Tamil AudiobooksVelpariYoutube

Velpari Audiobook 04 வீரயுக நாயகன் வேள் பாரி

Velpari Audiobook வீரயுக நாயகன் வேள் பாரி 04 Mr and Mrs Tamilan

Velpari Audiobook வீரயுக நாயகன் வேள் பாரி 04 Mr and Mrs Tamilan

Velpari Audiobook இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்…

Buy Book: https://velparibook.com/

Credits -:
Book : வீரயுக நாயகன் வேள் பாரி
Author of book -: Su. Venkatesan
Image Credits -: மா.செ (மணியம் செல்வன்)
Copyright © Su. Venkatesan, All rights reserved.

அத்தியாயம் 4:

பரண் அமைக்க, காலையில் இருந்தே இடம் தேடிக் கொண்டிருந்தான் எவ்வி. அவனுக்கு முருகன், வள்ளியோடு வருவான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நேற்றே முருகன் அழைத்த இடத்துக்கு, வள்ளி தன் தோழிகளுக்குத் தெரிவிக்காமல் சென்றிருக்கிறாள். ஒருமுறை முருகனின் பின்னால் சென்றால், பிறகு காலம் முழுவதும் சென்றுகொண்டே இருக்க வேண்டியதுதான். அதற்குச் சிறந்த உதாரணமே நான்தான்' என்று நினைத்துக் கொள்வான்.இன்று வள்ளியுடன்தான் முருகன் வருவான். ஆனால், மீண்டும் அதே மரத்தைப் பார்க்க ஏன் அழைத்துப்போனான் என்பதுதான் விளங்கவில்லை’ என யோசித்தபடியே பரண் அமைக்க ஏதுவான இடம் தேடிக்கொண்டே இருந்தான்.

பச்சைமலையில் யானைப்பள்ளத்தின் தென்திசையில் இருந்த முகட்டில், ஒரு வேங்கைமரம் தனித்து நின்றிருந்தது. இப்படி ஓர் இடத்தில், தனித்த வேங்கை மரத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

எவ்வி, அதன் மீது ஏறி அதன் உச்சியை அடைந்தான். மேற்கொப்பில் நின்று நான்கு புறமும் பார்த்தான். மொத்த மலையும் அந்த வேங்கைமரத்துக்குக் கீழ்ப்பணிந்து இருந்தது. காற்று, எல்லா திசைகளில் இருந்தும் சுழன்று வந்தது. தனது வேகத்துக்கு ஏற்ப வேங்கை மரத்தை விரல்களால் கோதி இசை கூட்டிச் சென்றது காற்று.

இன்று முருகனுக்கும் வள்ளிக்கும் தலைநாள் இரவு. குறிஞ்சி நிலத்தின் பேரழகே இந்த நாளுக்காக வடிவமைக்கப்பட்டதுதான். கைக்கு எட்டும் தூரத்தில் வெள்ளிகள் பூத்துக்கிடக்க, கால்களுக்கு அடியில் காடு மிதக்க, காமம் பெருத்து, காதல் தழைக்க இதுவே ஏற்ற இடம் என எண்ணியபடி கீழ் இறங்கினான்.

அன்று பகல் முழுவதும் காட்டின் ஒவ்வொரு திசைக்கும் ஓடினான். செவ்வருவிக்குப் பக்கத்தில் விளைந்த சந்தனமரம் ஒன்று இருப்பது அவனுக்கு தெரியும். நண்பகல் கடந்தபோது சந்தனமரக் கிளைகளோடு வேங்கைமர அடிவாரம் வந்தடைந்தான். வரும்போதே சிலாக்கொடியை அறுத்து வந்திருந்தான்.

வேங்கைமரத்தின் உச்சியில், நாற்கிளைகளுக்கு நடுவில் சந்தனமரக் கட்டைகளைக் குறுக்கிட்டு அடுக்கி, சிலாக்கொடியால் இறுகக் கட்டினான். கொடிகளிலே மிக உறுதியானது சிலாக்கொடி. இவ்வளவு உயரத்தில், பரணை உலையவிடாமல் இறுகப்பிடித்திருக்கும் ஆற்றல் அதற்குத்தான் உண்டு. அதன் இன்னொரு சிறந்த குணம், கொடியை அறுத்த மூன்று நாட்கள் வரை அதன் சாறு கசிந்து வெளிவந்தபடியே இருக்கும். அதில் இருந்து வரும் நறுமணத்துக்கு ஈடே கிடையாது. சந்தனமர வாசத்தில், சிலாக்கொடியின் நறுமணத்தோடு வேங்கைமர உச்சியில் திரும்பும் திசை எல்லாம் பச்சைமலைக் காற்றை அள்ளி அணைத்து எம் குறிஞ்சித் தலைவனும் தலைவியும் நடத்தும் ஆதிக்கூத்து, எம் குலத்தைப் பெருக்கி, காதலைத் தழைக்கச்செய்யும்.

பெருமிதத்தோடு வேலையை முடித்த எவ்வி, தினைப்புனம் காக்கும் இடத்துக்கு வந்தபோது மாலை மயங்கி, கருக்கத் தொடங்கியது. அவன் எதிர்பார்த்ததுபோலவே வள்ளியோடு முருகன் வந்தான். காதலிக்கத் தொடங்கியதும் கைகூடும் ஓர் அழகு இருக்கிறதே, மனிதர்களைக் கண்டு மலர்களும் மயங்கும் காலம் அதுதான்.

முருகன் கேட்கும் முன்னரே மேல் திசை நோக்கி கையைக் காட்டினான் எவ்வி. தலையை உயர்த்தி மேலே பார்த்தான் முருகன். ‘நிலவிலே பரண் அமைத்துவிட்டானா?’ என்பதுபோல இருந்தது அவன் பார்வை. ‘நான் அதை நோக்கி படி அமைத்திருக்கிறேன். அங்கு போவது உன் வேலை’ எனப் பதிலளிப்பது போன்று இருந்தது எவ்வியின் பார்வை.

முருகனும் வள்ளியும் பின்தொடர, தீப்பந்தம் ஏந்தியபடி முன் நடந்தான் எவ்வி. தனக்குப் பின்னால் இருளுக்குள்தான் எவ்வளவு விளையாட்டு? `சின்னச்சின்னச் சிரிப்புகளுக்கு என்ன அர்த்தம்?, இது பதிலா… கேள்வியா?, இவ்வளவு மெதுவாகப் பேச முடியுமா? பின்தொடரும் ஓசையே கேட்காமல் இருக்கிறதே! அவன் வள்ளியை அழைத்து வருகிறானா… அல்லது சுமந்து வருகிறானா? திரும்பிப் பார்த்தால் அவர்களின் நெருக்கம் குலைந்துவிடும். வேண்டாம்’ என யோசித்தபடியே, வேங்கைமர அடிவாரம் வந்தான் எவ்வி. பந்தம் ஒளி அந்த இடம் படரும்போதுதான் தெரிந்தது, முருகனும் வள்ளியும் ஏற்கெனவே அங்கு வந்து அமர்ந்து இருந்தது. எவ்வி அதிர்ந்துபோனான்.

“என்னைப் பின்தொடர்ந்து வருகிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்!”

“மனிதனால் காதலை அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதரை அழைத்துவரும்”

எவ்வியிடம், பேச வார்த்தைகள் இல்லை. வணங்கி விடைபெற்றான். அப்போது எவ்வியின் கையில் ஒரு பொருளைக் கொடுத்தான் முருகன்.

“எம் காதலின் பரிசு” என்றாள் வள்ளி.

அவர்கள் மர ஏணியில் ஏறிச்சென்று பரணில் அமர்ந்தனர். எங்கும் சூழ்ந்திருந்த இருளுக்குள் இருந்து, காற்று இசையைச் சுரந்தது. அசையும் இலைகளுக்கு இடையில் விண்மீன்கள் கண்சிமிட்டின.
“இத்தனை கண்களுக்கு இடையில் நாம் வெட்கம் களைவது எப்படி?” என்று கேட்டபடி வள்ளி நாணினாள்.

முருகன் சொன்னான், “வெட்கம் களைகையில் இவற்றைப் பார்க்க கண்கள் ஏது நமக்கு?”

சுடர் அணைவதுபோல பேச்சுக்குரல் மெள்ள அணைந்தது. வேங்கைமரம் தனது கிளைகளை அசைக்கத் தொடங்கியது. சந்தன வாசத்துக்குள் சிலாக்கொடியின் நறுமணம் இறங்கியபோது, காற்று எங்கும் சுகந்தம் பரவி மேலெழுந்தது. மரத்தின் கொப்பொன்றில் இருந்த ஆண் பல்லி குரலெழுப்பி, தனது துணையை அழைத்தது. ஓசை கேட்ட திசை நோக்கி முருகன் திரும்பியபோது, அவன் கன்னம் தடுத்து வள்ளி சொன்னாள், “அடுத்தவர் காதல் காண்பது பிழை”

“முதலில் அதனிடம் சொல்” என்றான் முருகன். சிதறித் தெறித்த வள்ளியின் சிரிப்பொலியை, காடு எங்கும் அள்ளிக்கொண்டு போனது காற்று.

எவ்வி, காரமலையின் அடிவாரத்தில் இருக்கும் தனது ஊருக்கு வந்துசேர்ந்தான்.

“முருகன் எங்கே?” என்று கேட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு பதிலைச் சொன்னான். இதுவரை அடையாத ஒரு மகிழ்வை இப்போது அடைந்திருப்பதாக அவனது மனம் துள்ளிக்குதித்தது. முருகன் தந்த காதல் பரிசைப் பார்த்தான். அது ஒரு பூண்டுபோல் இருந்தது. `இதை என்ன செய்வது?’ என யோசித்தபடி பூண்டைத் தட்டி, பக்கத்தில் நீர் நிறைந்திருந்த பைங்குடத்தில் போட்டான். நீருக்குள் இருந்து குமிழ்கள் இடைவிடாது வந்தன. அந்த நீர், பழச்சாறுபோல மாறிக்கொண்டிருந்தது.

அதை மூங்கில் குடுவையில் ஊற்றி ஒரு மிடறு குடித்தான். அதன் சுவைக்கு ஈடு சொல்ல வார்த்தைகளே இல்லை. மனிதர்கள் யாரும் இதுவரை இப்படி ஒரு சுவையை அனுபவித்திருக்க மாட்டார்கள். குடத்தில் இருந்த மொத்தத்தையும் குடித்து முடித்தான். குடத்தின் கீழ் பூண்டு அப்படியே இருந்தது. மீண்டும் குடம் நிறையத் தண்ணீரை ஊற்றினான். நீர், பழச்சாறாக உருமாறியது. மீண்டும் அதைக் குடிக்கத் துணிந்தபோது, காட்டின் கீழ்ப்புறம் இருந்து பெரும் ஓசை கேட்டது. குடத்தை அப்படியே வைத்துவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தான்.

கையில் தீப்பந்தங்களோடு மனிதக் கூட்டம். வேட்டுவன் பாறைக்குப் பின்புறமாக நடந்து, காட்டின் தென்திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். யார் இவர்கள்?'இந்த நள்ளிரவில் பந்தம் ஏந்தி எங்கே சென்று கொண்டிருக்கின்றனர்?’ என, ஊரில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. முதுகிழவன் சொன்னான், “நாம் கீழே இறங்கிப்போய், அவர்கள் யார்… எங்கே போகின்றனர்… என்ன இடர் நேர்ந்தது என்று கேட்போம்” என்றார்.

“நம் மீது தாக்குதல் தொடுத்துவிட்டால்?”

“இது நம் இடம். நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது”

“சரி” என்று சிலர் மட்டும் புறப்பட்டுச் சென்றனர். மற்றவர்கள் குடிலைக் காத்தபடி மேலேயே நின்றனர்.

முதுகிழவனும் எவ்வியும் முன்னால் நடக்க, இளைஞர் சிலர் பின்தொடர்ந்தனர். மலைச்சரிவில் வேகமாக இறங்கினர். எங்கு இருந்தோ வந்த பலத்த காற்று அவர் மீது மோதிச் சென்றது. எவ்விக்கு, பரணை நோக்கி நினைவு சென்றது. இந்தக் காற்றுக்கு பரண் தாங்குமா?' என, மனதுக்குள் சின்னதாக அச்சம் உருவானது. அவன் தென்திசை உச்சியை அண்ணாந்து பார்த்தான். மறுகணமே அடுத்த சந்தேகம் உருக்கொண்டது,ஒருவேளை வேங்கைமரம் உந்தித் தள்ளியதில் இருந்துதான் இந்தக் காற்றே உருவாகியிருக்குமோ?’

பெருங்கடல் நடுவே மிதக்கும் சிறு தெப்பம்போல், உச்சிக்காட்டின் உள்ளங்கையில் ஆடிக்கொண்டிருந்தது பரண். வெகுதூரத்தில் பெண் யானையின் பிளிறல் கேட்டது. யானைகள் முயங்கிக் கூடுகின்றன. நிலவைப் பார்த்தபடி இருந்த வள்ளி சொன்னாள், “இன்னும் சிறிது நேரத்தில் இரவுப் பூக்கள் மலரத் தொடங்கும்”

“எப்படிச் சொல்கிறாய்?” மெல்லியதாகக் கேட்டது முருகனின் குரல்.

“பூவின் மேலிதழ் விலகத் தொடங்கி, மூன்றாம் நாழிகை முடியப்போகிறது”

“நாம் பரண் ஏறத் தொடங்கும் போதேவா?”

“இல்லை, நீங்கள் ஆண் பல்லியின் அழைப்பைக் கேட்டுத் திரும்பியபோது”

“நீ எந்த மலரைச் சொல்கிறாய்?”

“மலர்களில் ஏது வேறுபாடு? எல்லா மலர்களும் ஒரே இனம்தான்… பெண் இனம்”

இரவு மலர்கள் மலரத் தொடங்கின. திசை எங்கும் புதிய நறுமணம் படர்ந்தது. மூங்கில் அடர்ந்த கீழ்த் திசையில் இருந்து குழலிசையைக் காற்று அள்ளிவந்தபோது, அதனுடன் காதலின் உயிரோசையும் இணைந்தது. வேங்கைமரம் நிலைகொள்ளாமல் ஆடியது.

தீப்பந்தம் ஏந்தி, கடுங்குரலோடு சென்றுகொண்டிருந் தவர்களை, வேடர் குல முதுகிழவன் மறித்துக் கேட்டான்…

“எங்கே போகிறீர்கள்?”

முதுகிழவனின் கேள்விக்குப் பெருங்குரலில் பதில் சொன்னான் ஒருவன், “நாங்கள் கொடி குலத்தைச் சேர்ந்தவர்கள். பச்சைமலையின் ஈரடுக்கின் கீழ் இருக்கிறோம். எங்களின் குலமகள் வள்ளியைக் காணவில்லை. நேற்று காலை குடில் விலகி, தினைப்புனம் காக்கச் சென்றாள். ஆனால், அவள் பரணுக்குப் போகவில்லை. எங்கே போனாள் என அவள் தோழிகளுக்கும் தெரியவில்லை. அவர்களாகத் தேடிப்பார்த்துவிட்டு, மாலையில்தான் எங்களிடம் வந்து சொன்னார்கள். அப்போது முதல் நாங்கள் தேடிவருகிறோம். எங்கேயும் காணவில்லை. கீழ்த்திசைக்கு ஒரு குழு சென்றுள்ளது. நாங்கள் யானைப்பள்ளம் நோக்கிப் போகிறோம்” என்றான்.

எவ்விக்கு, அப்போதுதான் ஆபத்து புரிந்தது. `இவர்களை அந்தப் பக்கம் போகவிடக் கூடாது’ எனச் யோசிக்கையில், முதுகிழவன், “இந்தப் பெருங்காட்டில் நீங்கள் மட்டும் எப்படித் தேடுவீர்கள்? நாங்களும் உடன் வருகிறோம். ஆளுக்கு ஒரு பக்கமாகத் தேடுவோம்” என்றார்.

ஆபத்து, பேராபத்தாக மாறியதை எவ்வி உணர்ந்தான். `என்ன செய்யலாம்?’ என யோசிப்பதற்குள் முதுகிழவன், “ஏன் நிற்கிறீர்கள்… புறப்படுங்கள்” என்று சொல்லி, அவர்களோடு நடக்கத் தொடங்கினார்.

“சற்று நில்லுங்கள். நான் மற்றவர்களையும் அழைத்துவருகிறேன்” என்று சொன்ன எவ்வி, அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் குடிலை நோக்கி விரைந்து ஓடினான். `சரி, இன்னும் கூடுதல் ஆட்களோடு சென்று தேடுவது நல்லதுதான்’ என யோசித்த அவர்கள், அவன் வரும் வரை பொறுத்திருக்க முடிவுசெய்தனர். கொடி குலத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் மட்டும் சொன்னார், “அடுத்த குலப்பெண்களுக்கு ஆபத்து என்றால், உங்களைப்போல் உதவிசெய்ய இன்னொருவர் இந்தக் காட்டில் இல்லை” என. முதுகிழவன் சற்றே பெருமிதத்தோடு தலையசைத்தான்.

அதே வேகத்தில் எவ்வி மலை மேல் இருந்து இறங்கி வந்தான். அவனுக்குப் பின்னால் ஒருவன் பைங்குடத்தைத் தலையில் வைத்துத் தூக்கிவந்தான். வேறு ஆட்கள் யாரும் வரவில்லை. ‘என்ன… இவன் யாரையும் அழைக்காமல், பானையோடு ஒருவனை மட்டும் அழைத்து வருகிறான்!’ என யோசிக்கையில், ‘மற்றவர்கள் எல்லாம் ஆயுதங்களோடு வருகிறார்கள். அவர்கள் வருவதற்குள் நீங்கள் இந்தப் பழச்சாறை அருந்தி இளைப்பாருங்கள்” என்று சொல்லி, மூங்கில் குவளையில் ஆளுக்கு ஒரு குவளையாக அந்தப் பூண்டுச்சாற்றைக் கொடுத்தான். பழச்சாற்றின் சுவையாலும் அது தந்த எல்லையற்ற மயக்கத்தாலும், ‘இதற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை’’ என ஆளாளுக்கு அதைப் புகழத் தொடங்கினர்.

பானை, முழுவதும் தீர்ந்தது. அதற்குள் இன்னொருவன் தலையில் பானையோடு வந்து சேர்ந்தான். பூண்டை எடுத்து அந்தப் பானையில் போட்டான் எவ்வி. அடுத்த சுற்று எல்லோரும் குடித்தனர். முதுகிழவன் மட்டும் புலம்பினான்,

“ `நிலமகள்… குலமகள்’ என என்னென்னமோ சொன்னார்கள். இப்போது பழச்சாற்றைக் குடிக்க முந்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லிக்கொண்டே மூன்றாம் குவளையை அருந்தியவன், மயங்கிச் சாய்ந்தான். எல்லோரும் விடாமல் குடித்து அதிமதுரச் சுவையில் மூழ்கினர்.

அவர்கள் குடிக்கும்போது சிந்திய துளிகள் இந்தப் புற்கள் எங்கும் சிதறின. அதன் வாசனை காற்றில் கலந்து எங்கும் பரவியது. நுகர்வுச்சக்தியை அதிகம்கொண்டிருந்த பாம்புகள், காடு முழுவதும் இருந்து பெரும்வேகம்கொண்டு இங்கு வந்தன. பாம்புகளின் எண்ணிக்கை, கணக்கில் அடங்காமல் இருந்தது. ஒவ்வொரு புல்லுக்கும் ஒரு பாம்பு வந்து சேர்ந்தது. புற்களில் இருந்த பழச்சாற்றுத் துளியை அவற்றை தம் நாவால் நக்கின. புல்லின் ஓரம் இருந்த சுனைஈக்கிகள் அவற்றின் நாவுகளை இரு கூறுகளாக அறுத்தன. ஆனால், பழச்சாற்றின் சுவை அவற்றை விடுவதாக இல்லை. மீண்டும் நக்கின. அடித்தொண்டை வரை நாக்கு இரு கூறுகளாகப் பிளந்தது. எல்லா பாம்புகளுக்கும் நாக்குகள் இரு கூறுகளாயின. அன்றில் இருந்து இந்தப் புற்கள் `நாக்கறுத்தான் புற்கள்’ ஆயின.

கதையைச் சொல்லியபடி, நீலன் முன் நோக்கி நடந்துகொண்டிருந்தான். பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த கபிலருக்கு, கண்கட்டுவதுபோல் இருந்தது. எங்கும் இருள் அடர்ந்தது. நீலன், இருளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தான்.

கபிலருக்கு மீண்டும் நினைவு திரும்பிய போது மறுநாள் பிற்பகலாகியிருந்தது. நடந்த களைப்பை மீறி, பசி அவரை எழுப்பியது. சாணத்தால் மெழுகப்பட்ட ஒரு குடிலில் இருந்த மரப் படுக்கையின் மேல் அவர் படுக்க வைக்கப் பட்டிருந்தார். கண்விழித்து எழுந்தவருக்கு, தான் எங்கு இருக்கிறோம் என்பது குழப்பமாக இருந்தது. ‘இது எந்த இடம்? இங்கே எப்படி நான் வந்தேன்?’ என்று கேள்விகள் எழுந்தபடி இருந்தன. அவரது வலதுகாலில் பச்சிலைகொண்டு கட்டு போடப்பட்டிருந்தது. வீட்டுத் திண்ணையின் ஓரம் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்; சிறு பறை ஒன்றை கோலால் அடித்து ஒளியெழுப்பியபடி, குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தனர்.

“நேற்று தள்ளாடித் தடுமாறி வந்தது இவர்தானா?” என்று ஒரு சிறுவன் கபிலரைப் பார்த்து கேட்டுவிட்டு ஓடினான்.

`நான் எப்போது தள்ளாடி வந்தேன்?’ என யோசிக்கையில், சற்று குழப்பமாகவே இருந்தது. கபிலர் எழுந்துவிட்ட தகவல் கிடைத்ததும் நீலன் அந்த இடம் வந்து சேர்ந்தான்.

“இது என்ன ஊர்? நான் எங்கே இருக்கிறேன்?”

“நீங்கள் வரவேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஆனால், வந்தது தெரியாமல் வந்தீர்கள்”

“புரியும்படியாகச் சொல்” என்றார் கபிலர்.

“உங்களின் வலதுகால் தசை பிறண்டுவிட்டது. அந்த நிலையில் உங்களால் அதிகத் தொலைவு நடக்க முடியாது. நடக்க, நடக்க வலி கூடத்தான் செய்யும். பொழுது வேறு மறைந்துகொண்டிருந்தது. இருட்டுவதற்குள் இந்த இடம் வந்து சேர வேண்டும். இடையில் நாகக் கிடங்கு வேறு. இந்தக் காட்டில் எத்தனை வகை பாம்புகள் இருக்கின்றனவோ, அத்தனை வகையான பாம்புகளும் அங்கு உண்டு. நாங்கள் வெளியில் இருந்து வரும் யாரையும், அந்தப் பக்கமாக அழைத்துவர மாட்டோம்; ஆற்றைச் சுற்றிதான் அழைத்து வருவோம். ஆனால், உங்களுக்கு அடிபட்டதால் ஆற்றைச் சுற்ற முடியாது எனத் தெரிந்துவிட்டது. சரி, நாகக் கிடங்கின் வழியே வேகமாக அழைத்துச் செல்லலாம் என்றால், நீங்கள் பனைமரத்தைக் கடப்பதற்குள் உட்கார்ந்துவிட்டீர்கள். எனவே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களுக்கு `தனைமயக்கி’ மூலிகையைக் கொடுத்தேன்” என்றான்.

“அது என்ன மூலிகை? நான் கேள்விப்பட்டதே இல்லையே!” என்றார் கபிலர்.

“அது உங்களின் நினைவை மயக்கும். அதனால் நீங்கள் வலியை மறப்பீர்கள். அதே நேரத்தில் உங்களின் இயக்கத்தை நிறுத்தாது. அதனால்தான் உங்களின் தோளைத் தாங்கிப்பிடித்து என்னால் அழைத்துவர முடிந்தது. நீங்களும் தள்ளாடித் தடுமாறி நடந்து வந்தீர்கள்”

கபிலர், வியப்பில் உறைந்துபோனார். “என்னை மயக்கவைத்து நடக்கவைத்தாயா! இது எப்படிக் கைகூடியது?”

“கைகூடியதால்தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள், வந்தது தெரியாமல்”

பெண் ஒருத்தி மண் கலயத்தில் கூழ் கொண்டுவந்து கொடுத்தாள்.

“குடியுங்கள், நீங்கள் உணவருந்தி நாளாகப்போகிறது” என்றான் நீலன்.

கூழ் முழுவதையும் குடித்த பிறகுதான் தெளிச்சி ஏற்பட்டது.

“அது என்ன பழச்சாறு? நேற்று ஒன்று சொன்னாயே. பெயர் மறந்துவிட்டேன்” என்றார் கபிலர்.

“அது உங்களுக்கு நினைவு இருக்கிறதா?” எனக் கேட்டான் நீலன்.

“நன்றாக நினைவு இருக்கிறது. `புல்லில் சிந்திய அந்தப் பழச்சாற்றைப் பாம்புகள் வந்து நக்கியதால், அவற்றின் நாக்குகள் இரு கூறுகளாகி விட்டன’ எனச் சொன்னது வரை நினைவு இருக்கிறது”

“அதன் பிறகுதானே கதையின் முக்கியமான பகுதியே இருக்கிறது” என்றான் நீலன்.

“எனக்கு முற்றிலும் நினைவில்லை. அதன் பிறகு முருகனும் வள்ளியும் என்ன ஆனார்கள்? என்னதான் நடந்தது?”

“மொத்தக் கதையையும் என்னால் திருப்பிச் சொல்ல முடியாது. பழச்சாற்றைக் குடித்தவர்கள் மயக்கம் தெளிய பல நாட்கள் ஆனதாம். அதிகம் குடித்தது எவ்விதான். எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை. மயக்கம் கலைந்து மரத்தடிக்குப் போனானாம். வேங்கைமரத்தில் கட்டப்பட்டிருந்த சந்தனக்கட்டைகள் தழைத்து, காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்த்தும் எவ்விக்குப் புரிந்தது. புன்னகையோடு ஊர் திரும்பிவிட்டான்.

“முருகன் எங்கே… ஏன் அழைத்துவரவில்லை?” என்று கேட்டதற்கு, “காதலை மனிதனால் அழைத்துவர முடியாது; காதல்தான் மனிதனை அழைத்துவரும்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பூண்டுச்சாற்றை அருந்தப் போய்விட்டான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, காட்டுக்குள் சந்தனவேங்கை மரங்கள் புதிதாகத் தழைத்திருப்பதாகச் சொன்னார்கள். அதன் பக்கத்திலேயே சிலாக்கொடியும் படர்ந்திருந்தது. எங்கு சந்தனவேங்கை இருக்கிறதோ, அங்கு முருகனும் வள்ளியும் இருப்பதாக எங்கள் நம்பிக்கை. அதன் பிறகு, இந்தப் பெருங்காட்டில் காதலின் அடையாளமாக சந்தனவேங்கை மாறியது.

முருகனுக்குப் பிறகு, குலத்தலைவன் ஆனான் எவ்வி. கொடி குலமும் வேடர் குலமும் இணைந்தன. இருவரும் தங்களது இடங்களை விட்டு அகன்று, மூன்றாம் மலையான ஆதிமலையை அடைந்தனர். அங்கு புதுநகர் ஒன்றை அமைத்தான் எவ்வி. அதன் பிறகு அவனது வம்சாவழிகள் தலைமை தாங்க, வேளீர் குலம் தழைத்தது. அந்த வம்சத்தின் நாற்பத்திரண்டாவது தலைவன்தான் வேள்பாரி.

இதுதான் வேல்முருகனில் தொடங்கி வேள்பாரி வரையிலான கதை”

கதையைக் கேட்ட கபிலர், கூழ் குடித்த கலயத்தை நீண்ட நேரம் கையில் வைத்தபடியே அமர்ந்து இருந்தார்.

“நான் இப்போது தனைமயக்கி மூலிகை எதுவும் தரவில்லை” என்று நீலன் சொன்ன போதுதான், ஆச்சர்யம் அகன்றார். கலயத்தை அந்தப் பெண்ணிடம் திருப்பித் தரும்போது கபிலரின் வாய் முணுமுணுத்தது,

“தனைமயக்கி மூலிகை, இலைகளில் மட்டும் அல்ல; கதைகளிலும் இருக்கிறது”


Popular Tags

velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vel pari vikatan,

vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,

வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari ananda vikatan,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,

vel pari in tamil,vel pari vikatan,vell paari story,vell paari,velpari vikatan,veerayuga nayagan velpari audiobook,veerayuga nayagan velpari,paari vallal story,paari vallal,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,

வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,Paari Vallal,vallal pari,paari vallal story,angavai sangavai story,angavai sangavai story in tamil,mullaiku ther kodutha pari,vel pari,parivallal in tamil,Great King Paari,velpari audiobook free download,வேள்பாரி நாவல்,வேள்பாரி புத்தகம்,வேள்பாரி வரலாறு,

velpari,velpari full story,velpari audiobook,velpari story,velpari history,velpari tamil,velpari movie,vel pari ananda vikatan,vel pari in tamil,vell paari story,vell paari,veerayuga nayagan velpari audiobook,

veerayuga nayagan velpari,vallal pari story in tamil,vallal pari,vallal paari story,#Velpari Velpari Audio Book,வீரயுக நாயகன் வேள் பாரி,வேள் பாரி,வேள்பாரி,velpari book,Paari,vel pari,velpari audiobook free download,velpari audio book,vel pari audio book

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *