Velpari Audiobook 02 வீரயுக நாயகன் வேள் பாரி
Velpari Audiobook வீரயுக நாயகன் வேள் பாரி 02 Mr and Mrs Tamilan
Velpari Audiobook இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…
Buy Book: https://velparibook.com/
Credits -:
Book : வீரயுக நாயகன் வேள் பாரி
Author of book -: Su. Venkatesan
Image Credits -: மா.செ (மணியம் செல்வன்)
Copyright © Su. Venkatesan, All rights reserved.
அத்தியாயம் 2:
இது சுமார் முன்னூறு ஆண்டுகாலக் கதை, அப்போது வடவேங்கடம், தென்குமரி என்று தமிழ் நிலத்துக்கு எல்லையோ, பெயரோகூட உருவாகிவிடவில்லை. அடர்ந்த வனத்தில், ஆற்றுப்படுகையில், வண்டல் பூமியில், வற்றிய பாலையில், கடலோரத்தில், மலைமுகட்டில் என வெவ்வேறு வகையான நிலங்கள்தோறும் இனக்குழுக்களாகச் சேர்ந்து வாழ்ந்த மக்கள், தங்களின் குலமுறைப்படியான வாழ்வை நடத்திக்கொண்டிருந்தனர். அரசோ, அரசனோ உருவாகவில்லை. குலத் தலைவன் மட்டுமே இருந்தான். அவனே குலங்களை வழிநடத்திக் கொண்டிருந்தான்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதக் கூட்டங்கள் தங்களின் தனித்த அடையாளங்கோடு செழித்திருந்தன. இயற்கையோடு இயந்த வாழ்வு. தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. உழைப்பும் விளைச்சலும் பொதுச் சொத்து. கொண்டாட்டமும் குதூகலமும் இயல்பின் பிரதிபலிப்பு. எல்லா மனிதனும் சரிநிகராக இருந்தனர். இயற்கையான பிரிவினையான ஆண், பெண் என்ற பாலினப் பிரிவினை மட்டுமே இருந்தது.
வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு தின்றுகொண்டிருந்தபோது, குகையில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரைக் கொதிக்கவைத்து இறைச்சியை அதில் வேகவைத்தனர். மாமிசத்தையும் கிழங்குகளையும் நெருப்பில் சுடாமலே உண்ணக்கூடிய பக்குவத்துக்கு அவர்கள் மாறினர். வேகவைத்த உணவு என்ற புதியதொரு வகையை உருவாக்கினர்.
அன்றில் இருந்து நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு ஆண் உணவு' என்று பெயர் ஆயிற்று. நீரில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு
பெண் உணவு’ என்று பெயர் ஆயிற்று. ஆண், அவசரத்தின் அடையாளம் ஆனான். பெண், பக்குவத்தின் அடையாளம் ஆனாள். உணவு, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மலைகள், நதிகள் என எல்லாமே தம்மைப்போலவே ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.
இயற்கையின் அதிஅற்புதம் எல்லாம் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே தொடங்குகிறது. எல்லாவிதமான புதிய ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக அவையே இருக்கின்றன. காதலுக்குள்தான் இயற்கையின் இயங்குசக்தி பொதிந்துகிடக்கிறது. ஆண், பெண் என்ற இரு சக்திகள். ஒருபோதும் ஒன்றை ஒன்று முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை தன்னுள்கொண்டுள்ளது. நீரும் மண்ணும்போலத்தான் ஆணும் பெண்ணும். நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்; மறுநொடியில் ஒன்றைவிட்டு மற்றொன்று கழலவும் முடியும். அதுவே அதன் இயல்பு.
உயிரினங்களில் இயற்கை உருவாக்கியது இந்த ஒரு பிரிவினை மட்டுமே. இதுவன்றி வேறு பிரிவினைகள் இல்லாமல் அழகாகவும் அமைதி யாகவும் இருந்தது அந்தக் காலம். ஆனால், அந்த அமைதி நீண்டு நிலைக்கவில்லை. மெள்ளக் குலைய ஆரம்பித்தது.
பெரும் மாளிகை சரியக் காரணமான ஒற்றைச் செங்கல்லைப் போலத்தான் சொத்தும், சொத்தின் மீதான ஆசையும். தனக்கான உடமை, தனது சந்ததிக்கான சேமிப்பு என ஆரம்பித்தபோது, குலங்களின் அமைதி குலைய ஆரம்பித்தது; ஏற்றத் தாழ்வுகள் உருவாகின; குலங்களில் வலுத்தவனின் கை ஓங்கியது; வல்லமை பொருந்தியவனின் கைகளில் அதிகாரம் நிலைகொண்டது. வலிமையடைந்த குலம் பிற குலங்களை அடக்கியாள நினைத்தது. தமிழ் நிலம் எங்கும் இருந்த நூற்றுக் கணக்கான குலங்கள் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின. அடர்ந்த காட்டில் விடாது கேட்கும் இடியோசை போல, அந்த மோதல்களின் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. நூற்றாண்டுகளாகக் குருதி ஆறு நிற்காமல் ஓடியது.
ஆரம்ப காலத்தில் மனிதனுக்குத் தேவையான பெரும் செல்வமாக கால்நடைகளே இருந்தன. எனவே, கால்நடைகளை அதிகப்படுத்தவே எல்லா குலங்களும் ஆசைப்பட்டன. அடுத்த இனக் குழுவின் கால்நடைகள் இரவோடு இரவாகக் களவாடப்பட்டன. களவு கொடுத்தவன் ஆயுதங்களோடு குறுக்கே பாய்ந்தான். ஓட்டிச் செல்லப்படும் கால்நடைக்கும், மீட்டுத்திரும்பும் கால்நடைக்கும் இடையில் மனிதன் செத்து விழுந்துகொண்டே இருந்தான்.
அடுத்தகட்டமாக, நல்ல விளைநிலங்களைக் கைப்பற்ற குலங்கள் மோதிக்கொண்டன. செழிப்பான விளைநிலங்கள் எங்கிருக்கிறதோ, அங்கே மனித ரத்தம் ஆண்டு முழுவதும் உலரவில்லை. கால்நடைகளைப் பறிக்கும்போது மோதலாக இருந்த செயல், இப்போது போர்களாகப் பரிணமித்தது. ஒரு போர் இன்னொரு போரை உற்பத்திசெய்தது. தொடக்க காலத்தில் தோல்வியடைந்த நாட்டின் வீரர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஆனால், இப்போது அப்படி அல்ல, அவர்களின் கைகளும் உழைப்பும் புதிய அரசுக்குத் தேவையாக இருந்தன. எனவே, அவர்கள் அடிமைகளாக்கப்பட்டு நுகத்தடியில் பூட்டப்பட்டனர். வீழ்ந்தவனின் நிலத்தை வென்றவன் வாள்கொண்டு உழுது பயிரிட்டான். `பிறர் மண் உண்ணும் செம்மலே’ என்று அவர்கள் போற்றப்பட்டனர்.
பெருகிவந்த தேவையும் கடல்வழி வணிகமும் எண்ணற்ற அடிமைகளை அனுதினமும் கோரின. நிலத்துக்காகத் தொடங்கிய போர் இப்போது அடிமைகளைப் பெறுவதற்கானதாக மாறியது. போர் எனும் நிரந்தரமான கொதிநீர்க் கொப்பரைக்குள் எண்ணிலடங்கா இனக் குழுக்கள் விழுந்து, ஒன்றோடு ஒன்று மோதி, அழித்து, கொன்று, செரித்து, மிஞ்சியவை மேலேறின.
மேலேறியவர்கள் தாங்கள் இனி குலத்தலைவர்கள் அல்ல, வேந்தர்கள் என்று அறிவித்தனர். `வம்ப வேந்தர்கள் (புதிய வேந்தர்கள்) வாழ்க வாழ்க’ என்ற முழக்கம் மூன்றில் இரு பங்கு நிலப்பகுதியில் ஒலித்தது. வேந்தனுக்கு என்று தனித்த அடையாளங் களை சான்றோர்கள் உருவாக்கினர். மணிமுடி, அரச முரசு, வெண் கொற்றக்குடை, ஆணைச்சக்கரம் இவை வேந்தர்களுக்கு உரியன. வேந்தர்கள் என்றால் அது சேர, சோழ, பாண்டியராகிய மூவர் மட்டுமே. மற்ற எல்லோரும் குறுநில மன்னர்கள் என்று அறிவித்தனர்.
எந்த ஓர் அறிவிப்பும் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதிக்குத்தான் பொருந்தும். மூவேந்தர்களின் நிலப்பகுதிக்கு வெளியே இருந்த ஆட்சியாளர்கள் இந்த அறிவிப்பை காலிலே மிதித்து, காறி உமிழ்ந்தனர். குடவர், அதியர், மலையர், வேளீர் என இருபதுக்கும் மேற்பட்ட குலத் தலைவர்கள் வாளேந்தி வஞ்சினம் உரைத்தனர். காவிரி, வைகை, பேரியாறு என ஆற்றங் கரையில் மூவேந்தர்களின் நாடுகள் அமைந்தன. இவர்களின் தலைமையை ஏற்காத சுதந்திர இனக் குழுக்களாகச் செயல்பட்டவர்கள் பெரும்பாலும், மலை மற்றும் காடு சார்ந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்தனர்.
ஐவகை நிலத்தில் அமைந்த அனைத்து நாடுகளுக்குள்ளும் ஊடுருவி ரத்தநாளங்களாக, குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தவர்கள் பாணர் சமூகத்தைச் சார்ந்த கலைஞர்கள். அவர்கள் பாடிய பாடல்களும், கூறிச்சென்ற கதைகளும் நிலம் எங்கும் பரவிக்கிடந்தன. அவர்கள் யாழெடுத்து மீட்டி, பீறிடும் குரலில் பாடியபோதுதான், போர்க்களத்தில் மரணத்தைத் தழுவியவன் வரலாற்றில் உயிர்கொண்டு உலவினான். அவர்கள் தங்களின் நைந்துபோன மேலாடைக்குள் புகழை விதைக்கும் அபூர்வத்தை வைத்திருந்தனர். எல்லோருக்கும் தேவை, புகழ். தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட வேண்டிய வீர கதையின் நாயகனாக நிலைபெற வேண்டிய புகழ். அதை விதைப்பவர்களாக பாணர்கள் இருந்தனர்.
குலத் தலைவர்களும் சிற்றரசர்களும் பாணர் சமூகத்தை அரவணைத்து அள்ளித்தந்தனர். அவர்களின் ஆற்றலையும் வள்ளல்தன்மையையும் பாணர்கள் விடாமல் பாடினர். இந்த வறிய கலைஞர்களின் வற்றாத குரல், தமிழ் நிலம் எங்கும் மிதந்துகொண்டே இருந்தது.
இப்போது வள்ளல்களின் தலைநாயகனாக பறம்பு நாட்டை ஆளும் வேள்பாரி இருந்தான். அவனது ஆளுகையும் ஆற்றலும் வாரிக்கொடுக்கும் வள்ளல்தன்மையும் நிலம் எங்கும் பரவின. நாடுகள்தோறும் பாணர்கள் பாரியைப் பற்றிய பாடலைப் பாடிக்கொண்டே இருந்தனர். தங்களின் பசியைப் போக்க யாரும் இல்லாத காட்டுப் பகுதியில்கூட, காலில் சலங்கை கட்டி துடிப்பறை முழங்க பாரியைப் பற்றி பாடினால் பசி மறந்துபோவதாக, அவர்கள் ஊருக்குள் வந்து சொல்லிவிட்டுப் போயினர். பசித்தவரின் குரலாக பாரி மாறியதால், எல்லா நாட்டுக் குள்ளும் நிறைந்திருந்தான். அதோடு நிற்காமல் அவனது புகழை உச்சத்துக்குக் கொண்டு போனது, முல்லைக் கொடிக்குத் தேரைத் தந்தான் என்பது. இந்தக் கதையைக் கேட்கும் ஒவ்வொரு வனின் மனதுக்குள்ளும் ஒரு பச்சிளங்கொடி துளிர்விடுகிறது. இது உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், இந்தக் கதை என் குழந்தைக்கு, என் சுற்றத்துக்கு, என் சமூகத்துக்கு, என் வேந்தனுக்கு மிக அவசியம் என மக்கள் நினைத்தனர்.
விளைந்த நெல்லை அறுக்கும் முன்னர், வரி வாங்க கூரிய வாளோடு வந்து நிற்கும் வேந்தனு டைய வீரர்களிடம், மக்கள் வரியோடு சேர்த்து ஒரு முல்லைக்கொடியையும் கொடுத்து அனுப்பு வதாக பக்கத்து நாடுகளில் பேசிக்கொண்டார்கள்.
தமிழ் நிலம் முழுவதும் சுற்றி அலையும் பாணர் குழுக்கள், ஒருமுறையாவது பறம்புநாடு சென்று திரும்பினர். எல்லா மன்னர்களிடமும் பரிசல் பெற்ற பாணர்கள் பாரியிடம்தான் கருணையைப் பெற்றனர். கருணை வற்றப்போவதே இல்லை. அது அவர்களின் நினைவுகளில் சுரந்துகொண்டே இருந்தது.
பாணர்கள் தங்களின் நினைவில் இருந்து மட்டும் அல்ல, நினைவு மறந்தும் பாடும் பாடலாக பாரியின் பாடலே இருந்தது. புகார் நகரில் நாளங்காடியில் காவல் புரிந்த ஒரு வீரன், கடைவீதியில் அலைந்துகொண்டிருந்த பாணர் குழு ஒன்றைப் பார்த்துக் கேட்டான், “பாரி பறம்பை ஆள்கிறானா… அல்லது பாணர்களை ஆள்கிறானா?’’
நாளங்காடிக்கு மிக அருகில்தான் பட்டினப்பாக்கம் இருக்கிறது. அதுதான் சோழ நாட்டு வேந்தனும் உயர்குடிகளும் வாழும் பகுதி. காவல் வீரன் கேட்ட கேள்வி விரைவிலேயே பட்டினப் பாக்கத்துக்கு வந்து சேர்ந்தது. சிறிது காலத்திலேயே மூவேந்தர்களின் அரண்மனை களிலும் அந்தக் கேள்வி எதிரொலித்தது. இந்தக் கேள்வி தனக்குள் ஒரு பதிலையும் கொண்டிருந்தது. அந்தப் பதில் மூவேந்தர்களின் உறக்கத்தைக் குலைத்தது.
மூவேந்தர்கள் எனும் பேரரசர்களையும் மீறி நிலைபெற்றிருந்தது பாரியின் புகழ். அவர்களால் பாரியை ஒன்றும் செய்துவிட முடிய வில்லை. காரணம், பாரியின் மாவீரம், பறம்பு நாட்டின் நிலவியல் அமைப்பு, படை வலிமை இவை எல்லாம்தான். ஆனாலும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த நிலையில்தான் கபிலர், அறுக நாட்டை ஆளும் சிறுகுடி மன்னன் செம்பனின் மாளிகைக்கு தற்செயலாக வந்து சேர்ந்தார்.
அன்றைய தமிழ் நிலத்தின் பெரும் புலவராக விளங்கியவர் கபிலர். கபிலரைப் போன்ற புலவர்களே, மாற்றரசுக்குள் நுழையவும், அரசனுக்கு அறிவுரை சொல்லவும், போரைத் தடுக்கவும், அவசியம் எனக் கருதப்பட்ட தாக்குதலை நடத்தவும் காரணமாக இருந்தார்கள். அவர்கள் நிலம் எங்கும் சுற்றி அலைந்தபடி இருந்தனர். கடற்கரையில் காய்ந்த மீனும், ஆயர்குடியின் தயிர் மத்தும் இவர்களின் பாடலில் சுவையைக் கூட்டின. பாலை நிலத்தின் ஊன் சோறும், குறிஞ்சி நிலத்தின் புளித்த கள்ளும் தமிழ்க் கவிதைகளைச் செழிப்புறச்செய்தன.
கபிலர், பறம்பு நாட்டுக்கும் போனது இல்லை; வேள்பாரியைச் சந்தித்ததும் இல்லை. ஆனால், பாரியைப் பற்றி பாணர்கள் மீண்டும் மீண்டும் பாடியபோது அவருக்கு ஆச்சர்யத்தைவிட சந்தேகமே வலுப்பெற்றது. எல்லோராலும் அதிகம் புகழப்படும் ஓர் இடத்தில் பிழைகள் மலிந்திருக்கும். யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகாதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர். எனவே, புகழால் நிலைபெற்றுள்ள ஒன்றின் மீது இயல்பான கசப்பு கபிலருக்கு உருவாகியிருந்தது.
நடுநாட்டு அரசன் வேண்மானைக் காணச் சென்றுகொண்டிருந்த கபிலர், பயணக் களைப்பு மிகுதியால், சற்று ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று முடிவெடுத்தார். வாலியாற்றங் கரையில் அமைந்த செம்பனின் அரண்மனையை நோக்கி தேரை ஓட்டச் சொன்னார். பாணர்களின் கூத்தை பகல் எல்லாம் பார்த்திருந்த செம்பனுக்கு, மாலையில் திடீரென கபிலர் வந்தது பெரும் மகிழ்வைத் தந்தது.
பச்சை நிறக் குப்பியில் நிறைந்து வழியும் கள்ளோடு தொடங்கியது அன்றைய இரவு. கள்ளைப் பருகத் தொடங்கியதும் அதன் புளிப்புச் சுவை சற்றே மாறுபட்டதாக இருக்கிறதே என்று உணர்ந்த கபிலர், “இது என்ன கள்?” என்று கேட்டார்.
“தேனில் இருந்து தயாரித்து, மூங்கில் குழாயில் இட்டு நன்கு புளிக்கவைத்த முற்றிய கள். நாங்கள் இதை தேங்கள்' என்போம். உங்களைப் போல் புலவர்கள்
தேறல்’ என்று சொல்வீர்கள்” என்றான் செம்பன். அப்போது வீரன் ஒருவன், உண்பதற்கான கறித்துண்டங்களை குழிசி பானை நிறையக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனான். அந்தப் பானையை கபிலர் எடுத்து உண்ண ஏதுவாக அவரை நோக்கித் தள்ளிவைக்க முயன்றான் செம்பன், பானையை ஒரு கையால் தள்ள முடியவில்லை. இன்னொரு கையில் இருந்த குப்பியைக் கீழே வைத்துவிட்டு இரு கைகளாலும் தள்ளினான். அதைக் கவனித்த கபிலர் கள்ளைப் பருகியபடியே கேட்டார், “பகல் எல்லாம் பாணர்களுக்கு அள்ளி வழங்கியதால், உனது கரம் சோர்ந்துபோய்விட்டதா?”
“இல்லை, பெரும் புலவரே… அவர்களுக்கு அள்ளி வழங்கும் நல்வாய்ப்பு எதுவும் இன்று எனக்குக் கிடைக்கவில்லை”
“ஏன்?”
“அவர்கள் பறம்பு மலையில் பாரியைப் பார்த்துவிட்டு வருபவர்கள், எடுத்துச் செல்ல முடியாத அளவு பொருட்களோடுதான் இங்கு வந்தார்கள். என்னை நன்கு அறிந்த கீழ்க்குடி பாணர் கூட்டம் அது. எனவே என்னோடு விருந்துண்டு ஆடிக்களித்துவிட்டுப் போனார்கள்”
நெய்யிலே வறுத்தெடுத்த மான் கறியின் கால்சப்பையைக் கடித்து இழுத்தபடி கபிலர் கேட்டார், “பறம்பு நாட்டுக்குப் போய்த் திரும்புபவர்கள், இந்தப் பக்கம் ஏன் வந்தார்கள்?”
“அறுக நாட்டின் தென் திசை எல்லை, பச்சை மலைத் தொடரில்தான் முடிகிறது. அந்தப் பக்கம் இருக்கும் வேட்டுவன் பாறையின் வழியாக பறம்பு மலைக்குப் போகும் பாதை ஒன்று உண்டு. ஆனால், அது முறையான பாதை அல்ல. அதில் எப்படி இவர்கள் இறங்கிவந்தார்கள் என்று தெரியவில்லை” என்று சொல்லியபடி தனக்கான கறித்துண்டை எடுத்துக் கடித்தான்.
“பாதையை முறையற்று வைத்திருப்பது அரச குற்றம்” என்றார் கபிலர்.
“மலைப்பாதையைப் பாதுகாப்பது கடினம் அல்லவா?” எனக் கேட்டான் செம்பன்.
“அவன் தேருக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், பாதையைப் பாதுகாத்திருப்பான். முல்லைக்குக் கனிவு காட்டியவன் பாதையைக் கைவிடத்தான் வேண்டும். கைவிடப்பட்ட பாதையால், வணிகம் வளராது. வணிகம் பெருகாத நாட்டில், வளம் கூடாது. வளமற்ற நாட்டில் நிறைந்திருப்பது மக்களின் கண்ணீர்த் துளிகளே”
“பறம்பு நாடு வளமிக்கது. அது மட்டும் அல்ல, பாரியைப் பார்க்கப்போன யாருமே பாதை தவறியோ, வனமிருகங்களிடம் சிக்கிக்கொண்டோ, வழி தெரியாமல் இடர்பட்டதாகவோ நான் கேள்விப்பட்டது இல்லை” என்றான் செம்பன்.
“பாதை சரியில்லாத வழியில் பயணம் மட்டும் எப்படிச் சரியாக இருக்க முடியும்?” கபிலரின் திடமான கேள்விக்கு செம்பனிடம் பதில் இல்லை. குப்பியில் இருந்த கள் தீர்ந்துகொண்டே இருந்தது.
“பாரி, விருந்தினரை நிர்வகிப்பதில் தேர்ந்தவன் என்று நினைக்கிறேன். ஆனால், வள்ளல்தன்மை என்பது நிர்வாகத்திறமை அல்ல. அது குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது”
“நீங்கள் பாரியை வள்ளல் இல்லை என்கிறீர்களா?”
“பாரியை வள்ளல் என்றோ, சிறந்த அரசன் என்றோ, என்னால் இப்போது சொல்லிவிட முடியாது” தான் பேசும் வார்த்தைகளை உணர்ந்த வாறே கபிலர் சொன்னார், “நாளை காலை நான் வேட்டுவன் பாறை வழியாக பாரியின் பறம்பு நாட்டுக்குள் நுழைவேன்”
செம்பன் அதிர்ந்து பார்த்தான்.
“நடுநாட்டுக்கு அல்லவா போவதாகச் சொன்னீர்கள்?”
“நாம் தீர்மானித்தபடி எல்லாம் நடந்துவிடுவது இல்லை. வார்த்தைதான் நம்மை வழிநடத்துகிறது. ஒரு குப்பி கள் பல நேரம் வரலாற்றையே மாற்றியிருக்கிறது. யார் அறிவார், ஒரு கையால் நீ பானையைத் தள்ளாமல் போனதால் இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ!” கபிலரின் வார்த்தையைக் கேட்டு செம்பன் ரசித்துச் சிரித்தான்.
மறுநாள் காலை கபிலரை, பறம்பு நாட்டுக்குப் பாதுகாப் போடு அழைத்துச் செல்ல ஒரு படையோடு செம்பன் தயாராக இருந்தான். “நான் பரிசோதிக்க நினைப்பது பாரியை, உனது படைபலத்தை அல்ல” கபிலரின் குரல், படையுடன் சேர்த்து செம்பனையும் சாய்த்தது. தனித்த தேரில் கபிலர் புறப்பட்டார்.
கபிலர் தனது துணிச்சல் கொண்டு பாரியை அளவிட முடிவுசெய்து, வேட்டுவன் பாறையின் வழியே மேலே ஏறினார். எங்கு இருந்தோ வந்த நீலன், அவருடன் இணைந்துகொண்டான். இப்போது வரை அவருக்குப் பிடிபடவில்லை, அவன் வந்து இணைந்தது தற்செயலா… அல்லது நிலைத்த ஏற்பாடா?
ஆனால், நீலனுக்குப் பிடிபட்டிருந்தது. கபிலர் காலில் ஏற்பட்டுள்ளது தசைப்பிடிப்பு. அது நேரம் ஆ க ஆ க வலியைக் கூட்டும். இந்த இடத்தில் ஆபத்து அதிகம். எனவே பேச்சுக் கொடுத்தபடி விரைவாக தனது குடிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவோடு வேகவேகமாக முன்நகர்த்திச் சென்றான்.
வானில் பறவைக் கூட்டங்கள் வலசை வலசையாக கூடு திரும்பிக்கொண்டிருந்தன. இரவின் வாசல் கதவு திறக்கப்போகிறது. பசுவின் மடுவில் இரவுப்பால் சுரக்கத் தொடங்கியிருக்கும். மண்ணைப் பார்க்க முடிகிற வெளிச்சம் இன்னும் எவ்வளவு பொழுது நீடிக்கும் என்று யோசித்தபடி நீலன் விரைவுகொண்டு நடந்தான். கபிலர் ஏதோ கூப்பிடுவதுபோல் இருந்தது, திரும்பிப் பார்த்தான். அவர் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால், அவரது முகக்குறியை அவனால் உணர முடிந்தது.
“மலை இறக்கம் இன்னும் சிறிது தொலைவுதான், அதன் பிறகு சமதரைதான்” என்று சொல்லி ஒரு கையைப் பிடித்து அவருக்கு உதவினான்.
“நான் சிறிது நேரம் உட்கார்ந்துகொள்ளவா?” குரல் தளர்ந்து, ஒரு குழந்தையைப்போல கேட்டார் கபிலர்.
அவனோ “கீழே இருக்கும் அந்தப் பனையடிவாரம் போய்விடலாம்” என்று சொல்லி உட்காரவிடாமல் கீழிறக்கிக் கொண்டிருந்தான். அவருக்கு வலி அதிகமாகிக்கொண்டே இருந்தது.
சமதரைக்கு வந்தவுடன், பனைமரத்தின் அடிவாரத்தில் அவரை அமரவைத்துவிட்டு, “சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று சொல்லி. தெற்குப் பக்கமாக ஓடத் தொடங்கினான்.
கபிலருக்கு வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. இவ்வளவு வேகமாக எதற்கு ஓடுகிறான்?’ என்று யோசனை தோன்றியது. ஆனால்,
இப்போதாவது உட்காரவிட்டானே..’ என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நேரமாகிக்கொண்டிருந்தது. பனைமட்டைகளும் பனந்தாழ்களும் எங்கும் கிடந்தன. அதைப் பார்த்துக்கொண்டிருந்தவருக்குத் திடீரென சந்தேகம் வந்தது. `ஒருவேளை அவளைப் பார்க்கப் போய்விட்டானோ? அடுத்த குன்றைத் தாண்ட வேண்டுமே. எப்படி இருட்டுவதற்குள் வந்து சேருவான்? பெண்ணின் இதழ் சுவை பற்றி நாம் கொஞ்சம் சொல்லியிருந்தால் போகாமல் இருந்திருப்பானோ? இல்லை… இல்லை… சொல்லியிருந்தால் அப்போதே புறப்பட்டுப் போயிருப்பான், எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, அதே வேகத்தோடு வந்து நின்றான். கைகளில் பச்சிலைகள் இருந்தன.
“இதை வாயில் போட்டு மெல்லுங்கள்” என்றான்.
“என்ன இலை இது?”
“முதலில் இலையை வாயில் போட்டு மெல்லுங்கள். கால் வலி நின்ற பிறகு கேளுங்கள்… சொல்கிறேன்” என்றான். கபிலர் பச்சிலையை மென்றார். சிறிது நேரம் கழித்து இருவரும் நடக்கத் தொடங்கினர்.
“பச்சிலை பறிக்கப்போவதாக இருந்தால் என்னை முதலிலேயே உட்காரவிட்டிருக்கலாமே, ஏன் வலுக்கட்டாயமாக பனைமரம் வரை கீழே இறக்கினாய்?”
“பனைமரம் எங்களின் குலச் சின்னம், மனிதனுக்கு மட்டும் அல்ல, பறம்பு மலையின் எல்லா உயிர்களுக்கும் அது தெரியும். அதனிடம் ஒப்படைத்துவிட்டுப் போனால், எந்த ஆபத்தும் வராது. அதனால்தான் பனை அடிவாரத்தில் உங்களை உட்காரவைத்தேன்”
தனது எண்ணத்துக்கும் அவனது எண்ணத் துக்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்ந்தபோது கால் வலியைத் தாண்டிய ஒரு வலியை உணர்ந்தார் கபிலர்.
தென்னை எத்திசையும் வளைந்து வளரக்கூடிய தன்மையுடையது. பனையோ தன் இயல்பிலேயே செங்குத்தாக வளரக்கூடியது. இயல்புதான் ஒன்றின் குணத்தைத் தீர்மானிக்கிறது. வளைந்து கொடுக்காத பறம்பு நாட்டின் இயல்பு பனையிலும், பனைமரத்தின் இயல்பு பறம்பு நாட்டிலும் நிலைகொண்டுள்ளது. முள்ளம்பன்றியைப் போல அடி முதல் நுனி வரை உடல் சிலிர்த்தபடி வளரும் பனைமரம், பறம்பு நாட்டின் ஆவேச அடையாளம். அதன் நிழலிலேதான் பாதுகாக்கப்பட்டிருந்தோம் என்ற உண்மை கபிலருக்கு விளங்கியபோதுதான் இன்னொன்றும் விளங்கியது, நீண்ட பொழுதுக்கு முன்பே பாரியின் பாதுகாப்புக்குள் தான் வந்துவிட்டோம் என்பது.
Popular Tags
velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vel pari vikatan,
vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,
வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,
vel pari in tamil,vel pari vikatan,vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,
வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,Paari Vallal,vallal pari,paari vallal story,angavai sangavai story,angavai sangavai story in tamil,mullaiku ther kodutha pari,vel pari,parivallal in tamil,Great King Paari,velpari audiobook free download,வேள்பாரி நாவல்,வேள்பாரி புத்தகம்,வேள்பாரி வரலாறு,
velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vell paari story,vell paari,veerayuga nayagan velpari audiobook,
veerayuga nayagan velpari,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,vel pari,velpari audiobook free download,velpari audio book,vel pari audio book