Zamindar Mahan Kalki | Kalki Times
அத்தியாயம் 4: மாந்தலே
ரங்கூனிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் யாரை வேணுமானாலும் விசாரித்துப் பாருங்கள்.
“ரங்கூனுக்குச் சமானமான நகரம் உலகத்திலேயே உண்டா?” என்று தான் கேட்பார்கள்.
அப்படிக் குதூகலத்துக்கும் கோலாகலத்துக்கும் பெயர் போனதாயிருந்த ரங்கூன் நகரம், மேற்படி டிசம்பர் 23• சம்பவத்துக்குப் பிறகு, சில தினங்களில் அடைந்த நிலைமையை எண்ணிப் பார்த்தால், இப்போது கூட எனக்கு என்னமோ செய்கிறது.
கோலாகலம் குதூகலம் எல்லாம் போய்ச் சாவு விழுந்த வீட்டின் நிலைமையை ரங்கூன் அடைந்து விட்டது. ஜனங்கள் அதி விரைவாக நகரைக் காலி செய்து போய்க் கொண்டிருந்தார்கள். மனுஷ்யர்களை நம்பி உயிர் வாழ்ந்த நாய்கள், பூனைகள், காக்கைகள் முதலிய பிராணிகளும் பட்சிகளும் உணவு கிடைக்காமையால் எலும்புக் கூடுகளாகி தீனக் குரலில் ஊளையிட்டுக் கொண்டும் முனகிக் கொண்டும் அங்குமிங்கும் அலைந்த காட்சி பரிதாபகரமாயிருந்தது.
ரங்கூனில் வசித்த இந்தியர்கள் எத்தனையோ பேர் தென்னிந்தியாவுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். கப்பல்களில் இடத்துக்கு ஏற்பட்டிருந்த கிராக்கியைச் சொல்ல முடியாது. எனினும் நான் முயன்றிருந்தால் டிக்கெட் வாங்கிக் கொண்டு கிளம்பியிருக்கலாம். பல காரணங்களினால் நான் கிளம்பவில்லை. முக்கியமான காரணம், நான் வேலை பார்த்த கம்பெனியின் இங்கிலீஷ் மானேஜர் அடிக்கடி, ‘இந்தியர் எல்லாரும் பயந்தவர்கள்!’ ‘அபாயம் வந்ததும் ஓடிப் போய் விடுவார்கள்!’ என்று சொல்லிக் கொண்டிருந்ததுதான். நான் ஒருவனாவது இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியே தீர்வது என்று உறுதி கொண்டிருந்தேன்.
1942ஆம் வருஷம் பிறந்தது. ஜனவரி முடிந்து பிப்ரவரியில் பாதிக்கு மேல் ஆயிற்று. பர்மாவின் தென் முனையில் ஜப்பானியர் இறங்கி விட்டார்கள் என்றும் முன்னேறி வருகிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. சிட்டாங் பாலத்துக்காக சண்டை தொடங்கிவிட்டதென்றும் தெரிகிறது.
என் மனமும் சலனமடைந்தது. எவ்வளவுதான் நான் தைரியமாயிருந்தாலும் என் விருப்பத்துக்கு விரோதமாக இந்தியாவுக்குப் போக வேண்டி நேரலாமென்று தோன்றிற்று. இந்த நிலைமையில் கையில் எவ்வளவு பணம் சேகரித்துக் கொள்ளலாமோ, அவ்வளவும் சேகரித்துக் கொள்ள விரும்பினேன்.
சில மாதங்களுக்கு முன்னாலிருந்து பர்மாவில் மோட்டார் வண்டிக்கு அளவில்லாத கிராக்கி ஏற்பட்டிருந்தது. சைனாக்காரர்கள் வந்து பர்மாவில் மோட்டார் வாங்கிக் கொண்டிருந்தது தான் காரணம். பழைய வண்டிகளை வாங்கி விற்பதில் நல்ல லாபம் கிடைத்தது. நான் மோட்டார் கம்பெனியில் வேலையிலிருந்தபடியால், என் சொந்த ஹோதாவில் அந்த வியாபாரம் கொஞ்சம் செய்து கொண்டிருந்தேன்.
கடைசியாக, ரங்கூனில் குண்டு விழுந்த போது நான் வாங்கி வைத்திருந்த வண்டி விற்பனையாகாமல் என்னிடமே இருந்தது. அதை எப்படியாவது பணம் ஆக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். ரங்கூனில் அதை விற்பதற்கு வழியில்லையாகையால் மாந்தலேக்குக் கொண்டு போய் விற்று விட எண்ணினேன். எனவே, கம்பெனி மானேஜரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, பிப்ரவரி 18ந் தேதி மோட்டாரை நானே ஓட்டிக் கொண்டு பிரயாணமானேன்.
பெகு வழியாகச் சுமார் 360 மைல் பிரயாணம் செய்து மறுநாள் 18• தேதி மத்தியானம் மாந்தலேயை அடைந்தேன். மாந்தலேயின் பிரசித்தி பெற்ற கோட்டைச் சமீபத்தில் வந்ததும், வண்டியை நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று அபாயச் சங்கு ஒலித்தது. “இதென்ன கூத்து” என்று ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே, ‘விர்’ என்று சத்தம் வரவரப் பெரிதாகக் கேட்டது. விமானங்கள் என் தலைக்கு மேலே வெகு சமீபத்தில் பறந்து போயின. அடுத்த கணத்தில் ‘டுடும்’ ‘டுடும்’ என்ற பயங்கர வெடிச் சப்தங்கள் கேட்டன. சொல்ல முடியாத பீதியும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆவலும் என்னைப் பற்றிக் கொண்டன. காரிலேயே பாய்ந்து ஏறி, திக்குத் திசை பாராமல் அதிவேகமாக வண்டியை விட்டுக் கொண்டு சென்றேன். அந்தச் சமயத்தில் அந்தப் பாழும் மோட்டார் எஞ்சினில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, டடடட டடடட என்று அடித்துக் கொண்டு நின்று போய் விட்டது. வண்டி நின்று போய் விட்ட இடத்துக்குப் பக்கத்திலே ஒரு தபால் ஆபீஸைப் பார்த்தேன். அதற்குள் புகுந்து கொள்ளலாமென்று ஓடினேன். உள்ளேயிருந்த பர்மியப் போஸ்டு மாஸ்டர் படாரென்று கதவைச் சாத்தித் தாளிட்டார். ஜன்னல் வழியாக அவரைத் திட்டினேன். அவர் பர்மியப் பாஷையில் திருப்பித் திட்டினார். வேறு வழியின்றிப் போஸ்டாபீஸ் வாசல் முகப்பிலேயே பீதியுடன் நின்று கொண்டிருந்தேன்.
அந்த பிப்ரவரி மாதம் 19• இந்த யுத்தத்திலேயே ஒரு விசேஷமான தினம் என்று பிற்பாடு எனக்குத் தெரிந்தது. இந்தியாவுக்கு வந்திருந்த சீனத் தலைவர் சியாங் – காய்ஷேக் திரும்பிச் சீனா போகையில், அன்று மாந்தலேயில் இறங்கினார். கோட்டையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் அவருக்கு விருந்து அளித்தார்கள். அதைத் தெரிந்து கொண்டுதான், ஜப்பான் விமானங்கள் அன்றைக்கு வந்து கோட்டையில் குண்டு போட்டன. ஆனால் அதிர்ஷ்டம் சீனாவின் பக்கம் இருந்தபடியால், ஜப்பான் விமானங்கள் ஒரு மணி நேரம் பிந்தி விட்டன!
இந்த விவரம் ஒன்றும் அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அறிந்து கொள்ள விரும்பவும் இல்லை. அப்போது ஒரே ஓர் எண்ணம், ஒரே ஓர் ஆசை, என் உள்ளம், உடம்பு எல்லாவற்றிலும் புகுந்து கவிந்து கொண்டிருந்தது! அது தாய் நாட்டுக்குச் சென்று, என் வயது முதிர்ந்த தாயாரைப் பார்க்க வேண்டும் என்பதுதான்.
அபாய நீக்கச் சங்கு ஊதியதும், வண்டியை ரிப்பேர் செய்து கிளம்பிக் கொண்டு எந்தச் சினேகிதர் மூலமாக வண்டியை விற்க நினைத்தேனோ, அவர் வீட்டை அடைந்தேன். வீட்டில் நண்பர் இல்லை. அவர் மனைவியிடம் வண்டியை ஒப்படைத்து, நண்பர் திரும்பி வந்ததும் கிடைத்த விலைக்கு விற்றுப் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பச் சொல்லிவிட்டு, அன்று மாலை மாந்தலேயிலிருந்து ரங்கூனுக்குக் கிளம்பும் ரயிலில் கிளம்பினேன்.
சாதாரணமாக, மாலையில் மாந்தலேயில் கிளம்பும் ரயில், மறுநாள் காலையில் ரங்கூன் போய்ச் சேருவது வழக்கம். வழியிலே ‘பின்மானா’ என்னும் ரயில்வே ஸ்டேஷன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், அந்தத் தீயின் கோரமான வெளிச்சத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தனி மனிதராக நின்று கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாலும் எனக்கு மயிர்க் கூச்சல் உண்டாகிறது.
கடைசியாக 20 சாயங்காலம் ரயில் ரங்கூன் ஸ்டேஷனை அடைந்தது.
ஸ்டேஷனை ரயில் நெருங்கும்போதே, அங்கு ஏதோ அல்லோலகல்லோலமாயிருக்கிறதென்று தெரிந்து விட்டது. ரங்கூன் ஸ்டேஷனில் எத்தனை ரயில் பாதைகள் உண்டோ அவ்வளவு பாதைகளிலும் ரயில்கள் புறப்படத் தயாராய் நின்றன. எல்லா ரயில் என்ஜின்களும் மாந்தலேயே நோக்கியிருந்தன. ரயில்களில் கூட்டத்தைச் சொல்ல முடியாது. பிளாட்பாரத்திலோ இறங்குவதே அசாத்தியமாயிருந்தது.
எப்படியோ இறங்கியவுடன், எனக்குத் தெரிந்த ஆசாமி யாராவது உண்டா என்று பார்த்தேன், என் கம்பெனியைச் சேர்ந்த ராமபத்திர ஐயர் தென்பட்டார். அவரைப் பிடித்து ‘இது என்ன கோலாகலம்?’ என்றேன். அவர் சொன்னார்.
“ரங்கூனை, ‘எவாகுவேட்’ பண்ணும்படி சர்க்கார் உத்திரவு பிறந்து விட்டது! சிறைச்சாலைகளையும், பைத்தியக்கார ஆஸ்பத்திரிகளையும் திறந்து விட்டு விட்டார்கள். மிருகக் காட்சிச் சாலையில் துஷ்ட மிருகங்களைக் கொன்று விட்டார்கள். குரங்குகளை அவிழ்த்து விட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட சமயம் பார்த்து நீ திரும்பி வந்திருக்கிறாயே?”
என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!