Zamindar Mahan Kalki | Kalki Times
அத்தியாயம் 2: ரங்கூன்
1941 ஆம் வருஷம் டிசம்பர் 23 உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அந்தத் தேதியை உங்களில் அநேகர் ஞாபகம் வைத்துக் கொள்வதற்குக் காரணம் இல்லாமலிருக்கலாம். ஆனால், நான் அந்தத் தேதியை ஒரு நாளும் மறக்க முடியாது. அன்றைய தினம் ரங்கூன் நகரில் இருக்க நேர்ந்த எவரும் அதைத் தங்கள் வாழ்நாள் உள்ள வரையில் மறக்க முடியாது.
அன்று தான் முதன் முதலாக ரங்கூனில் ஜப்பான் விமானங்கள் குண்டு போட்டன.
குண்டு விழுந்தபோது நான் என் காரியாலயத்துக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அபாயச் சங்கு ஊதிச் சற்று நேரத்துக்கெல்லாம் ‘விர்’ என்று விமானங்கள் பறக்கும் சத்தம், ‘ஒய்’ என்று குண்டுகள் விழும் சத்தம், ‘படார்’ என்று அவை வெடிக்கும் சத்தம், கட்டிடங்கள் அதிரும் சத்தம், கண்ணாடிகள் உடையும் சத்தம் எல்லாம் கேட்டன. ஆனாலும், கட்டிடத்துக்குள் பத்திரமாயிருந்த நாங்கள் அவற்றையெல்லாம் அவ்வளவு பிரமாதமாக எண்ணவில்லை.
அபாய நீக்கச் சங்கு ஒலித்து வெளியிலே வேடிக்கை பார்க்க வந்த பிறகு தான், விஷயம் எவ்வளவு பிரமாதமானது என்று தெரிந்தது. ரங்கூன் நகரில் பல இடங்களில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் ஓடிக் கொண்டிருந்தார்கள். விளைந்த சேதத்தை ஒன்றுக்குப் பத்தாக மிகைப்படுத்திச் சொன்னார்கள். எல்லாம் ஒரே அல்லோலகல்லோலமாயிருந்தது.
டல்ஹௌஸி தெருவில் வீடுகள் பற்றி எரிகிறதென்று கேள்விப்பட்டதும் எனக்கு வயிற்றிலேயே நெருப்புப் பிடித்துவிட்டது போலிருந்தது. ஏனெனில், அந்தத் தெருவும், கர்ஸான் தெருவும் சேரும் முனையில் ஒரு வீட்டு மச்சு அறையிலேதான் நான் வாசம் செய்தேன். என்னுடைய துணிமணிகள், கையிருப்புப் பணம் முதலிய சகல ஆஸ்திகளும் அந்த அறையிலேதான் இருந்தன. மானேஜரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, கம்பெனியின் காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் பறந்து விழுந்து கொண்டு சென்றேன். ஆனால் என்னுடைய வீடு எரியவில்லை. அதற்கு மாறாக, நான் சற்றும் எதிர்பாராத ஒரு காட்சி அங்கே தென்பட்டது.
நான் குடியிருந்த வீட்டைச் சுற்றிலும் ஒரு சிறு காம்பவுண்டு உண்டு. அந்தக் காம்பவுண்டில் ஓரிடத்தில் இருபது முப்பது ஸோல்ஜர்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள். வாசல் கேட்டுக்கு அருகில் இரண்டு ஸோல்ஜர்கள் காவலுக்கு நின்றார்கள்.
மோட்டாரைச் சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு, வீட்டின் ‘கேட்’ அருகில் சென்றேன். காவல் ஸோல்ஜர்கள் வழி மறித்தார்கள். அது நான் குடியிருந்த வீடு என்றும், என் சாமான்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் சொன்னேன். நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை. வீட்டுக்காரர்கள் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள் என்றும், என்னை உள்ளே விட முடியாது என்றும் சொன்னார்கள். அப்புறம் அங்கே எதற்காக ஸோல்ஜர்கள் நிற்கிறார்கள் என்று விசாரித்தேன். மத்தியானம் அங்கே ஒரு குண்டு விழுந்தது என்றும், அது பூமிக்குள்ளே வளை தோண்டிக் கொண்டு போய் புதைந்து கிடக்கிறதென்றும், அதை அபாயமில்லாமல் எடுத்து அப்புறப் படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்றும் அறிந்தேன். அவர்களுடன் விவகாரம் செய்வதில் பயனில்லை என்று திரும்பிப் போனேன்.
திரும்பி எங்கே போனேன். அது எனக்கே தெரியாது. கை போனபடி காரை விட்டுக் கொண்டு, ரங்கூன் நகரமெல்லாம் சுற்றினேன். அன்று ரங்கூன் நகரம் அளித்த கோரக் காட்சியை என் வாழ் நாள் உள்ள அளவும் என்னால் மறக்க முடியாது.
வீதிகளிலெல்லாம் செத்த பிணங்கள், சாகப் போகிற பிணங்கள், அங்கங்கே தீப்பற்றி எரியும் காட்சி, நெருப்பணைக்கும் இயந்திரங்கள் அங்குமிங்கும் பறந்து விழுந்து ஓடுதல், ஜனங்களின் புலம்பல், ஸ்திரீகளின் ஓலம், குழந்தைகளின் அலறல்.
இத்தகைய கோரக் காட்சியைப் பார்த்து விட்டு சூரியாஸ்தமனம் ஆகி நன்றாய் இருட்டிய பிறகு மறுபடியும் என்னுடைய வீட்டுக்கே திரும்பிச் சென்றேன். வாசற்புறத்தில் மோட்டாரை ஒரு மூலையில் நிறுத்தி விட்டு, காம்பவுண்டு சுவரின் பின்பக்கமாகச் சென்றேன். நான் குடியிருந்த வீட்டிலிருந்து என்னுடைய சொந்த சாமான்களை எடுத்து வருவதற்குத் திருடனைப் போல் சுவர் ஏறிக் குதித்து இருட்டில் பதுங்கிப் பதுங்கிச் சென்று வீட்டின் பின்புறத்தை அடைந்தேன். சத்தம் செய்யாமல் உள்ளே புகுந்து மாடிப்படி வழியாக மேலே ஏறினேன். சாதாரணமாக மாடி அறையை நான் பூட்டிக் கொண்டு போகும் வழக்கம் கிடையாது. அன்றைக்கும் கதவைப் பூட்டவில்லை. “நல்லதாய்ப் போயிற்று” என்று எண்ணிக் கொண்டு கதவைத் திறந்தேன்.
திறந்ததும் மாடி அறைக்குள்ளே நான் கண்ட காட்சி விழித்துக் கொண்டிருக்கிறேனா, கனவு காண்கிறேனா என்ற சந்தேகத்தை எனக்கு உண்டாக்கி விட்டது. வியப்பினாலும் திகைப்பினாலும் என் தலை ‘கிறுகிறு’ வென்று சுற்ற ஆரம்பித்தது.
அந்தக் காட்சி என்னவென்றால், அந்த மச்சு அறையின் பலகணியின் அருகில் ஓர் இளம்பெண் நின்று ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். காம்பவுண்டில் ஸோல்ஜர்கள் வைத்துக் கொண்டிருந்த டார்ச் லைட்டிலிருந்து வந்த மங்கிய வெளிச்சத்தில், அந்தப் பெண்ணின் முதுகுப் பக்கம் ‘ஸில் ஹவுட்’ படம் மாதிரி தெரிந்தது. அவள் யாராயிருக்கும்? ஜன சூன்யமான வீட்டில், இந்த நேரத்தில் தன்னந்தனியாக அவள் என்னுடைய அறையில் இருப்பது எப்படி?
மனத்தில் துணிச்சலை வருவித்துக் கொண்டு, “யார் அங்கே?” என்று கேட்டேன். வெளியிலிருந்த ஸோல்ஜர்களுக்குக் கேட்கக் கூடாதென்று மெல்லிய கள்ளக் குரலில் பேசினேன். அந்த இடத்தில் அந்த வேளையில் என்னுடைய குரல் எனக்கே பயங்கரத்தை அளித்தது என்றால், அந்தப் பெண் அப்படியே பேயடித்தவள் போல் துள்ளித் திரும்பி என்னைப் பீதி நிறைந்த கண்ணால் பார்த்ததில் வியப்பு இல்லை அல்லவா?
ஆனால் திரும்பிப் பார்த்த மறுகணத்தில் எங்கள் இருவருடைய பயமும் சந்தேகமும் நீங்கி, வியப்பு மட்டும் தான் பாக்கி நின்றது. என்னைப் பொருத்த வரையில் மனத்திற்குள்ளே ஒருவகையான ஆனந்த உணர்ச்சி உண்டாகவில்லையென்று சொல்ல முடியாது.
“நீயா?”
“நீங்களா?”
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்பாத்தி ஹோட்டலுக்குப் பக்கத்து வீட்டு வாசலில் சில சமயம் அந்தப் பெண்ணை நான் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவளையும், தாய் நாட்டிலே எனக்கு மாலையிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்த என் அத்தைப் பெண்ணையும் மனம் ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. (நான் பர்மா நாட்டுக்கு வந்ததின் காரணங்களில் ஒன்று அத்தை மகளுடன் என் கலியாணத்தை ஒத்திப் போடுவதற்கு என்னும் இரகசியத்தை இந்த இடத்தில் சொல்லி வைக்கிறேன்). மற்றபடி வேறுவிதமான எண்ணம் அந்தப் பெண்ணைப் பற்றி என் மனத்தில் உண்டானதில்லை. ஏனெனில் அந்த வீட்டிலேயே குடியிருந்த ராவ்சாகிப் ஏ.வி. சுந்தர் என்பவர், ரங்கூனில் உள்ள தென்னிந்தியர்களுக்குள்ளே ஒரு பிரமுகர் என்றும் மாதம் இரண்டாயிரம் மூவாயிரம் வருமானம் உள்ளவரென்றும் எனக்குத் தெரியும். அப்பேர்ப்பட்டவருடைய புதல்வியைக் குறித்துக் கனவு காண்பதிலே என்ன பிரயோஜனம்?
அந்தப் பெண் இப்போது என் அறையில் இருட்டில் தன்னந்தனியாய் நிற்பதைக் கண்டதும், எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.