Kalki Short StoriesKalki TimesStory

Zamindar Mahan Kalki | Kalki Times

அத்தியாயம் 3: கிழக்கு ரங்கூன்

என் வியப்பை ஒருவாறு அடக்கிக் கொண்டு “இங்கே எப்படி வந்தாய்? எப்போது வந்தாய்?” என்று கேட்டேன்.

“நீங்கள்?” என்று அவள் திருப்பிக் கேட்டதில் பல கேள்விகள் தொனித்தன.

சற்றுக் கோபத்துடன், “அப்படியா? உனக்கு அவசியம் தெரிய வேண்டுமா? இது என்னுடைய அறை! என் அறையிலிருந்து என் சாமான்களைத் திருடிக் கொண்டு போவதற்காக வந்தேன். கொல்லைப் புறச் சுவர் ஏறிக் குதித்து வந்தேன். வந்த வழியாகத்தான் திரும்பிப் போகப் போகிறேன்! உனக்கு இங்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதாகத் தெரிகிறது. கவலைப்படாதே! இதோ போய் விடுகிறேன்” என்று சொல்லி, என் கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டேன்.

“ஐயோ! என்னையும் அழைத்துக் கொண்டு போங்கள். உங்களுக்குப் புண்ணியம் உண்டு!” என்று அவள் கூறிய போது, அவளுடைய நெஞ்சு ‘பட் பட்’ என்று அடித்துக் கொள்ளும் சத்தமே நான் கேட்கக் கூடியதாயிருந்தது.

அவளிடம் நான் உடனே இரக்கம் கொண்டாலும், இன்னும் கொஞ்சம் அவளைக் கெஞ்சப் பண்ண வேண்டுமென்ற அசட்டு எண்ணத்தினால், “அதெல்லாம் முடியாது. புண்ணியமும் ஆச்சு, பாவமும் ஆச்சு! எனக்கு வேறே வேலை இல்லையா?” என்றேன்.

உடனே அந்தப் பெண், “அப்படியா சமாசாரம் இதோ நான் ‘திருடன், திருடன்’ என்று கூச்சல் போடுகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே, ஜன்னல் பக்கம் போனாள். நான் அவசரமாய்ச் சென்று அவளைக் குறுக்கே மறித்து, “வேண்டாம்! வேண்டாம்!” என்று சொல்லிக் கொண்டே, அவளுடைய கரங்களைப் பற்றினேன். மேலே போகாமல் அவளைத் தடுப்பதற்காகவே அவ்விதம் செய்தேன். அவளோ திருப்பி என் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “என்னை அழைத்துக் கொண்டு போவதாகச் சத்தியம் செய்து கொடுங்கள்; இல்லாவிட்டால் கூச்சல் போடுவேன்” என்றாள்.

அவளுடைய கைகளைத் தொட்ட அதே நிமிஷத்தில் நான் என் சுதந்திரத்தை அடியோடு இழந்து அவளுக்கு அடிமையாகி விட்டேன் என்பதையும், அவளுடைய சுண்டு விரலால் ஏவிய காரியங்களை எல்லாம் சிரசினால் செய்யக் கூடிய நிலையில் இருந்தேன் என்பதையும், நல்ல வேளையாக அவள் அறிந்து கொள்ளவில்லை. நானும் அவளுக்கு அச்சமயம் தெரியப்படுத்த விரும்பவில்லை.

“ஆகட்டும் பயப்படாதே! உன் அப்பா, அம்மா?” என்று கேட்டேன்.

“அப்பா, அம்மாவா?” என்று அந்தப் பெண் பெருமூச்சு எறிந்தாள். மறுபடியும் “நல்ல அப்பா! நல்ல அம்மா!” என்று பல்லைக் கடித்துக் கொண்டாள்.

அழுகையும் ஆத்திரமுமாக அவள் கூறியதிலிருந்து பின்வரும் விவரங்கள் வெளிவந்தன.

அன்று மத்தியானம் அந்தப் பெண் ஸ்நான அறையில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று ‘ஸைரன்’ ஊதிற்றாம். அவசர அவசரமாக அவள் குளித்து முடிப்பதற்குள் ‘டுடும்’ ‘டுடும்’ என்று காது செவிடுபடும் சத்தம் கேட்டதுடன், வீடே அதிர்ந்ததாம். அந்த அதிர்ச்சியில் அவள் தடாலென்று தரையில் விழுந்தாளாம்! தலையில் அடிபட்டு மூர்ச்சையாகி விட்டாளாம். மூர்ச்சை தெளிந்து எழுந்து, உடை உடுத்திக் கொண்டு ஸ்நான அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், வீட்டிலே ஒருவரும் இல்லையாம்; கொஞ்ச தூரத்தில் தீப்பிடித்து எரியும் காட்சி தென்பட்டதாம். அவள் வீட்ட்டுக்கு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்து வீடுகளில் அப்பா அம்மாவைப் பற்றி விசாரிக்கலாமென்று ஓடி ஓடிப் பார்த்தாளாம். சில வீடுகளில் ஒருவருமில்லையாம். சில வீடுகளில் சாமான்களை அவசரமாக அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்களாம். இவளை கவனிப்பாரோ, இவளுடைய கேள்விக்குப் பதில் சொல்வாரோ யாரும் இல்லையாம்! கடைசியில் இந்த வீடு திறந்து கிடப்பதைக் கண்டு உள்ளே வந்தாளாம். வீட்டில் ஒருவரும் இல்லாமலிருக்கவே, மச்சு அறையில் யாராவது இருக்கலாமென்று மேலே ஏறினாளாம். அவள் மச்சு அறையில் இருக்கும் போது ஸோல்ஜர்கள் வந்து வீட்டைச் சூழ்ந்து கொண்டார்களாம். பிறகு வெளியே வர பயப்பட்டுக் கொண்டு மச்சு அறையிலேயே ஒளிந்து கொண்டிருந்தாளாம்.

இதையெல்லாம் கேட்டபின் “உன் அப்பா அம்மாவுக்குத் தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் இந்த ஊரில் பலர் இருப்பார்களே? அவர்களுடைய விலாசங்கள் ஏதாவது உனக்குத் தெரியுமா? ஒருவேளை எந்தச் சிநேகிதர் வீட்டுக்காவது போயிருக்கலாமல்லவா?” என்று விசாரித்தேன்.

“போயிருக்கலாம்” என்று சொல்லி, கிழக்கு ரங்கூனில் இரண்டு மூன்று வீடுகளையும் அவள் சொன்னாள்.

உடனே, ஒரு முடிவுக்கு வந்தேன். என் கைப் பெட்டியை ஒரு கையில் எடுத்துக் கொண்டு அவளை இன்னொரு கையினால் பிடித்துக் கொண்டு கிளம்பினேன். மச்சிலிருந்து கீழே இறங்கி, வீட்டின் கொல்லைப் புறமாகச் சென்று, காம்பவுண்டுச் சுவரின் மேல் முதலில் அவளை ஏற்றி விட்டுப் பெட்டியை எடுத்துக் கொடுத்தேன். பிறகு நான் ஏறிக் குதித்து அவளையும் இறக்கி விட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்க் காரில் வைத்தேன்.

டிரைவர் ஆசனத்தில் நான் உட்கார்ந்ததும், அவள் காரின் பின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டில் உட்கார்ந்தாள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. அரைப் படிப்புப் படித்து நாணம் மடம் முதலிய ஸ்திரீகளுக்குரிய குணங்களைத் துறந்த பெண் அவள் அல்ல என்பதற்கும் அது அறிகுறியாயிருந்தது.

அதிர்ஷ்டவசமாக, முதல் முதல் நான் காரைக் கொண்டு போய் நிறுத்திய வீட்டிலேயே அந்தப் பெண்ணின் அப்பா, அம்மா இருந்தார்கள். ராவ்சாகிப் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். அவருடைய பெண் காரிலிருந்து இறங்கியதும், அவர் வரவேற்புக் கூறிய விதம் எனக்குத் திகைப்பை அளித்தது.

“வந்துவிட்டாயா, வஸந்தி! வா!” என்றார். உடனே வீட்டுக்கு உட்புறம் பார்த்து “அடியே! தவித்துக் கொண்டிருந்தாயே, இதோ வஸந்தி வந்து விட்டாள்” என்றார். ஓர் அம்மாள் உள்ளிருந்து வாசற்படியண்டை வந்து, “வந்து சேர்ந்தாயாடி, அம்மா. ஏதோ பகவான் இருக்கிறார்!” என்றார்.

அந்தப் பெண் வீட்டுக்குள்ளே போனதும் அவளுடைய அப்பாவும் உள்ளே போய்க் கதவைப் படீரென்று சாத்தினார்.

பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தவனுக்கு ஒரு வார்த்தை வந்தனம் கூடச் சொல்லவில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *