Zamindar Mahan Kalki | Kalki Times
அத்தியாயம் 6: கங்கோ
பர்மா தேசப் படத்தைப் பார்த்தால் ரங்கூனிலிருந்து ஏறக்குறைய நேர் வடக்கே, பர்மாவின் நடுமத்தியில் ஐராவதி நதிக்கரையில் பக்கோக்கூ என்னும் ஊர் இருப்பதைக் காணலாம். பக்கோக்கூவிலிருந்து மீண்டும் ஏறக்குறைய நேர் வடக்கே 360 மைல் அடர்ந்த காடுகள், உயர்ந்த மலைகளின் வழியாகச் சென்றால் அஸ்ஸாமிலுள்ள மணிப்பூர் எல்லையை அடையலாம். வழியில் உள்ள முக்கியமான ஊர்கள் ‘கங்கோ’, ‘கலன்மியோ’, ‘டம்மு’ ‘மீந்தா’ என்பவை.
பக்கோக்கூவிலிருந்து நாங்கள் புறப்பட்ட பத்தாவது நாள் 210 மைல் பிரயாணம் செய்து கலன்மியோ என்னும் இடத்தை அடைந்தோம். சாதாரண சாலையில் எவ்வளவு மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் லாரி ஓட்டினாலும் பத்து மணி நேரத்தில் அவ்வளவு தூரம் போயிருக்கலாம். எங்களுக்குப் பத்து நாள் ஆயிற்று என்பதிலிருந்து நாங்கள் பிரயானம் செய்த பாதை எவ்வளவு லட்சணமாயிருந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். உண்மையில் அதைப் பாதை என்றே சொல்வதற்கில்லை. காட்டிலும் மலையிலும் எங்கே இடம் கிடைத்ததோ அந்த வழியாகவெல்லாம் லாரியைச் செலுத்திக் கொண்டு போனோம். எங்களுக்கு முன்னால் போயிருந்த லாரிகளின் சுவடுதான் எங்களுக்குப் பாதையாயிற்று. முன்னால் போனவர்கள் ஆங்காங்கே மரக்கிளைகளை வெட்டிக் கொஞ்சம் இடைவெளியும் உண்டு பண்ணியிருந்தார்கள். அது தான் பாதையென்று மரியாதைக்குச் சொல்லப்பட்டது. செங்குத்தான மேட்டிலும் கிடுகிடு பள்ளத்திலும் லாரி ஏறி இறங்கும் போதெல்லாம் உயிர் போய் விட்டுத் திரும்பி வருவது போலத் தோன்றும்.
இப்படியாகக் காட்டு மலைப் பாதையில் முட்டி மோதிக் கொண்டு, இடித்துப் புடைத்துக் கொண்டு, எலும்பெல்லாம் நொறுக்கும்படியாக அலைப்புண்டு, அடியுண்டு, உயிருக்கு மன்றாடிக் கொண்டு, பிரயாணம் செய்த பத்து தினங்கள் தான் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாட்கள் ஆயின. அவையே என் வாழ்க்கையின் ஆனந்தம் மிகுந்த நாட்களாகவும் ஆயின.
அந்த வண்டியில் வஸந்தியும் வருகிறாள் என்ற எண்ணமே, பிரயாணத்தின் அசௌகரியங்களையெல்லாம் மறக்கச் செய்யும்படியான அளவற்ற உற்சாகத்தை எனக்கு அளித்தது.
அந்தப் பத்து தினங்களிலும் எங்களுக்குள் ஓயாமல் சம்பாஷணை நடந்து கொண்டேயிருந்தது. எங்களுடைய கண்கள் அடிக்கடி பேசிக் கொண்டன. வாய் வார்த்தையினாலும் சில சமயம் நாங்கள் பேசிக் கொண்டோம்.
அந்தப் புதுமை உணர்ச்சியினாலும், இருதயக் கிளர்ச்சியினாலும் ஏற்பட்ட உற்சாகத்தில், நான் ஓர் எழுத்தாளனாகக் கூட ஆகிவிட்டேன் என்பதை இந்தக் கதையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். அந்த அற்புத சம்பவங்கள் நிகழ்ந்த வரலாறு இதுதான்:
பக்கோக்கூவிலிருந்து கிளம்பிய நாலாம் நாள் மலைப் பாதையில் அதலபாதாளமான ஒரு பள்ளத்தை நாங்கள் கடக்க வேண்டியிருந்தது. அந்தப் பள்ளத்தின் அடியில் கொஞ்சம் ஜலமும் போய்க் கொண்டிருந்தது. இதைத் தாண்டுவதற்கு தண்ணீரின் மேல் பெரிய பெரிய மரக்கட்டைகளை வெட்டிப் போட்டிருந்தார்கள். மேற்படி மரங்களின் மேலே எப்படியோ முதல் லாரி போய் விட்டது. இரண்டாவது லாரி வந்த போது ஒரு மரம் விலகிச் சக்கரம் அதில் மாட்டிக் கொண்டது. மேலே போகவும் முடியவில்லை; பின்னால் தள்ளவும் முடியவில்லை; எனவே எல்லா லாரிகளும் அங்கே வெகு நேரம் நிற்க வேண்டியதாயிற்று.
அச்சமயம் காட்டு மரங்களின் அடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான், எங்களுக்குள் ஒவ்வொரு வரும் தத்தம் கதையைச் சொல்ல வேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. “எங்களுக்குள்” என்னும் போது அந்த நாலு மோட்டார் லாரிகளிலும் வந்த தமிழ் நாட்டார்களைத்தான் சொல்கிறேன். அப்படித் தமிழர்களாக நாங்கள் மொத்தம் 15 பேர் இருந்தோம். தினந்தோறும் சாப்பிடுவதற்காகவோ இளைப்பாறுவதற்காகவோ, இரவில் தூங்குவ்தற்காகவோ எங்கே தங்கினாலும், நாங்கள் ஓரிடத்தில் சேர்வது வழக்கமாயிருந்தது. எனக்கு உணவளிக்கும் பொறுப்பை லாரி சொந்தக்காரன் ஏற்றுக் கொண்டிருந்தபடியால், இது விஷயத்தில் மற்றவர்களை விட எனக்குக் கிடைத்த ரொட்டி, பிஸ்கோத்து முதலியவைகளை மற்றவர்களுடன் சில சமயம் நான் பகிர்ந்து கொண்டேன்.
பொழுது போவதற்காக ஒவ்வொருவரும் தத்தம் வரலாற்றைச் சொல்ல வேண்டுமென்று நான் தான் யோசனை கூறினேன். அவர்களும் கதை சொல்லிக் கொண்டிருக்கையில், நானும் வஸந்தியும் எங்களுடைய அந்தரங்க நினைவுகளையும் எதிர்கால கனவுகளையும் வார்த்தை தேவையில்லாத இருதய பாஷையில் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருக்கலாமல்லவா?
என்னுடைய யோசனையை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டு முதன் முதலில் சுயசரிதையைச் சொல்ல ஆரம்பித்தவர் ராவ்சாகிப் தான். அப்பப்பா! அந்த மனுஷர் பீற்றிக் கொண்ட பீற்றலையும், அடித்துக் கொண்ட பெருமையையும் சொல்லி முடியாது. அவ்வளவு சொத்துக்களை வாங்கினாராம்! அவ்வளவு ஸோபாக்களும் பீரோக்களும் அவர் வீட்டில் இருந்தனவாம். அவ்வளவு டின்னர் பார்ட்டிகள் கொடுத்திருக்கிறாராம். கவர்னருடன் அவ்வளவு தடவை கை குலுக்கியிருக்கிறாராம்.
என்ன பீற்றிக் கொண்டு என்ன? என்ன பெருமை அடித்துக் கொண்டு என்ன? ஆசாமி இப்போது பாப்பர்! அவருடைய அவ்வளவு சொத்துக்களும் பர்மாவிலேயே இருந்தபடியால், சர்வமும் கயா! பழைய கதையைச் சொல்லி விட்டு, வருங்காலத்தில் அவருடைய உத்தேசங்களையும் ஒருவாறு வெளியிட்டார். இந்தியாவுக்குப் போனதும், அவர் இன்ஷியூரன்ஸ் வேலையை மேற்கொள்ளப் போகிறாராம். அவருடைய பெண்ணை ஒரு பெரிய பணக்காரனாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறாராம். சாதி வேற்றுமை கூட அவர் பார்க்கப் போவதில்லையாம்! எவனொருவன் கலியாணத்தன்று லட்ச ரூபாய்க்கு இன்ஷ்யூர் செய்கிறானோ, அவனுக்குக் கொடுத்து விடுவாராம்!
இந்தப் பேராசை பிடித்த தற்பெருமைக்கார மனிதர், ஒரு வேளை எங்களுடன் வந்த சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாரை மனத்தில் வைத்துக் கொண்டு தான் மேற்கண்டபடி சொல்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது.
ராவ்சாகிப்புக்கு அடுத்தபடியாக இந்த உலகத்தில் அப்போது நான் வெறுத்த மனுஷர் ஒருவர் உண்டு என்றால், அவர் இந்த சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியார் தான். உலகத்திலே பல விஷயங்களைப் பற்றியும் என்னுடைய கொள்கைகளையும் அபிப்ராயங்களையும் தெரிந்து கொள்வதில் இந்த மனுஷர் கொண்டிருந்த பெருந் தாகம் சமுத்திரத்துக்குச் சமமாக இருந்தது. இந்த தாகத்தைத் தணித்துக் கொள்ள அவர் சமயா சமயம் தெரியாமல், சந்தர்ப்பா சந்தர்ப்பம் பார்க்காமல், எனக்கு அளித்த தொந்தரவை நினைத்தால், அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்திருந்தும் கூட இன்னமும் என் கோபம் தணிந்தபாடில்லை.
நானும் வஸந்தியும் மரத்தடியில் தனியா உட்கார்ந்து இரண்டு நிமிஷம் அந்தரங்கமாகப் பேச நினைத்தோமானால், இந்த மனுஷருக்கு மூக்கிலே வியர்த்துவிடும்! எங்கள் இரண்டு பேருக்கும் நடுவிலே சம்பாஷிக்க வந்து உட்கார்ந்து கொண்டு, “ஏன் ஸார்! இன்ஷியூரன்ஸைப் பற்றி உங்களுடைய கொள்கை என்ன?” என்று கேட்டார்.
“இன்ஷியூரன்ஸ் என்பது மகா முட்டாள்தனம். இன்ஷியூரன்ஸ் செய்து கொள்கிறவர்களுக்கு ஈரேழு பிறவியிலும் நரகம் தான் கிடைக்கும்” என்று நான் சொன்னேன்.
“அதனால் தான் கேட்டேன்! இருக்கட்டும், பாரதியாரைப் பற்றி உங்களுடைய அபிப்ராயம் என்ன?” என்று கேட்டார்.
“கூடியவரையில் நல்ல அபிப்ராயம் தான்” என்றேன்.
“பாரதியார் தேசிய கவியா? மகா கவியா?” என்று வினவினார்.
“அவரைத் தான் கேட்க வேண்டும்!” என்றேன்.
“ரொம்ப சரி. காதல் மணத்தைப் பற்றி உங்கள் கொள்கை என்ன?” என்று கேட்டார் செட்டியார்.
காதல் மணம் ரொம்ப ரொம்ப அவசியமானது. அதைப் போல அவசியமானது ஒன்றுங் கிடையாது. காதல் மணத்துக்குத் தடை செய்கிறவர்களைப் போன்ற மகாபாவிகள் வேறு யாரும் இல்லை” என்றேன்.
“என் அபிப்ராயமும் அதுதான்” என்று சொல்லி விட்டு செட்டியார் எழுந்திருப்பதற்குள், ராவ்சாகிப்பும் வந்து தொலைந்து விட்டார்.
இந்த சி.த.ப.வுக்கும் பர்மாவில் இருந்த திரண்ட சொத்தெல்லாம் போய் விட்டது. அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யவில்லை. “இந்தியாவிலே எனக்கு வேண்டிய சொத்து இருக்கிறது” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். இந்தியாவிலுள்ள சொத்தும் இவர் அங்கே போவதற்குள் தொலைந்து போய்விடக் கூடாதா என்று நான் வேண்டிக் கொண்டேன்.
நாங்கள் புறப்பட்டு எட்டு நாளைக்குள், எங்களில் பத்துப் பேர் தங்கள் வரலாற்றைச் சொல்லியாகி விட்டது. நானும், வேல்முருகதாஸரென்னும் சுமார் அறுபது வயதுள்ள கிழவருந்தான் பாக்கி. இந்த தாஸர் ரங்கூனில் ரொட்டிக் கடை வைத்திருந்தாராம். அதிகமாக வாய் திறந்து இவர் பேசுவதில்லை. ஆனால், மற்றவர்களுடைய பேச்சைக் காது கொடுத்துக் கவனமாகக் கேட்பார்.
என்னுடைய கதை மிகவும் சோகமான கதையாதலால் என்னால் அதைச் சொல்ல முடியாதென்றும், எழுதி வேணுமானால் படிக்கிறேன் என்றும் சொன்னேன். அவ்விதமே கதையை எழுதி அதைக் ‘கங்கோ’ என்னும் ஊரில், அதே பெயருடைய சிற்றாற்றங்கரையில் நாங்கள் தங்கியிருந்தபோது படித்தேன். அளவில்லாத உணர்ச்சியும் வேகமும் வாய்ந்த நடையிலேதான் எழுதியிருந்தேன். என்னுடைய வருங்கால வாழ்க்கையே அந்த வரலாற்றைப் பொருத்தது என்ற உணர்ச்சியுடனே எழுதினேன். துரதிருஷ்டவசமாக அதைப் படித்துக் காட்டிய பிறகு, கிழித்துக் காங்கோ ஆற்றில் போட்டு விட்டேன். எனவே, நான் எழுதியிருந்ததன் சாராம்சத்தை மட்டும் இங்கே தருகிறேன்.
“தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் வேங்கைப்பட்டி ஜமீன் ரொம்பவும் பிரசித்தமானது. பதினைந்து வருஷத்துக்கு முன்னால், அந்த ஜமீனுக்குக் கடன் முண்டிப் போய் சர்க்கார் கோர்ட் ஆப் வார்ட்ஸில் எடுத்துக் கொண்டு விட்டார்கள். இதனால் மிக்க அவமானம் அடைந்த ஜமீன்தார் தம் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுத் தேசாந்திரம் போய்விட்டார். அப்போது அவருக்கு எட்டு வயதுள்ள மகன் ஒருவன் இருந்தான். அந்த மகன் பெரியவனாகித் தகப்பனை அவன் மன்னித்து விட்டதாகவும் கோர்ட் ஆப் வார்ட்ஸிலிருந்து ஜமீன் திரும்பி வந்துவிட்டதாகவும் தெரிந்த பிறகுதான், தாம் மீண்டும் ஊருக்கு வரப் போவதாகவும் கடிதத்தில் எழுதியிருந்தது.
மகனுக்குப் பதினெட்டு வயதானதும், தகப்பனாரின் கடிதத்தைப் பற்றித் தாயாரிடம் தெரிந்து கொண்டான். அவர் பர்மாவிலே ஜீவிய வந்தராக இருப்பதாகப் பராபரியாகக் கேள்விப்பட்டான். அவரை எப்படியாவது தேடி அழைத்து வருவதாக அம்மாவிடம் சொல்லி விட்டுப் பர்மாவுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னால் வந்தான். அவன் கலாசாலையில் படித்த பையன். தன் தகப்பனார் காலத்து அவமானத்துக்குப் பிறகு, பிதிரார்ஜித ஜமீன் சொத்தைக் கொண்டு ஜீவனம் நடத்த அவன் விரும்பவில்லை. எனவே, பர்மாவுக்கு வந்த இடத்திலே ஒரு கைத் தொழில் கற்றுக் கொண்டு போய் இந்தியாவில் பெரியதொரு தொழில் நடத்த விரும்பினான். ஏற்கெனவே அவனுக்கு மோட்டார் ஓட்டத் தெரியுமாதலால், இரங்கூனில் ஒரு மோட்டார் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்தான். அதே சமயத்தில் அவனுடைய தகப்பனாரையும் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் தகப்பனாரைப் பற்றி யாதொரு தகவலும் கிடைக்கவில்லை. அந்த ஜமீன்தார் மகனுடைய பெயர் சிவகுமாரன், அந்த சிவகுமாரன் தான் நான்!”
இதை நான் படிக்கக் கேட்டு வந்தவர்கள் எல்லாரும் ஒரேயடியாக ஆச்சரியக் கடலில் மூழ்கித்தான் போனார்கள். ஆனால் இதுவரை வாய் திறவாத மௌனியாக இருந்து வந்த ரொட்டிக் கிடங்கு வேல்முருகதாஸருடைய நடத்தை தான் எனக்கு மிகுந்த வியப்பை அளித்து வந்தது. அவர் நான் கதையைப் படித்து வருகையிலேயே சில சமயம் விம்மியதுடன், கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டு வந்தார். நான் கதையை வாசித்து முடித்ததும், அவர் எழுந்து ஓடி வந்து, “என் மகனே!” என்று என்னைக் கட்டிக் கொண்டு தரையிலே விழுந்து மூர்ச்சையானார்.