Zamindar Mahan Kalki | Kalki Times
அத்தியாயம் 7: டம்மு
நான் என் அருமைத் தந்தையைக் கண்டுபிடித்த, அதாவது என் அருமைத் தந்தை என்னைக் கண்டுபிடித்த – மேற்படி அற்புத சம்பவம், பக்கோக்கூவிலிருந்து நாங்கள் கிளம்பிய எட்டாவது நாள் நடந்தது.
அதற்கடுத்த எட்டாவது நாள் ‘டம்மு’ என்னும் ஊரில் எங்கள் லாரிப் பிரயாணம் முடிவடைந்தது.
இந்த எட்டு நாளும் என்னுடைய வாழ்க்கையில் சுப தினங்களாகும். இந்த தினங்களில் என் தந்தைக்கு நான் செய்த பணிவிடைக்கு ஈடாகச் சொல்வதற்குக் கதைகளிலும் காவியங்களிலும் கூட உதாரணம் இல்லையென்று சொல்ல வேண்டும்.
பல வருஷ காலத்தில் மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையெல்லாம் அந்த ஏழு நாளில் நான் செய்து விட்டேன். இந்தத் தினங்களில் வஸந்தியைக் கூட நான் அவ்வளவாகக் கவனிக்கவில்லை.
அவளுடைய மனோபாவத்திலும் அவளுடைய தந்தையின் மனோபாவத்திலும் ஏற்பட்ட மாறுதல்களை மட்டும் கவனித்து வந்தேன். அன்று முதல் ராவ்சாகிப்புக்கு என்னிடம் அபாரமான அபிமானமும் மரியாதையும் ஏற்பட்டு விட்டன. என் தந்தையிடம் நான் காட்டிய பக்தியை அவர் பெரிதும் பாராட்டினார். வஸந்தி முதலில் இரண்டு மூன்று நாள் ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் அவளும் பழையபடி ஆகி வந்தாள்.
டம்முவில் சர்க்கார் ‘எவாக்குவேஷன்’ விடுதிகள் இரண்டு இருந்தன; ஒன்று இந்தியர்களுக்கு, மற்றொன்று வெள்ளைக்காரர்களுக்கு.
அது போலவே டம்முவிலிருந்து இந்தியா போவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று இந்தியர்களுக்கு, இன்னொன்று வெள்ளைக்காரர்களுக்கு.
கடவுள் வெள்ளைக்காரர்களையும் கறுப்பு மனிதர்களையும் தனித்தனி நிறத்தோடு படைத்ததுமல்லாமல், அவர்கள் பர்மாவிலிருந்து இந்தியா போவதற்குத் தனித்தனிப் பாதைகளையும் படைத்திருந்த அதிசயத்தை எண்ணி எண்ணி வியந்தேன்.
இரண்டு பாதைகளையும் பற்றிய விவரங்களைக் கேட்ட பிறகு, மேலெல்லாம் சுண்ணாம்பைப் பூசிக் கொண்டு நானும் வெள்ளைக்காரனாக மாறி விடலாமா என்று யோசித்தேன். ஆனால், அதற்கு இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று பன்னிரண்டு வருஷப் பிரிவுக்குப் பிறகு கடவுளின் அற்புதத்தினால் எனக்குக் கிடைத்த என் தந்தை; இன்னொரு தடை வஸந்தி.
இவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் நானும் இந்தியப் பாதையிலேயே கிளம்பினேன்.
டம்முவிலிருந்து இந்தியாவுக்குக் கிளம்புகிறவர்களுக்கு, குடும்பஸ்தர்களாயிருந்தால் அரிசி, பருப்பும், என்னைப் போன்ற தனி ஆள்களாயிருந்தால், அவலும் வழியில் சாபாட்டுக்காகக் கொடுக்கும்படி, சர்க்காரிலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தப்படியே நாங்களும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
டம்முவிலிருந்து பதினெட்டு மைலிலுள்ள ‘மீந்தா’ வரையில் சமவெளிப் பாதையாகையால் சுலபமாகப் போய் விடலாம். அதற்குப் பிறகு, 56 மைல் மலைப் பாதையில் சென்று, மணிப்புரி சமஸ்தானத்து எல்லையிலுள்ள லம்டி பஜார் அடைய வேண்டும்.
இந்த வழியில் சாமான் தூக்கிக் கொண்டு போவதற்கு ஆளுக்குப் பத்து ரூபாய் கூலி என்று சர்க்கார் விகிதம் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால், உண்மையில் இருபது ரூபாய்க்குக் கூடக் கூலி ஆள் கிடைப்பது துர்லபமாயிருந்தது. ராவ்சாகிப் சந்தாகூலி விகிதத்தில் பேரம் பேச முயன்றதினால், ஆள் கிடைப்பது இன்னும் கஷ்டமாய் போயிற்று.
கடைசியில், நாங்கள் டம்முவை அடைந்த மூன்றாம் நாள் காலை, தென்னிந்தியர்கள் சுமார் இருபத்தைந்து பேர் அடங்கிய கோஷ்டியார், ஜன்மதேசம் போவதற்காகக் கால்நடையாகக் கிளம்பினோம்.
ராவ்சாகிப் கையிலே ஒரு நீண்ட பட்டாக் கத்தியை வைத்துக் கொண்டும், அவ்வப்போது அதைச் சுழற்றி வீசிக் கொண்டும், எல்லோருக்கும் பின்னால் நடந்து வந்த காட்சியை, இப்போது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பாக வருகிறது.
வழியில் சில இடங்களில் பர்மியர்கள் பிரயாணிகளை கொள்ளை அடிக்க வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருந்தபடியால், ராவ்சாகிப் அப்படிக் கையில் கத்தி எடுத்துக் கொண்டு வந்திருந்தார். ‘கத்தியை வைத்துக் கொண்டு ஏன் எல்லோருக்கும் பின்னால் வருகிறீர்கள்?’ என்று நான் கேட்டதற்கு, “அப்பனே! உனக்குத் தெரியாது, பர்மியர்கள் ஒருவேளை தாக்க வந்தால், பின்பக்கமாக வந்து தான் தாக்குவார்கள்” என்று ராவ்சாகிப் சாதுர்யமாகப் பதில் கூறினார்.