Kalki Short StoriesKalki TimesStory

Zamindar Mahan Kalki | Kalki Times

அத்தியாயம் 9: முடிவுரை

என்னையும் வஸந்தியையும் தவிர மற்றவர்கள் எல்லாம் வெகு தூரம் போன பிறகு, வஸந்தி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். “ஏன் கண்ணே! ஏன் அழுகிறாய்? நம்முடைய கலியாணம் உனக்குப் பிடிக்கவில்லையா?” என்றேன்.

வஸந்தி சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டுப் புன்னகை புரிந்தாள். கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.

“உங்களை மணந்து கொள்ளும் பாக்கியத்துக்கு இந்த ஜன்மத்தில் நான் ஒரு புண்ணியமும் செய்யவில்லை. பூர்வ ஜன்மத்திலே செய்திருக்க வேண்டும்” என்றாள்.

பிறகு, “உங்களுக்கு ஒரு பெரிய துரோகம் செய்து விட்டேன். என்னை மன்னிப்பீர்களா?” என்று கேட்டாள்.

“ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்!” என்றேன்.

“விளையாட்டு இல்லை. நிஜமாகவே உங்களை மோசம் செய்து விட்டேன். நான் ராவ்சாகிப் சுந்தரின் மகள் இல்லை. அவர் வீட்டுச் சமையற்காரியின் மகள். அம்மாவை அவர்கள் வீட்டுக் குழந்தைகளுடன் கப்பலில் அனுப்பி விட்டார்கள். மாமிக்குத் துணையாக என்னை மட்டும் வைத்துக் கொண்டார்கள்.”

இது மாதிரி ஏதோ இருக்கும் என்று நானும் சந்தேகித்திருந்தேன். எனவே, சிறிதும் வியப்படையாதவனாய், “என் கண்ணே! அந்த மூர்க்கத் தற்பெருமைக்காரருடைய மகள் நீ இல்லை என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்” என்றேன்.

அப்போது எங்களுக்குப் பின்னாலிருந்து “மிஸ்டர் சிவகுமார்! நீங்களும் நிஜத்தைச் சொல்லி விடுவதுதானே!” என்று ஒரு குரல் கேட்டது. அது சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியாரின் குரல் தான். போனவர்களுடன் சேர்ந்து போவது போல் செட்டியார் ஜாடை காட்டிவிட்டு, எங்களுக்குத் தெரியாமல் திரும்பி வந்து மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்தார். பழனி மலையில் வீற்றிருக்கும் பழனியாண்டவரே வந்தது போல், அச்சமயம் செட்டியார் வந்தார் என்று சொல்ல வேண்டும். அவர் தான் வஸந்தி உயிர் பிழைப்பதற்கும், நாங்கள் பத்திரமாய் இந்தியா போய்ச் சேருவதற்கும் காரணமாயிருந்தார்.

அல்லது அவருடைய காந்தி குல்லா காரணமாயிருந்தது என்றும் சொல்லலாம். தலையில் காந்தி குல்லாவுடன் அவர் அந்தமலைப் பிரதேசத்திலுள்ள பர்மிய கிராமம் ஒன்றுக்குச் சென்று மனிதர்களை ஒத்தாசைக்கு அழைத்து வந்தபடியால் தான் வஸந்தி பிழைத்தாள். ஆனால் இதெல்லாம் பின்னால் நடந்த சம்பவங்கள், அச்சமயம் செட்டியாரைப் பார்த்ததும் எனக்கு அசாத்தியமான கோபம் வந்தது.

“நீர் ஏன் போகவில்லை? இங்கே எதற்காக ஒளிந்து கொண்டு நிற்கிறீர்?” என்று நான் கேட்டதும், செட்டியார் சாவதானமாக, “உமது குட்டை உடைத்து விடத்தான்; நீர் ஜமீன்தார் மகன் இல்லை என்று வஸந்திக்குச் சொல்வதற்குத்தான்!” என்றார்.

அப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. ஒரு விதத்தில் சந்தோஷமாகவும் இருந்தது. எப்படியும் அந்த உண்மையை வஸந்தியிடம் சொல்லியாக வேண்டும் அல்லவா?

சிறிது வெட்கத்துடன் வஸந்தியின் முகத்தைப் பார்த்தேன். அவள் சொல்ல முடியாத ஆவலுடன் “செட்டியார் சொல்வது நிஜமா?” என்றாள்.

“நிஜந்தான் வஸந்தி? நான் ஜமீன்தார் மகன் இல்லை. ராவ்சாகிப் உன் தந்தை என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, அவருடைய மதிப்பைப் பெறுவதற்காக அந்தக் கதையைக் கட்டினேன்” என்றேன்.

வஸந்தி பலஹீனமடைந்த தன் மெல்லிய கரங்களினால் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “ரொம்ப சந்தோஷம்! நீங்களே அந்தக் கதையைச் சொன்னவுடன் எனக்கு எவ்வளவோ வருத்தமாயிருந்தது” என்றாள்.

“ஏன்?” என்று கேட்டேன்.

“சமையற்காரி மகளுக்கும் ஜமீன்தார் மகனுக்கும் பொருந்துமா?” என்றாள் வஸந்தி.

அப்போது செட்டியார் குறுக்கிட்டு, “ஆமாம்; சிவகுமார்! கல்யாணச் சடங்கைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? தாலி கட்டுவது நல்லதா, மோதிரம் மாற்றிக் கொள்வது நல்லதா, மனம் ஒத்துப் போனாலே போதுமா?” என்று கேட்டார்.

“அதைப் பற்றி பிறகு சொல்கிறேன். நான் எழுதி வாசித்தது பொய்க் கதை என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டேன்.

“பேஷான கதை; அதைக் கேட்டவுடனே இந்தியா போனதும் உங்களை வைத்துக் கொண்டு ஒரு புத்தகப் பிரசுராலயம் நடத்துவது என்று தீர்மானித்து விட்டேன். அதிலும் அந்த வேல்முருகதாஸரைப் பத்து நாள் நீர் கட்டிக் கொண்டு அழுததை நினைத்தால், எனக்குச் சிரிப்பாய் வருகிறது. வேங்கைப்பட்டி ஜமீன்தார் ஆகிவிடலாமென்று நினைத்த அந்த மோசக்காரன் பேரில் கை நிறைய மண்ணை வாரிப் போட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!” என்றார்.

“செட்டியாரே உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது?” என்று மறுபடியும் கேட்டேன்.

“எனக்கு ராமநாதபுரம் ஜில்லாதானே? வேங்கைப்பட்டி ஜமீன்தாரை எனக்குத் தெரியும்.”

“அப்படியா?”

“ஆமாம்; பழைய ஜமீன்தாரையும் தெரியும்; புதிய ஜமீன்தாரையும் தெரியும். பத்து வருஷத்துக்கு முன்னால் கடன் முண்டிப் போய் ஏலம் போட்டதில் ஜமீன் கை மாறிற்று” என்றார்.

“ஓஹோ” என்றேன்.

“பழைய ஜமீன்தார் பெயர் ராஜாதி ராஜ வீர சேதுராமலிங்க முத்து ரத்தினத் தேவர்; அவர் காலமாகி விட்டார்!”

“இப்போதைய ஜமீன்தாரின் பெயர் என்ன?” என்று கேட்டேன்.

“சி.த.ப.பழனிச் சுப்பாஞ் செட்டியார்” என்று பதில் வந்தது.

ஆஹா! வேங்கைப்பட்டி ஜமீன்தார் சி.த.ப. பழனி சுப்பாஞ் செட்டியார் நன்றாயிருக்கட்டும்! அவர் மகாராஜனாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் அன்று செய்த உதவியினாலே அல்லவோ, இன்று வசந்தியும் நானும் இந்த உலகத்திலேயே சொர்க்க இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

இத்துடன்

அமரர் கல்கியின் ஜமீன்தார் மகன்

இனிதே நிறைவடைந்தது. ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி.


Zamindar Mahan Kalki Tag

kalki story,kalki story books,kalki story writer,kalki short stories in tamil,kalki short stories,kalki times,kalki audio books,kalki tamil audio books,kalki novels audio,kalki audio books free download,kalki audio,kalki krishnamurthy,kalki krishnamurthy novels in tamil,kalki krishnamurthy in tamil,kalki krishnamurthy best novels,amarar kalki novels,kalki novels list in tamil,kalki audio books,zamindar mahan Audiboook,zamindar mahan,zamindar mahan Kalki,Kalki zamindar mahan,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *