்டிருந்தார்கள். இதுவும் கொஞ்சம் விசித்திரமாகவே தோன்றியது. சிற்சில சந்தேகங்களும் ஏற்பட்டன. எல்லாவற்றுக்கும் இன்று ஒரு இராத்திரி இந்த வீட்டில் கண் விழித்திருந்து பார்த்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.
மின்சார தீபங்களையெல்லாம் அணைத்து விட்டுக் குளிர் அடக்கமான ஒரு அறைக்கு வந்து சேர்ந்தார். நல்ல வேளையாக அங்கே ஒரு பழங்காலக் கட்டில் கிடந்தது. அதில் துணியை விரித்துப் படுத்தார். மறுபடியும் ஏதோ தோன்றவே அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்து படுத்தார்.
இராத்திரி முழுவதும் தூங்குவதில்லையென்ற திடசங்கற்பம் கொண்டிருந்தபடியால், கண்கள் மூடுவதற்கே இடம் கொடுக்கவில்லை. பக்கத்து வீடு ஒன்றில் கடிகாரம் பதினொரு மணி, பன்னிரண்டு மணி அடித்த வரையில் தூக்கம் கிட்ட நாடவில்லை. பன்னிரண்டு மணி அடித்த பிறகு சிறிது தூக்கம் கண்ணைச் சுற்றுவது போலிருந்தது. தூங்கக்கூடாது என்று கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார்.
எழுந்து உட்கார்ந்து சிறிது நேரத்துக்கெல்லாம் கடோ த்கஜராவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அறைக்கு வெளியே அந்த வீட்டுக்குள் எங்கேயோ ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்ற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் கிட்டக் கிட்ட நெருங்கி வருவதாகத் தோன்றியது. வர வர அந்த ‘ஜல்க்’ சத்தம் அருகில் வந்து அந்த அறைக்கு வெளியே நின்றது.
கடோ த்கஜராவ் பயப்படவில்லை. ஆனாலும் அவருடைய மார்பு மட்டும் கொஞ்சம் பட் பட் என்று அடித்துக் கொண்டது. மேற்படி ‘ஜல்க்’ சத்தம் கூட பரவாயில்லை. அது அந்த அறை வாசலில் வந்து சட்டென்று நின்றுவிட்டதுதான் கொஞ்சம் என்னமோ போலிருந்தது.
ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அறையின் கதவை யாரோ இரும்புக் கம்பியினால் தட்டுவது போல் கேட்டது.
“யார் அது?” என்றார் கடோ த்கஜராவ்.
“நீ யார்?” என்றது ஒரு கம்மலான குரல்.
“நான் இந்த வீட்டை வாடகைக்கு வாங்கிக் கொண்டு குடி வரப் போகிறேன். நீ யார்” என்றார் ராயர்.
“உனக்கு முன்னால் நான் குடி வந்தவன், உனக்கு இங்கே இடமில்லை. போய்விடு!”
“வீட்டு வாடகை அதிகாரியிடம் நீர் அநுமதி பெற்றுக் கொண்டீரா?”
“இல்லை”
“அப்படியானால் இரண்டு பேரும் விண்ணப்பம் போடுவோம். யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் இருக்கலாம்.”
“அதெல்லாம் முடியாது. உடனே ஓடிப் போய் விடு!”
மறுபடியும் அந்த ‘ஜல்க்’ சத்தம் கேட்டது.
“நீ யார் என்னைப் போகச் சொல்வதற்கு?”
“கதவைத் திறந்து பார்! தெரிந்து கொள்வாய்!”
“கதவைத் திறக்காவிட்டால்?”
“கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து உன்னை விழுங்கி விடுவேன்.”
“ஓஹோ! அப்படியா! யார் யாரை விழுங்குகிறார்கள் என்று பார்க்கலாம்.”
“இவ்விதம் சொல்லிவிட்டுக் கடோ த்கஜராவ் எழுந்து மின்சார விளக்கைப் போட்டார். கதவைத் திறந்து பார்த்தார்.
அவர் எதிர்பார்த்தது போலவே அங்கே ஒரு பேய் நின்று கொண்டிருந்தது.
ராயர் மியூஸியத்தில் மனிதனுடைய உடலின் எலும்புக்கூடு வைத்திருப்பதைப் பார்த்திருந்தார்.
அதே மாதிரி இந்தப் பேய் இருந்தது. ஆனால் பேசிற்று. காலையும் கையையும் கழுத்தையும் ஆட்டிற்று. அப்படி ஆட்டியபோது எலும்புப் பூட்டுகள் ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்று சத்தமிட்டன.
“போய்விடு! போய்விடு!” என்று அந்தப் பேய் காலினால் தரையில் உதைத்துக் கொண்டு அலறியது.
கடோ த்கஜராவ் தம் நெஞ்சை ஒரு கையினால் அமுக்கிக் கொண்டு சொன்னார்:- “இதோ பார்! உன்னுடைய மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்துவிடமாட்டேன். இந்த வீடு பெரியது; தாராளமாய் இருக்கிறது. என்னுடைய குடும்பம் பெரியதுதான் என்றாலும், இதில் நானும் என் குடும்பத்துடன் குடியிருக்கலாம், நீயும் இருக்கலாம். நீ இருப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை. இராத்திரி நாங்கள் தூங்குகையில், நீ ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்று சத்தமிட்டுக் கொண்டு நடமாடக் கூடாது. நடமாடாமலேயிருந்தால் நல்லது. அப்படி நடமாடினாலும் சத்தம் கேட்காதபடி நடமாட வேண்டும். தெரிகிறதா? உன்னுடைய எலும்புப் பூட்டுகளில் இப்போது சதைப்பற்று இல்லாத படியால் இப்படிச் சத்தம் கேட்கிறது. கொஞ்சம் மோபில் ஆயில் வாங்கித் தருகிறேன். அதைப் போட்டுக் கொண்டு நடமாடினால் இவ்வளவு சத்தம் கேட்காது தெரிகிறதா?”
“அதெல்லாம் முடியாது. என்னை எண்ணெய் போட்டுக் கொள்ளும்படி சொல்ல நீ யார்? நான் நடமாடும் போது ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்று சத்தம் கேட்டால் தான் எல்லோரும் பயப்படுவார்கள்.”
“நீ சொல்வது தவறு. அதற்கெல்லாம் இந்தக் காலத்தில் யாரும் பயப்பட மாட்டார்கள். என் குழந்தைகள் பொல்லாதவர்கள், உன்னைப் பார்த்து விட்டால் மியூஸியத்திலிருந்து தப்பி வந்துவிட்டதாக எண்ணி, உன்னை எலும்பு எலும்பாகக் கழற்றி எடுத்து விடுவார்கள்.”
இதைக் கேட்டவுடனே அந்தப் பேய் ‘ஓ ய் ய் ய் ய்’ என்று சத்தம் போட்டுவிட்டு ஓடியது. மச்சுப்படியின் பக்கத்தில் போய் நின்று திரும்பிப் பார்த்து, “இரு, இரு! என் அண்ணனை வரச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடியது.
ஸ்ரீ கடோ த்கஜராவ் நின்ற இடத்திலேயே நின்றார்! மற்றொரு பேய் இரண்டு கையாலும் தலைக்கு மேலே ஒரு பழம் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தது. இதுவும் எலும்புக் கூட்டுப் பேய்தான். ஆனால் காவித்துணியினால் ஆன ஒரு நீண்ட அங்கியைக் கழுத்திலிருந்து கால் வரை போட்டுக் கொண்டு வந்தது.
ராயரின் அருகில் வந்ததும் “போடட்டுமா? போடட்டுமா?” என்றது.
ராயர், “பேயே! நீ ஸினிமா பார்ப்பதுண்டா?” என்று கேட்டார்.
“உனக்கு எப்படித் தெரிந்தது?” என்றது பேய்.
“நீ பார்த்த ரத்னகுமார் படத்தை நானுந்தான் பார்த்தேன். அதில் ஒரு பேய் ‘போடட்டுமா? போடட்டுமா?” என்று அசடு வழிய உளறுகிறதே, அதைப் பார்த்துத்தானே நீயும் உளறுகிறாய்?”
அதைக் கேட்ட அந்தப் பேய் திடீரென்று பெட்டியைக் கீழே போட்டது. பெட்டி அதன் கால் மேலேயே விழுந்தது! வலி பொறுக்காமல் ‘வீல்’ என்று கூச்சல் போட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்தது.
பிறகு கடோ த்கஜராயர் இனி நிம்மதியாகத் தூங்கலாம் என்று எண்ணிக் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். பயன் என்ன? சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் ‘ஜல்க்’ சத்தம் கேட்டது. முன்னை விட அதிகமாகவே கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால் உடம்பில் இரும்புக் கவசமும், தலையில் இரும்புத் தொப்பியும் தரித்த ஒரு எலும்புக் கூட்டுப் பேய் நின்றது. அது அணிந்திருந்த கவசங்களினால் தான் அதிக சத்தம் என்று ராயர் அறிந்து கொண்டார்.
“பழி! பழி!” என்று பேய் கத்திற்று.
“இதோ பார்! வீண் கூச்சல் போடாதே. நீ ஹாம்லெட் நாடகத்தில் வரும் தகப்பன் – பேய்தானே?”
“ஆமாம்!… பழி! பழி!”
“நீ கையினால் ஆகாத உபயோகமற்ற பேய் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தானே உனக்குத் துரோகம் செய்த மனைவியையும் சகோதரனையும் உன்னால் பழி வாங்க முடியவில்லை? உன் மகனை ஏவி விட்டு அவன் வாழ்வையும் கெடுத்தாய்! சீ! முட்டாளே! கோழைப் பேயே! போ! நீ கெட்ட கேட்டுக்கு கவசம் வேறு கேடா? இங்கே நின்றாயோ, பிடித்து மியூஸியத்துக்கு அனுப்பி விடுவேன்!”
ஹாம்லெட்டின் தகப்பன் – பேய் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.
சற்று நேரத்திற்கெல்லாம் வந்த இன்னொரு பேயைப் பார்த்து, கடோ த்கஜராயர் “நீ யார்” என்றார்.
“நான் ஜோசியப் பேய்!”
“எதற்காக வந்தாய்?”
“நீ என்னைப் பற்றி இன்று டிராம் வண்டியில் அவதூறு கூறினாய் அல்லவா! என் உண்மையை நிரூபிக்கவே வந்தேன். உன்னுடைய காரியம் பலிக்காமல் செய்வதற்காகவே வந்தேன்!”
“பாவம்! இதற்காகவா உயிரை விட்டாய்? உன்னுடைய விதி இன்னதென்று உன் ஜோசியத்தில் தெரிந்ததா!”
“தெரியாமல் என்ன? பேஷாய்த் தெரிந்திருந்தது.”
இச்சமயத்தில் “ஜயபேரிகை கொட்டடா!” என்ற ஒரு கம்பீர முழக்கம் கேட்டது.
முழக்கம் வந்த திசையைப் பார்த்தால் பாரதியார் வந்து கொண்டிருந்தார். அதே அல்பாகா சட்டை; கழுத்தில் அதே விதத் துண்டு; அதே மீசை; தலையில் அதே மாதிரி குஞ்சம் விட்ட தலைப்பாகை.
“பயமெனும் பேய்தனை அடித்தோம்!” என்று பாரதியார் முழங்கினார்.
அவ்வளவுதான்; ஜோசியப் பேய் ஓட்டம் பிடித்தது. அந்தப் பேயைத் துரத்திக் கொண்டு பாரதியார் விரைந்து ஓடினார்.
மறுபடியும் இன்னொரு அனல்வாய்ப் பேய் வந்தது. அது வாயைத் திறந்தால் தணல் சுடர்விட்டது. மனோகரன் நாடகத்துப் பேய் அது என்று கடோ த்கஜராவ் உடனே தெரிந்து கொண்டார்.
“ஏ பேயே! நானே மனோகரன் நாடகத்தில் பேயாக நடித்திருக்கிறேன். உன்னைவிடப் பிரமாதமாக என்னுடைய வாயிலிருந்து அனலைக் கக்குவேன். தெரியுமா!” என்றார் ராயர்.
அந்தப் பேயும் ஓட்டம் எடுத்தது.
கடைசியாக கடோ த்கஜராவ் கூடச் சிறிது மிரளும்படியாகப் பத்துப் பதினைந்து பேய்கள் சேர்ந்தாற் போல் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டன. “பசி பசி” என்று அவை கூச்சலிட்டன.
கடோ த்கஜராவ் இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று ஒரு நிமிஷம் யோசனை செய்தார். அதற்குள் அப்பேய்கள், “பசி! உன்னை விழுங்கி விடப் போகிறோம்!” என்று ஆவேசமாக ஆர்ப்பரித்தன.
“ஏ பேய்களே! உங்களுடைய பொய் எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்! பஞ்சத்தினால் நீங்கள் செத்துப் போனதாகப் பொய் சொல்லி ஊரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்! காங்கிரஸ் மந்திரிகளுக்கு அபகீர்த்தி உண்டாக்குவதற்காகவே இப்பேர்பட்ட சதியாலோசனை செய்திருக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் பஞ்சத்தினாலோ பசியினாலோ இறக்கவில்லை. வயது முடிந்ததனாலேயே செத்தீர்கள். அது உங்கள் தலைவிதி; யார் என்ன செய்ய முடியும்? உடனே எல்லோரும் ஓடிப் போய் விடுங்கள்! இல்லாவிட்டால் எங்களுடைய உணவு மந்திரி கனம் முன்ஷியைக் கூப்பிட்டுக் கொண்டு வருவேன்!” என்றார் ராயர்.
“உணவு மந்திரி முன்ஷி வந்தால் எங்களை என்ன செய்து விடுவார்?”
“எலும்பிலே பாஸ்பரஸ் என்னும் சத்து இருக்கிறது. பூமிக்கு அது மிக நல்ல உரம். உங்கள் எலும்புகளையெல்லாம் சுக்கு நூறாய் இயந்திரத்தில் கொடுத்து உடைத்து நிலத்துக்குப் போட்டு உழும்படி செய்து விடுவார்!”
இதைக் கேட்டதும் அந்தப் பஞ்சப் பேய்கள் ஒரே ஓட்டம் பிடித்தன. அப்போது எழுந்த பெரும் ‘ஜல்க்’ ஓசையில் கும்பகர்ணன் கூட விழித்தெழுந்திருப்பான். ஸ்ரீ கடோ த்கஜராவ் விழித்துக் கொண்டதில் வியப்பு இல்லையல்லவா? தாம் தூங்காமலிருக்கத் தீர்மானித்திருந்தும் எப்படியோ தூங்கிப் போய் விட்டதையும், அத்தனை நேரம் கண்டது கனவுதான் என்பதையும், உணர்ந்து கொண்டார்.
எழுந்து உட்கார்ந்து தம் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“பேயுமில்லை, கீயுமில்லை! எல்லாம் பிரமை!” என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போது மறுபடியும் ஏதோ சத்தம் கேட்டது. ‘ஜல்க்’ ‘ஜல்க்’ என்றும், ‘சல்’ ‘சல்’ என்றும் ‘கலீர்’ ‘கலீர்’ என்றும் ஓசைகள் எழுந்தன.
இது என்ன கூத்து?
கடோ த்கஜராவ் நன்றாக விழித்துக் கொண்டார். அறைக் கதவைத் திறந்தார். அந்த வீட்டின் மாடியில் ஏதோ ஒரு மூலை அறையிலிருந்து அந்தச் சத்தங்கள் வந்தன. அடிமேல் அடிவைத்து மெள்ள மெள்ள நடந்து மச்சுப்படி ஏறினார். சத்தம் வந்த அறைக்கு அருகே சென்று பார்த்தார். ஜன்னல் கதவு ஒன்றே ஒன்று மட்டும் திறந்திருந்தது. அதன் வழியாக எட்டிப் பார்த்தார். உள்ளே ஐந்தாறு ஆசாமிகள் உட்கார்ந்து பணம் வைத்து சீட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளிப் பணத்தை அங்குமிங்கும் நகர்த்திய சத்தந்தான் அவர் கேட்ட சப்தம். மேலே கூறிய விநோதமான கனவை உண்டாக்கிய ஓசையும் அதுதான் போலும்!
கடோ த்கஜராவ் அடிமேல் அடிவைத்து நடந்து சென்று திறந்திருந்த வாசற்படி வழியாக வெளியேறினார். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனைத் தேடிப் போனார் கதவை இடித்தார். ஒரு போலீஸ் சேவகர் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்து கதவைத் திறந்தார்.
“அங்கே ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது. உடனே வந்தால் குற்றவாளிகளைக் கைப்பிடியாகப் பிடிக்கலாம்!” என்று சொன்னார் ராயர்.
“உமக்கு எப்படித் தெரியும்?” என்று போலீஸ்காரர் கேட்டார்.
“வாடகைக்கு அந்த வீட்டைப் பேசியிருக்கிறேன். அந்த வீட்டில் இராத்திரி படுத்துக் கொண்டிருந்தேன்…”
“எந்த வீட்டில்?”
வீதியையும் வீட்டு நம்பரையும் கடோ த்கஜராவ் சொன்னதும், “ஐயோ!” என்று கூச்சல் போட்டு விட்டுப் போலீஸ்காரர் கதவைச் சாத்திக் கொண்டார்.
தம்மைப் பேய் என்று நினைத்து அவர் பயந்து போய்விட்டார் என்பது ராயருக்குத் தெரிந்து போயிற்று. அதிலிருந்து ஒரு யுக்தி உதயமாயிற்று.
திரும்பவும் அந்த வீட்டுக்கே போனார். திறந்த கதவு வழியாகப் பிரவேசித்தார்.
“ஓய்ய்ய்ய்” என்று ஒரு கூச்சல் போட்டார். “இய்ய்ய்ய்” என்று இன்னொரு சத்தம் போட்டார்.
சீட்டாடிய அறையிலிருந்து குழப்பமான குரல்கள் வந்தன.
மறுபடியும் ராயர் ‘கிறீச்’ என்றும் ‘ஐயோ!’ என்றும் கத்தினார். கனவில் பேய்கள் போட்ட சத்தத்தையெல்லாம் இவரும் போட்டார்.
மாடிப்படியில் இரண்டு முறை தடதடவென்று ஏறி இறங்கினார்.
சீட்டாட்ட அறைக் கதவு திறந்தது. சீட்டு ஆடியவர்கள் வெளியில் வரத் தொடங்கினார்கள்.
மச்சுப் படியில் பத்து அடிக்கு மேலே கடோ த்கஜராவ் நின்று கொண்டார். தன்னுடைய கறுப்புக் கம்பளியை எடுத்துத் தலை முதல் கால் வரை போட்டு மறைத்துக் கொண்டு நின்றார்.
அறையிலிருந்து வந்தவர்களில் ஒருவன் அந்த உருவத்தைப் பார்த்தான். ‘அதோ!’ என்று பீதி நிறைந்த குரலில் சொன்னான். மற்றவர்களும் பார்த்தார்கள் அவ்வளவுதான்! ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்கள். அவசரத்தில் கொஞ்சம் ரூபாய்களைக்கூட இறைத்து விட்டுப் போனார்கள்.
மறுநாள் காலையில் கடோ த்கஜராவ் அந்த வீட்டுச் சொந்தக்காரரிடம் சென்று வீட்டைக் கட்டாயம் வாடகைக்கு எடுத்துக் கொள்வதாகச் சொல்லிப் போனார்.
வீட்டுக் கண்ட்ரோல் அதிகாரி லீவு முடிந்து காரியாலயத்துக்கு வந்ததாகத் தெரிந்தது. அவரைப் போய் பார்த்தார். எல்லா விபரமும் சொன்னார்.
அதிகாரி அவரைப் பார்த்து, “விடு ரொம்பப் பெரியதா? சௌகரியமானதா?” என்று கேட்டார்.
“ஆமாம், பெரிய வீடுதான். மிகவும் வசதியானது.”
“நியாயமாக, அந்த வீட்டுக்கு என்ன வாடகை கொடுக்கலாம்?”
“மாதம் இருநூறு ரூபாய் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கலாம்.”
“வீட்டுக்காரச் செட்டியார் என்ன வாடகை கேட்கிறார்?”
“தொண்ணூறு ரூபாய்க்குத் தருவதாகச் சொல்கிறார்.”
“ஒரு வேளை இன்னும் கொஞ்சம் குறைக்கவும் சம்மதிக்கலாம் அல்லவா?”
“அதுவும் சாத்தியந்தான்!”
“சரி, நீர் போகலாம். தீர விசாரித்து உத்தரவு போடப்படும்.”
மறுநாள் ராயர் வீட்டுக்காரச் செட்டியாரைப் போய்க் கேட்கலாம் என்று போனார். வழியில் மேற்படி வீட்டைச் சுண்ணாம்பு அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து வியப்படைந்தார்.
செட்டியாரைப் போய் பார்த்தபோது தான் விஷயம் தெரிந்தது.
வீட்டு வாடகை உத்தியோகஸ்தர் மிஸ்டர் பேயாழ்வார் நாயுடுகாரு மேற்படி வீட்டை அறுபது ரூபாய் வாடகைக்குத் தாமே எடுத்துக் கொண்டு விட்டார்!
அந்த வீட்டுக்கு குடிவந்தவரின் பெயர் பொருத்தம் ஸ்ரீ கடோ த்கஜராயருக்கு மிக்க திருப்தி அளித்தது. அதோடு இன்னொரு ஆறுதலும் அடைந்தார். மிஸ்டர் பேயாழ்வார் நாயுடுவும் தம்மைப் போல் பெரிய குடும்பிதான் என்று தெரிய வந்தது. ராயரைக் காட்டிலும் நாயுடுவுக்கு மூன்று குழந்தைகள் அதிகம்! மொத்தம் ஒரு டஜன்!
“புது வீட்டில் அம்மனிதர் குடியும் குடித்தனமுமாக நன்றாயிருக்கட்டும், குடும்பத்தை மேலும் பெருக்கிக் கொள்ளட்டும்!” என்று ராயர் மனதிற்குள் ஆசீர்வதித்தார். ததாஸ்து!
இத்துடன்
அமரர் கல்கியின் வீடு தேடும் படலம்
இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.
Veedu Thedum Padalam Kalki Tag
kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,veedu thedum padalam Audiboook,Amara Vazhvu,veedu thedum padalam Kalki,Kalki veedu thedum padalam,