Kalki Short StoriesKalki TimesStory

Zamindar Mahan Kalki | Kalki Times

அத்தியாயம் 8: லம்டி பஜார்

டம்முவிலிருந்து கிளம்பிய ஏழாவது தினம் பர்மாவில் என்னுடைய கடைசியான கால்நடை யாத்திரை மணிப்பூர் சமஸ்தானத்தில் லம்டி பஜார் என்னும் இடத்தில் முடிவுற்றது.

டம்முவில் கிளம்பும் போது இருபத்தைந்து பேரில் ஒருவனாகக் கிளம்பிய நான், லம்டி பஜாருக்கு வந்து போது மூன்று பேரில் ஒருவனாக இருந்தேன்.

எங்கள் கோஷ்டியில் பலர் முன்னால் போய்விட்டார்கள். சிலர் பின்னாலும் தங்கி விட்டார்கள்.

நாங்கள் மூன்று பேர் மிஞ்சியவர்கள் யார் யார் என்றால், நானும் வஸந்தியும் சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாருந்தான். அந்த மனுஷர் எங்களை விட்டு நகர்வதில்லை என்று ஒரே பிடிவாதமாயிருந்தார்.

என்னுடைய தந்தை என்ன ஆனார் என்று கேட்கிறீர்களா? ஆஹா! டம்முவிலிருந்து கிளம்பிய முதல் நாளே அவர் என்னைக் கைவிட்டுப் போய்விட்டார்.

இந்தக் கடைசிப் பிரயாணம், அவருடைய வாழ்க்கையிலேயே கடைசிப் பிரயாணமாய் முடிந்து விட்டது.

மீந்தாவைத் தாண்டியபிறகு மேலே மேலே ஏற வேண்டியதாயிருந்த மலை வழியில், முதல் மலை ஏறியவுடனேயே, அவர் “அப்பா! குழந்தாய் எனக்கு என்னவோ செய்கிறதே!” என்றார். நான் உடனே உட்கார்ந்து, அவர் தலையை என் மடி மீது வைத்துக் கொண்டேன்.

“குழந்தாய்! நான் உனக்குச் செய்த துரோகத்தையெல்லாம் மன்னித்து விடுவாயா?” என்றார்.

“அப்பா! நீங்கள் நிம்மதியடையுங்கள். என் வாழ்க்கையிலேயே மிகவும் அபூர்வமான அனுபவத்தை அளித்தீர்கள். மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை” என்றேன்.

மோட்டார் என்ஜின் கெட்டுப் போய் நிற்கும் சமயத்தில் வண்டியைக் குலுக்கிப் போட்டு விட்டு நிற்பது போல், அவருடைய ஆவியும் மூன்று தடவை உடம்பை ஆட்டி விட்டுப் பிரிந்து சென்றது.

அழுது புலம்புவதற்கு எனக்கு நேரமில்லை; மனமும் இல்லை. ஆனாலும் தந்தையின் உடலைக் குழி தோண்டிப் புதைத்து விட்டுத்தான் வருவேன் என்று சொல்லி, மற்றவர்களை முன்னால் போகச் சொன்னேன்; நாங்கள் வந்த வழியில் ஏற்கனவே பாதை ஓரமாக அனாதைப் பிரேதங்கள் கிடந்த கண்றாவிக் காட்சியைப் பார்த்துக் கொண்டு வந்திருந்தேனாதலால், அந்த மாதிரி என் தந்தையை விட்டுப் போக முடியாது என்று பிடிவாதமாயிருந்தேன். செட்டியாரும் எனக்கு உதவி செய்வதாகச் சொல்லிப் பின் தங்கினார்.

மலையிலே குழி தோண்டுவதென்றால் இலேசான காரியமா? எப்படியோ ஒரு பள்ளத்தைக் கண்டுபிடித்து மேலே தழையும் மண்ணும் போட்டு மூடிவிட்டு, எங்கள் பிரயாணத்தைத் தொடங்கினோம்.

சி.த.ப. கேட்டார்: “பிரேதஸம்ஸ்காரத்தைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? புதைப்பது நல்ல வழக்கமா? தகனம் செய்வது நல்லதா?” என்று.

“உங்களுடைய விருப்பத்தைச் சொன்னால் அதன்படியே உங்களுக்கும் செய்துவிடுகிறேன்!” என்று பதில் சொன்னேன்.

“நல்ல பதில்!” என்று கூறிச் சிரித்தார்.

நாங்கள் வேகமாக நடந்து மற்றவர்களை அன்று சாயங்காலமே பிடித்து விட்டோம்.

ஆனால், மறுபடியும் நாங்கள் மூன்று பேராகப் பின் தங்கும்படி நேர்ந்த காரணம் என்ன? அதைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.

இரண்டாம் நாள் மத்தியானம் ஒரு செங்குத்தான மலை உச்சியில் நாங்கள் ஏறிக் கொண்டிருந்தபோது, வஸந்தி திடீரென்று, “ஐயோ! என்னமோ செய்கிறதே!” என்று சொல்லி விட்டு உட்கார்ந்தாள். அவள் உடம்பெல்லாம் வெடவெட வென்று நடுங்கியது.

தாயார் பெண்ணின் உடம்பைத் தொட்டுப் பார்த்து, “ஐயோ! கொதிக்கிறதே” என்றாள்.

தகப்பனார் “அடி பாவி! சண்டாளி! கெடுத்தாயா காரியத்தை!” என்று திட்டத் தொடங்கினார்.

மனைவியைப் பார்த்து “இவளை வைத்துக் கொள்ள வேண்டாம். எல்லாருடனும் கப்பலில் ஏற்றி அனுப்பி விடலாம் என்று சொன்னேனே கேட்டாயா? இப்போது வாயிலே மண்ணைப் போடப் பார்க்கிறாளே?” என்று கத்தினார். அப்போது வஸந்தி நடுங்கிய குரலில் “அப்பா! நீங்கள் ஏன் மனத்தை வருத்தப்படுத்திக் கொள்கிறீர்கள்? என்னை இங்கேயே விட்டு விட்டு நீங்கள் போங்கள். நான் உங்கள் மகள் இல்லையென்று நினைத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

“அடி சண்டாளி! உன்னை உயிரோடு எப்படி விட்டு விட்டுப் போகிறது? செத்துத் தொலைத்தாலும் நிம்மதியாகப் போகலாம்” என்றார் ராவ்சாகிப்.

என் காதில் இது எவ்வளவு நாராசமாக விழுந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் சண்டை போட அது சமயமில்லையென்று எண்ணி, “ராவ்சாகிப்! ஒரு யோசனை சொல்கிறேன். நீங்களும் உங்கள் மனைவியும் வயதானவர்கள். கூட்டத்தோடு நீங்களும் போய் விடுவதுதான் சரி. என்னிடம் உங்கள் பெண்ணை ஒப்புவித்து விட்டுப் போங்கள். உயிர் கெட்டியாயிருந்து பிழைத்தால் அழைத்து வருகிறேன். இல்லாவிட்டால், என் தந்தைக்குச் செய்ததை இவளுக்கும் செய்துவிட்டு வருகிறேன்” என்றேன்.

“அதெப்படி ஐயா, நியாயம்? அன்னிய மனுஷனாகிய உம்மிடம் எப்படி இந்த இளம் பெண்ணை ஒப்புவித்துவிட்டுப் போவது?” என்றார் ராவ்சாகிப்.

“ராவ்சாகிப்! நான் அன்னிய மனுஷன் அல்ல! வஸந்தியை நான் கலியாணம் செய்து கொள்வதாகத் தீர்மானித்து விட்டேன். அவளுக்கும் அது சம்மதம். உங்கள் முன்னிலையிலே, ஆகாசவாணி பூமிதேவி சாட்சியாக, இப்போதே இவளை நான் பாணிக்கிரகணம் செய்து கொள்கிறேன்” என்று கூறி வஸந்தியின் பக்கத்தில் உட்கார்ந்து, அவளை என் மடி மீது படுக்க வைத்தேன். ஜ்வரதாபத்தினால் தகித்துக் கொண்டிருந்த அவளுடைய கையின் விரல்களை என்னுடைய கை விரல்களுடன் கோத்துக் கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *