Kalki Short StoriesKalki TimesStory

Zamindar Mahan Kalki | Kalki Times

அத்தியாயம் 5: பக்கோக்கூ

அன்றிரவே சென்று கப்பலுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுக்கும்படி உத்தியோகஸ்தரைச் சந்தித்தேன். அவர் “அப்பனே! டிக்கெட் என்னமோ வாங்கித் தருகிறேன். ஆனால், டிக்கெட் வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? உனக்கு முன்னால் கப்பலுக்கு டிக்கெட் வாங்கிய எத்தனையோ பேர் இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார்களே?” என்றார்.

பிறகு அவர், “நாளைக்கு நானே காரில் மாந்தலேக்குப் புறப்படுகிறேன். நாலு பேர் போகிறோம். நீயும் வந்தாயானால், உன்னையும் அழைத்துப் போகிறேன்” என்றார்.

என் பேரில் உள்ள கருணையால் அவர் அவ்விதம் சொல்லவில்லை. எனக்கு மோட்டார் விடவும் ரிப்பேர் செய்யவும் தெரியுமாதலால் வழியில் உபயோகப்படுவேன் என்று எண்ணித்தான் சொன்னார். தாம் மட்டும் மாந்தலேயில் தங்கப் போவதாகவும், மற்ற மூவரும் அங்கிருந்து ‘கலாவா’ மார்க்கமாக இந்தியாவுக்குப் புறப்படுவதாகவும் கூறினார். அவர்களுடன் நானும் சேர்ந்து போகலாம் என்ற எண்ணத்துடன் ‘சரி’ என்று சம்மதித்தேன்.

‘பெகு’ மார்க்கம் அபாயமாகி விட்டபடியால் ‘புரோமி’ வழியாகப் பிரயாணஞ் செய்தோம்! இந்தப் பிரயாணத்தால் நேர்ந்த எத்தனையோ அனுபவங்களைப் பற்றி நான் இங்கே விஸ்தரிக்கப் போவதில்லை. 21• ரங்கூனில் கிளம்பியவர்கள் 24• மாந்தலே போய்ச் சேர்ந்தோம் என்று மட்டும் குறிப்பிடுகிறேன்.

இவ்வளவு சிரமப்பட்டு மீண்டும் மாந்தலேயே அடைந்த பிறகு, அங்கே மற்றோர் ஏமாற்றம் எனக்குக் காத்துக் கொண்டிருந்தது.

மாந்தலேயிலிருந்து ‘கலாவா’ போகும் ரயிலுக்கு டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். மறுபடியும் எப்போது கொடுக்க ஆரம்பிப்பார்கள் என்று தெரியவில்லை.

டிக்கெட் கிடைக்காமற் போனதில் எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தையும், துக்கத்தையும் சொல்லவே முடியாது. ஆனால், இப்போது நினைத்துக் கொண்டால் பகவானுடைய கருணை எப்படியெல்லாம் இயங்குகிறது என்று ஆச்சரியக் கடலில் மூழ்கிவிடுகிறேன்.

முன் தடவை மோட்டாரை ஒப்புவித்து விட்டு வந்த நண்பரைச் சந்தித்தேன். நல்லவேளையாக அவர் வண்டியை விற்றிருந்தார். ஆயிரத்து நூறு ரூபாயும் கொடுத்தார். இந்தப் பணத்தைக் கடவுளே கொடுத்ததாகப் பின்னால் நான் கருதும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டது.

அதே நண்பர்தான் இன்னொரு யோசனையும் சொன்னார். மாந்தலேயில் ரயிலுக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், ‘பக்கோக்கூ’வுக்குப் போய் அங்கிருந்து ‘டம்மு’ வரையில் போகும் மோட்டார் லாரிகளில் போகலாம் என்றார்.

‘பக்கோக்கூ’ என்னும் ஊர் மாந்தலேக்குக் கிழக்கே கொஞ்ச தூரத்தில் ஐராவதிக்கு அக்கரையில் இருக்கிறது. அங்கே போய்ச் சேர்ந்து விசாரித்தேன். என்னுடைய துரதிர்ஷ்டம் அங்கும் என்னைத் தொடர்ந்து வந்ததாகத் தோன்றியது. ஏனெனில், மறுநாள் காலையில் அங்கிருந்து நாலு லாரிகள் ‘டம்மு’வுக்குக் கிளம்புவதாகவும், ஆனால் அவற்றில் ஒன்றிலும் கூட இடம் இல்லை என்றும் தெரிந்தது. லாரிகளின் சொந்தக்காரனான பஞ்சாபியிடம் நேரில் போய் எனக்கு மோட்டார் வேலை தெரியும் என்றும் வழியில் உபயோகமாயிருப்பேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். ‘இடமில்லை’ என்ற ஒரே பதில் தான் வந்தது.

அன்றிரவு நடுநிசிக்கு அதே பஞ்சாபிக்காரன் என்னைத் தேடிக் கொண்டு நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தான். எனக்கு மோட்டார் வண்டி நன்றாய் ஓட்டத் தெரியுமா என்று கேட்டான். தெரியும் என்றேன். அவன் ஏற்படுத்தியிருந்த டிரைவர்களில் ஒருவன் வராமல் ஏமாற்றி விட்டபடியால் அவன் என்னைத் தேடி வந்தான் என்று தெரிந்தது.

“டம்மு வரையில் லாரி ஓட்டிக் கொண்டு போய் சேர்த்தால் 200 ரூபாய் தருகிறேன்” என்றான் அந்தப் பஞ்சாபி.

சற்று முன்னால் தான் அவனிடம் நான் மேற்படி பிரயாணத்துக்கு 200 ரூபாய் தருவதாகச் சொன்னேன். இப்போது அதே பிரயாணத்துக்கு அந்த ரூபாய் எனக்குக் கிடைப்பதாயிருந்தது. ஆனால், மோட்டார் லாரி ஓட்டுவதிலும் எனக்குக் கௌரவம் இருக்க வேண்டும் என்று எண்ணி, “எனக்கு உன் ரூபாய் வேண்டாம்; பிரயாணத்தின் போது எனக்குச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தால் போதும்” என்றேன்.

மறுநாள் காலையில் லாரிகள் நின்ற இடம் போனேன். பிரமாண்டமான லாரிகள் நாலு நின்று கொண்டிருந்தன. ரொம்ப ரொம்ப அடிபட்டுப் பழசாய்ப் போன லாரிகள். அவற்றில் நான் ஓட்ட வேண்டிய வண்டியைச் சுற்றுமுற்றும் வந்து பார்த்தேன். இந்த லாரிப் பூதத்தைக் காட்டு மலைப் பாதையில் 300 மைல் ஓட்ட வேண்டும் என்று நினைத்த போது பகீர் என்றது.

பிறகு, லாரிகளில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தேன். வங்காளிகள், பஞ்சாபிகள், ஆந்திரர்கள், தமிழர்கள் முதலிய பல மாகாணத்தவர்களும் இருந்தார்கள். அப்படி நின்றவர்களுக்கு மத்தியில், சென்ற இரண்டு மாதமாக நான் கனவிலும் நனவிலும் தியானித்துக் கொண்டிருந்த பெண் தெய்வமும் நின்று கொண்டிருந்தது.

அவளுடைய பெற்றோரும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்புறம் வண்டி கிளம்புகிற வரையில் லாரியின் என்ஜினுக்குப் போட்டியாக என் நெஞ்சம் அடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் என்னுடைய வண்டியில் ஏறுவார்களா, வேறு வண்டியில் ஏறுவார்களா என்று தெரிந்து கொள்ள என் உள்ளம் துடிதுடித்தது. ஒரு வேளை ராவ்சாகிப் என்னைத் தெரிந்து கொண்டால் வேண்டுமென்றே வேறு வண்டியில் ஏறினாலும் ஏறுவார் என்று, கூடிய வரையில் அவர்கள் பக்கம் பார்க்காமலே இருந்தேன். ஆயினும் இரண்டொரு தடவை பார்த்த போது அவளும் என்னைத் தெரிந்து கொண்டாள் என்றும் அவளுடைய நெஞ்சும் ஆவலினால் துடிதுடித்துக் கொண்டிருந்தது என்றும் அறிந்தேன்.

கடவுள் என் பக்கத்திலே இருக்கிறார் என்றும் விரைவிலேயே தெரிந்து விட்டது.

அவர்கள் என்னுடைய லாரியில் தான் ஏறினார்கள்!

வண்டிகள் கிளம்ப வேண்டிய சமயம் வந்ததும், நான் டிரைவர் பீடத்திலிருந்து இறங்கிச் சென்று, வண்டிக்குள்ளே பார்த்து, “எல்லோரும் ஏறியாயிற்றா?” என்றேன். பிறகு அந்த மனுஷரின் முகத்தை உற்றுப் பார்த்து, “குட்மார்னிங் ஸார்! சௌக்கியமா?” என்று கேட்டுவிட்டுச் சட்டென்று திரும்பிப் போய் என் பீடத்தில் உட்கார்ந்தேன். அப்போது வஸந்தியின் முகத்தில் நாணங்கலந்த புன்னகை மலர்ந்ததையும், கீழே நோக்கியபடி கடைக்கண் பாணம் ஒன்றை என்மீது எறிந்ததையும் சொல்லாமல் விட முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *